|
கீழே உள்ள காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்....
* ஒரு சிறுவன் தினக்கூலிக்காகச் சாலையைப் பெருக்கும் வேலை
செய்துக்கொண்டிருக்கிறான். அவனின் முகத்தில் ஏழ்மையின் வடு. அவனது
சகோதரர்களின் எதிர்காலம் தெளிவற்று இருக்கிறது. நிகழ்கால சவால்கள் மட்டுமே
அன்றைய/ அப்போதைய அவனது மனதை நிறைத்துள்ளது.
* ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சட்டென ஒரு கரம்
உங்கள் முன் ஏதோ ஒரு பொருளை நீட்டி, அதை விற்க முயல்கிறது. அக்கைகளுக்குச்
சொந்தக்காரனான சிறுவனின் கண்களில் பசி. அன்றைக்கு நீங்கள் வாங்கும்
பொருளில் அவன் சாப்பிடப்போகும் சோற்றின் ஒரு பிடி உள்ளது.
* இடைநிலைப்பள்ளியில் படிக்க வேண்டிய வயதில் ஒரு சிறுமி தொழிற்சாலை உடை
அணிந்து பேருந்தில் ஏறுகிறாள். மலிவான வாசனை திரவியங்களின் நெடி நம்மை
அறைந்து செல்கிறது. தனது இயலாமைகளையும் வருத்தங்களையும் ஒப்பனைகள் மூலம்
மறைந்துவைத்துள்ள அச்சிறுமியின் உள்ளமெங்கும் எதிர்கால சவால்கள் நிகழ்கால
உளவியல் சிக்கல்கள்.
சாதாரணமாக கடந்து செல்லும் இதுபோன்ற காட்சிகளுக்குப் பின் நம்மிடம்
எளியதொரு கவலை மட்டுமே ஏற்படும். சட்டென நம் தலைவர்களைக் குறைச்
சொல்லத்தொடங்குவோம். ஏதாவது வட்ட மேசையில் இது குறித்து பேசுவோம்.
அவ்வளவுதான்.
கொஞ்சம் வசதி உள்ளவர்களாகவும் அரசியல் நாட்டம் உள்ளவர்களாகவும் இருந்தால்
உடனே அச்சிறுவர்களுக்கு ஏதாவது விழா காலங்களில் அரிசி மூட்டை அல்லது பண
முடிப்பும் கொடுத்து, அதை படம் பிடித்து பத்திரிகைகளில் போட்டுக்கொள்வோம்.
அதன் மூலம் நமது கருணை பொருந்திய முகத்தை உலகுக்குப்
பறைச்சாற்றிக்கொள்வோம். அதன்பின் அவர்களின் நிலை என்ன? அடுத்த தீபாவளி
வரைக்கும் அடுத்த தேர்தல் வரைக்கும் அவர்கள் எப்படித் தங்கள் வாழ்வைக்
கடக்கிறார்கள் என நாம் சிந்தித்ததுண்டா? அவ்வாறு சிந்திக்க, சமூகத்தின்
மீது பெரும் பற்றுதலும் கருணையும் ஒருவருக்குத் தேவைப்படுகிறது.
'மை ஸ்கில்' அறவாரியத்தின் 'ஃபிரிமுஸ்' (Primus Institute of Technology)
கல்லூரியை நடத்திவரும் வழக்கறிஞர் பசுபதி, மருத்துவர் சண்முகசிவா மற்றும்
செல்வமலர் அவ்வாரானவர்கள்தான்.
மருத்துவர் மா.சண்முகசிவா பலமுறை என்னிடம் இக்கல்லூரி குறித்து
கூறியதுண்டு. 'சிறைச்சாலைக்குச் செல்ல இருப்பவர்களைத் தொழிற்சாலைக்கு
அனுப்பும் முயற்சியாக இதைச் செய்கிறோம்' என்பார். பூச்சோங்கிலிருந்து
அண்மையில் கிள்ளான் நகரில் புதிதாக இடம் மாற்றம் செய்த இக்கல்லூரியின்
திறப்புவிழாவிற்குச் சென்ற போதுதான் அவர் சொன்ன சொற்களின் ஆழம் புரிந்தது.
சட்டென ஒரு குற்ற உணர்ச்சி தொற்றிக்கொண்டது.
ஓர் ஆசிரியனாக இதுபோன்ற தலைமுறை உருவாக நானும் ஒரு காரணி என்ற உண்மையை
ஏற்றுக்கொண்டப்பின்னரே அடுத்தக் கட்டம் நகர முடிகின்றது. நமது ஆரம்பப்
பள்ளியின் கல்வி அமைப்பு யூ.பி.எஸ்.ஆர் எனும் சோதனை முறையை அடிப்படையாகக்
கொண்டது. தமிழ், மலாய், ஆங்க���லம், கணிதம், அறிவியல் என்ற ஐந்து பாடத்தை
மட்டுமே வலியுறுத்தும் தன்மைக் கொண்டது. இந்த ஐந்து பாடங்களில் திறனை
அடையாத ஒரு மாணவன் பின் தங்கியவனாகக் கருதப்படுகிறான்.
அம்மாணவனிடம் ஓவியம் வரையும் திறன் இருந்தாலும், திறமைமிக்க விளையாட்டாளனாக
இருந்தாலும், இசைக்கருவிகளை மீட்ட முடிந்தாலும், நாடகம் நடிக்க
முடிந்தாலும் கல்வி அமைப்பைப் பொறுத்தவரையில் அவன் பின் தங்கியவந்தான்.
