|
|
கத்தரிக்கோலின் சங்கீதம்
கூந்தல், பெண்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உலக
சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. நீளக்கூந்தல் வனிதையரின் மகுடம் என்று கூட
சில ஷாம்பு நிறுவனங்கள் முழங்குகின்றன. ஆண்களுக்குப் பெண்களின்பால்
ஏற்படும் ஈர்ப்புக்கும் மயக்கத்துக்கும் அவர்களின் கூந்தல் முக்கிய
பங்காற்றுகிறது. படைத்தவனே பெண்ணின் கூந்தல் தொடர்பான சர்ச்சையில் ஈடுபட்டு
சபையில் தோன்றி வாதம் செய்த இலக்கிய வரலாறு நம்மிடம் உள்ளது.
ஆனால் பெண் விடுதலை முழக்கமும், பெண்ணிய சிந்தனைகளும் செழிப்பாக
வளரத்தொடங்கியதும், பெண்களின் கூந்தல் நீளம் படிப்படியாக குறையத்
தொடங்கியதை யாரும் குறை சொல்ல முடியாது. புதுமைப் பெண்களின் குறியீடாக
குட்டை சிகையலங்காரம் நிலைபெறத்துவங்கியது 1920-ஆம் ஆண்டுகளில் தான். ஐரின்
கஸ்டல் என்னும் அமெரிக்க நடனமணிதான் 1915-ல் முதன் முதலில் ‘கஸ்டல் போப்’
என்கிற குட்டை சிகை அலங்காரத்தை அறிமுகம் செய்துள்ளார்.
மேற்கு நாடுகளில் குட்டை முடி கலாச்சாரம் புதுமைப் பெண்களின் அடையாளமாக
சிறப்பிடம் பிடித்தாலும் கிழக்கில் பெண்கள் நீண்ட கூந்தலுக்கே முன்னுரிமை
தரவேண்டும் என்று பண்பாட்டின் பெயரால் கட்டுப்படுத்தப்பட்டனர். பண்டைய
தமிழ் மரபில் பெண்கள் கூந்தலை வெட்டுவது அமங்கலச் செயலாக கருதப்பட்டு
வந்தது. பெண் விடுதலை சிந்தனையுடன் கவி புனைந்த பாவேந்தர் பாரதிதாசன் தன்
பாடலில்,
‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை...’
என்று பாடுகிறார். பெண்கள் கல்வி கற்று புதுமைப் பெண்களாக வாழவேண்டும்
என்று அவர் உறுதியாக கூறினாலும், பண்பாட்டு அடையாளமாக நீண்ட கூந்தலோடும்
பூவோடும் தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தார் போலும்.
எவ்வாராயினும், இன்றைய நிலையில், நாகரிகம் காரணமாகவும் வசதி காரணமாகவும் பல
தமிழ்ப்பெண்களும் கூந்தலை நறுக்கி எறிய தயங்குவதில்லை.
இஸ்லாமிய பெண்களின் கூந்தல் பண்பாடு சற்று வேறுபட்டது. இஸ்லாமிய மார்க்கம்,
பெண்கள் நீண்ட கூந்தலுடன் இருப்பதையே வலியுறுத்துகிறது. ஆனால், அக்கூந்தல்
அழகை, உடையவன் (முக்ரீம்) தவிற அன்னியர் யாரும் பார்க்க அனுமதியில்லை. ஆகவே
முஸ்லீம் பெண்கள் முக்காடு அணிவதை இஸ்லாம் கட்டாயமாக்குகிறது. கூந்தல்
அழகில் ஆரம்பம் ஆகும் ஈர்ப்பு ஆண் பெண் தொடர்பான ஒழுக்கக் கேட்டுக்கு
வழிகோளும் என்பது அவர்களின் நம்பிக்கை. பல நாடுகளிலும் (இஸ்லாமிய நாடுகள்
உட்பட) இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணிய கட்டுப்படுத்தப்படுவதற்கு மாற்று
கருத்துகள் கூறப்பட்டே வருகின்றன. எனினும், ஷாம்பு விளம்பரத்தில் கூட
முக்காடு அணிந்த அழகிகள் தோன்றி நடிப்பதை நாம் சில நேரங்களில்
காணமுடிகிறது.
இவ்வகையில், பண்பாடோடும் சமயத்தோடும் பெண்ணிய சிந்தனைகளோடும் நெருங்கிய
தொடர்பு கொண்ட கூந்தலை மையப்படுத்தி எழுதப்பட்டதே ‘நாவிதனின் மகள்’ (Anak
Penggunting Rambut) என்னும் மலாய்ச் சிறுகதை. இச்சிறுகதையை நோர் ஹிடாயா
அஸ்ஸாரி என்னும் பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 1990- ஆண்டுகளில்
எழுதத் துவங்கிய இவர் டேவான் பாஹாசா டான் புஸ்தாகாவின் (DBP) பயிற்சிகளில்
கலந்து தேறி வந்தவர். இச்சிறுகதை ‘நேசத்திற்கு உரிய அனைத்தும் அங்கு
உள்ளது’ (Segala yang tercinta ada di sana) என்னும் சிறுகதை தொகுப்பில்
இடம் பெற்றதோடு இடைநிலைப் பள்ளி மலாய் இலக்கிய பாடதிட்டத்திலும் ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளது.
