|
|
என் ஆட்டத்தின்
எதிரி...
சிறிதும்
பொறுத்தமற்றவோர் எதிரியை அறிமுகப்படுத்தி
நீதியேயற்ற இந்த ஆட்டத்தில்
விருப்பமற்ற
என்னை இறக்கிவிட்டீர் ஆண்டவரே
துளியும்
சமதையற்றவோர் எதிரியைப் பரிசளித்து
எடுத்தயெடுப்பிலேயே
எனை அவமானமுறவும் செய்து விட்டீர்
அதிலும்
ஒருபோதும் என்னால் சகிக்கவே முடியவில்லை
குரைக்க மறந்ததோடு அல்லாமல்
சதா வாலை மட்டுமே ஆட்டுகிற
நாய்களை வளர்க்கும் ஓர் எதிரியை
அய்யோ எனக்கு வேண்டவே வேண்டாம்
ஒரு பூனை விடும் சிறு குசுவைப்போய்
முகர்ந்து பார்க்கும் ஓர் எதிரி
எல்லாவிடத்திலும் வாயை வைக்கும் எதிரி
என் எதிரியென்று
தன்னை சொல்லித் திரிகையில்
நான் கூனிக்குறுகி உடைந்து போகிறேன்
எதிரியென்றொரு கோதாவில் முகத்துக்கெதிரே
என் எதிரி வந்து நிற்கையில்
நடுவீதியில்
ஆடையுருவி அம்மணப்பட்டதாய் குமுறுகிறேன்
காத்திரமும் திடசித்தமுமான ஓர் எதிரி
காலம் தாழ்ந்தேனும் வரட்டுமே
அவசரத்தில் ட்ரவுசரைக் கழற்றும்
இந்த ஆட்டத்தைக் கலைத்துவிட்டு
அதுவரை
என்னைக் காத்திருக்கச் செய்யும் ஆண்டவரே
அல்லது
நான் வடக்கயிறில் தொங்கி
நாக்குத்தள்ளத்தான் வேண்டுமெனில்
முகந்திருப்பி
உமது குண்டியைக் காட்டி நில்லும் ராஜா....
|
|