|
அஜ்மல் கசாப்பிற்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை
மற்றும் டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஆகியவற்றை ஒட்டி
மரணதண்டனை குறித்த விவாதம் மீண்டும் மேலெழுந்துள்ளது.
26/11 மும்பைத் தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு தீவிரவாதியான அஜ்மல்
கசாப் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் ரகசியமாகத்
தூக்கிலிடப்பட்டான். நிறைவேற்றப்பட்ட இத்தண்டனை மும்பைத் தாக்குதலில்
உயிரிழந்தவர்களுக்கும் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கும் அளிக்கும்
உண்மையான மரியாதை என்று வர்ணிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில்
சட்டத்தின் ஆட்சி நடப்பது உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ்
தரப்புகள் மெய்சிலிர்த்தன. லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான்,
தா.பாண்டியன், அண்ணா ஹசாரே, அமிதாப் பச்சன் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த
வரிசையில் கைகோர்த்தார்கள். தமிழ் செய்தி ஊடகங்கள் பலவும் ஒரு வரலாற்றுச்
சாதனையாக இதைக் கொண்டாடின. பொதுமக்கள் தரப்பும் இதற்குச் சளைக்கவில்லை.
கிட்டத்தட்ட அன்று இரண்டாவது தீபாவளியே கொண்டாடப்பட்டது.
டில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (16.12.12) ஓடும் பேருந்தில் ஆறு
பேர் கொண்ட கும்பலால் 23 வயது மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பாலியல்
வன்புணர்ச்சி செய்யப்பட்டாள். துருபிடித்த இரும்புக் கம்பிகளால்
தாக்கப்பட்டதில் சிறுகுடல், பெருகுடல் கிழிந்து நுரையிலில் தொற்று,
மூளையில் காயம், மாரடைப்பு என உயிருக்குப் போராடினாள். 6 அறுவை
சிகிச்சைக்குப் பின்பும் எந்தப் பலனுமின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில்
உயிரிழந்தாள். பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக இந்திய வரலாற்றில் இதுவரை
கண்டிருக்க முடியாத மக்கள் தன்னெழுச்சி ஒன்று ஏற்பட்டது. டில்லியில்
குடியரசுத் தலைவர் மாளிகை முன்பும் இந்தியா கேட் முன்பும் கூடிய
ஆயிரக்கணக்கான இளம் பெண்களும் ஆண்களும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி
கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களின் உச்சபட்ச கோரிக்கை,
இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரையும் தூக்கிலிட வேண்டும்
என்பதுதான்.சுஷ்மா சுவராஜ் போன்ற பா.ஜ.வினரும் இதனை பாராளுமன்றத்தில்
வலியுறுத்தினார்கள்.
இரண்டு சம்பவங்களுமே ரொம்பவும் குரூரமாய் நிகழ்த்தப்பட்டவைதான்;
உச்சபட்சமாய் தண்டிக்கப்பட வேண்டியவைதான். ஆனால், உணர்ச்சிமயமான ஒரு
சூழலில் மரணதண்டனையை நியாயப்படுத்துவது அல்லது மரணதண்டனையைக் கோருவது
என்பவற்றிற்கு அப்பால், மரணதண்டனை எவ்வாறு அரசியலாக்கப்படுகிறது
என்பவற்றின் மீதும் கவனம் குவிக்க வேண்டும்.
மரணதண்டனையை சட்டப்பூர்வமாகவே ஆதரித்து வரும் நமது நாடு, சமீபத்தில்
மரணதண்டனையை ஒழிப்பதற்காக ஐ.நா கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக
வாக்களித்தது. இந்திய நீதி வழங்கு நெறிமுறைகளின்படி, மரணதண்டனை என்பது
“அரிதினும் அரிதான” வழக்குகளுக்கு மட்டுமே விதிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால்
இந்த “அரிதினும் அரிதான” என்பதற்கு சட்டரீதியான வரையறை எதுவும் இல்லை.
வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியின் கருத்தியலையும் விசாரணையின் போதான
அவரது மனநிலையையும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குற்றவாளியின் சாதிய,
வர்க்கப் பின்புலத்தையும் கூட அது சார்ந்திருக்கிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த
ஜெயக்குமார், அவரது மனைவி சண்முகத்தாய் மகள்கள் புவனேஸ்வரி, இந்திரா
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வெட்டும்பெருமாள் என்ற
கிருஷ்ணன், காட்டு ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணனின்
மனைவியுடன் ஜெயக்குமாருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்
ஆத்திரமடைந்த கிருஷ்ணன், காட்டு ராஜாவுடன் சேர்ந்து ஜெயக்குமார்
குடும்பத்தைத் தீர்த்துக்கட்டியுள்ளார்.
நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கு விசாரணை
சமீபத்தில் முடிவடைந்தது. தீர்ப்பு கூறிய நீதிபதி நந்தகுமார், குற்றவாளிகள்
மீதான குற்றம் நிரூபணமானதால் அவர்கள் இருவருக்கும் நான்கு தூக்கு தண்டனைகள்
மற்றும் ஐந்து ஆயுள் தண்டனைகள் விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
சகமனிதரைக் கொல்லும் குற்றத்தின் தன்மை என்பது அதன் எண்ணிக்கையைப் பொறுத்து
மதிப்பிடக்கூடியதன்று. ஒரே ஒரு உயிரைக் கொன்றாலும் அது வன்மையாகத்
தண்டிக்கப்பட வேண்டியதுதான். எனினும் எண்ணிக்கை என்பது குற்றத்தின்
அளவையும் தன்மையையும் தீர்மானிப்பதில் ஒரு பங்கு வகிக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் 4 பேரைக் கொன்றது “அரிதினும் அரிதான” வழக்காக நீதிபதியால்
கருதப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இதே அளவுகோல், இந்திராகாந்தி
கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களும் சீக்கியர்களை
தேடிப்பிடித்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியும் கத்தி, இரும்புக்கம்பி,
சைக்கிள் செயின்களால் அடித்து நொறுக்கியும் 3000 சீக்கியர்கள் படுகொலை
செய்யப்பட்ட வழக்கிலோ, இதேமுறையில் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில்
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலோ
இதுபோன்ற பிற படுகொலைக் குற்றங்களிலோ பின்பற்றப்படவில்லை. ஏனெனில்
மரணதண்டனை விதிப்பதற்கு இறுக்கமான - ஒரேமாதிரியான சட்ட வரையறை என்பது
இந்தியாவில் இல்லை. இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். மரணதண்டனைத்
தீர்ப்புகள் என்பவை ஏதோ நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தியலை மட்டுமல்ல,
ஆளும்வர்க்கங்களின் அரசியலையும் சார்ந்திருக்கின்றன.
பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் இன்றளவும் நீதி கேட்டு
போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் குற்றவாளிகள் சுதந்திரமாய் உலவிக்
கொண்டிருப்பதற்கு, “பெரிய மரம் ஒன்று விழுந்தால், பூமி கொஞ்சம் அதிரத்தான்
செய்யும்” என்று சீக்கியப் படுகொலைகளைப் பற்றி நியாயம் பேசிய
ராஜீவ்காந்தியின் காங்கிரஸ் துணைநிற்கிறது. குஜராத் படுகொலையில் நிறைமாத
கர்ப்பிணியாக இருந்த கவுசர் பீவியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே
எடுத்து வாளால் வெட்டிக் கொன்றது உள்ளிட்ட நெஞ்சை உறையச் செய்யும்
கொலைகளைப் புரிந்தவர்களும் கூட்டு வன்புணர்ச்சி செய்து பெண்களைக்
கொன்றவர்களும் முழுவதுமாய் தண்டிக்கப்படாததற்குப் பின்னால், படுகொலைகளைத்
தூண்டிவிட்டதோடு, “ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு” என கூசாமல் சொல்லிய
நரேந்திர மோடியின் பா.ஜ.க நிற்கிறது.
