|
கடந்த 15ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை எழுத்தாளர் சாரு நிவேதிதா
மலேசியாவிற்கு வருகையளித்திருந்தார். மலேசியாவில் பல இடங்கள் சுற்றிப்
பார்த்தார். இரண்டு இலக்கியச் சந்திப்புகளில் கலந்து கொண்டதோடு இங்கிருந்த
நாட்கள்வரை இலக்கியம், சினிமா, ஆன்மீகம், சமூகம் எனப் பல விசயங்களை
நண்பர்களுடன் எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மலேசியா வந்தவுடனேயே சாரு அவரை வரவழைத்த நண்பர் திருமாறனின்
கைத்தொலைப்பேசியிலிருந்து என்னை அழைத்து வருகையைத் தெரிவித்தார். அவரைக்
கெடா மாநிலம் வரவழைத்து இங்குள்ள வரலாற்றுமிக்க இடங்களைக் காண்பிக்க எண்ணம்
கொண்டிருந்தேன். சாருவும் மலேசியாவின் வடக்குப் பகுதிகளின் வயல் காடுகளைக்
காண ஆர்வம் தெரிவித்திருந்தார். அதன்படி 20ஆம் திகதி கோலாலம்பூரில்
மலாயாப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையும் புத்தகச் சிறகுகள் வாசிப்பாளர்
குழுவும் இணைந்து நடத்தும் சாருவுடனான இலக்கியச் சந்திப்பிற்குச் செல்லத்
திட்டமிட்டிருந்தேன்.
சாருவுடனான இலக்கியச் சந்திப்பு - மலாயாப்பல்கலைக்கழகம் - புத்தகச்
சிறகுகள் (20.11.2012)
20ஆம் திகதி காலை புறப்பட்டு மாலைக்குள் கோலாலம்பூரை
அடைந்தவுடன் நேரே மலாயாப்பல்கலைக்கழகம் சென்றேன். சாரு முன் வரிசையில்
நவீனுடன் அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்து அவர் அருகில் அமர்ந்ததும்
பெயரைச் சொல்லாமலேயே என்னை அடையாளம் கண்டு கொண்டார். சாருவை
மலாயப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் திரு.கிருஷ்ணன் மணியம் அவர்கள்
அறிமுகப்படுத்திப் பேசினார். தமிழ் எழுத்துச் சூழலில் சாருவின் மீதான
விமர்சனங்களை நினைவுக்கூர்ந்து அவர் எழுத்தின் பலதரப்பட்ட ஊடுருவல்களையும்
எடுத்துக்காட்டுகளுடன் கூறினார்.
சாருவின் எழுத்து ஆபாசமாக இருப்பதாகவும் அதை வாசிக்கக்கூடாது எனவும் அவர்
எழுத்து மீது இருக்கும் அவதூறுகளையும் ஒரு வாசகனின் பார்வையிலிருந்து
கிருஷ்ணன் மணியம் விரிவாகப் பேசினார். சாருவை ஒரு கைத்தேர்ந்த
பின்நவீனத்துவ எழுத்தாளர் என்றும் அவர் கூறினார்.
அடுத்ததாக, எழுத்தாளர் சாரு பேச அழைக்கப்பட்டார். மிகவும் இயல்பாக எந்த உரை
துதிகளும் இல்லாமல் தன் பேச்சைத் தொடங்கினார். சாரு புத்தக விற்பனை
குறித்தே அழுத்தமாகக் கூறினார். அங்கு 16 ரூபாய்க்கு விற்கப்படும் ஆனந்த
விகடன் இங்கு இந்திய ரூபாயில் கணக்கிடப்படாமல் 4 மலேசிய வெள்ளிக்கு
விற்கப்படுவதைச் சுட்டிக் காட்டி எழுத்தாளர்களின் நூல்களும் அதிக விலையில்
விற்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து, இந்தச் சமூகம் ஆபாசங்களையும் அசிங்கங்களையும் தனக்குள்ளே
அடர்த்தியாக்கி வைத்திருக்கையில் அவற்றை எழுத்தின்வழி வெளியே கொண்டு வரும்
என் எழுத்து ஆபாசம் எனக் கூறப்படுவதன் வேடிக்கைகளை நகைச்சுவையான
உதாரணங்களுடன் கூறினார். ஆபாசமாக வாழ்ந்து ஆபாசங்களைத் தின்று தீர்க்கும்
சமூக அங்கங்களைக் காட்டிக்கொடுக்கும் சாருவின் எழுத்து 20ஆம்
நூற்றாண்டில்கூட புரிந்துகொள்ளப்படாமல் வெறுக்கப்படுவதும்
புறக்கணிக்கப்படுவதும் தமிழ் ���ாசிப்புச் சூழல் ஒரு வட்டத்திற்குள் சுருண்டு
கிடப்பதை உணர முடிகிறது.
