முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 45
செப்டம்பர் 2012

  அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை... 1
அ. பாண்டியன்
 
 
       

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன் நிகழ்வு தொடர்பான கட்டுரைகள்:

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன்

டத்தோ அம்பிகா சீனிவாசனின் தலைமை உரை
வல்லினம் ஆசிரியர் குழு

இரு கேள்விகள்
வல்லினம் ஆசிரியர் குழு

கா. ஆறுமுகத்தில் அறிமுக உரை
வல்லினம் ஆசிரியர் குழு



கட்டுரை:

டெசோ: ஒரு பழைய தாத்தாவின் பல்லவிகள்!
யோ. கர்ணன்

ஆஷா: இனி...
ம. நவீன்



சினிமா பார்வை:

‘அட்டகத்தி’ – தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு பரிணாமம்
மீனா


தொட‌ர்:

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்... 4
அ. மார்க்ஸ்


கேள்வி பதில்:

லிவிங் ஸ்மைல் வித்யா பதில்கள்
லிவிங் ஸ்மைல் வித்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை
அ. பாண்டியன்

அச்சில் ஏறாத உண்மைகள்
இரா. சரவணதீர்த்தா

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்



கவிதை:

துரோணா

எம். ராஜா

சம்பு

ந. பெரியசாமி

இரா. சரவண தீர்த்தா

ஆறுமுகம் முருகேசன்



எதிர்வினை

அங்காத்தான் 50

இன்றைய அறிவியல் உலகில், உலகின் ஏதாவது ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு நவீன தொழி நுட்பம் உடனே உலகம் முழுவதும் பரவி புகழ் பெற்று மக்கள் மனதில் நிலைபெறுகிறது. அடுத்த கட்டமாக, உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு அதே தொழில் நுட்பத்தை மென்மேலும் ஆய்வு செய்யவும் செம்மை படுத்தவும் முனைகின்றன. அதோடு, அதே தொழில் நுட்பத்தில் மேலும் பல சிறப்பம்சங்களை இணைத்து அதி நவீன தொழில் நுட்பங்கள் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஆரம்ப தொழில் நுட்ப அறிவு ஒரு நாட்டாருக்குச் சொந்தம் என்றாலும் அதன் வளர்ச்சியில் உலகமே பங்கெடுத்துக் கொள்வதைக் காணமுடிகிறது. காமிரா முதல் கைப்பேசிவரை… விண்வெளி ஆய்வு முதல் மனித குலோனிங் வரை இதுவே நிகழ்கிறது.

உலக இலக்கிய வளர்ச்சியைக் கூர்ந்து நோக்கினால், நவீன இலக்கியமும் ஒரு தொழில் நுட்பம் போன்றே எங்கும் வளர்ந்து வந்திருப்பதை நவீன இலக்கிய வரலாறு காட்டுகிறது. நவீன இலக்கியத்தின் முக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் மற்றும் புதுக்கவிதை ஆகியவற்றின் தொடக்கம் என்பது ஒரு நாட்டில், ஒரு மொழியில் தோன்றினாலும் (பொதுவாக ஐரோப்பா) அது வளரவும் மெருகேறவும் உலக மொழிகள் அனைத்தும் ஒன்றாகவே பாடுபட்டு வந்துள்ளன. புதுக்கவிதை வளர்ச்சியில் ஜப்பானிய கவிதைகளின் ஆளுமையும் நவீன இலக்கியக் கோட்பாடுகளில் ரஷ்ய, லத்தின் அமெரிக்க நாடுகளின் கைச்சரக்கும் அதிகம் உள்ளதை ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஒரு தொழில் நுட்பம் உலக நாடுகளால் பரபரப்பாக பேசப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுவது போலவே இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கிலிருந்து வந்த நவீன இலக்கியம் என்னும் ‘இலக்கிய தொழில் நுட்பமும்’ ஆசிய நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. அன்றைய கால கட்டத்தில் பிரிட்டிஷாரின் கை உலகில் ஓங்கியிருந்ததால் இந்த இலக்கிய ஏற்பு சுலபமாக நடைபெற முடிந்தது.

