முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  கதவைத் தட்டும் கதைகள்... 23
- க. ராஜம் ரஞ்சனி -
 
 
 
 

வாணி ஜெயத்தின் ‘அவளின் கண்கள்...’

பள்ளிப்பருவங்கள் எப்போதுமே பசுமையாய் மனதில் நிலைத்திருப்பவை. பள்ளியில் நடந்த நிகழ்வுகள் யாவுமே மறக்க முடியாத பொழுதுகளாய் அவ்வப்போது மனதினுள் எழும்பி நினைவுகளைக் கட்டிப்போட்டுவிடும் வலிமை படைத்தவை. மகிழ்வான பொழுதுகள் மட்டுமேயன்றி சில கசப்பான பொழுதுகளும் விடுபடாது தொடர்ந்து மனம் அசைப்போடும் போதெல்லாம் வலியை உணர வைக்கவே செய்கின்றன. அத்தகையதொரு உணர்வைப் பதிவாக்குகின்றது திருமதி வாணி ஜெயத்தின் ‘அவளின் கண்கள்...’.

இடைநிலைப்பள்ளியில் ஒன்றாய் படித்த ஜனனியும் பாலக்கிருஸ்ணனும் பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொள்ளும் தருணம். அத்தருணத்தில் இருவரின் மனதிலும் ஏற்படும் மனவோட்டம்தான் இக்கதை. சாரதாமணியுடன் ஜனனியும் சேர்ந்து அன்பரசிக்கு எழுதிய கடிதத்தைப் படித்த அன்பரசி, பாலக்கிருஸ்ணனைத் தவறாக நினைத்து அறைந்து விடுகின்றாள். அதற்குப் பின் பாலக்கிருஷ்ணனின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்படுகின்றது. கேலி கிண்டல்கள் மறைந்து அமைதியாகி போகின்றான். உண்மையைக் கூறி தான் செய்த தவற்றுக்காக மன்னிப்பு கேட்க ஏங்குகின்றாள் ஜனனி. சந்தித்து விட்ட பொழுதிலும் கூட மன்னிப்பு கேட்டுவிட துடிக்கின்றது அவளது மனம்.

பாலக்கிருஸ்ணனின் மனதிலும் அதே சம்பவம் நினைவிற்கு வருகின்றது. செய்யாத தவற்றிற்குப் பழியாகிப் போனதை ஜனனியிடம் விளக்க எண்ணுகின்றான். அன்பரசிக்குத் தான் கடிதம் எழுதியதாக ஜனனி தவறாக எண்ணியிருப்பாள் என்ற உணர்வே அவனின் மாற்றத்தின் காரணமாய் இருந்தது அவனது மனவோட்டத்தின்வழி புரிந்து கொள்ள முடிகின்றது. அவளுள் தன்னைப்பற்றி தவறான எண்ணம் பதிவாகியிருக்கும் என வருத்தமடைகின்றான். ஜனனியிடம் தான் அவ்வாறு செய்யவில்லை என்பதைச் சொல்ல துடிக்கின்றது அவனின் மனம்.சந்திப்பின் முடிவில் இரு மனங்களும் சொல்ல துடித்த விஷயங்களைச் சொல்ல முடியாமலேயே தங்களுக்குள் அமிழ்த்து விடுகின்றன.

ஜனனி மற்றும் பாலக்கிருஸ்ணனிடையே உருவாகியிருக்கும் நட்பானது ஓர் உன்னத தன்மையைக் கொண்டது. இத்தகைய நட்பு சற்று அபூர்வமானது. இருவரும் கைக்கோர்த்தோ பேசி சிரித்து பழகவோ இல்லை. அதிகமான உரையாடல்களும் அவர்களுக்குள் இருந்ததில்லை. ஆனாலும் நட்பானது அவர்களது ஆழ்மனதில் புதைந்திருந்துள்ளது. தான் செய்த தவற்றை மன்னிக்க தேடிய மனமும் தான் செய்யாத தவற்றை புரிய வைக்க நினைத்த மனமும் ஒன்றாய் சேரும் நட்பிது.

‘மனதோடு மழைக்காலம்’ என்றொரு படம் சில ஆண்டுகளுக்கு முன் திரையேறியது. அதில் ஷாம் மற்றும் நித்யாதாஸ் நடித்திருந்தனர். இத்திரையில் இவர்கள் இருவருக்கிடையே இருந்த நட்பு பெற்றோராலும் நித்யாதாஸ்க்கு நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையாலும் சந்தேகிக்கப்படுகின்றது. திருமணம் செய்து கொள்ள அவர்களே பரிந்துரைக்கையில் கோபத்தில் இருவருமே மறுக்கின்றனர். நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை அக்கணம் புரிந்து கொள்ள முடியும். அதே போன்றதொரு உணர்வை இக்கதையும் ஏற்படுத்தி விடுகின்றது.

ஜனனியின் பார்வையில் பாலக்கிருஸ்ணனின் கண்களும் பாலக்கிருஷ்ணனின் பார்வைக்கு ஜனனியின் கண்கள் மட்டுமே தெரிகின்றன. உயர்ந்த நட்பானது கண்களை மட்டுமே பிரதானமாகவும் பிற உடல் அமைப்புகளைக் காட்சிபடுத்துவதில்லை. கண்கள் என இவ்விடம் கொள்வதுகூட அழகு, கவர்ச்சி என்பதல்ல. கண்களின் உள்ளே இருக்கும் மனங்கள். இதை அனைவராலும் கண்டடைந்துவிட முடியாது.

ஜனனியின் கண்கள் தன் அம்மாவின் கண்களை ஒத்திருப்பதாய் எண்ணுகின்றான் பாலக்கிருஷ்ணன். அதில் இருக்கும் அப்பாவித்தனமும் சோகமும் அம்மாவை அவனுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. அதன் ஈர்ப்பிலேயே அவளுடன் நட்பாய் பழகவும் விரும்புகின்றான். இத்தகையதொரு அன்பு பரிமாற்றம் சட்டென ஏற்பட்டுவிடுவதில்லை. அது அவனுக்குச் சாத்தியமாகும் பட்சத்தில் அதைச் சீர்குலைத்துவிடும் சம்பவம் அவனைப் பெரிதளவும் பாதிப்புக்குள்ளாக்கின்றது. உறவெனும் பெயரிலேயெ பலவித துரோகங்கள் பெருகிக் கொண்டு வரும் இன்றைய உலகில் பதின்ம வயதிலேயே அவனுக்குள் உருவாகும் தூய அன்பு பெருமிதமடைய செய்கின்றது. அவனது அன்பு தூய்மையானது என்பதை ‘அவளது அப்பாவிதனமான, அம்மாவின் கண்களைப் போலவே ஒத்திருக்கும் கருமணிகளைக் கூட காண வாய்க்காமல் போய்விட்டதே?’ எனும் கதையின் இறுதி வரி மேலும் உறுதிப்படுத்துகின்றது.

ஒவ்வொருவரின் மனசாட்சியும் சில கண்களைப் பார்த்ததுமே செய்த தவற்றைச் சொல்லவும் செய்யாத தவற்றைப் புரிய வைக்கவும் எண்ணுகின்றது. பிற கண்களின் உள்ளே இருக்கும் மனங்களைக் கண்டு கொள்ளும் கண்களின் உள்ளும் மனங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768