|
|
'ஐஞ்சுகட்டை வௌக்கமாற ஒன்னா
கட்டி
அதில ஒரு வௌக்கமாற அனல்ல காட்டி
மணல்ல சொருவி
ஒக்கால மண்ண வைச்சு
பெத்தவள பின்ன வைச்சு
நிக்க ஒன்றடி, நிமிர ரெண்றடி,
குனிய வைச்சு, மூன்றடி அடிப்பேன்'
இந்தப்
பாடலை என்னிடம் ஆக்ரோஷமாகப் பாடிக்காட்டியது ஆஷா அம்மாதான். அப்போது அவர்
கோவமாகத்தான் இருந்தார். அது 2009 ஆம் ஆண்டு. அவர் வீட்டில் ஒரு
நேர்காணலுக்காகச் சந்தித்தேன். ஆஷா அம்மாவை அதற்கு முன்பே நான் பல முறை
பார்த்துள்ளேன். ஓரிரு முறை தொலைக்காட்சியில் அவரைப் பேட்டிக்கண்டுள்ளனர்.
அவை பெரும்பாலும் எடிட் செய்யப்பட்டே ஒளிபரப்பப்படும். அவர்கள்
எடிட்டிங்கில் ஆஷா ஒரு தொலைக்காட்டி அறிவிப்பாளர் நேர்த்தியில் ஒளிர்வார்.
நான், திருநங்கைகள் தங்கள் அறுவடைக்காக (அறுவை சிகிச்சை) பிச்சை எடுப்பது
குறித்து கேட்டேன். ஆஷா கொதித்துப் போனார். "நாகூர் தர்கால்ல
சாதுமார்கள்லாம் பிச்சை எடுத்துத்தானே சாப்டுறாங்க. அதுக்குப் பேரு பிச்சை
இல்ல. எங்க உரிமை. நாங்க கேட்போம் ஆசிர்வாதம் வேணும்னா நீங்க பணம்
குடுக்கலாம். இன்றைக்கு வட நாட்ல திருநங்கைகள் கால்ல பல கோடிஸ்வரங்க
விழுந்து ஆசிர்வாதம் வாங்குறாங்க. ஏன்? அந்த ஆசிர்வாதம் நிலைக்கும்."
நான் ஆஷாவைப் பேட்டிக்காணும் முன்னர் சில தகவல்களைச் சேகரிக்க
வேண்டியிருந்தது. சில நண்பர்கள் அவரைப் பற்றி நன்கு அறிந்து
வைத்திருந்தனர். நான் வசிக்கும் பகுதியில் சில திருநங்கைகளோடு நட்பு
இருந்ததால் தகவல்களைப் பெற எளிதாக இருந்தது.
ஆஷாவைப் பற்றி சொல்ல ஒவ்வொருவரிடமும் ஓர் அற்புதம் இருந்தது. இன்று அவர்
இறந்துவிட்ட நிலையில் அச்சம்பவங்கள் ஒவ்வொன்றும் கூடுதலான அர்த்தங்களோடு
மனதில் அகப்படுகின்றன. அந்தச் சம்பவங்களைக் கொண்டுதான் ஆஷாவை முழுமையாகக்
கற்பனை செய்து பார்க்க முடிகிறது. திட்டுத் திட்டான அவர் வாழ்வின்
அத்தியாயங்களை இனி வேறொருவரைக் கொண்டும் சரி பார்க்க முடியாத பட்சத்தில்
காற்றில் விடப்பட்ட ஓசைகளை கோர்க்க மட்டுமே முடிகிறது.
ஆஷா தமிழகத்திலிருந்து வந்தவர். அவரது அறுவை சிகிச்சை முறை 'தாயம்மா கை'
வகைச் சேர்ந்தது. அறிவியல் வளராத அல்லது உறுப்பை அறுவை சிகிச்சை மூலம்
அகற்றுதல் சட்ட மீறலாகக் கருதப்பட்ட காலத்தில் நிலத்தில் குழியைத் தோண்டி ,
அதில் முழங்கால்வரை தன்னைத் தானே புதைத்துக்கொண்டு உறுப்பை அறுத்தெரிந்து,
மறுநாள் வரை உயிருடன் இருந்தால் கடவுள் தன்னை திருநங்கையாக இருக்க
சம்மதித்துவிட்டார் என்ற நம்பிக்கையில் வீற்றிருக்கும் முறை 'தாயம்மா கை'.