தமிழ் உட்பட ஆசிய மொழிகள் அனைத்திலுமே பாரம்பரிய இலக்கியம் என்ற ஒன்று மரபாக பண்ணெடுங்காலமாக போற்றப் பட்டு வந்துள்ளது. கதை கூறுதல் அதில் முக்கியமானது. கவிதை வடிவிலோ, வசன வடிவிலோ ஒரு கதையை மையப்படுத்தி மக்களுக்குக் கூறப்பட்டுள்ளது. சிறுகதை என்கிற தனி கட்டமைப்பு இல்லாவிடினும் பொதுவாக ஒரு புனைவு கதையாகக் கூறப்பட்டு வந்துள்ளது. ராமாயணமும் மகாபாராதமும் அவற்றின் தழுவலாக வந்த பிற காவியங்களும் ஆசிய மொழிகள் அனைத்திலும் பரவியிருந்ததைக் காணமுடிகிறது. ஆகவே, மேற்கிலிருந்து வந்த நவீன இலக்கியமானது கதைகளைப் படைக்கும் இலக்கியப் பணியை ஆசிய இலக்கிய உலகுக்குப் புதிதாக அறிமுகப் படுத்தியது என்று கூற முடியாது. ஆனால் உரைநடை இலக்கியத்தில் கலை நயத்தையும் சமூக பிரங்ஞையையும் யதார்த்ததையும் சேர்க்கும் நுணுக்கத்தை சொல்லித்தந்தது என்று கூறலாம். ஆகவே, மேற்கத்திய இலக்கியம் காட்டிய கலை நயத்தோடும் பாங்கோடும் படைக்கப்பட்ட கதைகள் ‘சிறுகதைகள்’ஆயின.

இன்று, தமிழ் இலகிய வடிவங்களில் சிறுகதை இலக்கியம் என்பது பலரையும் கவர்ந்த ஒன்றாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. தமிழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கி ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். வ. வே. சு ஐயரின் படைப்பையும் (குளத்தங்கரை அரசமரம்) பாரதியாரின் படைப்பையும் ( துளஸீபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்) மேற்கோள்காட்டி இக்கருத்தை நிறுவுகிறார்கள்.

மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் தோன்றி வளர்ந்தது 1930- களில் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதற்கு முன்பும் இங்கே சிறுகதைகள் எழுதப்பட்டிருக்களாம். எனினும் போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை, அதே போல் மலேசிய முதல் தமிழ்ச் சிறுகதையை எழுதியவர் யார் என்பதிலும் இன்றும் மர்மம் தீரவில்லை, ஆனாலும் தமிழ் நாட்டு இலக்கிய தாக்கதிற்கேற்ப இங்கும் சிறுகதைகளில் பல பரிணாமங்களும் புது முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

உலக மொழிகளுக்குள் எல்லாம் பிரவேசித்து மாளிகை கட்டி அமர்ந்திருக்கும் சிறுகதை இலக்கியம் தமிழுக்குள் வாழ்வது போலவே மலேசிய தேசிய மொழியான மலாய் மொழியிலும் வாழ்கிறது. மலாய் மொழி சிறுகதை வளர்ச்சி மலேசியத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியோடு ஒத்தே அமைந்துள்ளது. முதல் மலாய் சிறுகதை 1920-ல் எழுதப்பட்டதாக அஷிம் அவாங் என்கிற இலக்கிய ஆய்வாளர் கூறுகிறார். நோர் பின் இப்ராஹிம் என்பவர் எழுதிய ‘சோம்பலின் தீமை’ (kecelakaan Pemalas) என்னும் சிறுகதையே மலாய் மொழியின் முதல் சிறுகதையாக அவர் குறிப்பிடுகிறார். ஆக, மலேசிய தமிழ்ச் சிறுகதைகளும் மலாய் சிறுகதைகளும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோன்றி வளர்ந்தன என்று கொள்வது பிழையாகாது.

அன்று தொடங்கி மலாய் சிறுகதைகள் பல்வேறு மாற்றங்களையும் வளர்ச்சியையும் கண்டு வந்துள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகெங்கும் ஏற்பட்ட பல்வேறு சிந்தனை அலைகளும் சுநத்திர வேட்கையும் மலாய் சமூகத்தையும் தாக்கி அவற்றை இலக்கியத்தில் வெளிப்படுத்தின. பாக் சாக்கோ, அமினு ரஷிட் போன்றோர் எழுத்தை சுதந்திர போராட்ட கருவியாகவே பயன்படுத்தினர். அவர்களின் சிறுகதைகள் மக்களிடையே சுதந்திர சிந்தனையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றின.