சஞ்சய் - செந்தில் - மலேசிய இளம் இயக்குனர்களுடன் சந்திப்பு (20.11.2012
நள்ளிரவு)
மலாயாப்பல்கலைக்கழக இலக்கியச் சந்திப்பு முடிந்தவுடன் நான், சாரு, சிவா
பெரியண்ணன், நவீன் அனைவரும் ஒரு காரில் மலேசிய இளம் இயக்குனர்களான சஞ்சய்
மற்றும் செந்தில் அவர்களைச் சந்திக்கச் சென்றோம். சாருவுடன் சினிமா
கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரவு 10மணிக்குத் தொடங்கிய உரையாடல் நள்ளிரவைத் தாண்டி மேலும் உற்சாகம்
பெற்றது.
சஞ்சய் அவர் இயக்கிய வரலாற்று ஆவணப்படம் ஒன்றினைச் சாருவிடம் காண்பித்தார்.
1972களில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட
அப்படத்தின் தலைப்பு ‘அந்த ஆறு சிவப்பாக ஓடிய நாள்’ (The day that river
ran red). படத்தைப் பார்த்த சாரு, சஞ்சயின் முயற்சியைப் பாராட்டினார்.
இப்படம் உலகத் தரம் வாய்ந்ததாகவும் உலகத் திரைப்பட விழாகளில் விருது
பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரியப்படுத்தினார். பிறகு நண்பர்கள்
கேட்ட பலவகையான சினிமா தொடர்பான கேள்விகளுக்கும் சாரு பதிலளித்தார். அந்த
உரையாடல் மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருந்தது. மலேசியாவில் சஞ்சயும்
செந்திலும் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குனர்கள் என சாருவால் புரிந்துகொள்ள
முடிந்தது.
சந்திப்பு முடிந்தவுடன் நானும் சாருவும் தயாஜி ஏற்பாடு செய்திருந்த
அறைக்குச் சென்று உறங்கிவிட்டோம். மறுநாள் நவீன் எங்களைப் பேருந்தின் மூலம்
கெடா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். பயணம் நெடுக நானும் சாருவும் மலேசிய
இலக்கியம், இங்குள்ள வாழும் சூழல், சமூகம் என உரையாடிக் கொண்டிருந்தோம்.
இரவில் கெடா வந்தவுடன் என் வீட்டில்தான் தங்கியிருந்தார்.
நவீன இலக்கியச் சிந்தனைக் களம் – இலக்கியச் சந்திப்பு (21.11.2012)
மாலையில் நானும் சாருவும் வீட்டிலிருந்து கிளம்பி கூலிம் தியான
ஆசிரமத்திற்குப் புறப்பட்டோம். அன்றிரவு நவீன இலக்கியச் சிந்தனைக் களம்
நண்பர்களுடன் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தான். சுவாமி
பிரமானந்தா சரஸ்வதி, விரிவுரைஞர்கள் திரு. குமாரசுவாமி, திரு.ப.
தமிழ்மாறன், திரு. மணியரசன் மற்றும் எழுத்தாளர் கோ. புண்ணியவான் அவர்களும்
இந்த இலக்கிய உரையாடலில் கலந்துகொண்டனர்.
சாரு இந்தச் சந்திப்பில் ஆன்மீகம் தொடர்பாகவே அதிகம் பேசினார். தன்னை
அதிகம் பாதித்த ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ நூல் குறித்து தன் வாசிப்பு
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், அவரிடம் அவர் எழுத்துக்
குறித்தான கேள்விகள் கேட்கப்பட்டன. மிகவும் நிதானமாகவே அவர் அனைத்துக்
கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஓர் எழுத்தாளனின் எழுத்தில் ஏற்படும்
மாற்றங்கள் என்பது அவன் தொடர்ந்து தன் எழுத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறான்
என அர்த்தமாகும். எழுத்து ஓர் இடத்தில் தேங்கிவிடாது. ஓர் எழுத்தாளனுடைய
எழுத்து அவனுடன் சிந்தனை, மனம், ஈடுபாடு, அறிவு எனத் தொடர்ந்து மாற்றம்
அடைந்து பயணித்துக் கொண்டே இருக்கும் என விரிவாகச் சாரு இந்தக்
கலந்துரையாடலில் கூறினார்.
