|
|
ஒரு நிருபரின் தொடர்...

தமிழ்ப் பத்திரிகை உலகம் ஒரு வித்தியாசமான உலகம்.
விசித்திரமான உலகமும் கூட. பிற மொழிப் பத்திரிகையில் இல்லாத ஒன்று தமிழ்ப்
பத்திரிக்கையில் மட்டும்தான் பார்க்கமுடியும். மொழி உணர்வும் இன உணர்வும்
அதிகமாகப் பேசப்படுகின்ற களமாக தமிழ்ப் பத்திரிக்கைகள் தங்களது கடமைகளைச்
சரியாக ஆற்றுவதில் அவர்களுக்கு நிகர் யாருமில்லை.
தமிழ் மொழிக்கு ஊறு வந்தாலும், தமிழ் இனத்திற்கும்,பொதுவாக இந்தியர்களின்
உரிமைக்குக் குரல் கொடுக்கும் உயர்ந்த மனம் படைத்த பத்திரிகையாக தமிழ்ப்
பத்திரிகைகள் திகழ்கின்றன.
நம் மலேசிய நாட்டில் தினசரி பத்திரிக்கை என்று எடுத்துக் கொண்டால் தமிழ்
நேசன், மலேசிய நண்பன்,மக்கள் ஓசை, தினக்குரல்,நம் நாடு என்று ஐந்து
பத்திரிகைகள் சந்தையில் விற்பனையில் உள்ளன. இந்த ஐந்து பத்திரிக்கைகளும்
தனித் தனி நோக்கத்துக்காகத் தங்களின் எழுத்துக்களை அச்சில் ஏற்றி
வந்தாலும், இறுதியில் அதனுடைய பங்கு தாரர்கள் எதிர்பார்ப்பது லாபமா அல்லது
நட்டமா என்ற கேள்விக்கு பதிலை மட்டுமே!
இதனால் பத்திரிக்கை ஒன்றுக் கொன்று சந்தையில் போட்டிப் போட்டுக் கொண்டு
ஓடுவதையும், பக்கங்களில் செய்திகளை நிரப்புவதில் முக்கியப் பங்காற்றும்
நிருபர்களும் செய்திகளைக் கொண்டுவருவதில் அடித்துப் பிடித்து ஓடுவதையும்
நம்மால் காண முடிகிறது.
இப்படி ஐந்து பத்திரிகைகளிலும் நாடு தழுவிய அளவில் பணிபுரியும் பல நூறு
நிருபர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் பகுதி நேர நிருபராகவும்
பணியில் உள்ளனர். இன்னும் சிலர் முழு நேர நிருபராகப் பணி புரிந்து கொண்டே
பகுதி நேர பணியையும் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் அரசியல் கூஜாக்களை
தூக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி முழு நேர அரசியல் பத்திரிகையாளராகவும்
செயல் படவேண்டிய கட்டாயத்தில் இருகின்றனர்.
ஒவ்வொரு பத்திரிகைகளும் போட்டி பத்திரிகைகளை வைரிகளாகவே பார்ப்பதுண்டு. இன
ஒற்றுமை,தமிழ் உணர்வு என்றெல்லாம் பத்திரிகைகளில் பல முறை தலையங்கங்களாக
எழுதியிருக்கும் ஆசிரியர்களும் தங்களைப் பார்த்து ஒருத்தருக்கு ஒருத்தர்
பேசிக் கொள்ளாத நிலைமையும் இருந்து வருவது ஒரு சகஜமான போக்காகவே
கருதப்படுகிறது.
செய்திப் பிரிவு, நிறுவன நிர்வாகம், பங்கு தாரர், உரிமம் வைத்திருப்பவர்
என்று நான்குப் பிரிவுகளில் இயங்கும் பத்திரிகை நிர்வாகம் பல வேளைகளில்
பணம் பற்றாக் குறையினால் பலப் பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆளாகும்
மோசமான சூழ்நிலையை எதிர்நோக்குகிறது. பணம் இல்லாமல் தடுமாறும் பத்திரிக்கை
நிர்வாகத்தில் பணத்தை அதிகமாக முதலீடு போடும் நபருக்கு தலையாட்டவேண்டிய
கட்டாயமும் உள்ளது. அதுவும் பணம் போட்டவர் அரசியல்வாதியானால் நிலைமை "ஜிங்
சக்" தான். "வேண்டியவர்கள், வேண்டாதவர்கள்" என்ற அரசியல் இழுப்புக்கு
பத்திரிக்கை செய்திகள் தங்களின் தன்மானத்தை அடகு வைக்கும் ஈனச் செயலுக்கு
தன்னையே விற்று வாழ்கிறது.