மனைவியை இழந்த கதைச்சொல்லி மூன்று ஆண் பிள்ளைகளுடன் தன் ஒரே செல்ல மகளையும்
தனியாளாக நின்று வளர்க்கிறார். அவர் ஒரு கம்பத்தில் முடி திருத்தும் வேலை
செய்கிறார். பிறகு, ஃபெல்டா நிலத்திட்டத்தில் குடியேறியதும் முடி
திருத்தும் தொழிலை பகுதி நேரமாக செய்கிறார். அக்கம் பக்கத்தார் முடி
வெட்டிக் கொள்ள அவரையே நாடுகின்றனர். அதில் கிடைக்கும் சொர்ப்ப வருமானம்
அவருக்கு உதவியாக இருக்கிறது.
மனைவியின் மரணத்திற்கு பிறகு அவரே குடும்ப வேலைகள் அனைத்தையும் செய்து
பிள்ளைகளை வளர்க்கிறார். மூன்று ஆண்பிள்ளைகளை வளர்ப்பதில் அவருக்கு சிரமம்
ஒன்றும் இல்லை. ஆனால் மானீஸ் என்ற பெயர் கொண்ட கடைக்குட்டி மகளை அலங்காரம்
செய்து வளர்க்க அவருக்குத் தெரியவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு தலை வாரி
விட்டு அவளைப் பள்ளிக்கு அனுப்புவதில் எல்லா ஆண்களுக்கும் ஏற்படும் சிக்கல்
அவருக்கும் ஏற்பட, ஆண்பிள்ளைகளைப் போலவே அச்சிறுமியின் தலை முடியையும்
வெட்டி விடுகிறார். ஒவ்வொரு மாதமும் ஆண் பிள்ளைகளுக்கு முடி வெட்டும் அதே
நேரத்தில் அச்சிறுமிக்கும் முடியை வெட்டி விடுகிறார்.
ஆரம்பத்தில் அவளை சில சிறுமிகள் ‘நாவிதன் மகள்’ என்று கேலி பேசுகின்றனர்.
அதே போல் இள வயதில் முடி வெட்டிக் கொள்ள விரும்பாத மானீஸ் ஒரு முறை
பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுகிறாள். தலையில்
மணிப்பையுடன் ஓடும் அப்போட்டியில் தான் வெற்றி பெற தனது குட்டையான
தலைமுடியே காரணம் என்று நம்புகிறாள். குட்டை முடியுடன் வளம் வருவதில்
மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறாள். பள்ளியிலும் கேட்போரிடமும் “ என் தந்தை ஒரு
நாவிதர். அவர் தான் எனக்கு முடி வெட்டி விடுவார்” என்று பெருமையாகக்
கூறிக்கொள்கிறாள்.
குட்டை முடி அவளுக்குப் பிடித்து போகிறது. தன் தந்தையின் தொழிலும்
அவளுக்குப் பிடித்து போகிறது. அவருக்கு உதவியாக சின்ன சின்ன வேலைகளையும்
செய்கிறாள். தன் செல்ல மகளின் முடியை கோதி அதன் மென்மையை உணர்ந்தவாரு அதை
கச்சிதமாக நறுக்கி விடுவதில் அந்த தந்தைக்கும் உள்ளூர ஒரு குதூகலம்
உயிர்ப்பெற்று எழுகிறது. தான் செய்யும் தொழிலை நேசிக்கும் தந்தை, தன்
தந்தையின் தொழிலை வியந்து பாராட்டும் மகள். இவர்களுக்கிடையே அன்பை வளர்க்க
அத்தொழிலே காரணியாகிறது. மானிஸீன் தலைமுடி எப்போதும் குட்டையாகவே
இருந்தாலும் தந்தைக்கும் அவளுக்குமான பாசம் மிக துரிதமாக நீண்டு வளர்ந்து
கொண்டே போகிறது.
பெரியவள் ஆனதும் மானீஸும் முக்காடு போட்டுக்கொள்கிறாள். அனால்
முக்காடுக்குள் குட்டை முடி இருப்பதே வசதி என்று கூறுகிறாள். முடியை வெட்ட
வேண்டாம் என்று அவள் தந்தை மறுத்தாலும் அவளாகவே விரும்பி பல்வேறு
அமைப்புகளில் முடியை கட்டையாக வெட்டிவிடச் சொல்லி தன் தந்தையை
நச்சரிக்கிறாள். அவர் அவளுக்கு நிரந்தர சிகைஅலங்கரிப்பாளராக
மாறிவிடுகிறார். அவள் கல்லூரிக்கு சென்று படிக்கும் காலத்தில் அவளுடைய
சிகையலங்காரத்தைப் பல மாணவிகள் பின்பற்ற தொடங்கியதும், கல்லூரி
நிர்வாகத்தின் எதிர்ப்பையும் சமாளிக்கிறாள்.
