|
|
பணத்தின் தேவை சொல்லும் பயணிக்கும் பாதை!

பணத்தின் அருமையை எப்போது உணர்ந்தீர்கள்? நீங்கள்
கொஞ்சம் நேரம் எடுத்து யோசிக்கலாம் ஒன்னும் அவசரமில்லை; ஆனால் அவசியம்
இருக்கிறது. கேட்ட பொருள் கிடைத்த பொழுதா? இல்லை பார்த்தும் கைக்கு வராத
பொழுதா? படிக்கும் போது பார்த்த பணக்கார நண்பர்களாலா? நம்மையே
சார்ந்திருக்கும் ஏழை நண்பனாளா? வியர்வை வாடைக்கு வழிதேடும் போது தினம் ஒரு
வாசனையாய் வரும் தோழிகளாலா?
பணத்தின் தேவையை மனம் அறியும் விதத்தில் நமது அடுத்தகட்ட நடவடிக்கையை நாம்
உணரலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
எனக்கு தெரிந்த சிலர்தான் எனது இந்த எண்ணத்தோன்றலுக்கு காரணம்.
கதை 1
கேட்ட பொருளெல்லாம் கிடைத்த ஒரு நண்பன் இருந்தான். இருந்தான் என்பதே
இவனுக்கு பொருத்தமான சொல்லாடல். ஏனெனில் அவன் இப்போது இல்லை. சில
ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையிலேயே இறந்து அவசர அவசரமாக செய்ய
வேண்டியதார்கள். உடலை எரிக்க கொண்டு சென்ற போதுதான் குறுஞ்செய்தி வழி
தகவல்கள் பரவத்தொடங்கின. இப்படி காதும் காதும் வைக்கும்படி அவனது மரணத்தை
மூடி மறைத்திருந்தது அவனுக்கு வந்திருந்த நோய் ஏய்ட்ஸ்.
ஆரம்ப பள்ளி முதல் இடைநிலை பள்ளி வரை அந்த நண்பனை எனக்கு நன்கு தெரியும்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். அம்மா மட்டும்தான். ஒரே பையன். அம்மாவிற்கு
நல்ல சம்பளம். தேவையானதையெல்லாம் எங்களிடம் முதல் நாள் சொல்லி மறுநாள்
வாங்கிக் கோண்டு வந்து கடுப்பேத்துகிறவன் அவன்.
தேவைப்படுவதெல்லாம் கிடைக்க வழிசெய்த பணம் அவன் மனதை எப்படியெல்லாம்
குதூகலப்படுத்தியிருக்கும். எங்கள் நண்பர்கள் குழுவில் முதன் முதலில்
நீலப்படம் பார்த்து வந்து கதை கதையாய் காமத்தை வழியவிட்டவன் அவன் தான்.
பின்னர் ஒரு நாளில் அவனே காமத்தின் அழைப்பிற்கு உயிரினை வழியவிடப்போகிறான்
என்று யார்தான் கண்டிருப்பார்கள். இதை எழுதும் முன்கூட இவ்வாறு நான்
யோசித்திருக்கவில்லை.
கதை 2
பெண்களிடமே பெரும்பாலும் பேசிக் கொண்டும் குழைந்து கொண்டும் இருக்கும்
பால்ய வயதினரில் நான்கூட விதிவிலக்கல்ல. ஏதோ ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.
அந்த பருவத்திலேயே. ஆசிரியரிடம் திட்டு வாங்கினாலும் அறை முதல் கொட்டுவரை
வாங்கினாலும் முதன் முதலாக பெண்பிள்ளைகள் யாரும் எங்களை பார்த்தார்களா என
கவனித்து அழுகையை அடக்க நினைத்ததெல்லாம் எதன் தொடக்கம். மாணவிகளும் அதற்கு
ஏற்றார்போலவே, அடித்த ஆசிரியரின் வகுப்பு முடியும் வரை எங்களை பக்கமே
பார்க்காமல் இருப்பார்கள். ஒன்று இரண்டு பேர்தான் , கண் அசைவிலும் கை
அசைவிலும் ஆறுதல் சொல்லுவார்கள். அப்போது கூட அழுது கொண்டிருக்கும்
மாணவன்தான் அவன்.