உணர்வில்லாத கையில் தமிழ்ப் பத்திரிகை படும் பாடு பாட்டாய் எழுதலாம்.
தன்னுடைய வயிறு வீங்கும் அளவிற்குப் பணத்தையும் செய்தியையும் கொடுக்கும்
வி.ஐ.பி இடமிருந்து பெற்றுக் கொண்டு, அந்தக் குறிப்பிடச் செய்தியை
நிருபர்களிடமிருந்து பெற்ற ஆசிரியர், மறுநாள் வி.ஐ.பி கொடுத்த
பணத்தைவிட,பத்திரிகையில்செய்தியை பளப்பளப்பாகப் பிரசுரித்து நல்லப்
பெயரையும் எடுத்திடுவார். பிறகு வேண்டிய வி.ஐ.பியின் சிபாரிசு பேரில்
வருடத்திற்கு ஒரு முறை விருதுகளுக்குப் பல்லை இளிக்கும் சுயநல
எழுத்துக்குச் சொந்தக் காரர்களையும் நம்மால் காண முடியும்.
"பத்திரிக்கை தர்மம் அற்ற முறையில் செய்திகளைப் பிரசுரித்து, மக்களுக்காகப்
போராடும் பத்திரிகை என்று மேடை போட்டு பேசிவரும் ஆசிரியர்களும் உண்டு.
நிர்வாக மேலாரும் உண்டு.
ஆனால் வெயிலும் மழையும் பாராமல், என்னை ஊற்றக் கூட பணம் இல்லாமல், தொண்டை
வறண்டும் போது தண்ணீர் குடிக்க நேரம் இல்லாமல், பத்திரிகைக்காகவும்,
இனத்திற்காகவும் உண்மையிலேயே உழைக்கும் நிருபர்களை தமிழ்ப் பத்திரிக்கை
நிர்வாகம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.
குறைந்த படிப்பு தகுதி வைத்திருப்பவருக்கும், தமிழை சரிவர எழுதத்
தெரியாதவருக்கும், நல்ல அனுபவம் நிறைந்தவருக்கும் கிடைக்கும் ஸம்பலதைக்
கொஞ்சம் கேட்டுப் பாருங்கள் உங்களுக்கே புரியும் தமிழ்ப் பத்திரிக்கை
நிருபர்களின் துயரமான நிலைமை.
300 வெள்ளி, 500 வெள்ளி 1000 வெள்ளி என்று நிருபர்களுக்கு சம்பளத்தை
வழங்கிவரும் தமிழ்ப் பத்திரிக்கை நிர்வாகம், நிருபர்களின் பணி செலவுத்
தொகையை கவனிப்பதில்லை.
பெட்ரோல், போன் பில், அலுவலக வாடகை, கார் பார்கிங் பில், இன்டர்நெட்
பில்,தொலை நகல் பில்,என்று பல பில்களுக்கு அவர்கள் பதில் சொல்வதில்லை.
இன்னும் சிலரோ வேண்டியவர்களிடம் பணத்தைக் கேட்டு கெட்டிக்காரத்தனமாக நடந்து
கொள்ளச் சொல்வதும் மற்றுமொரு வெட்கக்கேடு.இந்தப் பழக்கம் இப்போது நோயாகப்
பரவி செய்தி எழுத பணம் கொடுங்கள் என்ற கேவலமான பிழைப்புக்கு இட்டுச்
சென்றுள்ளது.
பணம் கொடுத்து வாங்கும் மக்களுக்கு ஒருதலைபட்சமின்றி செய்திகளை வழங்கும்
பணி, பிறரிடமிருந்து பணம் வாங்கும் குணத்தால் கெடுகிறது. இப்படி பணத்தால்
கெட்டுப்போகும் பத்திரிகையின் பிழைப்பு பணத்தை நோக்கி இருப்பதால்,
இவர்களுக்கும் வேறு வழியில்லாமல், தமக்கு வேண்டியவர்களைப்( பணம்
கொடுப்பவர்களை) பாதிக்கும் செய்தியை கசக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு
பழியைத் தூக்கி கே.டி.என் மேலும் போடுவதும் உண்டு.