மலாய் சிறுகதை வளர்ச்சியை பத்து பத்து ஆண்டுகளாக பிரித்து ஆய்வு செய்வது வழக்கமாக உள்ளது. இதன் வழி மலாய் சிறுகதைகள் அடைந்து வந்துள்ள பரிணாம மாற்றங்களை நன்கு அறிய முடிகின்றது, நவீனத்துவம், பின்நவீனத்துவம், இருத்தலியல், எதார்தயியல் என்று பல தளங்களில் மலாய் சிறுகதைகள் படைக்கப் பட்டுள்ளன. ஆனால் தலீத்தியல் இலக்கியம் மட்டும் மலாயில் இல்லை. இந்தியர்களைப் போல் ஜாதி வேறுபாடுகளும் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமும் மலாய் சமூகத்தில் இல்லாததால் அவ்வகை இலக்கிய தேவையும் அங்கு இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் கதைகளில் சமுதாயத்தின் எல்லா நிலை மனிதர்கள் பற்றியும் எழுதத்தவரவில்லை.

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடி காலம் குறிப்பிட்டு பேசப்படுவது போன்று மலாய் சிறுகதை வரலாற்றில் ‘அங்காத்தான் 50’ பேசப்படுகிறது. முற்போக்கு படைபாளர்களை மலாய் இலக்கிய உலகம் வெளிப்படுத்திய காலம் அது. தொடக்க காலத்தில் ஆரம்ப மலாய்மொழி கல்வி கற்றவர்களே மலாய் சிறுகதைகளை எழுதி வந்தார்கள். ஆனால் 60-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மலாய் இலக்கிய பட்டதாரிகள் பலரும் எழுத்துத் துறையில் தீவிரமாக இயங்கத்தொடங்கினர். ஆங்கில அறிவு கொண்ட இவர்களால் மலாய் சிறுகதைகள் மேலும் வலுபெற்றன. மலாய் சிறுகதைகள் தீவிர வாசிப்புக்கு உட்பட்ட காலமாக இதைக் குறிப்பிடலாம்.

மலேசியாவில் சுதந்திரத்திற்கு பிறகு உருவான சமுதாய சூழல் எல்லா இனங்களையும் சென்றடைந்தது. இலக்கிய படைப்புகளில் இத்தாக்கம் அதிகமாகவே இருந்தது. மே 13 இனக்கலவரத்திற்கு பிறகு மலேசிய இனங்களுக்குள் தீவிரமான இனம் சார்ந்த சிந்தனைகள் வேரூன்றத் தொடங்கின. தங்கள் இனம், மொழி, சமயத்தின் பால் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்தி பலரும் சிந்திக்க தொடங்கியிருந்த காலம் அது. இக்காலகட்டத்தில் மலாய் சிறுகதைகளின் கருப்பொருளிலும் உத்தியிலும் பல்வேறு மாற்றங்கள் காணத்துவங்கின. இங்கு தமிழில் தீவிரமாக நவீனத்துவத்தை நோக்கி நகர்ந்த இலக்கிய படைப்புகள் வரத்துவங்கிய 70-ஆம் ஆண்டுகளில், மலாய் மொழியிலும் தீவிர படைப்புகள் தோன்ற ஆரம்பித்தன.

இக்கட்டுரையில் நாம் மலாய் சிறுகதைகளின் வளர்ச்சியை ஆராய்வதோடு தேர்ந்தெடுத்த சில மலாய் சிறுகதைகளைத் தமிழ் சிறுகதைகளோடு ஒப்பிட்டும் பார்க்கலாம். முன்பே கூறியது போல சிறுகதை இலக்கியம் ஒரே மூலத்திலிருந்து வந்தாலும் அது வெவ்வேறு தளங்களில் சமுதாய பின்னனி, போராட்டம், வாழ்க்கைத் தத்துவம், சமய கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக் கேற்ப மாறுபட்டும் கிளைவிட்டும் வளர்ந்துள்ளது. மலாய் சிறுகதைகளின் வளர்ச்சியில் மலாய்ச் சமுதாயத்தின் பல்வேறு கால கட்ட போராட்டங்கள் முன்வைக்கப் படுகின்றன. சமய கொள்கைகளில் தீவிர ஈடுபாடும், மறுமையில் ஆழ்ந்த நம்பிகையும் கொண்டு வாழப்பழகிக் கொண்ட மலாய் சமுதாயம் எந்த அளவு மேற்கத்திய நவீன இலக்கிய கோட்பாடுகளை ஏற்று தங்கள் சிறுகதைகளில் வெளிப்படுத்தி வந்துள்ளது என்பதையும் ஆராய முடியும்.

