|
|
அ. முத்துலிங்கத்தின் ‘கனகசுந்தரி’

கனகசுந்தரி அனைவரின் கண்களுக்கும் பார்க்க அழகாக
தெரிகின்றாள். அதெற்கெல்லாம் காரணம் அவளுடைய வெள்ளைவெளேரென்ற நிறம். விமலா
ஆசிரியை அவளுக்குக் கணிதம், சரித்திரம், தமிழ், வன்னவேலை, சமஸ்கிருதம்
போன்ற பாடங்களைக் கற்பிக்கின்றார். பிற மாணவர்கள் விமலா ரீச்சர் என்று
அழைத்தாலும் அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சராக இருக்கின்றார். விமலா ரீச்சர்
பாடத்தின் காரணமாய் கனகசுந்தரியைக் கண்டிப்பதெல்லாம் அவளுள் வெறுப்பை
உண்டாக்குகின்றது. தன்னுடைய வெள்ளை நிறத்தின் மீதான ஆற்றாமையைத் தான் அவர்
தன்மீது காட்டுவதாய் எண்ணுகின்றாள். ஒருமுறை விமலா ரீச்சரின் கறுப்பு
நிறத்தைக் கேலியாய் தன் நண்பர்களிடம் பேசியவளைத் தலைமையாசிரியர் பள்ளியை
விட்டு நிறுத்துக்கின்றார். இனி தனக்குப் படிப்பு வேண்டாமென்றும் திருமணம்
செய்து கொள்ள போவதாகவும் மாப்பிள்ளை பார்க்க சொல்லி அம்மாவிடம்
கூறுகின்றாள். அவளுடைய ஒரேயொரு நிபந்தனை இதுதான்: ’மாப்பிளை
ரோட்டுக்கூட்டும் ஆளாகக்கூட இருக்கலாம், ஆனால் வெள்ளையாக இருக்கவேண்டும்.’
நிறைய
மாப்பிள்ளைகள் வருகின்றனர். அவர்களுக்குப் பெண் பிடித்திருந்தாலும்
சீதனத்தைப் பற்றி பேசும்பொழுது அது தடையாகிப் போகின்றது. 75 மைல்
தொலைவிலிருந்து வரும் ஒரு மாப்பிள்ளை வீட்டார், சீதனத்தைப் பற்றிய கவலை
இல்லாது கல்யாண செலவையும் முழுதாக ஏற்றுக் கொள்ள சம்மதிக்கின்றனர்.
மாப்பிள்ளைக்குச் சொந்தமாக நான்கு லோரிகள், கொழும்புக்கு சரக்கு ஏற்றுவதும்
அங்கிருந்து கொண்டுவந்து இறக்குவதுமாக நல்ல வியாபாரம். நல்ல வசதியான
வாழ்க்கை வாழ அவளுக்கு அரிதான வாய்ப்பு. ஆனால் மாப்பிள்ளை நெட்டையாகவும்
கறுப்பாகவும் இருந்தார். யாரும் எதிர்ப்பாரா விதமாய் கனகசுந்தரி சம்மதம்
தெரிவித்தாள். அதற்கும் காரணம் இருக்கவே செய்தது. அவளுக்குப் பிடித்தமான
ஓர் அரசியாய் உலா வர ஏற்ற ஹில்மன் மிங்ஸ் கார் ஒன்று மாப்பிள்ளையிடம்
இருந்தது. மூன்றே மாதத்தில் திருமணம். உச்சிப்பட்டம், இரட்டை வடம் சங்கிலி,
தங்க வளையல்கள், ஒட்டியாணம், நெக்லஸ் என மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த
ஆபரணங்களைக் கனசுந்தரிக்குப் பூட்டி அழகு பார்க்க, கனகசுந்தரியின் தாயார்
தனக்குச் சொந்தமான ஒரேயொரு சிவப்புக் கல் அட்டியலைக் கொண்டுவந்து மகளுக்கு
பூட்டியபோது அதை உடனே கழற்றி தங்கையிடம் தந்து விடுகின்றாள்.
திருமணம் முடிந்து ஒருநாள் கழிந்தது. தன் கணவரையே கார் ஓட்டுமாறு
பணிக்கின்றாள். அவளும் முன் இருக்கையில் அமர்கின்றாள். ஆசிரியர் திட்டிய
‘உருப்படாமல் போவாய்’வார்த்தைகளை நினைத்து மனதுக்குள் சிரிக்கின்றாள்.
கணவன் சிகரெட் புகைப்பதைப் பார்த்துப் பெருமையடைகின்றாள். போகும் வழியில்
தாய் வீட்டிற்குச் செல்ல எண்ணுகின்றாள். கணவனைக் காரிலேயே இருக்க
சொல்லிவிட்டு இறங்குபவள், உறங்கிக் கொண்டிருக்கும் தங்கையைக் காலால் தட்டி
எழுப்பி சிவப்பு கல் அட்டியலைப் பறித்து தானே அணிந்து கொள்கின்றாள்.