இவர்களின் நாடகத்தில் கோமாளி பாத்திரத்தை ஏற்பது பிழைக்கத் தெரியாத,
மனசாட்சி உள்ள நிருபர்களே. ஒரு ஏக்கர் நிலம், பிள்ளைப் படிப்புக்கு சீட்டு,
பிழைக்க குத்தகை, புகழ விருது, பறக்க விமான டிக்கெட் என்று ஏகப்பட்ட
சலுகைகள் மனசாட்சி இல்லாத நிருபர்களுக்கு.
"காமிரா கழுத்தில் தொங்கும் வரைதான் உன்னை இந்த உலகம் கண்டு கொள்ளும். அதனை
கழற்றி வைத்த மறுகணமே, நீ வாசலுக்கு வெளியே கழற்றி வைக்கப்படும்
செருப்புதான்" என்று என் நண்பர் அண்மையில் கூறிய அறிவுரை என் மனசாட்சியை
அறுக்கப் பார்த்தது. இப்படி கையேந்தும் நிருபர்களை வளர்த்து
விட்டிருக்கிறது தமிழ்ப்பத்திரிகைகள்.
நிருபருக்கு தமிழ்ப் பத்திரிக்கை கொடுத்திருக்கும் சலுகை ஒன்றுதான்,
நிருபர் இறந்தாலோ, அல்லது நிருபரின் வீட்டில் இறப்பு ஏற்பட்டாலோ அதனைத்
தொட்டு செய்தியும், விளம்பரமும் இலவசமாகப் போடுவார்கள். நிருபர் உயிரோடு
இருக்கும்பொழுது அவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட எந்தவொரு அக்கறையும்
கொண்டிராத பத்திரிக்கை நிறுவனம் சாவுக்கு சங்கூத மட்டும் முதல் பக்கத்தில்
காத்திருக்கிறது.
குடியும், கும்மாளமும் போடும் நிர்வாகம், நிருபர்களின் நலத்தைப் பற்றி
எப்போதாவது யோசித்திருக்குமா? அவர்களுக்கும் பத்திரிகையின் லாபத்தில்
சிறிது விழுக்காடு லாபத்தைப் பகிர்ந்து அளிப்பதற்கு கூட்டத்தில்
பேசியிருக்குமா? நிருபர்களுக்கு மருத்துவ சலுகைகள் முக்கியமானது என்று
யாராவது பரிந்துரை செய்திருப்பார்களா? நல்ல நிருபர் என்று வருடத்திற்கு ஒரு
முறை விருந்து வைத்து அவர்களை அங்கீகரித்திருக்குமா?
எத்தனையோ நிருபர்களின் வீட்டில் அரிசி இல்லாத நிலைமையை கண்ணால் பார்த்தது
உண்டு. பிறரின் துயரை எழுதும் நிருபர்கள் தங்களின் வீட்டில் நிலவும்
வறுமையை வெளியே சொல்லமுடியாமல் புழுங்கித் தவிக்கின்றனர். இந்தோனேசியப்
பெண்களுக்கு வாதாடும் மனித வள அமைச்சர் பத்திரிக்கை நிருபர்களின் வருமான
விவகாரத்தையும் கண்டு கொண்டால் நிருபர்களின் நிலைமையில் மாற்றம் வரலாம்.
தமிழ்ப் பத்திரிகை நிர்வாகத்தில் கைவைத்தால் பத்திரிக்கை செய்தியில் நம்
தலை காணமல் போய்விடும் என்று அமைச்சர் நினைபாரானால் ஒன்றும்
சொல்வதற்கில்லை. பத்திரிகைகள்தான் எலியும் பூனையுமாக இருக்கிறது. நாம்
ஒற்றுமையாக இருந்து நிருபர்கள் சங்கத்தை அமைத்து அதன் மூலம்
உரிமைகளுக்காகப் போராடுவோம் என்று அனைத்து நிருபர்களும் ஒன்று பட்டால்
நிச்சயம் உண்டு வாழ்வு.
|
|