இவ்வாறு அறுவை சிகிச்சை செய்தவர்களுக்குப் பொதுவாகவே திருநங்கைகள்
மத்தியில் ஒரு மரியாதை இருந்தது. அது போன்றவர்களை கடவுளின் அருள்
பெற்றவர்களாகவே அச்சமூகம் நம்புகிறது. மலேசியாவில் அவ்வாறான அறுவை சிகிச்சை
செய்துகொண்டவர் ஆஷா மட்டுமே என்பதால் திருநங்கைகள் மத்தியில் அவர் தலைவியாக
விளங்கியதில் ஆச்சரியம் இல்லை.
நாற்பது வருடங்களுக்கு முன் ஆஷா சௌக்கிட்டை வந்தடைந்துள்ளார். சௌக்கிட்
(Chow Kit) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள துணை மாவட்டம்.
இது சௌக்கிட் சாலையில் இருக்கிறது. சௌக்கிட் சாலையின் இரு புறமும் ஜாலான்
ராஜா லாவுட், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் என இரு சாலைகள் இணையாகச்
செல்கின்றன. முன்பு காலத்தில் சௌக்கிட் பகுதியில் 'லோக் சௌக்கிட்' எனும்
ஈயத் தொழில் செல்வந்தர் இருந்தார். அவர் நகராட்சி மன்ற உறுப்பினராகவும்
இருந்தார். அவர் பல தார்மீகப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவிகள்
செய்தார் எனக் கூறுகிறார்கள். அவரின் நினைவாக அப்பகுதிக்கு 'சௌக்கிட்'
என்று பெயர் வந்ததாம். ஆஷா சௌக்கிட்டில் 'ஜாலான் ஹஜி தாய்ப் 1'ஐ தனது
இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
1960ஆம் ஆண்டுகளில் சைக்கிட் பகுதிகள் சீனர்களின் கோட்டையாக விளங்கியது.
ஏறக்குறைய ஆஷாவின் வருகையும் அப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. அப்போது
சௌக்கிட் ஓர் சிவப்பு விளக்குப் பகுதி. சீனப் பெண்களால் பாலியல் தொழிலிலின்
அடையாளமாக 'சௌகிட் 'விளங்கியது. இந்நிலையில் ஆஷா ஏற்கனவே அங்கிருந்த
திருநங்கைகள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த திருநங்கைகள் துணையுடன்
சௌக்கிட்டை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறார். இப்போது சீனப்பெண்களோடு
திருநங்கைளும் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். போட்டி முற்றுகிறது. சில
தகராறுகளோடும் சர்ச்சைகளோடும் வணிகம் தொடர்கிறது. கொஞ்ச நாளில் ஆஷா நீக்க
முடியாத சக்தியாகச் சௌக்கிட்டில் நடமாடத்தொடங்குகிறார்.
திருநங்கைகளை கேலி செய்பவர்கள் ஆஷாவால் துவைத்தெடுக்கப் படுகின்றனர்.
'காதல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி திருநங்கைகளிடம் பணம் பறிக்கும்
ஆண்கள் தாக்கப்படுகின்றனர். திருநங்கைகளுக்கு ஆஷாவினால் பாதுகாப்புக்
கிடைக்கிறது. திருநங்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்கள் ஒரே
இடத்தில் சங்கமிக்கின்றனர். விளைவு ... சௌக்கிட் ஒரு சந்தர்ப்பத்தில்
ஆஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. ஆஷாவின் ஆதிக்கத்தில் சில
ஆண்களும் இணைந்துகொள்கின்றனர். அவர்கள் பலம் கூடுகின்றது. இத்தனைப்
பேரையும் நிர்வாகம் செய்ய பணத்தேவை ஏற்படுகிறது. ஆஷா துரிதமாகக்
காரியத்தில் இறங்குகிறார். சௌவ்கிட்டில் புதிதாகக் கட்டப்படும் கடைகளின்
மேல்மாடி ஒன்றை வாடகைக்கு எடுக்கிறார். மொத்தம் மூன்று அறைகள். முதல்
அறையில் திருந்நங்கைகளோடு தானும் தங்குகிறார். இரண்டாவது அறையில் சேவல்
மீது அமர்ந்திருக்கும் துர்க்கை அம்மனின் படம் வைத்து அதை தங்கள் கோயிலாக
வழிப்படுகின்றனர். மூன்றாவது அறையில் போதை வஸ்துகள் பொட்டளங்களாகக் கட்டும்
பணி நடைப்பெருகிறது. இங்கிருந்தே அவர்களின் வருமானம் கூடுகின்றது.
