|
|
புறாக்களை தின்று மரங்களை நடுபவர்

காரில் பயணம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். நான்கு
டோல் சாவடிகளை கடந்து போனது பயணம். நண்பர் சொன்னார்:
“பாருப்பா... இந்த நோன்பு பெருநாளில் கூட அவங்க வேலை செய்றாங்க....
பாவமில்லையா...?”
“அடப்பாவி... இந்த நாளில் கூட இங்க வேலை செய்ய ஒரு தமிழனோ சீனனோ
இல்லையேன்னு நான் யோசிக்கிறேன்....”
எனக்குத் தெரிந்த இருவகை ஆட்கள் இருக்கின்றார்கள். முதலாமவர் என் நண்பனை
போல பாவப்படுகிறவர்கள். ஆனால் இவர்கள் படும் பாவம் தவறான குறியீடாய்
இருக்கும். இரண்டாமவர்; என்னை போல கேள்வியினை சரியான முறையில் கேட்பவர்.
ஆனால் அது வெறும் கேள்வியோடு நின்றுவிடும், கேள்வியைத்தாண்டு வேறெந்த
உருப்படியான காரியமும் அங்கு செயல்படுத்தப்பட்டிருக்காது.
சுஜாதா ஒரு முறை சொல்லியிருப்பார், 'இனி வரப்போகும் காலங்களில் பதினைந்து
நிமிட புகழ்தான் யாருக்கும் எஞ்சப்போகிறது' என. அதனை படித்து புரிந்தும்
புரியாத நிலையில் இருந்த வந்த நான்; தற்போது முகநூலின் பயன்பாட்டில் அதன்
முழுமையை உணர்கிறேன்.
தத்தம் முகநூலில் போடப்படும் வாசகமாகட்டும் கருத்தாகட்டும்; குறைந்தது
பதினைந்து நிமிடத்தில் பிரபலமடைந்துவிடுகிறது. ஒரேடியாகத் தூக்குவதும்;
ஒரேடியாக தாக்குவதும் இதில் அடங்கிவிடுகிறது.
சமீபத்தில் ஒரு பெண், தமிழர்களை குறைசொன்னதாக சொல்லி; அந்தப் பெண்ணுக்கு
எதிராக முக்கநூல்காரர்கள் முதல் இருக்கும் சில சங்கங்கள் மற்றும் தனிநபர்
வரை புகார் மீது புகார் செய்து, அந்த பெண்ணுக்கு எதிராகவே ஒரு முகநூல்
பக்கத்தை உருவாக்கி, அதிலும் ஆளுக்கு ஆள் கருத்து சொல்லி, அதனை ஒரு
‘தமிழ்தேசிய?’ பிரச்சனை போல உருமாற்றி கடைசியில் வெற்றி
அடைந்திருக்கிறார்கள்.
இதில் எங்கும் குறையிருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இதை நான் சொல்லப்போய்
இங்கே இருக்கக் கூடிய தமிழ்க்காவலர்கள், என் பரம்பரையை கொஞ்சம் ஆராய்ந்து
'என் தாத்தாவின் தாத்தாவுடைய மனைவி தமிழர் அல்ல. இவன் எப்படி தமிழை பேச
முடியும் என எனக்காக்கவும் தங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து என்னை
மலேசிய மண்ணின் புகழ்மிக்க ஒருவனாக ஆக்கிவிடுவார்கள்.
இந்த ஒற்றுமை, இந்த ஒத்துழைப்பு, இந்த பாசம்.... இப்படி அடுக்கிகொண்டே
போகாமல் அடுத்ததை சொல்லிவிடுகிறேன். தமிழர்கள் ...! - என சொல்லாமல் நாம்
என்றே சொல்ல விரும்புகிறேன். பிறகு இதுவே மையப்புள்ளியாக ஆகிவிடும் நம்
தமிழ்காவலர்களுக்கு.
இவை எல்லாம், நாம் எதிர்நோக்கும் மற்ற பிரச்சனைகளுக்கு இல்லாமல் போனதின்
காரணம் என்னவாக இருக்கும் அல்லது என்னவாக இருக்கலாம். எங்கோ நம் இனம்
கொல்லப்படுகிறது, எங்கோ நம் இனம் உதாசினப்படுத்தப்படுகிறது, எங்கோ நம்
திறமை நிறத்தால் மறைக்கப்படுவிகிறது, எங்கோ நம் பாதை காணாமல் போகிறது,
எங்கோ நம் உழைப்பு உரிஞ்சப்படுகிறது, எங்கோ நம் ஆவனங்கள்
எரிக்கப்படுகிறது...
