|
|
வல்லினம் வாசகர்களின் கேள்விகளுக்கு 'லிவிங் ஸ்மைல்' வித்யா பதில் தருவார்.
கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

அம்பி, சென்னை
கேள்வி: நீங்கள் திருநங்கைகளும் பெண்தான்
என்பது போல சொல்லியிருந்தீர்கள். அப்படியாயின் உங்கள் எழுத்துகளை பெண்
எழுத்துகள் என்பீர்களா? அல்லது திருநங்கைகளின் எழுத்து எனும் வகையில்
பிரிப்பீர்களா? சில விமர்சகர்களால் திருநங்கை இலக்கியம் எனக்கூறப்படுகிறதே.
பதில் : பெண் இலக்கியம், தலித் இலக்கியம் என ஆண்கள் எழுதுவதைத் தவிர மற்ற
எல்லாவற்றையும் வகைப்படுத்துவது பொதுவாகிவிட்டது. இவ்வகைப்படுத்தல்கள் சில
காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக இவ்வாறு வகைப்படுத்தலில்
எனக்கு உடன்பாடு இல்லை.
என்னளவில் இன்னும் தீவிரமான படைப்பிலக்கியம் திருநங்கைகளிடம் இருந்து
வரவில்லை என்றுதான் சொல்லுவேன். அடிப்படை கல்வியே பெரும்பாலும்
மறுக்கப்பட்ட சூழலில் திருநங்கைகள்/திருநம்பிகள் கற்றோராகவோ/வாசகராகவோ
இருப்பதே அரிது. இதில் அவர்கள் எழுதுவது அரிதினும் அரிதாகிறது. முதலில்
காத்திரமான படைப்புகள் தீவிர இலக்கியமாக பாலியல் சிறுபாண்மையினரிடமிருந்து
வரவேண்டும். பிறகு வகைப்படுத்தலாம்.
சேனன்
கேள்வி: உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?
ஆம் என்றால் உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது. இல்லை என்றால்
திருமணம் ஒரு திருநங்கைக்கு எவ்வாறான பாதிப்புகளை உண்டாக்கும் என
நினைக்கிறீர்கள்.
பதில் : இல்லை. திருநங்கைகள் திருமணம் குறித்து நான் ஏற்கனவே
எழுதியிருப்பதை இங்கே படிக்கலாம். (http://livingsmile.blogspot.in/2009/09/blog-post.html)
மிருஷா - தீபா, இலங்கை
கேள்வி: சிலர் திருநங்கையாக ஒருவர் மாறுவது
அடக்க முடியா காமத்தால்தான் என்கின்றனர். அது உண்மை? நான் பார்த்து ஒரு ஆண்
நண்பர் வருடத்தில் சில வாரம் மட்டும் வெளியூரில் பெண்ணாக இருந்து பின்னர்
சொந்த ஊரில் ஆணாக வருவார். இதை எப்படி எடுத்துக்கொள்வது?
பதில் : அடக்கமுடியாத காமத்தால் என்றால், பேருந்துகளிலும், தெருமுக்கிலும்
பாக்கும் பெண்களெல்லாம் தம் புஜபல பராக்கிரமத்தைக்கண்டு தன் காலில்
விழவார்கள் என்று நாக்கை தொங்க போட்டு நிற்கும் ரோமியோகளை என்னவென்று
சொல்வீர்கள்..? வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் மீது தன் ஆண்
திமிரை காட்டும் ஆண்களை என்ன சொல்வீர்கள்.
நிறம், உயரம், தனிநபர் குணாதிசயம் அனைத்தும் போல பாலினம் என்பது இயற்கையின்
ஒரு நுண்ணிய DNA வடிவமைப்பு. பெரும்பாண்மை மனிதர்களுக்கு மத்தியில்
வெகுசிலர் மட்டும் உயரத்தில் குறைவோடு / அதிக உயரத்தோடு பிறப்பதைப் போல,
பிறவியிலேயே பார்வையின்மையோடோ மாற்றுத்திறனாளியாகவோ பிறப்பதைப் போல இது ஒரு
பாலின குறைபாடு (இதை குறைபாடு என்று கூட கூறமுடியாது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கண்/காது/கை/கால் போன்றவை குறைபாடு இருப்பதால் சில
செயல்களை பெரும்பான்மையினரை போல செய்ய முடியாமல் போகலாம். ஆனால்,
திருநங்கைகளால் சராசரி மனிதர்களைப் போல எல்லா வேலையையும் திறம்பட
செய்யமுடியும்.. வேண்டுமானால், இதை சமூக ஊனம் என்று சொல்லலாம்.)
ஒரு திருநங்கையாக வெளியூரில் கடை கேட்கவோ /பாலியல் தொழிலோ செய்த போதும்,
அவர்களுக்கும் தம் குடும்பத்துடன் வாழவே விருப்பமிருக்கும்.. ஆனால்,
குடும்பம் அவர்களை பெண் அடையாளத்துடன் ஏற்றுக்கொள்ள மனமில்லாத காரணத்தால்,
குடும்பத்திற்காக ஆணுடையில் இவ்வாறு சிலர் வருகிறார்கள்... உங்கள்
குடும்பத்தில் ஒரு திருநங்கை இருந்தால் நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்களா
என்று யோசித்துப் பாருங்கள்... அத்தகைய குடும்பம் வேண்டுமென்றால்
ஆணுடையில்தானே வந்தாக வேண்டிருக்கிறது.