கவனித்துப் பார்த்தால், மரணதண்டனை என்பது ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்’
அமைப்பின் ஆய்வொன்று கூறியபடி, “அமெரிக்காவில் மரணதண்டனை பெறுவோரில்
கறுப்பின மக்கள், வறியோர் அதிகம் இருப்பதைப் போல இந்தியாவில் வறியவர்கள்,
தலித்கள், ஆதிவாசிச் சமூகங்களைச் சேர்ந்தவர்களே தூக்கு தண்டனை
பெறுகிறார்கள்” (இவர்களோடு முஸ்லிம் சமூகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்).
மேலும், இதே போன்ற குற்றங்களைச் செய்தவர்களாக இருந்தாலும் சமுதாயத்தின்
உயர்மட்டத்தில் உள்ளவர்கள் தப்பிவிடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு
கூறுகிறது.
சரி, இப்படிக் குறைந்தபட்ச அளவிலாவது குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களே
என்று திருப்திப்பட்டுக் கொள்ளவும் முடியாது. நீதிமன்றங்களின் விசாரணை
எல்லாம் அத்தனை துல்லியமாய் உண்மைகளை வெளிக்கொணருபவை அல்ல. குற்றவாளியின்
தரப்பில் ஒரு திறமையான வழக்கறிஞர் பங்கேற்காமல் போனால் அவர் தரப்பு நியாயம்
வெளிப்பட வாய்ப்பில்லை. இந்தவகையில் ஒரு குற்றவாளி தவறாகத்
தண்டிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது (அப்சல் குரு சிறந்த
எடுத்துக்காட்டு). சமீபத்தில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 14 பேர்
கையெழுத்திட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஒரு கோரிக்கை
விடுத்தனர். அதில், தவறான சட்ட முன்னுதாரணங்களைப் பின்பற்றியதால் 13
பேருக்குத் தவறுதலாக மரண தண்டனை வழங்கிவிட்டதாகவும் அவர்களது தண்டனைகளைக்
குறைக்கும்படியும் கேட்டிருந்தனர். ஆனால் இந்த 13 பேரில் 2 பேருக்கு
ஏற்கனவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இனி, அந்தத் தவறு திருத்தவே
முடியாத ஒன்று.
இந்தச் சிக்கல்களை எல்லாம் எடுத்துக்கூறி மரணதண்டனைக்கு எதிராக நீண்ட
காலமாகவே மனித உரிமை ஆர்வலர்கள் குரலுயர்த்தி வருகின்றனர். மரணதண்டனை
என்னும் அரச கொலை மனித உரிமைகளுக்கு எதிராக மட்டுமின்றி, சட்ட ரீதியாகத்
தவறாக இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குற்றம்
இழைத்தவர்களுக்கான தண்டனை என்பது அவர்களை திருத்தும்படியாகவும் தவறுக்கான
தண்டனையை தனது வாழ்நாளிலேயே அனுபவிக்கும்படியாகவும் இருக்கவேண்டும். அதைப்
புறந்தள்ளி மரணத்தை அளிப்பதென்பது எந்தவகையிலும் பயன்தராது. மரணதண்டனை
போன்ற கொடிய சட்டங்கள் இருந்தால் தவறு செய்ய பயப்படுவார்கள், எனவே
சட்டம்,ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்
பூச்சாண்டிகளெல்லாம் எத்தனை அபத்தம் என்பதை அஜ்மல் கசாப்பின் மரணமே
நிறுவிவிட்டது.
அவனது மரணம் தீவிரவாதிகளிடம் எந்த ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை.
