|
|
தீராத இலக்கிய மோசடிகள்
சிறு வயதிலேயே பார்வையையும் கேட்கும் திறனையும்
இழந்துவிட்டாலும் கல்வித்துறையில் சாதனைகள் நிகழ்த்திய ஹெலன் கெல்லரின்
வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் என் கவனத்தை ஈர்த்தது. ஒரு முறை அவர் பள்ளியில்
எழுதிய கட்டுரை ‘காப்பி அடிப்பு’ எனக் குற்றஞ் சாட்டப்பட்டார். இதனால்
அவமானத்துக்குள்ளான அவர், அதற்குப் பிறகு எழுதிய கட்டுரைகளைத் தம்
தோழிகளிடம் காட்டி உறுதிப்படுத்திய பிறகே ஆசிரியரிடம்
அனுப்புவாராம்.அதைப்போலவே, அமெரிக்காவின் மார்ட்டின் லுதர் கிங்கின்
முனைவர் பட்ட ஆய்வேட்டில் மூன்றில் ஒரு பகுதி காப்பியடிப்பு எனப்போஸ்டன்
பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியதும் அதிர்ச்சியூட்டியது. ‘தி ரூட்ஸ்’ நாவல்
எழுதிய அலெக்ஸ் ஹேலி, ஹேரோல் கோலெண்டரின் ‘தி ஏஃப்ரிகன்’ நாவலிலிருந்து
காப்பியடித்தற்காக அந்த எழுத்தாளருக்கு $650,000 செலுத்தினார்.
இன்று எல்லாத் துறைகளிலும் ஊழல்கள், மோசடிகள், திருட்டுத்தனங்கள் மலிந்து
விட்டன. அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
பரம்பொருளைப்போலவே அவை எங்கும் வியாபித்து நின்று நம்மை அச்சுறுத்துகின்றன.
அதிலும் இலக்கியத்துறையில் அவற்றின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை
ஒப்புக்கொள்ள வேண்டும். அண்மையில், அமெரிக்காவின் காவ்யா விஸ்வநாதனும்
இலக்கிய மோசடியில் சிக்கினார். அவர் எழுதிய இரண்டு நாவல்களுக்காக
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் புகழாரம் சூட்டப்பட்டார். ஆனால், மேகன்
மாக்கஃட்ரி எழுதிய இரண்டு நாவல்களிலிருந்து அவர் காப்பியடித்திருப்பது
தெரியவந்தது. அதற்காக மன்னிப்பு கோரிய அவர், மேகன் மாக்க•ட்ரியின் நூல்களை
ஆழ்ந்து படித்ததால் தன்னையும் அறியாமல் அது நிகழ்ந்துவிட்டதாகக் கூறினார்.
பின்னர், சோஃபி கின்செல்லா என்பவர் எழுதிய நூலிலிருந்தும் அவர்
காப்பியடித்தது உறுதியானது.
நாமும் சளைத்தவர்களல்லர். இங்கும் இலக்கிய மோசடிகள் சந்தடியில்லாமல் நம்
வாழ்க்கையில் இடம் பிடித்து வருகின்றன. அரசியல் தலைவர் ஒருவரின்
பொன்விழாவையொட்டி நடந்த சிறுகதைப்போட்டியில் நீதிபதியாக இருந்த ஒருவரே பெண்
ஒருவரின் பெயரில் சிறுகதை எழுதிப் பரிசுத்தொகையைப் பெற்றதாக ஒரு வதந்தி
இன்னும் இங்கு உயிரோடு உலவிக்கொண்டிருக்கிறது.
என்னை நெருங்கி வந்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய சில இலக்கிய மோசடிகள் இங்கு
உண்டு. இது நாள் வரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் இருந்ததைப் பற்றி இங்கு
மனம் திறக்கிறேன். இங்குச் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர
வேறொன்றுமில்லை என்ற உறுதியோடு இவற்றைச் சொல்கிறேன். 1990இல்
பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் எனக்கு நேர்ந்த ஓர் அனுபவம் மோசமானது.
ஹைக்கூ கவிதைகளில் மூழ்கி அதன் இலக்கிய இன்பத்தில் திளைத்திருந்த நேரத்தில்
பல்கலைக்கழகப் பணியாளர் ஒருவர் அறிமுகமானார். “பார்த்துப்பா, அவருக்கிட்ட
நெருக்கம் வேண்டாம். ஆளு சரியில்லன்னு கேள்விப்பட்டேன்” என்று நண்பன்
எச்சரித்தான். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. இலக்கியம் பற்றிப் பேச
ஒருவர் கிடைத்தாரே என ஓய்வு நேரங்களில் சந்தித்துப் பேசுவேன். ஹைக்கூ
கவிதைகளைப் பற்றி ஆர்வமாய் விசாரித்தார். என் கவிதைகளைப் படித்துப்
பார்த்தார். மாறுபட்ட இலக்கிய வடிவம் தன்னைக் கவர்ந்துள்ளதாகக் கூறினார்.