வகுப்பில் யாரும் அவன் அருகில் அமருவதை தவிர்த்துக் கொண்டே இருப்பார்கள்.
கொஞ்ச நேரம் அவனருகில் உட்கார்ந்தாலே அவர் வியர்வை வாடை முகத்தில் அறையும்.
அதனாலேயே, சில ஆசிரியர்கள் பாடம் வரும் போது மட்டும் வகுப்பின் கடைசியில்
அமர வேண்டும் அவன். அவனை பாவமென்று சொல்வதற்கு இல்லை. பாடம் நடக்காத
பொழுதினில் அவனே ராஜா அவனே மந்திரி வகுப்பில். அவனை அழவைப்பது அத்தனை
சுலபம். ஆனால் நாங்கள் யாரும் அதை செய்ய மாட்டோம். ஒரு முறை அவன் வியர்வை
வாடை குறித்து கேலியாய் பேசிவிட்டோம். அன்று தொடங்கி அவனுக்கு ஆதரவாக
பெண்கள் அனைவரும் திரண்டார்கள். அப்போதுதான் பெண்பிள்ளைகள் பயன்படுத்தும்
வாசனை திரவியங்களை இவனும் பயன்படுத்த ஆரம்பித்தான்.
எங்களுடன் பேசுவதையெல்லாம் தவிர்க்க ஆரம்பித்தான். சாப்பிட போகும் போதும்
வீட்டிற்கு போகும் போதும் பல பெண்பிள்ளைகள் மத்தியில் அவன் ஒருவனும்
இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கோ
வேறாகவே தோன்றியிருக்கிறது. சாப்பிட கொடுக்கும் பணத்தையெல்லாம் மிச்சம்
பிடித்து மிச்சம் பிடித்து வாசனை திரவியங்களே வாங்கி குவித்தான். ஒருமுறை
புத்தகம் இல்லையென்றவனை நம்பாமல் ஆசிரியர் அவன் பள்ளி பையை திறந்த பார்க்க
உள்ளே பல வாசனை பாட்டில்கள். அதுநாள் வரை மறைத்து மறைத்து பார்த்தவன் அந்த
சம்பவத்தின் பின், பகிரங்கமாக வகுப்பிலேயே வாசனை திரவியங்களை
பயன்படுத்தவும் ஆரம்பித்துவிட்டான் உடன் அவன் அதனை சக பெண்களிடன் விற்கவும்
செய்தான்.
இன்று அவன்; அவளாக உடை முதல் உறுப்பு வரை மாற்றியதாக கேள்வி. அப்போதெல்லாம்
ஆண்களை தவிர்த்தவன் இன்று காதலர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவருகிறான்.
கதை 3
இன்னொரு மாணவியை என்னால் நிச்சயம் மறக்கவே முடியாது. என்னால் மட்டுமல்ல என்
தலையில் கொட்டி கொட்டி “நீயெல்லாம் உருப்படவே மாட்ட” எனறு சொன்ன ஆங்கில
ஆசிரியர் மோகன் சாரும். ஒவ்வொரு முறையும் என்னையே கேள்வி கேட்டு கேலியாக்கு
மலாய் ஆசிரியர் ராமச்சந்திரனும் கூட.
அனைத்து பாடங்களிலும் நல்ல தேர்ச்சி பெறும் மாணவர்களில் அந்த மாணவி
முதன்மையில் இருந்தாள். பல மாணவர்கள் அவளிடம் நட்பாக ஆசைப்பட அவள்
ஆசைப்பட்டது ஒரு பணக்கார தோழியின் நட்பை. எங்கள் வகுப்பில் சிலர் பள்ளி
பேருந்திலும் வேன்களிலும் வருவோம். ஒரு சிலர் மோட்டார் வாகனத்தில் அண்ணனோ
தந்தையோ அக்காவோ அழைத்து வருவார்கள். பக்கத்தில் இருக்கும் மாணவர்கள்
நடந்தே கூட வருவார்கள். அந்தப் பணக்கார மாணவியும் தந்தையுடன் வேனில்தான்
வருவாள். ஆனால் மற்றவர்களை போலா ஒட்டி உரசி சட்டை தலை முடியெல்லாம் கலைந்து
அல்ல, அத்தனை பெரிய வேனின் ஒரே ஒருத்தியாய் ஜம்பமாய் உட்கார்ந்திருப்பாள்.
