|
தயாஜியின் ‘பதக்கம் எண் 13’
‘உண்மைதான் இந்த பதக்கம் வெறும் பதக்கமல்ல. பதிமூன்றாம் என் பதக்கம். ஐநூறு
ஆண்டுகளுக்கு முன் உள்ள பதக்கம் இது. இது இருக்கவேண்டிய இடம் பூமியல்ல.
எங்களில் பலர் இந்த பதக்கத்தை தேடித்தான் இத்தனை ஆண்டுகளாக பூமியில்
ஆளுக்கொரு பெயரில் பிறக்கப்பட்டு வளர்க்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகிறோம்.
எப்போது எங்கள் மீது எங்கள் குடும்பத்தினர்க்கு சந்தேகம் வருகிறதோ அப்போதே
அவர்களுக்கு விதி முடிந்துவிடும்.'
‘பூமியில் உள்ளவர்களுக்கு இது பதக்கம், அதிஷ்டம் அவ்வளவுதான் எங்களுக்கு
இந்த பதிமூன்றாம் எண் பதக்கம்தான் உயிர், உயிர்க்கு மேலும். இதுவரை
பூமியில் பல இடங்களில் இருந்து பன்னிரெண்டு பதக்கங்கள் வரையில் சேர்த்து
ஓரளவு சக்தியினை சேர்த்துக் கொண்டோம்.’
பதக்கத்தைப் பற்றிய எழுத்தாளர் தயாஜியின் அறிமுகம் இது.
இத்தகையதொரு அருமையான பதக்கத்தைப் பூமியிலிருந்து கைப்பற்றிவிடும்
வேற்றுலகவாசியாக வருகின்றார் கதைசொல்லி. பதக்கத்தைக் கண்டடையும் முன்னர்
பூமியில் மனிதர்களுடன் ஏற்படும் சந்திப்பும் பதக்கத்தைக் கண்டெடுத்த
பின்னர் உண்டாகும் மற்றொரு சம்பவமும் முக்கிய அம்சங்களாகின்றன.
வேற்றுலகவாசி பூமியில் தங்கப்பதக்கத்தைக் கண்டெடுத்த பெண்மணியைச்
சந்திக்கின்றார். எதிர்பாராவிதமாய் தான் வாங்கிய மீனுக்குள் இருந்த பதக்கம்
அவருக்குக் கடவுளாய் தோன்றுகின்றது. அது சக்தி வாய்ந்ததெனவும்
நம்புகின்றார்.
மக்களின் அறியாமையை உணர்த்தும் அதே சமயம் பூமியில் நிகழும் இத்தகைய மூட
நம்பிக்கைகளைச் சட்டென கண்முன் நிறுத்தி செல்கின்றது. மூட நம்பிக்கைகள் சில
சமயங்களில் திணிக்கப்பட்டாலும் பல சமயங்களில் தாங்களாகவே தோற்றுவித்து
கொள்வதாகவும் இங்கே அறிய முடிகின்றது. கடவுள் நம்பிக்கை கேள்விக்குரியதல்ல.
ஆனால் மூட நம்பிக்கைகளே அத்தகைய கேள்விகளை உருவாக்கி விடுகின்றன.
பதக்கத்தைக் கொண்டு வந்த பின்னர் தங்களின் தலைவருக்குத் தகவல் சொல்லும்
வேற்றுலகவாசி அங்கே நிலவும் நிலவரத்தையும் விளக்குகின்றார். பதக்கத்தைத்
தலைவரிடம் ஒப்படைத்தால் இழந்த சக்தியினைத் திரும்ப அடைந்துவிட முடியும்.
ஆனால் தலைவரிடம் ஒப்படைக்காமல் அதைக் கொம்பர்களின் தலைவரிடம் ஒப்படைக்க
எண்ணுவதாய் திட்டமிடுகின்றார். ஏன் என காரணம் எழலாம். பதக்கம்
கொம்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் பதவி எனும் அங்கீகாரம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் இறுதியில் சிறு மாற்றம் ஏற்படுகின்றது. கொம்பர்களும்
அவர்களின் தலைவனும் வீட்டினுள் சிறைப்படுத்தப்பட்டு வீடு
வெடிக்கப்படவிருக்கின்றது. வேற்றுலகவாசி தன் தலைவருடன் மீட்டெடுத்த
சக்தியுடன் புறப்படுவதாய் கதை முடிவடைகின்றது.
நாடு, சமுதாயம், வேலை என பல விசயங்கள் மனிதர்களை அடிமைப்படுத்திவிடுகின்றன.
இதைத் தவிர உணர்வுகளிடம் அடிமைப்படுத்தப்படும் மனிதர்களின் எண்ணிக்கை
இன்னும் அதிகம். அதன் விளைவுகளும் அதை��ிட அதிகம். உணர்வுகளிடம்
அடிமைப்படவில்லையெனில் நாளிதழ்களில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு
போன்ற செய்திகள் இருக்காது.
உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள் தங்களின் மனிதத்தை
இழக்கின்றனர். பேராசைகளும் இதற்கு மேலும் வலு சேர்க்கின்றன. இதனால்
தங்களிடம் ஒளிந்திருக்கும் திறமையை மறந்து எதிர்மறையான விளைவுகளில் சிக்கி
சீரழிகின்றனர். உணர்ச்சிகளிடம் அடிமையாகி தடுமாறிப்போகும் ஓரே கணம் பலரின்
வாழ்க்கையைத் திசை திருப்பி விடுகின்றது. எத்தனையோ சினிமாக்களும் இதைக்
காட்சிப்படுத்திவிட்டன. ஆனாலும் அதிலிருந்து விடுபட இன்னும் வழி
காணப்படவில்லை என குறை கூற முடியாது. காரணம் இதற்கென தனி வழி என ஏது
கிடையாது. ஓவ்வொருவரும் அதைத் தேடி கண்டுணர வேண்டும்.
வேற்றுலகத்துக்கு அரிய பொருளாய் இருக்கும் தங்கப்பதக்கம்தான் இவ்வுலகில்
மனிதம். தொலைந்து போன மனிதத்தைத் தேடி கண்டடைய வேண்டும். மனிதத்தைக்
கண்டடையும் ஒவ்வொரு தருணத்திலும் சமுதாயம் வலுப்படுகின்றது; சக்தி
அதிகரிக்கின்றது.
அடிமைத்தனத்துக்குள் சிக்கிக் கொள்பவர்களின் சுய அடையாளம் அழிக்கப்பட்டு
அவர்களுள் இருக்கும் மகத்தான சக்தியும் மறக்க வைக்கப்படுகின்றது. இவ்வகை
சூழல்கள் மனிதர்களை ஆட்கொள்ளும்போது விடுவித்துக் கொள்வது சுலபமானதல்ல.
பதவியின் மீதான ஆசையை அழித்து அடிமைத்தனத்தை விரட்டி மீண்டும் இழந்த
உரிமையை மீட்டெடுக்கும் வேற்றுலகவாசியின் துணிச்சல்
பெருமைக்குரியதாகப்படுகின்றது. அடிமைத்தனம் சமுதாயத்தை மட்டுமல்ல,
தனிமனிதனையும் ஆங்காங்கே கட்டிப் போட்டு கொண்டேதான் இருக்கின்றது.
தனிமனிதனும் விடுபடும் வழிகளைத் திறந்து கொண்டேதான் இருக்க வேண்டும்.
|
|