எங்கோ எங்கோ என எத்தனை முறை சொன்னாலும் எழுதினாலும் இங்கேயும் கொடுமைகள்
நடக்காமல் இல்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா என்ன..?
மிக சமீபத்தில், ஒரு இளைஞன் சிவலிங்கத்தின் மீது ஏறி நிற்கும் புகைப்படத்தை
முகநூலில் பதிவு செய்திருக்கிறான். (புடலங்காய் கதை முதல் புரட்சியின்
தொடக்கம் வரை முகநூலில் உபயம் இருக்கத்தான் செய்கிறது). முகநூல்காரர்கள்
ஒவ்வொருவரும் அந்த இளைஞனின் புகைப்படத்தினை தங்களில் முகநூலில் பகிர்ந்து
அதனை ஓர் ‘இந்துதேசிய?’ பிரச்சனையாக்கி அந்த இளைஞன் கிருஸ்துவ மதத்தை
சேர்ந்தவன் என்பதை துப்பறிந்து துரத்தியே விட்டார்கள். இந்து எனும்
சொல்லின் தோற்றமே புதிதாக இருக்க அதில் துரோகம் வேறு நடக்கிறதா என்ன?
முன்னதில் இருக்கும் மொழி ஒற்றுமையும்; பின்னதில் இருக்கும் மத ஒற்றுமையும்
வெறும் பதினைந்து நிமிட உணர்ச்சி வசம்தான் காரணமோ என நினைக்கவைக்கிறது.
ஆத்மார்த்தமான பற்றோ பக்தியோ இருந்தால் நம் கண்களுக்கு இந்த இருவர்
மட்டும்தானா தெரிவார்கள்.
ஒரு பக்கம் இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களுக்காக அழுகிறோம். இலங்கை அரசை
கண்டிக்கும் வகையில் அவர்களின் பொருட்களை புறக்கணிப்பதாக கோஷமிடுகிறோம்.
மறுபுறம் இங்கே வானொலியில் இலங்கைப் பொருட்களின் விளம்பரத்திற்காக செவி
சாய்க்கிறோம்.
ஒரு இயக்குனரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம்...
“சார் உங்கள் படங்களில் அதிக கவர்ச்சியும் தேவையில்லாத பாடல்களும் இருக்கே
ஏன் சார்...”
“ஓ அதுவா, மக்கள் அதைத்தானே விரும்பராங்க அதான்... வைக்கிறேன்”
“ஒன்னு கேட்கறேன் தப்பா எடுத்துக்காதிங்க சார், மக்கள் விரும்பராங்க
அதனாலதான்னு காரணம் சொல்றிங்களே... இதே போல ஆண்கள் வராங்க அதனால விபச்சாரம்
செய்யறேன்னு ஒரு விபச்சாரி சொன்னா ஏத்துக்குவிங்களா... குய்யோ முய்யோன்னு
கத்த மாட்டிங்க...?”
பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன் இதை. இப்போது எழுதும் போது அதன் பாணி
மாறியிருக்கலாம் ஆனால் அதன் உள்ளடக்கம் இதுதான்.
எதற்காகவும் உணர்ச்சிவசப்பட்டு “நான் தமிழண்டா, தமிழண்டா”-ன்னு கொடியுடன்
நிக்கத் தெரிந்த நமக்கு. நம்முடன் நடமாடும் எட்டப்பன்களை அடையாளன காண வழி
தெரியாமல் தவிக்கிறோம்.
ஒரு குட்டி கதை சொல்லவா...
ஏழை ஒருத்தன் இருந்தானாம். ரொம்ப நல்லவனாம். ரெண்டு பிள்ளைங்களாம். ஒரே ஒரு
மனைவியாம். நல்ல உழைப்பாளியாம். நியாயமா பார்த்தா அவனுக்கு மாசமே ஆயிரம்
வெள்ளி கொடுக்கனுமாம். ஆனா இல்லையாம். அவனுக்கு வர சம்பளமோ ஐநூறு
வெள்ளிதானாம். இருந்தாலும் அவனுக்கு முதலாளி மேல எந்த ஒரு கோவமும்
இல்லையாம் . ஏன்னா... இவனோட அப்பா அந்த முதலாளிகிட்டதான் வேலை செய்தாராம்.
இவனோட பிள்ளைங்களுக்கு நல்ல வேலை அந்த முதலாளி கொடுக்கறதா வாக்கு
கொடுத்திருக்காராம். அதற்கும் மேல மாசாமாசம் இவனுக்கு அந்த முதலாளிதான்
கடன் கொடுத்து உதவராராம். இப்படியே ஒரு நாள் அவன் செத்துப்போய்ட்டானாம்.