முன்பே சொன்னது போல், கதை கூறுதல் என்று எடுத்துக் கொண்டால், தமிழுக்கு மிக தொன்மையான பாரம்பரியம் உண்டென்பதை யாரும் மறுக்க முடியாது. நாம் மொழியாலும் இலக்கியத்தாலும் மூத்தவர்கள் என்பது உண்மை. ஆனாலும் சிறுகதை இலக்கியத்தை நாம் நவீன கதை கூறும் பாணியாக பார்ப்பதால், அதை மலாய் இலக்கியத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது ஆக்ககரமான தேடலாகவே அமையும். கதைக் கரு, உத்திகள், கோட்பாடுகள் போன்ற பல்வேறு கோணங்களில் நாம் மலாய் சிறுகதைகளை அணுகி ஆராய முடியும்.

மேலும், தமிழைப் போல் அல்லாமல், மலாய் மொழி ஒரு நாட்டின் தேசிய மொழி என்கிற உயர் தகுதியோடு உலா வருகிற ஒரு மொழியாகும். அரசாங்க நிலையில் மலாய் மொழி வளர்ச்சிக்குப் பல்வேறு ஊக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் மலாய் இலக்கியத்தைக் கட்டாய பாடமாக பயில்கின்றனர். மலாய் இலக்கிய படைப்பாளர்கள் வாய்ப்பும் வசதியும் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா (மாலாய் மொழி மேம்பாட்டு கழகம்) என்னும் அரசாங்க அமைப்பு – ஏறக்குறைய நமது மன்னர்கள் வளர்த்த தமிழ்ச் சங்கங்கள் போன்றது - மலாய் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளிக்கொணர முழு பொறுப்பெடுத்துக் கொள்கிறது. அதோடு மலாய் இலக்கியங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லவும் பிற மொழி இலக்கியங்களை மலாயில் மொழிபெயர்த்து வெளியிடவும் இக்கழகம் பணியாற்றுகிறது. ‘டேவான் சாஸ்தெரா’ போன்ற இலக்கிய இதழ்களை வெளியிடுகிறது. அரசாங்க சார்பாக பல்வேறு இலக்கிய போட்டிகளை நடத்தி படைப்பாளர்களை மேலும் ஊக்குவிக்கிறது. சுருங்கச் சொன்னால், பாரதி கண்ட கனவை டி.பி.பி மலாய் மொழிக்காக செயல் படுத்துகிறது!

ஆகவே மலாய் இலக்கியவாதிகள் தீவிர இலக்கிய முயற்சிகளில் எந்த தடையும் இன்றி தைரியமாக இயங்க முடிகிறது. பல்வேறு இலக்கிய பரிசோதனைகள் அங்கு நிகழ்த்தப் படுகின்றன. பலர் முழுநேர எழுத்தாளர்களாக இலக்கிய துறையில் ஈடுபடுகிறார்கள். ஜனரஞ்சக படைப்புகள் ஒரு பக்கம் படையெடுத்தாலும் (நமது தினசரிகள், வார மாத இதழ்கள் போன்று) சில உயரிய, தீவிர இலக்கிய படைப்புகள் தொடர்ந்து பலராலும் படைக்கப்படுகிறது. ஆனாலும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு இதுவரை எந்த மலாய் இலக்கியவாதிக்கும் கிடைக்கவில்லை. இன்னும் சிறிது காலத்தில் அந்த கனி அவர்கள் கைகளில் விழுந்தாலும் ஆச்சரியமில்லை.

இவ்வளவு.'ஆயுதங்களோடும் கேடயங்களோடும்' இயங்கும் மலாய் இலக்கிய தளத்தின் வெளிப்பாடான சிறுகதைகளின் நோக்கும் போக்கும் நாம் ஓரளவேனும் அறிந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் 'அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை' படைக்கப்படுகிறது. ஆனாலும் இது ஒரு முழுமையான ஆய்வாகாது. இதை ஒரு வழிகாட்டியாக மட்டுமே கொண்டு வல்லினம் வாசகர்கள் இலக்கிய வெளியில் தொடர்ந்து நகர வேண்டும் என்பதே நம் எண்ணம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768