இறுக்கமாகிப்போன கல்விச் சூழலில் அம்மாணவனின் திறன் சில சமயங்களில்
வெளிப்படுவதே இல்லை. அவ்வப்போது நடத்தப்படும் போட்டிகளில் பங்கெடுக்க
அம்மாணவனின் திறன் பயன்படுத்தப்படும். பின்னர் மூட்டைக்கட்டி மூலையில்
தூக்கி போட்டுவிட வேண்டியதுதான். சில சமயம் பீறிட்டுக்கிழம்பும் அவன் திறனை
அடக்க ஆசிரியர்கள் முனைவதும் உண்டு. அதைவிடக் கொடுமை ஒரு மாணவன் ஐந்தாம்
ஆண்டை நெருங்கும் போதே கால அட்டவணையிலிருந்து ஓவியம், இசை, விளையாட்டு
போன்ற பாடங்கள் அகற்றப்படும் நிலை.
உண்மையில் பின்தங்கிய மாணவன் என்றும் யாரும் இல்லை. ஒரு மாணவனுக்குள்
இருக்கும் திறனை அறிய உதவாத ஒரு கல்வி சூழலில் நாம் புலங்குகின்றோம்.
மூன்று வண்ணங்களைக் காட்டி அது குறித்து அறியாத ஒருவனைக் குருடன்
எனச்சொல்லும் கொடுமைதான் இங்கு நிகழ்கிறது. அவனுக்கு அறிமுகமாகியிருக்கும்
வண்ணத்தை நாம் கேட்டு அறிவதே இல்லை. அதை அறிந்துகொள்ளும் பட்சத்தில்
நம்மால் பல்வேறு துறைகளில் ஆளுமை சார்ந்த மனிதர்களை உருவாக்க முடிகிறது.
உயர்மட்ட கூலிகளை உருவாக்க பயன்படும் கல்வி அமைப்பில் தனக்குள்
கொண்டிருக்கும் திறனைக் வெளிக்காட்ட முடியாமல், உள்ளுக்குள் குமைந்து
உருவாகும் மாணவனின் சக்தி சமூகத்துக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள்
அதிகம் உள்ளது. தேக்கி வைக்கப்படும் சக்தி வேறென்ன செய்யும்? அது, தான்
வெளிவரும் திசையை மாற்றிக்கொள்கிறது. அது சமூகத்துக்கு எதிராக மாறுகிறவரை
நாம் இந்தக் கொடுமைகளைக் கண்டுக்கொள்வதில்லை. பின்னர் நாம் இளைய தலைமுறை
கெட்டுவிட்டது என புலம்புகிறோம்; போராடுகிறோம். ஆனால், அவர்களுக்கான
அடுத்தக்கட்ட சந்தர்ப்பங்களை ஏற்படுத்த நாம் எவ்வகையான திட்டங்களை
வைத்திருக்கிறோம் என்பதுதான் கேள்வி.
இதுபோன்ற சமூகச் சிக்கல்களில் மாட்டிக்கொண்ட ஒரு மாணவன் சிறைச்சாலைக்குச்
சென்று திரும்பும் போதோ, மேற்கல்வி பயில வசதி இல்லாத சூழலிலோ அநாதரவாக
விடப்படுகிறான். அவன் எஞ்சிய வாழ்வை அவனே தீர்மாணித்துக்கொள்ளும் ஒரு
சூழலில் அது பல சமயங்களில் அபத்தங்களில் முடிவதாய் உள்ளது. 'ஃபிரிமுஸ்'
கல்லூரி இத்தகைய மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அம்மாணவர்களுக்கு
இரண்டாவது வாய்ப்பளிப்பது பாராட்டக்கூடியது.
வழக்கறிஞர் பசுபதி அவர்கள் சமூகத்துக்காக முன்னெடுக்கும் திட்டங்கள்
எப்போதுமே ஆக்ககரமானவை. இடைக்கால தீர்வாக இல்லாமல் சிக்கலின் ஆழம் வரை
சென்று அதை களைய செயல்படும் அவர் முனைப்பு ஆச்சரியமளிக்கக் கூடியது.
பிரிமுஸ் கல்லூரியைப் பொறுத்தவரை நாம் நமது தவறுகளைத் திருத்திக்கொள்ள
கிடைத்திருக்கும் இரண்டாம் வாய்ப்பு. கல்வி அமைப்பும் அதைப் பின்பற்றும்
ஆசிரியர்களும் வகுப்பறையில் செய்த தவறுகளுக்கான அடையாளமாக இக்கல்லூரியின்
மாணவர்கள் சாட்சியாக நிர்க்கிறார்கள்.
இக்கல்லூரியில் பயிற்சிபெற்ற பின் தங்கிய மாணவர்கள் இன்று தங்கள்
மேற்கல்வியை முடித்து பட்டம் பெற்றுள்ளனர்... இதற்குமேல் இவர்களுக்கு கல்வி
இல்லை என்ற நிலையில் இருந்த மாணவர்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக்கொடுத்து
அவர்கள் தொடர்ந்து இச்சமூகத்தில் வாழ வாய்ப்பளித்திருக்கிறது
இப்பட்டமளிப்பு விழா. மை ஸ்கீல் திட்டங்களில் இணைந்துகொள்வதன் வழியும் நாம்
நமக்குக் கிடைத்திருக்கும் இரண்டாம் வாய்ப்பை நழுவ விடுவதிலிருந்து
தவிர்க்கலாம் என நம்புகிறேன்.
|
|