மாறாகப் பழியுணர்ச்சியைத்தான் மேலும் தூண்டிவிட்டிருக்கிறது. அஜ்மல் ஒரு
ஹீரோவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளான். அவன் தூக்கிலிடப்பட்ட நாளில் இருந்து
தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர். “அஜ்மல் கசாப்பின்
மரணம் வீணாகப் போகக்கூடாது. அவன் தியாகத்தைப் போற்ற எங்கள் இயக்கத்தில்
நூற்றுக்கணக்கானவர்கள் தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராக உள்ளனர். எங்கள்
இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் ஐதராபாத், அமிர்தசரஸ் நகரங்களில்
தயாராக உள்ளனர். அவர்கள் கசாப்பின் மரணத்திற்குப் பழிக்குப்பழி வாங்கும்
வகையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவார்கள்” என்று தலிபான் இயக்கத்தின்
ஜூன் துல்லா பிரிவு அறிவித்துள்ளது. இதேபோல ஜம்மு காஷ்மீரில் உள்ள
புகழ்பெற்ற வைஷ்ணவிதேவி கோயில் மீது பயங்கரத்தாக்குதல் நடத்துவோம் என்றும்
மிரட்டல் விடப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனை என்பது தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல வன்புணர்ச்சி,
சாதிப்படுகொலை, இனப்படுகொலை, கொடூரச்செயல்கள் என எந்த ஒன்றில் ஈடுபடும்
குற்றவாளிகளுக்கும் பயத்தை ஏற்படுத்திவிடாது. டில்லியில் குற்றவாளிகளுக்கு
மரணதண்டனை வழங்கக்கோரி பெரும் கிளர்ச்சி வெடித்துக்கொண்டிருந்த போது,
இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் பாலியல் வன்புணர்ச்ச��யும் கொலைகளும்
நடந்த செய்திகள் ஊடகங்களில் வந்தவண்ணம் இருந்தன. தமிழகத்தில் 13 வயது பள்ளி
மாணவி புனிதாவும் வேலூர் அருகே நான்காம் வகுப்பு மாணவியும் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும் அப்போதுதான். ஆக, மரணதண்டனை
என்பது குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, குற்றச்செயல்களைத் தடுக்கும்
என்கிற வாதம் அர்த்தமற்றதாகிறது.
எனவே, இத்தகைய குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு, குற்றவாளிகளை அவர்களது
வாழ்நாளிலேயே தண்டனை அனுபவிக்கச் செய்வதும், சட்டங்களின் ஓட்டைகளை அடைத்து
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைப்பதற்கான கறாரான வழிமுறைகளை
உருவாக்குவதும் குற்றவாளிகளின் சமூகப் பொருளாதார செல்வாக்குகளைப்
புறந்தள்ளி அவரவர் இழைத்த குற்றங்களுக்கு உரிய தண்டனை அளிப்பதும்
எல்லாவற்றிற்கும் மேலாக தீவிரவாதங்களை ஒழிப்பதற்கான உரையாடலை
சாத்தியப்படுத்துவதும் ஆணாதிக்க கலாச்சார மனங்களுக்கு எதிராக பெண்ணியவாத
விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுமே முக்கியம்.
இந்தத் தொலைநோக்குச் சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு, மரணதண்டனைக்காகக்
கூக்குரலிடுவது, இறுதியில் ஆளும் வர்க்கங்கள் தங்களது அரசியல் லாபங்களை
அடைவதற்குத்தான் வழிவகுக்கும். தேர்தல் அரசியலுக்கு நெருக்கடிகள்
ஏற்படும்போது அஜ்மல் கசாபையோ, அப்சல் குருவையோ தூக்கிலிட்டு தமது
‘தேசபக்தியை’ நிறுவுவதற்கும் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்கும் தான்
இது பயன்படுத்தப்படும். இவற்றை நிறைவேற்றுவதன் மூலம் குற்றவாளிகள் எல்லாம்
தண்டிக்கப்படுவதாகவும் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதாகவும் ஒரு
பிம்பத்தை அது கட்டமைக்கும்.