கடைசி காரியம் செய்றதுக்கு கைல காசு ஏதும் இல்லையாம். அந்த குடும்பம் தவியா
தவிச்சதாம். அப்போ இந்த முதலாளிதான் கடன் கொடுத்து உதவினாராம். கடன்
மட்டுமா அந்த ரெண்டு பிள்ளைங்களுக்கும் கூட அவர்கிட்டயே ஒரு வேலையை
கொடுத்துட்டாராம். காரியம் செய்ய கொடுத்த கடனைக்கூட உடனே கொடுக்கவேணாம்
மாசாமாசம் பிள்ளைங்க சம்பளத்துல கழிச்சிக்கிறதாம் சொன்னாராம். அப்பாவுக்கு
ஐநூறு வெள்ளி கொடுத்த அந்த முதலாளி ரெண்டு பிள்ளைங்களுக்கும் வேலை கொடுத்து
அதே ஐநூறு வெள்ளியை கொடுக்க ஆரம்பிச்சிட்டாராம். அந்தக் குடும்பம்
மட்டுமில்லாமல் அந்த ஊர்ல இருக்கற எல்லாருமே அந்த முதலாளியை தெய்வமா பாக்க
ஆரம்பிச்சிட்டாங்களாம்....!
எப்படி இருக்கு கதை. இந்த கதை யாருக்கு புரியுதோ இல்லையோ மலேசிய
தமிழர்களுக்கு கண்டிப்பா புரியும்னு நினைக்கிறேன். இங்குதான் அந்த
பிள்ளைகள் போல பல பிள்ளைங்கள் தங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு முதலாளி
வேலை கொடுப்பார் என கழுவிக்கொண்டிருக்கிறது...... ‘கால்களை’.
கால்களை நினைக்கும் போது, கைகள் குறித்தும் கொஞ்சம் சொல்ல நினைக்கிறேன்.
ஒரு முறை எங்கள் வானொலிக்கு கவிப்பேரரசு என சொல்லும் வைரமுத்துவும், மலேசிய
இலக்கிய தன்னைத் தலைவராக நினைக்கும் ஒருவரும் வந்திருந்தார்கள். வைரமுத்து
தன் ஆரம்ப நாள்களில் வானொலி எந்த அளவுக்கு உதவியாகவும் துணையாகவும்
இருந்தது என பேசினார். பேச்சு பயனாகத்தான் இருந்தது. பேச்சு முடிந்ததும்
கேள்வி நேரம் ஆரம்பமானது.
ஒவ்வொருவரும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டும் பதிலுக்குக் கை
தட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
வரிசையில் கடைசியில் இரண்டாவதாக அமர்ந்திருந்த கவிஞரின் மகள் இவ்வாராக
கேள்வியைக் கேட்டார்...
“ஐயா உங்கள் முன் கடவுள் திடீர்னு தோன்றினால் என்ன செய்வீங்க..?”
“மேக்கப்பை கலைத்திட்டு வாருங்கள் டீ சாப்பிடலாம் என்பேன்” என்றார்
கவிப்பேரரசு.
உடனே பலமான கைத்தட்டல். வந்த கைத்தட்டல்கள் வகைப்படுத்த நினைத்தால்
தோல்விதான் மிஞ்சும் போலும்; கைத்தட்டிய எல்லோரும் வாரம் தவறாமல் கோவில்
சென்று அர்ச்சனை முதல் அபிஷேக ஆராதனை வரை கண்களை மூடி கடவுளை
வணங்குபவர்கள். கைத்தட்டியது வைரமுத்துவுக்கா..? கருத்துக்கா..?
உண்மைக்கா..? பகடிக்கா...? வைரமுத்து அழைத்து வந்த எழுத்தாளர் சங்க
தலைவருக்கா..? தங்களில் கோமாளித்தனத்துக்கா..? அல்லது அறிவுபூர்வமான
கேள்விக்கா...? கேள்வி கேட்டவரின் அறிவிற்கா..?
வெறும் வைரமுத்துவை பிரபல பிம்பமாக பார்க்காமல் ஒரு வாசகனாகவோ வாசகியாகவோ
இருந்து அவரின் எழுத்துகளை படித்திருந்தாலே போதும். கேட்கப்பட்ட கேள்வி நம்
தாத்தா பாட்டி காலத்தில் இருந்து அவரிடம் கேட்கபடும் கேள்வி. படிக்காமல்
பாவ்லா என்பதின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது.
|
|