தன்னைப் பார்க்க ஓடி வரும் தாயையும் தந்தையும் கூட திரும்பி பார்க்காது
காரில் திரும்புகின்றாள். இது எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் கதை
‘கனகசுந்தரி’.
கனகசுந்தரியின் கர்வத்தின் முக்கிய தூண்டுகோலாய் இருப்பது அவளது வெள்ளை
நிறம். வெள்ளை நிறத்தின் மீதான மதிப்பும் மரியாதையும் அவளது ஆணவத்தைப்
பெருக்குகின்றது. நிறம் எனும் ஒரு அம்சம் மட்டுமே மனிதர்களின் அழகை தரம்
காட்டுவது ஏற்க இயலாத ஒரு விஷயம். ஆனாலும் இது காலங்காலமாக நடைமுறையாக
இருந்து வருவதால் அதுவே ஒரு கோட்பாடாகவும் அமைந்துவிட்ட அவலமிது. கதையில்
வரும் விமலா ரீச்சரும் ‘அழகு என்பது தோல் நிறத்தில் இல்லை. கறுப்பானவர்கள்
அழகாகவும், வெள்ளைக்காரர்கூட அழகில்லாமலும் இருக்கலாம். உதாரணத்துக்கு உலக
அழகி கிளியோபாட்ரா. அவர் வெள்ளைக்காரியல்ல, ஓர் ஆப்பிரிக்கக்காரி’என
வலியுறுத்துகின்றார். தாயும் அவளைக் கண்டிக்கவே செய்கின்றார். அதையெல்லாம்
ஏற்றுக் கொள்ளும் சுபாவம் கனகசுந்தரிக்கு இல்லை. அவள் தன் நிறத்தின் மீது
கொண்டிருக்கும் கர்வம் எல்லாவற்றையும் எஞ்சி நிற்பதாகவே ஓர் எண்ணம்.
தன்னைக் கண்டிக்கும் ஆசிரியை வயதில் மூத்தவர், கல்வி கற்றவர் என்பதை
அறிந்திருந்தாலும் கனகசுந்தரிக்கு அவரது கறுப்பு நிறம்
ஏளனத்துக்குரியதாகின்றது. தன் வெள்ளை நிறத்துடன் ஆசிரியையின் கறுப்பு
நிறத்தை ஒப்பிட்டு பார்க்கின்றாள். திருமணம் முடிந்து ஒரு நாள் மட்டுமே
கடந்த நிலையில் தனக்கு அனைத்தும் கிடைத்துவிட்ட தற்பெருமை அவளுள்
உருவாகின்றது. தன்னை ஏசிய ஆசிரியையின் வார்த்தை பழிக்காது தான் ஜெயித்து
விட்டதாய் எண்ணி அவளது கர்வம் இன்னும் மேலோங்குகின்றது. தன்னுடைய
வாழ்க்கையைக் காட்டிலும் ஆசிரியை கண்டித்த வார்த்தைகளைத் தான்
மாற்றிவிட்டதாய் நினைத்து அவள் அடையும் மகிழ்ச்சியின் நீடிப்பு எதுவரை
என்பதைத் தெரியாதவளின் அறியாமை இன்னும் ஆங்காங்கே எத்தனையோ மனங்களில்
கல்லாய் உறைந்து கிடக்கின்றது. இத்தகைய அறியாமை தானே உணர்ந்தாலொழிய அழிக்க
இயலாது.
புற தோற்றம் அதாவது அழகு, நிறம், வயது என்பவை காலத்தால் மாறும்
தன்மையுடையவை என்பதை அனைவரும் அறிந்திருந்தும் அதை மறந்து விடுகின்றனர்.
புற அழகு மட்டுமே திருப்தியைத் தந்து விடுவதில்லை. உலகில் இருக்கும்
அனைத்துமே அழகானவை. அழகு என்பது சில சமயங்களில் புறத்திலும் பல சமயங்களில்
அகத்திலும் ஒளிந்திருக்கும். அதைக் கண்டு கொள்ளும் தருணங்கள் இயல்பானதல்ல.
புற அழகு பல சமயங்களில் ஆபத்தானது என்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டியுள்ளது.
கதையின் இறுதி வரிகள் இவை:
கார் கிளம்பியதும் அதைத் தொடர்ந்து சிறுவர்கள் ஓடினார்கள். கார், அது
கிளப்பிய புழுதியில், மறைந்தது. சிறிது நேரத்தில் சிறுவர்களும்
மறைந்தார்கள். மாயை உலகில் புற அழகில் மயங்கி மனிதர்கள் ஓடுகின்றனர். மாயை
மாயமாய் மறைகின்றது. சிறிது காலத்தில் மனிதர்களும் மறைந்து விடுகின்றனர்.
|
|