திருநங்கைகள் தங்கள் தொழில் நேரம் போக மீதி நேரங்களில் பொட்டளம் கட்டுவதில்
ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் ஆஷா ஒரு சாப்பாட்டுக்கடையைத் திறக்கிறார். சௌக்கிட்டுக்குப்
பயணம் செய்தவர் கண்ணில் அந்தச் சாலை ஓர அங்காடி கடை படாமல் இருக்காது. மதிய
,இரவு உணவு வேலைகளில் கூட்டம் கூடியிருக்கும். தன்னை நம்பி வந்த
திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சைக்கான பணம் கொடுத்து உதவுவதுடன் அதற்கு
முன்பான 'அறுவடை பூசையையும்' அவரே செய்து வைக்கிறார். திருநங்கைகள்
மட்டுமல்லாமல் அனைவருமே அவரை 'அம்மா' என்றே அழைத்தனர். எல்லா
திருநங்கைகளும் காலையில் அவர் உணவகத்தில் இருக்கும் போது காலில் விழுந்து
ஆசிர்வாதம் வாங்கியப்பின்பே தொழிலுக்குச் செல்வதை வழக்கமாக்கியிருந்தனர்.
"ஒரு தரம் சௌகிட்ல என்னோட பணப்பைய மிரட்டி நாலு சீனனுங்க
திருடிட்டானுங்க... அங்க சாப்பாட்டுக்கடை வச்சிருந்த ஒரு வயசான அம்மாகிட்ட,
'பணமில்ல ஆனா சாப்பாடு வேணுமுன்னு' சொன்னேன். நிலைமைய விசாரிச்சாங்க.
அடுத்த ஐந்து நிமிசத்துல என் பணப்பை முழு பணத்தோட என்கிட்ட இருந்தது. நான்
போலிஸ்ல ரிப்போட் செஞ்சும் கிடைக்காத என் பணம் அந்த அம்மாவலதான்
கிடைச்சது."
"சீனக்கடையில தண்ணி போட்டுக்கிட்டு இருந்தேன். திடீருனு ஒரு கும்பல் உள்ள
நுழைஞ்சது. நேரா வந்த எனக்கு முன்ன உக்காந்திருந்த ஒருத்தன எத்தி உதைச்சா
பாருங்க ஒருத்தி. கீழ விழுந்தவன் நெஞ்ச காட்டி மிதிக்கிறா. யாரோ ஆஷாவாம்.
சீனக்கடைக்குள்ள அந்த ஏறியாவில எல்லாம் புகுந்து சத்தமே போட முடியாது. இந்த
அம்மா என்னடான்னா..."
"இங்க இருக்கிற இந்தோனேசிய, சபா அரவாணிகள் கேலிக்குள்ளாவதையும் பாதுகாப்பு
இல்லாம வாழ்வதையும் நீங்க பார்க்கலாம். ஆனால் என்னைப் போன்ற தமிழ்
அரவாணிகளுக்குப் பிரச்னையே இல்ல. நாங்க தைரியமா இருக்கோம். எங்களுக்கு ஆஷா
அம்மா இருக்காங்க."
ஓரிரு நண்பர்களிடமிருந்து பெற்ற நேரடி அனுபவம் இவை. ஆஷா நிறைய மனிதர்களைச்
சம்பாதித்து வைத்திருந்தார். சில பிரபலங்களும் இவரின் நட்பு வட்டத்தில்
இருந்தனர். தான் முழுமையான பெண் என்றும் பெண்களுக்கான அனைத்து உரிமை தனக்கு
கிடைக்கின்றது எனவும் ஆஷா அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். நான் அவர்கள்
அனைவரும் ஓர் இயக்கமாக மாறி, அதன் மூலம் கல்வி பலத்தைப் பெருவதோடு
பின்னாளில் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் அவர்கள் உரிமைக்கு குரல்
கொடுக்கலாமே என்றேன்.
