|
|
வெண்மை
என் அம்மாவின்
முலைக்காம்பில்
சொட்டுச் சொட்டாய்
விழுந்த
வெண்மையை
எட்டிச் சுவைத்த
என் நாவால்
மறக்க முடியாதவையில்....
என் குழந்தையின்
கருவிழி அழகை
பின் புறமாக நின்று
கனக்கச் செய்யும் செய்வதில்...
பள்ளிச் சீருடையும்
காலுறையும்
காலணியும் வெண்மையை
மறக்கும் போதெல்லாம்
மாரியம்மா டீச்சர்
சாமி ஆடியதில்....
பிரசவ வார்ட்டில்
ரத்த குளத்தில்
தலையை முட்டிக்கொண்டு
வெளிவரும்
சிசுவின்
அழுகையில்...
இரண்டு கால்களில்
ஆட்டம் ஆடிய
உடலை
நான்கு கால்களில்
சுமந்துச் செல்லும்
நேரத்தை
காதோரம்
ஓலை அனுப்பும்
காலத்தின்
கட்டளையில்...
உடலுறவில் பீரிட்டு
வெளிவந்து
வரவேற்று இடம்
கொடுக்கும்
பெண் முட்டையின்
திறந்த மனத்தில்.....
வெண்மை
எனக்குப் பிடித்த
வர்ணமாக
இதுவரையிலும்
இருந்தது.
மனம்
புதைந்து
புலன்கள்
இழந்து
ஓரமாய்
ஓரங்கட்டப்படும்
வாழா வெட்டி
சூன்யத்தில்....
எனக்குப் பிடித்த
வர்ணமாக
இதுவரையிலும்
இருந்த
வெண்மை
இப்போது இல்லை.
|
|