|
|
ஒரு ஹிப்போகிரேட்டின்
உபதேசம்
வயதுக்கு வந்த
மகன் குளியல் அறையில்
நேரத்தைக் கடத்தும் போதெல்லாம்...
மனதுக்குள்
சந்தேகத் திரைப்படம்
பல கோணங்களில்
ஓடுகிறது.
குளியல் அறையில்
வைத்திருக்கும்
வழலை
சீக்கிரம்
கரையும் பொழுதெல்லாம்...
என்னுடைய அழுக்குகள்
என் பாதங்களை ஒட்டிக் கொள்கிறது.
நான் செய்த
அதே விளையாட்டுகளை
அவனும் செய்கிறானா?
என்று எண்ணுவதிலேயே...
அவன் மொண்டு குளிக்கும்
போதெல்லாம்
மனம் குடைபிடித்து
பார்த்துக் கொண்டு இருக்கிறது.
வாழ்கையின் சறுக்கல்களில்
எனது அடிபட்ட காயங்களை
ஆற்றுவதிலேயே காலங்கள்
காய்ந்து உதிர்கின்றன.
ஆறிய காயங்கள்
வடுவாக நின்று
எனக்கு மந்திரியைப்போல்
ஆலோசனையைக் கூறிவந்தாலும்...
அது என்னை குற்றவாளியாகப்
பார்த்துக் கொண்டிருப்பது
மனதில் புதிய வடுக்களை
வற்புறுத்தி புகுத்துகிறது.
|
|