|
'அப்படி எண்ணாதிருந்திருந்தால்...'
வல்லினம் ஏற்பாட்டில், சமீபத்தில் நடந்தேறிய அமைப்பியல் பின் அமைப்பியல்
வகுப்பை வழி நடத்தினார் தமிழவன். ஒன்றில் இருந்து மற்றொன்று எப்படி
வருகிறது போன்ற கோட்பாடுகள் குறித்த விளக்கமாகவே பேசினார். இரண்டு நாள்
அமர்வாக அமைந்திருந்தது அந்த வகுப்புகள்.
முதல் அமர்வு முடிந்த பின் நவீன் சிவா ஆகியோர் வந்திருந்த பயற்சி
ஆசிரியர்களிடன் சிறிது நேரம் உரையாடலை நிகழ்த்தினார்கள்.
வந்திருந்தவர்களில் சிலருக்கு இவ்வகுப்பு தத்தம் பாடத்திற்கு சம்பந்தம்
இல்லாவிட்டாலும்கூட தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது மகிழ்ச்சியினைக்
கொடுத்தது.
வல்லினம் குழுவினரை பொருத்தவரை ‘உரையாடல்’ என்பது எப்போதும் முக்கியமான
ஒன்றாகவே கருதப்படுகிறது. அந்த உரையாடல் வழிதான் இரு தரப்பில் இருந்தும்
கருத்துகள் வெளிவருகின்றன. இது போன்ற சமயங்களின் மாணவர்களின் எந்தக்
கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், ஓவ்வொரு முறையும் பாட புத்தகத்தையே
மாணவர்களுக்கு பிரதி எடுத்துக் கொடுத்து, அதனையே கறும்பலகையில் எழுதும்
ஆசிரியர்கள் குறித்த நினைப்பு தோன்றுகிறது.
நினைத்த நினைப்பு அதோடு நின்றுவிடவில்லை. ஒன்றில் இருந்துதான் இன்னொன்று
வருகிறது என்ற கோட்பாட்டுக்கு ஏற்றார்போல தோன்றிய நினைப்பு இன்னொரு
நினைப்பை நோக்கி நகர்ந்தது. கடவுள் நம்பிக்கை.
அதற்கான காரணம் அந்த உரையாடல்தான். ஒவ்வொருவரும் தத்தம் தங்களை அறிமுகம்
செய்யும் போது, சிவா இடையில் இவ்வாரு கூறினார் “ஒரு காலக்கட்டத்திற்கு
பிறகு, எனக்கு கடவுள் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது; எப்போது கடவுள்
மீது நம்பிக்கை இல்லாமல் போனதோ அப்போதே பேய் பிசாசுகள் மீது நம்பிக்கை
இல்லாமல் போனது”.
அவரது இந்த வார்த்தைகள் நெற்றியில் விபூதியினை பட்டையாக பூசியிருந்த
பெண்ணுக்கு எரிச்சலை கொடுத்தது என்பதை நாங்கள் எல்லோரும் பேசி முடித்து
புறப்படும் போதுதான் எனக்கு தெரிந்தது.
“இலக்கியம் பேசினா இலக்கியம் மட்டும் பேசட்டும், ஏன் தேவையில்லாம சாமி
இருக்கு இல்லைன்னு எல்லாம் பேசறாங்க....” என தன் சக தோழிகளிடம் பேசுவதை என்
வரையில் எதார்த்தமாக அல்லது அபத்தமாக அல்லது அந்தத் தோழிக்கு ஏற்றார்போல
தெய்வாதினமாக நான் கேட்க நேரிட்டது.
அந்த பெண் வரையில் ஓர் அனுபவமும், சிவா வரையில் ஓர் அனுபவமும்
இருந்திருக்கத்தான் வேண்டும். தமிழவன் சொன்னதை மீண்டும் நான் நினைத்துப்
பார்க்கிறேன். ஒன்றில் இருந்துதான் இன்னொன்று வருகிறது. அந்த ஒன்று என்பது
எதுவேண்டுமானாலும் இருக்கலாம். நம்பிக்கை அவ-நம்பிக்கை. அது அவரவர்
நம்பிக்கை.
