|
|
அசோகமித்திரனின் ‘எலி’
வீட்டில் எலித்தொல்லையினூடே சராசரி மக்களின் வாழ்க்கை
நிலையை மிருதுவாக நம்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார் அசோகமித்திரன்.
எலித்தொல்லையைத் தீர்க்க பொறி வைக்க எண்ணுகிறான் கணேசன்.
‘பருப்பு விற்கிற விலையில், எண்ணெய் விற்கிற விலையில் தினம் எங்கே
இதெல்லாம் வீட்டில் பண்ணிக்கொண்டிருக்க முடிகிறது? அரிசி உப்புமா, ரவை
உப்புமா, பொங்கல். அப்புறம் பொங்கல், ரவை உப்புமா, அரிசி உப்புமா. அப்புறம்
ரவை உப்புமா, பொங்கல், அரிசி உப்புமா இப்படித்தான் மாறி மாறி அந்த வீட்டில்
கிடைக்கிறது. கணேசனுக்கு உப்புமா, பொங்கல் என்ற வார்த்தைகளே கூட அலுத்துப்
போயிருந்தன. எலிக்கும் அப்படித்தானிருக்கும்’ என்ற வரிகளை மெல்லவே கடக்க
முடிகின்றது. பொறிக்கேற்ற உணவு தன் வீட்டில் இல்லாததால் வடை வாங்கி
வருகின்றான். பொறியினுள் எலி சிக்கிக்கொள்கின்றது. எலியை மைதானத்தில்
விடுவித்து விட்டு பொறியின் பக்கம் பார்வையைச் செலுத்தும் கணேசன்,
தின்னப்படாத வடையைப் பார்ப்பதாக கதை முடிவுறுகிறது. மிக எளிதான நடையில்
அற்புதமான மனித வாழ்வியலைத் தாங்கியிருக்கும் இக்கதையினைப் படித்து
முடிக்கும்போது இத்தகைய வாழ்க்கைச்சூழலில் இருக்கும் மனிதர்களை எண்ணிப்
பார்க்காமல் இருக்க முடியவில்லை.
உணவு எனும் பகுதி நம் வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்று. மக்களின் வறுமை
எனும் சொல்லுக்கு அர்த்தமாய் நமக்கு முதலில் தோன்றுவது உணவு. இன்றைய
வாழ்க்கை முறையில் உணவுப்பஞ்சம் சில உலகப்பகுதிகளை ஆக்கிரமித்த போதிலும் பல
பகுதிகளில் உணவு தாராளமாய் கிடைக்கின்றது. பல வகையான உணவுகளை உண்ண வாய்ப்பு
கிடைத்தவர்கள், உணவே கிடைக்காத மக்களையும் நினைவில் கொள்வது நல்லது.
உணவிற்காகவே உழைத்துச் சம்பாதிக்க தொடங்கிய மனித வர்க்கம், இப்பொழுது
அதையும் தாண்டி பேராசையினுள் நுழைந்து விட்டது. உணவைத் தேடி துன்பத்தில்
வாடும் உயிர்களுக்கிடையில் உணவை வீணாக்கும் போக்கினைக் கொண்டிருப்போரும்
இருக்கவே செய்கின்றனர். வீணாய் போகும் உணவைக் கூட மற்றவர்களுக்குத் தரும்
உயரிய மனம் அனைவருக்குமே இருப்பதில்லை. அத்தகைய உயரிய மனம் படைத்தவர்களில்
ஒருவரான திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
விருதுகள் பெற்ற இளம் சமையற்காராரான இவர் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம்
எழுந்து உணவைத் தயாரித்து தன் சகாக்களுடன் வீடற்றவர்களுக்கும்
ஆதரவற்றவர்களுக்கும் வழங்கி வருகின்றார். பிறர் பசி பட்டினி தீர்க்க தன்
வேலையையும் துறந்துவிட்டார். "CNN Heroes 2010" வரிசையில் இவரும் ஒருவர்.
எத்தனை பேர் பிறர் பசி தீர்ப்பதில் திருப்தியடைகின்றனர்? தன் பசி
தீர்ந்தால் போதுமென்ற சுயநலம் மேலோங்கி கொண்டு வரும் வேளையில் பிறர்
பசியும் பட்டினியும் கண்ணுக்கே தெரியாதபோது உணர்வது எப்படியென புரியவில்லை.
இங்கு இன்னொரு கதையும் நினைவுக்கு வருகின்றது.
விமலாதித்த மாமல்லனின் கதை ‘இலை’. அதாவது சின்னஞ்சிறு கறிவேப்பிலை இலைகள்.
நிறைய இலைகளைச் சுமந்து நிற்கும் கறி வேப்பிலை மரம். இலைகளை விற்று பணம்
தேடும் ஒருவன். சொன்ன விலையிலிருந்து சிறிது குறைந்தாலும் கறிவேப்பிலையைத்
தர மறுக்கின்றாள் கறிவேப்பிலை மரத்துக்குச் சொந்தகாரியான மாமி. அவள் சொன்ன
விலையைத் தந்துவிட்டு கறிவேப்பிலையைப் பறிக்கும் பொழுது பக்கத்து வீட்டில்
சில இலைகள் தவறி விழுகின்றன. அவன் பறித்துச் சென்ற இலைகளை விற்று அவன் நல்ல
பணம் சம்பாதித்து விடுவான் என மாமி புலம்புகின்றாள். பக்கத்து வீட்டில்
விழுந்த இலைகளை அவர்கள் சமைத்து உண்டிருக்கலாம் என்றும் மனம் கொதித்து
போகின்றாள்.
நிரம்பி வழியும் கறிவேப்பிலையை இன்னொருவன் பறித்து விற்று பணம்
சம்பாதிப்பது கூட ஒருவரின் மனம் பொறுத்துக் கொள்ள முடியாத எண்ணம்
மனிதர்களுக்கு இருப்பது ஆச்சர்யம். கறிவேப்பிலை நிரம்பி வழியலாம்;
பழுத்துக் காயலாம்; காய்ந்து கொட்டலாம்; கொட்டி மண்ணோடு மண்ணாகலாம்; ஆனால்
அதைப் பிறர் விற்று பணம் சம்பாதிப்பதுதான் மனதின் ஆற்றாமையாக
வெளிப்படுகின்றது. பக்கத்து வீட்டில் தவறி விழுந்த இலைகள் துவையலாகி
உணவாகியிருக்ககூடும் என பொருமும் மனங்களும் ஆங்காங்கே ஒளிந்திருக்கின்றன.
பஞ்சபூதங்களின் துணையோடு உணவாகும் பயிர்கள் யாருக்குச் சொந்தம்? சூரிய
ஒளிக்கா? நிலத்துக்கா? நீருக்கா? அல்லது நெருப்பிற்கா?
|
|