மது நேர்ஷா - லண்டன்
கேள்வி: இலக்கியத்தில் உங்கள் பரிட்சயம் என்ன?
யாருடைய எழுத்தையெல்லாம் வாசிப்பீர்கள்? உலக எழுத்தாளர்களில் திருநங்கை
அடையாளத்துடன் எழுதுபவர்கள் உண்டா?
பதில்: எனது பதின்ம வயது இறுதிகளில் எனக்கு உற்ற தோழனாக இருந்த்து
இலக்கியங்களே... அம்புலி மாமாவில் ஆரம்பித்த எனது நூலகம் வாசம் 18 வயதில்
ஜெயகாந்தனிடம் சேர்த்தது. ஓரிரு நாவல்கள் தவிர கிட்டதட்ட பிஷப் ஹீபர்
கல்லூரி நூலகத்தில் உள்ள அவரது எல்லா நாவலகளையும் படித்தேன்.. பின் சு.ரா,
ஜெயமோகன், எஸ்.ரா என ஆரம்பித்து பின்னர், ஆதவன் தீட்சண்யா, அழகிய பெரியவன்,
பாமா, தமிழ்செல்வன், மௌனி, புதுமைப்பித்தன், லஷ்மி மணிவண்ணன், லஷ்மி
சரவணகுமார், மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதா (!) என கொஞ்சம்
வாசித்திருக்கிறேன்... ஆனால் புனே போய் திரும்பிய பிறகு வாசிப்பு ஏனோ
கொஞ்சம் குறைந்து விட்டது.
திருநங்கை அடையாளத்துடன் சிலர் எழுதியதுண்டு.. ஆனால், பெரும்பாலும் அவை
சுயசரிதை அல்லது பாலியல் சிறுபாண்மையினர் தொடர்பான ஆய்வு நூலாகவோ
கட்டுரையாகவோ தான் பெரும்பாலும் உள்ளது. கவிதைகள் கொஞ்சம் உள்ளது... வலசை
காலாண்டிதல் சமீபத்தில் பாலியல் சிறுபாண்மையினர் சிறப்பிதழ் ஒன்றை
வெளியிட்டுள்ளது. அதில் உலகளவில் நல்ல படைப்புகள் சிறப்பாக
தொகுக்கப்பட்டுள்ளது.. தேடினால் இன்னும் கூட கிடைக்கும்...
அசான் – துபாய்
கேள்வி: நான் உங்கள் மேடை நாடகத்தைப் பார்க்க
வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இணையம் மூலம் பார்க்க வழி உண்டா?
சிடி, டிவிடி கிடைக்குமா?
பதில்: இப்போதைக்கு சிடி/டிவிடி கிடையாது. இது நிகழ்த்துக்கலை...
சிடி/டிவிடியில் பார்க்க வேண்டுமெனில் அதற்கு குறும்படம்/சினிமா போதுமே...
எங்கள் நாடகத்தை பார்க்க விரும்பும் உங்கள் விருப்பத்தை வரவேற்கிறேன்.
சினிமாக்காரங்களை வைத்து கலைஇரவு நிகழ்த்து துபாய் தமிழ் சங்கம் அல்லது
இலக்கிய சங்கம் எங்களை போல நாடகக்காரங்களை அழைத்து நாடகம் போட வைத்தால்
நல்லாயிருக்கும். உங்களை போன்ற அயல்வாசிகளும் நாடகம் பார்த்த மாதிரி
இருக்கும். எங்களுக்கும் பொழப்பு ஓடும்..
ந. பெரியசாமி, ஒசூர்
கேள்வி: தோழி வித்யா உங்களின் இருப்பை
முழுமையாக வெளிக்காட்டிக்கொண்ட நாடக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
பதில்: எனது இருப்பு எனது பாலியல் அடையாளத்தை நீங்கள் குறிப்பிட்டால்
ஒரேயொரு எனது கவிதை வாசிப்பினை தவிர வேறெதும் கிடையாது. ஏனெனில் எனக்கு
மேடை எனக்கு மிக நெருக்கமானது, தனிப்பட்ட எனது உலகம்.. அதில் என் பாலியல்
அடையாளத்தையே அறைகூவலிட்டு கதறுவதில் உடன்பாடு இல்லை...
ஆனால், ஒரு நடிகையாக, ஒரு மகா மகா ராணியாக, ஒரு பெரும் விருட்சம் போல
அரங்கில் நின்று என் பார்வையாளர்களை ஆட்கொள்ளும் ஆளுமையாக இருக்கவே பேரவா
கொண்டுள்ளேன்...வெகு சில நாடகங்களில் சிலமுறை மட்டுமே அந்த மன நிறைவினை
கொஞ்சம் போல அடைந்துள்ளேன். உ.ம். ஒரு முறை பாண்டிச்சேரியில் மிருக
விதூஷகம் (http://livingsmile.blogspot.in/2010/08/blog-post_05.html)
செய்த போதும், சென்னை ஸ்பேச்ஸில் சூர்ப்பணங்கு மற்றும் மொளகாப் பொடி
நாடகத்தின் போதும்...
|
|