அந்த கெட்டிக்கார மாணவி தன்னிடம் இருக்கும் படிப்பின் பலத்தை
பொருட்படுத்தாமல், அந்த பணக்கார மாணவியில் நட்பில், மணிக்கணக்காய் பேச
ஆரம்பித்த சமயம் அது. ஒவ்வொரு மாதமும் அந்த மாணவியில் பரீட்சை தாள்
மதிப்பெண்கள் குறைந்துக் கொண்டே வந்தன. அதைப் பற்றியெல்லாம் அவள்
கவலைப்படவில்லை. அவளுக்கு தேவையானதெல்லாம் அவனின் பணக்கார தோழியின் மூலம்
கிடைத்தன. ஒவ்வொரு நாளும் நடந்தே அந்தப் பணக்கார மாணவியின் வீட்டிற்கு
சென்று அங்கிருந்து அவளுடன் வேனில் வரத் தொடங்கினால். ஆறாம் ஆண்டு
பரிட்சையில் பேரதிர்ச்சி. தோல்வி அடைந்தார்கள் இருவரும். அதுவரை அந்த
மாணவியைப் புகழ்ந்து கொண்டிருந்த ஆசிரியர்கள் அவளுக்கு ஆறுதல் கூட
சொல்லவில்லை. இடைநிலை பள்ளிக்கு போகும் சமயம், இருவரும் வேறுவேறு பள்ளிக்கு
சென்றார்கள்.
என்ன நினைத்தாளோ தெரியவில்லை. ஆரம்பப் பள்ளியில் பணக்கார தோழியின்
நட்பிற்கு ஏங்கியவள், இடைநிலை பள்ளியில் பணக்கார மாணவர்களின் நட்பை
பெற்றிருந்தாள். பின்னர் ஒரு நாளில் மாணவன் ஒருவனின் அண்ணனுடன் காருக்குள்
கையும் கலவுமாக பிடிபட்டாள். சம்பவம் நடக்கும் சில வாரங்கள் புதுப்புது
பள்ளி பையைக் கொண்டு வரத்தொடங்கியிருந்தாள். சக தோழியர்களுக்கு சாப்பாட்டு
செலவை எடுத்துக் கொண்டாள். இரண்டு கைபேசி. இவைதான் அவள் மீது ஆசிரியர்கள்
சந்தேகிக்க காரணமாய் அமைந்தன. சந்தேகம் கொண்டது தமிழ் ஆசிரியராக
இருந்திருந்தாள், அவளுக்கு முதலில் மன்னிப்பு பிறகு தொடர்ந்தால்
கண்டிப்பும் அதன் பிறகே பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருப்பாள். ஆனால்
சந்தேகித்தது தமிழாசிரியர்கள் அல்லவே. மறுநாளே பள்ளி மாணவர்கள்
முன்னிலையில் சம்பவத்தை விவரித்து சொல்லி பள்ளியை விட்டு
நீக்கிவிட்டார்கள்.
பணம் தேவை எங்கே எப்படி ஏன் ஏற்படுகின்றன என யோசித்தாலும் கண்டு கொண்டாலும்
நம் பாதையை நாம் யூகிக்கவும் மாற்றியமைக்கும் முடிகிறது. எனக்கு தெரிந்த
ஒருவர் ஆரம்ப நாளில் தன் பெயரில் ஒரு கதையும், தன் மனைவி பெயரில் ஒரு
கதையும், தன் மச்சினி பெயரில் ஒரு கதையும் எழுதி முறையே முதல் இரண்டாம்
மூன்றாம் பரிசு பெற்ற கதையெல்லாம் இருக்கிறதே. இன்று அவரை நம்பி
இலக்கியத்தை வளர்க்க நினைப்பவர்களில் நிலை என்னவாக அமையும்?
|
|