கதை முடிவில், எதிர் பாராவிதமாக மானீஸுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டு
மரணமடையும் துன்பவியல் முடிவோடு கதை முடிகிறது. அவள் மருத்துவமனையில் மரண
பிடியில் இருக்கும் போது, அந்த வயோதிக தந்தை அவள் தலையில் இருந்து உதிரும்
முடியை கையில் ஏந்தி கதறியழுகிறார். ஒரு காலத்தில் பாசத்தையும் நேசத்தையும்
உணர்த்திய தலைமுடி இப்போது அர்த்தமற்று அவர் கைகளில் கிடக்கிறது, மானீஸைப்
போலவே.
இக்கதையில் கடின உத்திகளோ, திடீர் திருப்பங்களோ, கதைச் சிக்கலோ இல்லை.
நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை பின்னோக்கு உத்தியில் தந்தையின் குரல் வழி
சொல்லப்படுகிறது. ஆனால் இக்கதை ஒரு தந்தை மகளின் மேல் கொண்ட பாச உணர்ச்சியை
மிக அற்புதமாக வீண் அலங்காரம் இன்றி அதே சமயம் எதிர்பார்க்க முடியாத
உவமைகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறது.
நறுக்கப்பட்ட தலைமயிரும் கூர்மையான கத்தரிக்கோலும் மென்மையான அன்பு
உணர்ச்சியை வெளிப்படுத்திக் காட்ட உதவும் குறியீடுகளாக
பயன்படுத்தப்பட்டிருப்பது வியப்பைத் தருகிறது. கதையில் நெகிழ்சியான ஒரு
கட்டத்தில் அந்தத் தந்தை தன் மகளின் மேல் கொண்ட பிரிவாற்றாமையை “ மகளே, நீ
எப்போது என்னைப் பார்க்க வருவாய்? என் கத்தரிக்கோலின் ஓசையை கேட்கும்
ஏக்கம் உனக்கு இல்லையா? நான் உன் தலைமுடிக்குத் தடவும் சாம் சாம் எண்ணையை
பூசிக்கொள்ள உனக்கு விரும்பவில்லையா? அவ்வப்போது உன் பிடரியை கீறிவிடும்
என் சவரக்கத்தியை மறந்துவிட்டாயா? எட்டு மாதங்களாக உன் முடியை நான்
வெட்டவில்லையே“ என்று அற்பமாக நாம் ஒதுக்கும் பொருட்களின் வழி அற்புதமான
உலகைக் காட்டுகிறார்.
வாழ்க்கையில் அற்பம் என்றோ கேவலம் என்றோ எதுவும் கிடையாது. அதனதன்
இருப்பில் அனைத்து படைப்புகளும் முக்கியத்துவம் பெற்றவையே. ‘மயிர்’ என்று
நாம் துச்சமாக சொல்லும் ஜடபொருளைக் கொண்டு அன்பு என்னும் உயிர்ப் பொருளை
ஆசிரியர் கட்டியிருப்பதை, கற்பனை திறத்துக்காக மட்டும் அன்றி அதில்
மறைந்திருக்கும் தனிமனித சுதந்திரத்துக்கும் மனித நேயத்திற்காகவும்
பாராட்டவே வேண்டும்.
நாம் எல்லாவற்றுக்கும் பிரிவினைகள் கற்பித்து பழக்கப்பட்டவர்கள். தொழிலை
அடிப்படையாக வைத்து சாதிகளைப் பிரித்து வைத்துள்ளோம். இலக்கியத்திலும்
தலித்திய இலக்கியம் கொண்டுள்ளோம். மலாய் இலக்கியத்தில் எல்லாரும் எல்லா வகை
படைப்புகளையும் படைக்கிறார்கள். ஒரு முடிவெட்டும் தொழிலாளியின் உணர்வுகளை
எழுத்தில் படைக்க ஒரு தலித்திய படைப்பாளியின் வருகைக்கு அங்கு யாரும்
காத்திருக்க வேண்டியதில்லை. அதனால்தான் ஒரு பெண் எழுத்தாளரால் இக்கதையை
இயல்பாக படைக்க முடிந்திருக்கிறது. கத்தரிக்கோலின் சத்ததிலும் ஒரு சங்கீதம்
ஒளிந்துள்ளதை ஒரு நல்ல படைப்பாளியால் நிச்சயம் உணர்ந்துகொள்ள முடியும்.
|
|