‘ஒருவருக்கு ஏற்படும் ஆன்மிக அனுபவத்தை மற்றொருவருக்கு விளக்கி சொல்வதும்
புரியவைப்பதும் இயலாத காரியம்’ என சாரு நிவேதிதா அவரது கட்டுரை ஒன்றில்
இவ்வாரு குறிப்பிட்டுப்பார்.
மேற்சொன்ன இருவரை பற்றி எழுத நினைக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு
ஏற்பட்ட சில அனுபவங்களை நினைக்கிறேன்.
அ��்போது ஆரம்பப்பள்ளி மாணவனாக இருந்தேன். முதன் முதலாக குடும்பத்தினருடன்
ஆன்மிக சுற்றுலா செல்ல நேரிட்டது. அப்போது வருடாவருடம் சீன பெருநாள்
விடுமுறையின் போது இப்படி மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு என ஐந்து ஆறு
நாள் செல்வது பல இடங்களில் வழக்கமாக இருந்தது. செல்வது என்னமோ முருகன்
ஆலயம் என்றாலும் ஐந்து நாள் பயணங்களில் பல கோவில்களுக்கு செல்வது வழக்கம்.
அப்போதுதான் பெயர் மறந்து போன குகை கோவிலுக்கு சென்றிருந்தோம். அது துர்கை
உடன் காளி சிலைகளை கொண்ட உட்புற கோவில்.
ஒரு பேருந்து நிறைய ஆட்கள் அந்த கோவிலுக்கு சென்றோம். வழக்கமான கோவில் போல
அல்லாமல் குகையின் உட்புறத்தில் அந்தக் கோவில் இருந்தது. வழிபட
வேண்டுமென்றால் ஒருவர் பின் ஒருவராக சின்ன படி ஒன்றின் மீது விளக்கு வசதி
குறைந்த வழியில் மெல்ல மெல்ல நடக்க வேண்டும். அந்த வயதில் எந்த கோவிலுக்கு
சென்றாலும் பொன்மொழிகள், ஆத்திச்சூடி, திருக்குறள் போன்றவற்றை
எழுதியிருப்பார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் கேட்க வேண்டும் என்பதாலே
கொஞ்சம் சத்தமாக படிப்பேன் நடந்து கொண்டே. இப்போது கோவில்களில் இருப்பது
வெறும் வசதிபடைத்தவரின் போட்டோவும் பெயரும் என்பதால் நின்றுக்
கொண்டிருந்தாலும் அதையெல்லாம் படிப்பதில்லை.
ஏறும் வழிகளில் ஆங்கொன்றும் இங்கொன்றும் என சில சிறிய பெரிய ஓட்டைகள்
இருந்தன. படி ஏறும் போது எட்டிப்பார்க்காதீர்கள் என எழுதப்பட்டிருந்தது.
அதனை சத்தமாக படித்த பின் என் முன்னால் நடந்த சிறுவன் ஒருவன் முயற்சி செய்ய
அவனது அம்மாவிடம் திட்டு வாங்கிய என்னை ஏனோ கடுப்புடன் பார்த்தான். ஒருவேளை
சத்தமாக சொன்னதின் விளையாகக் கூட இருக்கலாம் அது.
எப்படியும் அந்தக் குகை ஓட்டைக்குள் என்னதான் இருக்கிறது என எட்டிப்
பார்த்து அவனிடம் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
நடந்து கொண்டே என் உயரத்திற்கு ஏற்புடையாத ஒரு துவாரத்தைக் கண்டேன்.
சட்டெனெ அந்த துவாரத்தினுள் எட்டி தலையை விட்டதுதான் தாமதம்.