ஆனால், ஒன்றிரண்டு மரணங்களை நிகழ்த்தி உண்மைகளை மூடிமறைத்து விட முடியாது;
இன்னும் விடையளிக்கப்படாத இந்தக் கேள்விகளை வரலாற்றில் இருந்து அழித்துவிட
முடியாது:
இந்தியாவின் பெருந்திரள் படுகொலைகளின் வரலாற்றிற்கு ஒரு முன்னோட்டமாக
கருதப்படும் அஸ்ஸாம் – நெல்லிப் படுகொலையில் 2,191 முஸ்லீம்கள் கொடூரமாகக்
கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் 5,000 ரூபாய்களை
நிவாரணமாக வழங்கிவிட்டு, இன்றுவரை ஒரே ஒரு குற்றவாளியைக் கூடத் தண்டிக்காத
இந்த நாடு, ஒரு சனநாயக சோசலிசக் குடியரசு நாடா? 1987 மீரட் கலவர வழக்கு (44
முஸ்லீம் இளைஞர்கள் காவல்துறையினரால் ஒரு மஞ்சள் நிற டிரக்கில்
ஏற்றிச்செல்லப்பட்டு கங்கைக் கால்வாயில் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்) 1989
பாகல்பூர் படுகொலை ( 116 முஸ்லீம்கள் இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டுக்
கொல்லப்பட்டனர், 30,000 பேர் அகதிகளாக்கபட்டனர்) பாபர் மசூதி இடிப்பு என
எந்த ஒரு வன்முறையிலும் முஸ்லிம்களுக்கு நீதி வழங்காத இந்த தேசத்தில்
நடப்பது தான் சட்டத்தின் ஆட்சியா? 1993 மும்பைக் கலவரத்தை (900 பேர்
கொல்லப்பட்டனர். இவர்களில் 575 பேர் முஸ்லீம்கள், 275 பேர் இந்துக்கள்)
முன்னின்று நடத்தியது பால் தாக்கரே தான் என்று கூறிய ஶ்ரீகிருஷ்ணா கமிஷன்,
சிவசேனா மற்றும் பால்தாக்கரேவின் பங்களிப்பை ஆதாரத்தோடு நிறுவியது. ஆனால்
அந்தக் கிரிமினல் குற்றவாளிக்கு தேசியக்கொடி போர்த்தி இறுதி மரியாதை
செலுத்தப்பட்டது. இப்படி இனவாத, மதவாத தேர்தல் நோக்கு கொண்ட இந்த
அரசாங்கங்கள் இனிமேல் யாரைக் கொன்றுபோட்டு, தலித்கள், பெண்கள்,
சிறுபான்மையினர்களுக்கான நியாயங்களை தீர்ப்பளிக்கப்போகிறது?
சொந்த குடிமக்களுக்கு நீதி அளிக்கத் தவறும் அரசு, தனது அரசியல்
நோக்கங்களுக்காக மரணதண்டனையை சட்டமாக்குவதை அனுமதிக்க முடியாது. எத்தனை
கொடூர குற்றங்கள் புரிந்தவர்களானாலும் மனித அறத்திற்கு அப்பாற்பட்ட மனித
விரோதச் செயலை ஏற்கமுடியாது. மரணதண்டனை என்ற பெயரால் “பழிக்குப் பழி” என்ற
வெறிக்கூச்சலை எழுப்புவதன் மூலம் எதிர்காலச் சமூகத்திடம் ஒரு வன்முறையற்ற
இந்தியாவை ஒப்படைத்துவிட முடியாது. “கண்ணுக்கு கண் என்றால் இறுதியில்
குருடர்களின் உலகம் தான் மிஞ்சும்” என்று காந்தியடிகள் சொன்னார். நமது
வருங்கால சந்ததிகளுக்கு நாம் எப்படியான உலகத்தை விட்டுச் செல்லப் போகிறோம்?
தொங்குவால்: புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் பர்மாவில்
(சுதந்திரத்திற்கு முந்திய பிரிட்டிஷ் இந்தியா) பிரிட்டிஷ் இம்பிரியல்
போலிசாகப் பணியாற்றியவர். தன் கண்முன் நடைபெற்ற ஒரு மரணதண்டனை குறித்து
அவர் எழுதிய ‘A Hanging’ எனும் கட்டுரை புகழ்பெற்ற ஒரு இலக்கியப் படைப்பு.
சிறை அதிகாரிகளால் நடத்தப்படும் தூக்கிலிடும் நிகழ்ச்சியை விளக்குவதன்
மூலம் சக மனிதர்களைச் சட்டபூர்வமாகக் கொல்லுவதில் பொதிந்துள்ள வன்முறையை
ரொம்பவும் யதார்த்தமாக வெளிக்கொணர்கிறார்.
அன்று தூக்கிலேற்றப்பட்டவன் ஒரு இந்து, இந்தியன் என்பது தவிர அவனைப்பற்றிய
வேறு எந்தக் குறிப்பும், அவன் எதற்காக தூக்கிலேற்றப்பட்டான் என்பது பற்றிய
எந்தத் தகவலும் அந்தக் கட்டுரையில் இல்லை. மரண தண்டனை குறித்த மனசாட்சி
உசுப்பலுக்கு அந்த விவரங்கள் தேவையற்றவை.