பூஜாங் பள்ளத்தாக்கு – தமிழ்ப்பள்ளிக்கு வருகை (22.11.2012)
கலந்துரையாடல் முடிந்ததும் மீண்டும் இல்லம் திரும்பினோம். மறுநாள் காலையில்
பாண்டியன் வந்ததும் எங்கள் முதல் நாள் பயணம் தொடங்கியது. முதலில் நாங்கள்
பூஜாங் பள்ளத்தாக்கிற்குச் சென்றோம். அங்கு, துப்பா தமிழ்ப்பள்ளி தலைமை
ஆசிரியர் திரு.ரவி அவர்களும், ஆசிரியை திருமதி.வேலுமணி மற்றும் இன்னுமொரு
ஆசிரியையும் எங்களுடன் இணைந்து கொண்டனர்.
பூஜாங் பள்ளத்தாக்கிலுள்ள எல்லா இடங்களையும் வரலாற்று ஆவணங்களையும் சாரு
பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சுங்கை பத்துவில் நடந்து
கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சி இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கு
அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திக் கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சியைப்
பார்வையிட்டோம். உலகின் முதலாம் நாகரிகமே இங்குத்தான்
தோன்றியிருக்கக்கூடும் என்பதையொட்டிய ஆராய்ச்சித்தான் அது. பிறகு
அங்கிருந்து புறப்பட்டு துப்பா தமிழ்ப்பள்ளிக்குச் சென்றோம். சாருவின்
வருகை குறித்து அங்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள
ஆசிரியர்களுடனும் தலைமை ஆசிரியர் திரு.ரவியுடனும் சாரு உரையாடினார். பிறகு
அனைவரும் கடைக்குச் சென்று உணவருந்தினோம்.
ஜெராய் மலை
மாலையில் நான் சாரு பாண்டியன் மற்றும் என்னிடம் படித்த முன்னாள் மாணவன்
சசியும் ஜெராய் மலைக்குச் சென்றோம். சுமார் 1000 மீட்டர் உயரத்தில்
இருக்கும் அந்த மலையிலிருந்து யான் வயல் பரப்புகளையும் கடலையும் தெளிவாகப்
பார்க்க முடிந்தது. சாருவுக்கு அவ்விடம் மிகவும் பிடித்துவிட்டிருந்தது.
நானும் பாண்டியனும் யான் வயல் எல்லைகளுக்கு அப்பால் கடலின் கரையிலிருந்து
200 மீட்டர் தள்ளியிருக்கும் தீவு குறித்து வெகுநேரம் குழம்பிக்
கொண்டிருந்தோம். அந்தத் தீவின் பெயர் மட்டும் சட்டென ஞாபகத்திற்குள்
வரவில்லை.
பிறகு, நால்வரும் உச்சி மலையில் சூடான தேநீர் அருந்தினோம். சாரு நாட்டு
வைத்தியம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். சீனர்கள் ‘acupunter’
வைத்தியம் குறித்து என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். இரவு 8மணிக்கு தியான
ஆசிரமத்தில் சாரு உரையாற்றவிருப்பதால் உடனேயே மலையிலிருந்து இறங்க வேண்டிய
சூழல். பாதைகளின் கூர்மை அளிக்கும் மயக்கத்துடன் கீழே இறங்கினோம்.
தியான ஆசிரம் - சாருவின் சிறப்புரை – 22.11.2012
இரவு 8மணிக்குள் தியான ஆசிரமத்திற்குச் சென்றிருந்தோம். சுவாஜியின் உரையைக்
கேட்பதற்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் பக்தர்கள் ஆசிரமத்திற்கு வருவதுண்டு.
அன்றைய தினம் சுவாஜிக்குப் பதிலாக சாரு ஆன்மீக உரையாற்றினார். அவருக்கும்
ஆன்மீகப் புரிதலுக்குமான உரையாக அது இருந்தாலும், அவர் சமூகப் பிரச்சனையையே
மையமாக வைத்து உரையாற்றினார். தான் ஒரு பேச்சாளன் கிடையாது ஆகையால் இது ஒரு
மேலோட்டமான பகிர்வாகவே இருக்கும் எனத் தொடங்கிய அவர் உரை மிகவும்
நேர்த்தியாகவே இருந்தது.