என்னால் கூட நம்ப புடியாத காட்சி. உஷ்ணம் என் முகத்தில் அறைந்தது. பெரும்
நெருப்பு. அதன் ஜுவாலையில் நின்றுக் கோண்டிருக்கிறாள், ‘துர்கை’.
அந்த காட்சிக்கு பிறகு குளிர் ஜுரமே வந்தது. எதை சாப்பிட்டாலும் குமட்டல்.
ஏற்கனவே எலும்பும் தோளுமாக இருந்த நான் தோளை மறைத்து எலும்பு தெரியும் படி
ஆளானேன்.
ஒரு பேருந்து ஆட்கள் எல்லோரும் நான் கண்ட காட்சியை கேட்டறிந்து ஆளுக்கு ஒரு
ஆலோசனை கொடுத்தார்கள். அதில் ஒருவர் சொன்ன ஆலோசனை மட்டும் அம்மாவிற்கு
திருப்தி கொடுத்திருக்க வேண்டும். அதனால்தால், மாரான் முருகனுக்கு முடி
இறக்கும் வேண்டுதலை அம்மா எனக்கு செய்வதாக சொன்னார்.
மூன்று நாள்களும் என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.
நான்காம் நாள் விடியற்காலை முருகனுக்கு முடியிறக்கிய பிறகே தெளிவு
ஏற்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஆச்சர்யம். நான் உட்பட. அதுவரை எனக்கு ஆலோசனை
கொடுத்தவர்கள் எல்லாம், என் செயல் கண்டிக்கத்தக்கது என்றார்கள். துர்கை
என்பதால் எனக்கு மன்னிப்பு கிடைத்ததாகவும் அதுவே காளியாக இருந்திருந்தாள்
என் கதை முடிந்திருக்கும் என்று சொன்னது என் மொட்டை தலையில் நங்கென்றது.
அதன் பிறகு பல நாள்கள் அந்தக் குகைக்குள் நான் பார்த்த நெருப்பு சுவாலையின்
துர்கையை நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக
உணர்ந்தேன். என் கையில் விபூதி வாங்கினால் எல்லா நோயும் குணமாகும் என
நண்பர்களிடம் சொல்லிக் கோண்டேன். அதன் பிறகு எனக்கு வந்த காய்ச்சலே கூட
குணமாகவில்லை..!
இப்போது யோசிக்கையில்;
நான் பார்த்தது விளக்காக இருந்திருக்கலாம்.
முதன் முறையாக இப்படி ஆன்மிக பயணம் என்பதால் ஒரு மிகை உணர்வாக
இருந்திருக்கலாம்.
குகையை பார்க்கவேண்டும் என்ற ஆர்வமே கூட விசித்திரமாக தோன்றியிருக்கலாம்.
குகை கோவில் படி ஏறும் முன் நான் பார்த்த துர்கை சிலைகளும் படங்களுமே கூட
காரணமாக இருந்திருக்கலாம்.
இப்படி பல திக்கில் இருந்து யோசித்தாலும் நான் பார்த்த காட்சி இல்லையென்று
மறுக்க முடியவில்லை.
சமீபத்தில் பசுவய்யா கவிதை ஒன்றை படித்தேன்.
"தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்."
கவிதையைப் படித்ததும்; ‘அப்படி எண்ணாதிருந்திருந்தால் அவனே வந்திருப்பான்’
என்ற வரிதான் எல்லாவற்றுக்கும் காரணம் என தெரிகிறது.
‘கதவை திற காற்று வரட்டும்’ என்பதுகூட பசுவய்யா கவிதையில் ஒன்றுதான். ஆனால்
இந்த வரிகளை யாரிடம் சொன்னாலும் இதனை சொன்னவர் நித்தியானந்தர் என
கண்ணத்தில் போட்டுக் கொள்வார்கள். மீண்டும் பசுவய்யாவின் ‘நம்பிக்கை’
கவிதையினை படிக்கிறேன்.
’அப்படி எண்ணாதிருந்திருந்தால் அவனே வந்திருப்பான்’
|
|