எம்.ஐ. சாஜஹானின்
சூன்யப்பெருவெளிக்கதை
ஆகஸ்ட் மாத வல்லினம் படித்தேன். எம்.ஐ.சாஜஹானின் சூன்யப்பெருவெளிக்கதைகள்
என்னை வெகுவாக அதிர வைத்தன. கடந்த கால வாழ்வின் கசப்பும், வலியும் நிறைந்த
தருணங்கள் அவை. துரோகமும், மோசடியுமிக்க நட்புக்கிடையில் பலியாகிய
அப்பாவிகளின் வரிசையில் சாஜஹானின் சாச்சா முதல் பலியுமல்ல முற்றுமல்ல.
சாஜஹானுக்கு கதை சொல்லும் திறன் நன்றாக வாய்த்திருக்கின்றது. அதற்குரிய
கசப்பானதும், இன்பமானதுமான அனுபவியலை அவர் பின்புலமாகக்கொண்டு எழுத்தை
நகர்த்தியிருக்கின்றார். அவர் கதைகளில் முன்பும் நான் கவனித்த அம்சம் பரந்த
வாசிப்பு. அதை அவர் தன் பாத்திரங்களின் ஊடே வெளிப்படுத்தும் இலாவகம்
இயற்கையாகவே அமைந்து விடுகின்றது. இது ஒரு கதை சொல்லிக்கு மிக அவசியமாக
உளி. அவன் செதுக்கி விடுவதும், சேர்த்து விடுவதும் கதையின் கணதிக்கு
அழகையும், கம்பீரத்தையும் தந்து விடுகின்றதுத இது சாஜஹானுக்கு இயல்பாகவே
வாய்த்திருப்பதில் பரம சந்தோசம்.
ஓட்டமாவடி அறபாத்
அ. மார்க்ஸ்
அ.மார்க்ஸின் தொடர் முக்கியமானது. வல்லினத்தில் அவர் எழுதும் தொடர் மூலம்
மலேசிய இலக்கியம் பரவலான கவனத்துக்குச் செல்ல வாய்ப்பு உண்டு. அவர் தொடர்
நிச்சயம் பல தமிழ் வாசகர் மத்தியிலும் மலேசிய படைப்புகளை வாசிக்க வைக்கும்.
வாழ்த்துகள்.
பார்கவி - சிங்கை
பாலமுருகன் - நவீன்
நண்பர்கள் நவீன் - பாலமுருகன் அவர்களுக்கு,
உங்கள் கட்டுரையைப் படித்த போது வியப்பாக இருந்தது. இப்படியும் கூட
சிந்திப்பவர்கள் இருக்கிறார்களா என்று அதிசயத்துப் போனேன்! இந்நாட்டுத்
தமிழர்களைத் தமிழர்கள் என்று சொன்னால் போதும். வேறு அடைமொழி எதுவும்
தேவையில்லை. நாமும் நம்மை கேவலப்படுத்த வேண்டாம். பிறரும் நம்மைக்
கேவலப்படுத்த விட வேண்டாம். அதுமட்டுமல்ல. வருங்காலங்களில் ஒரு கவுண்டன்
ஒரு மலாய்க்காரியைக் கல்யாணம் செய்து கொண்டால்/சீனப்பெண்ணைக் கல்யாணம்
செய்து கொண்டாலோ/கிருத்துவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டாலோ அத்தோடு
அங்கு ஜாதி ஒழிந்தது! கல்வி, பொருளாதாரம் இவை இரண்டும் ஜாதியை
ஒழித்துவிடும்! மீண்டும் மீண்டும் ஜாதிப் பிரச்சனையை எழுப்புவது விவேகம்
அல்ல!
சூசை மாணிக்கம்
பச்சைபாலனின் தொடர்
பச்சைபாலன் முக்கியமான செய்திகளைச் சொல்கிறார். சிந்திக்க வைக்கிறார்.
மலேசியாவை விட்டு வெளியில் இருந்தாலும் அதை உள்வாங்க முடிகிறது. அதே போல
வித்யாவின் கேள்விபதில் தொடங்கியது மகிழ்ச்சி. அடுத்த வல்லினத்தைக் காண
ஆவலாக உள்ளது.
வெங்கடேஷ்
தொடர்கள் வரட்டும்
வல்லினத்தின் அனைத்து தொடர்களும் அருமை. குறிப்பாக பச்சைபாலனின்
கட்டுரையும் பாலாவின் இலங்கை சிறுகதை குறித்தக் கட்டுரையும் வரவேற்கத்
தக்கது. லிவிங் ஸ்மைல் வித்யா குறித்து இப்போதுதான் அறிகிறேன். அ.மார்க்ஸ்
தனது வழக்கமான கட்டுரைகள் போல் அல்லாமல் இதில் பல இடங்களில் சிலிர்க்க
வைக்கிறார். தொடர்கள் தொடர்ந்து வரட்டும்.
|