"எங்க படிக்க போகுதுங்க... ஸ்கூல்ல ஏதோ பிரச்னைனு வந்துடுதுங்க... ஆனா நல்ல
இடமா பாத்துதான் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்" என்றார் சாதாரணமாக. ஆஷா தனது
கடைசி காலங்களை நெருங்கும் போதே திருநங்கைகள் மத்தியில் சில பிளவுகள்
ஏற்பட்டிருந்ததை அறிந்தேன். திருநங்கைகளுக்குக் கல்வி கிடைக்காமல் போவதற்கு
இன்றையப் பள்ளிக்கூட சூழலும் ஒரு காரணம்தான். நான் சந்தித்த பல
திருநங்கைகளும் பள்ளிக்கூட புறக்கணிப்பினால்தான் கல்வியைத் தொடர முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஷா காலத்தில் பெண்ணின் பெயரோடு எளிதாகப்
பெறப்பட்ட அடையாள அட்டைக்கு இன்று அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்
மூலம் கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்ணின் உருவத்தில் ஆணின் அடையாள அட்டையை
நீட்டும் போது ஏற்படும் சங்கடங்களும் புறக்கணிப்புகளும் ஏராளம்.
ஆஷா போன்றவர்கள் பெண்ணின் தேவை என்பது திருமணத்துடன் முடிந்துவிடுவதாகக்
கருதுகிறார். சௌகிட்டை தாண்டிய ஓர் உலகம் உண்டு. அங்கு ஒரு திருநங்கைக்கு
ஏற்படும் சமூக புறக்கணிப்புகள் தொடர்ந்தபடிதான் உள்ளன. ஒரு கேலிப்பொருளாகத்
திருநங்கைகளைக் காட்டும் திரைப்பட இயக்குனர்கள் தமிழகத்திலும்
மலேசியாவிலும் இருக்கவே செய்கின்றனர். இதற்கிடையில் அவர்களின் சோகத்தைக்
கொட்டுகிறோம் என்ற நினைப்பில் சில ஊடகங்களும் அவர்களின் வேதனைகளைப் படம்
பிடித்து பிரசுரித்து காசு பார்க்கின்றன. அடுத்து அவர்கள் செல்ல வேண்டிய
திக்கு எது என ஆஷா போலவே பலரும் சிந்திக்கத் தயார் இல்லை.
என்னைக் கேட்டால், திருநங்கைகளைப் பிரதிநிதித்து மலேசிய நாடாளுமன்றத்தில்
ஒரு திருநங்கையாவது இடம்பெற வேண்டும். அவர்களின் வாழ்வியல் சிக்கல்கள் மிக
நுண்ணியது. அது குறித்து பொதுவில் பேச இஸ்லாமிய நாடாகத் தன்னை
வரித்துக்கொள்ளும் மலேசியாவில் வாய்ப்புகள் குறைவு. எனவே இன, மத பேதமற்று
நாட்டில் உள்ள அத்தனை திருநங்கைகளும் ஒன்றினையும்போது அதன் சக்தியில்
அரசியல் மாற்றம் நிகழலாம். அதற்கான முதல் அஸ்திவாரம் கல்வி.
எல்லா காலத்திலும் ஆஷா போன்றவர்கள் உருவாகிக்கொண்டிருக்க முடியாத நிலையில்
கல்வியும் அதன் துணையுடன் கேட்டுப் பெறப்போகும் உரிமைகளும் மட்டுமே
என்றென்றும் நிலைக்கும். ஒரு திருநங்கை தன்னை முழு பெண்ணாக அடையாளப்
படுத்திக்கொள்வதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், கல்வி, வேலை வாய்ப்பு,
பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள இனி
அவர்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதற்காகவேணும் திருநங்கைகள்
எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
ஆஷாவின் மரணத்துக்குப் பின்:
|
|