அப்பொழுதெல்லாம் பின்னால் நடக்கவிருக்கும் விபரீதத்தை நான் உணர்வில்லை.
ஒரு மாத விடுமுறையில் அவர் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் போய் வந்தார்.
நிறைய நூல்களை வாங்கி வந்திருந்தார். “வீட்டுக்கு வாங்க பாலன், உங்ககிட்ட
சில புத்தகங்களைக் காட்டணும்” என்று தொலைபேசியில் அழைத்தார். ஆர்வத்தோடு
போனேன். நூல்களைக் காட்டினார். அவற்றில் இரண்டு நூல்களைக் கண்டு அதிர்ந்து
போனேன். என்னால் நம்ப முடியவில்லை. அழகிய அட்டைகளோடு அவர் எழுதியதாக, அவர்
பெயர் பதித்த இரண்டு ஹைக்கூ நூல்கள். ஒன்று ஹைக்கூ கவிதைத் தொகுப்பு.
மற்றொன்று ஹைக்கூ கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. இரண்டிலும் தமிழகத்தின்
பேராசிரியர்களின், கவிஞர்களின் அணிந்துரைகள், வாழ்த்துரைகள்.
நானறிந்தவரையில் அவர் ஹைக்கூ கவிதைகள் எழுதியது இல்லை. கட்டுரைகள் எழுதுவது
சாத்தியமே இல்லை. அதெப்படி? ஒரு மாதப் பயணத்தில் யாரைப் பார்த்தார்? என்ன
நடந்தது? வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இப்படியும் இலக்கிய மோசடிகளுக்காக
நாடி வருபவரை வாழ வைக்கிறதா?
ஒவ்வொரு நூலிலும் பத்துப் பிரதிகள் கொண்டு வந்திருந்தார். மற்றப்
புத்தகங்கள் பிறகுதான் வரும் என்றார். ஹைக்கூ கவிதை நூலின் பின்னிணைப்பில்
அதுவரை தமிழில் வெளிவந்துள்ள ஹைக்கூ நூல்களின் பட்டியலை இணைத்திருந்தார்.
அதன்இறுதியில், தன் நூலின் பெயரோடு மலேசியாவில் வெளிவந்த முதல் ஹைக்கூ நூல்
என்ற குறிப்பைக் கண்டேன். “வரலாறு மிக முக்கியம் அமைச்சரே” என நடிகர்
வடிவேலுவின் வசனம் நினைவுக்கு வந்தது. இப்படியொரு இலக்கிய மோசடித்தனம்
புரிந்துவிட்டோமே என்ற குற்றவுணர்வு ஏதுமின்றி சகஜமாக என்னிடம் பேசினார்.
நான்தான் அதன் பிறகு அவரிடம் பேசச் சிரமப்பட்டேன். கவிதைகளையும்
கட்டுரைகளையும் படித்துப் பார்த்தேன். ஒன்றுகூட மலேசிய மக்களின்
வாழ்வியலையோ சூழலையோ காட்டவில்லை. எல்லாம் தமிழகத்தின் பின்னணியில் அமைந்த
கவிதைகள். அவை தமிழக மண்ணில் பிறந்தவை என்பதை உறுதிசெய்தன.
தமிழகத்தில் இப்படியொரு முதல் ஹைக்கூ நூல் வெளியிடுவதில் நடந்த மோசடியை
அறிவுமதி தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். அறிவுமதி ஹைக்கூ கவிதைகளை எழுதித்
தொகுத்து, ஓவியக் கவிஞர் அமுதோனிடம் காட்டியிருக்கிறார். படித்துப்
பார்ப்பதாக வாங்கிச் சென்ற அமுதோன், தாமே ஹைக்கூ கவிதைகளை எழுதி, தமிழில்
வெளிவந்த முதல் ஹைக்கூ நூல் என்ற குறிப்போடு நூலொன்றை வெளியிட்டாராம்.
“அப்பவே சொன்னேன். கேட்டாதானே. இப்ப என்ன ஆச்சு பார்த்தியா? அந்த ஆளு
சரியில்லன்னு நீயே தெரிஞ்சிகிட்டே. இனிமே அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காதே”
நண்பன் என்னைத் திட்டித் தீர்த்தான். வேண்டுதல் வேண்டாமை இல்லாமல்
எல்லாரிடமும் ஒரே மாதிரி பழக முடியாது என்ற உண்மை அன்று எனக்குத்
தெளிவானது. அதோடு அந்த நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். ஆயினும்,
நூல்களை வெளியிட்டு உதவிய தமிழகக் கவிஞர் மலேசியா வந்தால் உண்மையை
விசாரிக்க வேண்டும் என்று காத்திருந்தேன்.