சிறுவயது முதல் ஆண்டாள் பாசுரத்தையே கேட்டு கேட்டு என் உடலில் ஓடுவது
இரத்தமல்ல; ஆண்டாள் பாசுரம்தான் என மனம் நெகிழ்ந்து சாரு கூறினார்.
சமூகத்தில் எல்லா வகையான தவறுகளையும் சிற்றின்பங்களையும் பெற்றுக்கொண்டு
ஒரு பகுதிநேரப் பயிற்சியாக ஆன்மீகத்தைப் பின்பற்றுவது என்பது அர்த்தமற்றது
என அவர் கூறினார். உலகில் நிகழும் பயங்கரவாதங்களையும் அதிகார
சுரண்டல்களையும் நினைவுக்கூர்ந்து ஆன்மீகம் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள்
பற்றியும் பேசினார்.
இரவு சாரு ஆசிரமத்திலேயே உறங்கினார். சுவாமியுடன் மேலும் உரையாட முடிந்தது.
அங்குள்ள சூழல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
சேனன் ஆலயம் – பினாங்கு உறங்கும் புத்தர் (23.11.2012)
மறுநாள் காலையிலேயே நான் மீண்டும் சாருவை ஏற்றிக்கொள்ள ஆசிரமம்
சென்றிருந்தேன். நிம்மதியான உறக்கத்திற்குப் பிறகு சாரு உற்சாகமாக
இருந்தார். அவரை அழைத்துக் கொண்டு எழுத்தாளர் பாண்டியன் இல்லத்திற்குச்
சென்றோம். அங்குத்தான் காலை உணவு. பிறகு பாண்டியனை அழைத்துக் கொண்டு ச���னன்
ஆலயத்திற்குச் சென்றோம். மேலே மலை ஏறி சேனன் சுற்றுவட்டாரத்தின் அழகைப்
பார்த்தோம். இடையிலேயே சாரு திடீரென இதுவொரு புனித பயணமாக இருக்கிறதே என
நகைச்சுவையுடன் கூறினார்.
சேனன் தேவாலயத்திற்குள் சென்று சிறிது நேரம் அமர்ந்துவிட்டு மீண்டும்
அங்கிருந்து வெளியேறினோம். அடுத்ததாக பினாங்கு சென்று புத்தர் ஆலயத்தைத்
தேடி அலைந்தோம். உறங்கும் புத்தர் ஆலயத்திற்குப் பலமுறை சென்ற அனுபவம்
இருப்பினும் அதனைத் தேடிக் கண்டுபிடிப்பதில் எனக்கும் பாண்டியனுக்கும்
கடுமையான போட்டி. பிறகு கண்டு பிடித்து உள்ளே சென்று சாருக்கு ஆலயத்தைக்
காண்பித்தோம். உறங்கும் புத்தர் ஆலயத்தின் பின்புறத்திலுள்ள இறந்தவர்களின்
அஸ்தி பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதை சாரு ஆர்வமாகப் பார்த்தார்.
புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, சாரு அவர் உறவுகளுக்கு ஒரு சில
பொருட்களையும் அங்கேயே வாங்கிக் கொண்டார். சுற்றி அலைந்துவிட்டு பாண்டியனை
அவர் வீட்டில் விட்டுவிட்டு நாங்கள் மீண்டும் தியான ஆசிரமம் சென்றோம்.
சுவாமி அவர்களின் அன்பைப் பற்றி சாருவால் நன்கு உணர முடிந்தது. நல்ல
மனிதராக முதலில் அறிமுகமான சுவாமிஜி அவர்கள் பிறகு நல்ல இலக்கிய
வாசகராகவும் எழுத்தாளராகவும் என்னுடன் உறவை நீடித்தார் என்றே சொல்ல
வேண்டும். யாரை எப்பொழுது அழைத்துச் சென்றாலும் அவர்களை உபசரிப்பதை சுவாஜி
தன் கடைமையாகச் செய்து வந்தார்.
சுவாஜியே சாருவை இரவில் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். நான்
அங்கிருந்து உடனே கிளம்ப வேண்டிய சூழல் என்பதால் சுவாஜியே பொறுப்பாக அவரை
அனுப்பி வைத்தார். அன்பையும் பொறுப்பையும் அவருக்கு போதிக்க வேண்டுமா என்ன?
|
|