முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  கவிதை  
  - திருக்கோவில் கவியுவன் -  
 
 
 

இன்னும் வாழ்கின்றோம்

இருப்பின் அர்த்தம் தேடிய
பின்னிராப் பொழுதொன்றில்
கன்னம் ஈரமாகியபொது
வெளிச்சக்கீற்றொன்று
கடந்து போனதைக் கண்டேன்

அலை நுரையாய் நுரைத்த
ஆத்மாக்களின் கடைசி நேர
ஆற்றாமைகளை விழுங்கிக்கொண்ட
பெரு மீன்கள்
மூ வருடங்களின் பின்னும்
தாங்கும் சக்தியற்று
கரையொதுங்குகின்றன
சிப்பி பொறுக்குவதுபோல்
மீன் பொறுக்கும் மக்கள்.

கடின இழை கொண்டு
சூட்சுமமாய்
பின்னிய வலையிலிருந்தும்
"கொடுவா" மீன்கள் பாய்ந்தோட
சிக்கின சிறு மீன்கள்

விருட்சம் வெட்டப்பட்ட பின்னும்
நிலங்கீழ்
பரந்து விரிந்து செல்லும்
வேர்களைத் தேடி
இன்றும்
கத்தி கொண்டலைகிறது ஒரு கூட்டம்.

உதிரிகளை ஒருங்கிணைக்க
வானைப் பிளந்து கொண்டும்
ஆழ்கடலைக் கிழித்துக் கொண்டும்
தேவ குமாரர்கள் எழுந்து வருவதாய்
சாமத்துக் கனவு
கனவின் தகிப்பில்
மெல்லப் பிரியும் இதழ்கள்

அலாரச் சத்தத்துடன்
காலைக் கடன் முடிக்க
அவசரமாய் எழும்பும்
நான்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768