ஈராண்டுகளுக்குப் பின் அந்தக் கவிஞர் மலேசியா வந்திருந்தார். ஒரு நூல்
வெளியீட்டு நிகழ்வு முடிந்து அவரைச் சந்தித்தேன். “அவர் இங்கே ஒரு ஹைக்கூ
கவிதையும் எழுதியதில்லை. எப்படி அவர் பெயரில் நூல் வெளியிட்டீர்கள்?” என்று
கேட்டேன். “இல்ல, அவரு நூல் வெளியிடம்னு ஆசைபட்டாரு. ரொம்ப வேண்டிக்
கேட்டாரு. அதான் உதவி செஞ்சோம்.” என்று சமாளித்தார். “சரி, அவரு இப்ப எங்க
இருக்காரு? தொடர்பு எண் கிடைக்குமா?” கேட்டார். உடனே தேடிப் பிடித்து
அவரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன். அப்பொழுதே அழைத்தார். பேச்சின் இடையே,
“என்ன தம்பி இப்படி செஞ்சிட்டீங்க? என்னை நம்பித்தானே எல்லாரும் உதவுனாங்க”
என்ற வரிகள் சில உண்மைகளைப் போட்டு உடைத்தன. நூலை அச்சிட்டு உதவிய அத்தனை
பேரையும் ஏமாற்றிவிட்டு பத்து பிரதிகளோடு மலேசியா வந்துவிட்ட பல்கலைக்கழக
நண்பரின் சாமர்த்தியம் என்னை வியக்க வைத்தது. ‘ஊர்க்காரன் ஏமாத்திடுவான்னு
சொல்வாங்க. நம்ம ஆளு ஊர்க்காரனையே ஏமாத்திட்டானே! பலே கில்லாடிதான்!’ என்று
மனத்துக்குள் எண்ணினேன்.
தமிழகத்துக்குப் போய்ப் பணத்தைக் கொடுத்துப் புத்தகத்தோடு திரும்பிவரும்
சில எழுத்தாளர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுஉண்டு. ஒரு முறை கோலாலம்பூரில்
தமிழக எழுத்தாளர் ஒருவரை அவரின்நூல் வெளியீட்டுக்குப் பிறகு சந்தித்தேன்.
உள்ளூர் பேச்சாளர் ஒருவருக்குத் தன்முனைப்பு தொடர்பான நூல் எழுதிக்
கொடுத்ததாகவும்அதற்காக ஒப்புக்கொண்டபடி உரிய தொகையில் ஒரு பாதி மட்டுமே
கிடைத்ததாக ஆதங்கப்பட்டார். மற்றவர் எழுதிய நூலைத் தான் எழுதியதாகப் பெயர்
போட்டுக்கொள்ளும் அசிங்கத்தை ஜீரணிக்கவே சிரமமாக இருந்தது.
2003இல் தமிழ் நேசன் ஏற்பாட்டில் நடந்த இலக்கியக் கருத்தரங்கில்,நேசனில்
மூன்று மாதங்களில் வெளிவந்த சிறுகதை, கட்டுரை, கவிதை, புதுக்கவிதைப்
படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. புதுக்கவிதைப்
பிரிவில் எனக்கு முதல் பரிசாகத் தங்கப் பதக்கம் கிடைத்தது.
புதுக்கவிதைகளைத் தேர்வு செய்த கவிஞரை ஒரு நிகழ்வில் சந்திக்க நேர்ந்தது.
“என் கைக்கு வந்த மூன்று மாதப் படைப்புகளில் உங்கள் கவிதை வந்த நாளிதழ்
பக்கத்தை மட்டும் காணவில்லை. யாரோ கிழித்து விட்டார்கள் போலிருக்கிறது.
ஆனால், நான் கவிதைகளைச் சேர்த்து வைத்திருந்ததால் உங்கள் படைப்பை ஆய்வுக்கு
எடுத்துக்கொண்டேன்.” என்றதகவலைச் சொன்னார். தப்பித் தவறியும்கூட எனக்குப்
பரிசு கிடைத்துவிடக்கூடாது என முன்ஜாக்கிரதை முனுசாமியாக ஒருவர்
செயல்பட்டும் அது நிறைவேறாமல் போனதை நினைத்துச் சிரிப்பதா வருத்தம்கொள்வதா
எனக்குத் தெரியவில்லை.
இலக்கியப் போட்டிகளில் எப்படியாவது பரிசை வென்றுவிட வேண்டும் எனச் சில
கில்லாடி எழுத்தாளர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் சுவையானவை. போட்டிக்கு
யார் நீதிபதி என்பதைத் துப்புத் துலக்கிவிட்டு அவரைத் தொலைபேசியில்
தொடர்புகொண்டு போட்டிக்குத் தாமும் படைப்புகளை அனுப்பியுள்ளதைத்
தெரிவித்துத் தம் படைப்புகளைக் கவனிக்குமாறு அவர்கள் அன்பு வேண்டுகோளை
முன்வைப்பார்கள். வெளிநாட்டு நீதிபதியானால் அவர் தங்கியிருக்கும்
விடுதிக்கே போய் கதவு தட்டி “யாருக்குத்தான் பரிசு? என் கதையைப்
படித்தீர்களா? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? உங்கள் முடிவில் மற்றவர்
தலையீடு இருந்ததா?”என இம்சைப் படலத்தைத் தொடங்கிவிடுவார்கள். நீதிபதியின்
பாடு பெரும்பாடுதான்.
இன்னும் சில படைப்பாளிகள் இருக்கிறார்கள். வழக்கில் வெற்றிபெற சட்டத்தில்
உள்ள ஓட்டைகளைக் கூர்ந்து ஆராய்ந்து செயல்படும் வழக்குரைஞர்கள்
போன்றவர்கள். தன் பெயரில் எழுதினால் ஒரு வேளை பரிசு கிடைக்காமல் போகலாம்.
எனவே, மனைவி, மகள், மகன் போன்றோரின் பெயரில் எழுதி படைப்புகளை
அனுப்புவார்கள். அவரின் குடும்ப உறுப்பினர்கள் அதற்கு முன்போ பின்போ
படைப்பிலக்கியத்தில் ஈடுபடாதவராக இருப்பார்கள். அதைப் பார்த்து மற்றவர்கள்
புருவம் உயர்த்துவார்களே எனக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் துணிந்து ஆள்
மாறாட்டம் செய்வார்கள். இலக்கியப் போட்டிகளில் முதன்மைப் பரிசை வாங்கியதோடு
காணாமல் போனவர்களின் பட்டியலை ஆராய்ந்தால் இவர்களை அடையாளம் காண முடியும்.
தமக்குப் பிறந்த இலக்கியக் குழந்தையை மற்றவருக்கு உரிமையாக்கி “யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே” எனக் கையை விரிக்கும் கோமாளித்தனம் மிகுந்தவர்கள்
இவர்கள்.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கூர்ந்து ஆராய்ந்து செயல்படும் இன்னொரு
தரப்பினரும் இருக்கிறார்கள். சிறந்த நூலுக்கான போட்டிக்கு நூல்களைக்
கேட்டுக் தரப்படும் கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவசர கதியில்
படைப்புகளைத் திரட்டிப் பின் தேதியிட்டு வெளிநாட்டில் அச்சிட்டுக் கால
அவகாசம் முடிந்தபிறகு நூலை அனுப்பி எப்படியாவது பரிசுத் தொகையை
அடைந்துவிடவேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபடுவார்கள். இத்தகைய
கில்லாடிகளின் கால்கள் சேற்றிலும் சகதியிலும் சிக்கி இருக்க, பேச்சும்
மூச்சும் உலகத்தரத்துக்கு நம் இலக்கியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்
என்பதாக இருக்கும். இத்தகைய போலிகள் மேடையில் அடிக்கிற லூட்டிகள் சொல்லும்
தரமன்று.
சமூகம் எதைக் கொண்டாடுகிறதோ அதை அடைய வேண்டும் என்ற ஆழ்மன விருப்பம் பலரை
ஆட்டுவிக்கிறது. அதனால்தான், அரசியல் கிளையின் தலைவர் என்ற
அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ‘டாக்டர்’ பட்டத்தைப் பணம் கொடுத்து
வாங்கிப் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் பித்துக்குளித்தனம்
சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது. அதைப்போல, எழுத்தாளன் எனும்
அங்கீகாரத்தைப் பெற்று சமூகத்தில் தன் மீதான பொய்யான பிம்பத்தை
நிலைநிறுத்தும் முயற்சியில் பலர் இறங்கிவிடுகிறார்கள். அதற்காக எந்த
இலக்கிய மோசடிக்கும் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள்.
இளங்கவிஞர்களுக்கு லத்தீன் கவிஞர் நிக்கனார் பாரா எழுதியதாக ஒரு கவிதையைக்
கவிஞர் சுகுமாறன் தம் கவிதை நூலில் குறிப்பிடுகிறார்:
கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன்
வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும்
சில எழுத்தாளர்களோ, இலக்கியத்தில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இலக்கிய மோசடி உட்பட எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
|
|