அன்று காலை அக்கைதி அவனது இறுதிப் பயணத்திற்குத் தயார்படுத்தப் படுவதில்
கட்டுரை தொடங்குகிறது. ஏதும் இடையூறு நிகழாமல் காரியம் முடிக்கப்பட
வேண்டும் என்கிற பதட்டத்துடன் ஒவ்வொரு அரசு ஊழியரும் செயல்படுகின்றனர்.
நிகழ்ச்சி சுமுகமாக முடிகிறது. டாக்டர் கீழே இறங்கி, தொங்கும் உடலைத்
தள்ளிப் பார்த்து மரணத்தை உறுதி செய்கிறார். எல்லோரும் கிளம்புகிறார்கள்.
வரும்போது இருந்த டென்ஷன் இப்போது இல்லை. “இன்னைக்கு எல்லாம் கச்சிதமா
முடிஞ்சது. சில நேரங்களில் கீழே இறங்கி தொங்குறவனின் காலைப் பிடித்து
இழுக்க வேண்டி வரும். அது ரொம்ப மோசம்” என்கிறார் ஒரு உதவியாளர்.
“பிடிச்சுத் தொங்கறதா, அது ரொம்பத்தான் மோசம்” என்கிறார் சிறைஅதிகாரி.
திடீரென உதவியாளன் சொல்கிறான்: ”இவனது அப்பீல் மறுக்கப்பட்ட செய்தியைச்
சொன்னபோது இவன் என்ன செஞ்சான் தெரியுமா? மூத்திரம் பேஞ்சுட்டான்”.
எல்லோரும் புன்னகைக்கின்றனர். உதவியாளன் மறுபடியும் பேசுகிறான்: “இவன்
எவ்வளவோ பரவாயில்லை. ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஒத்துழைச்சான். அன்னைக்கு
ஒருத்தன் கம்பியைக் கெட்டியா புடிச்சிக்கிட்டு வரவே மாட்டேன்னுட்டான்.
நாலஞ்சு பேர் புடிச்சி இழுக்க வேண்டியதாயிடுச்சி. என்னப்பா, எங்க
எல்லாருக்கும் எவ்வளவு தொல்லை கொடுக்கிற பாருன்னு அவனிடம் சொன்னோம்”.
இந்த நினைவுகளை அசைபோட்டபடி, ஒரு பாட்டில் விஸ்கியை ஓப்பன் பண்ணுகிறார்கள்.
இடையில் ஒரே ஒரு பத்தியில் தான், மரணதண்டனை மீதான தனது எதிர்வினையை ஆர்வெல்
பதிவுசெய்கிறார். அந்தப் பத்தி இதுதான்:
“அது ரொம்ப வியப்புக்குரிய ஒன்றுதான். அந்தக் கணம் வரை ஆரோக்கியமான,
சிந்தனையுள்ள ஒரு மனிதனைக் கொல்வதன் பொருள் என்ன என்பதை நான் உணரவில்லை.
தூக்கிலேறப் போகும் அந்த மனிதனை அழைத்துச் செல்லும்போது அவன் வழியிலிருந்த
சேற்றில் கால்படாமல் சற்று ஒதுங்கி நடந்தானே அப்போதுதான் எனக்கு அந்தச்
சூழலின் ‘அபத்தம்’ விளங்கியது. ஒரு உயிர், ஒரு வாழ்க்கை அதன் முழு வீச்சில்
உள்ளபோது அதை அத்தோடு முடித்து விடுவதில் அடங்கியுள்ள விளக்க இயலாத தவறை
நான் உணர்ந்தேன். அவன் செத்துக்கொண்டிருக்கவில்லை, எங்கள் எல்லோரையும்
போலவே அவனும் முழுமையாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான், அவனது அங்கங்கள்
எல்லாம் சரியாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தன, வயிறு உண்டதைச்
செரித்துக்கொண்டிருந்தது, தோல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருந்தது.
அவனது நகங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. செல்கள் தோன்றிக்கொண்டிருந்தன.
எல்லாம் அதனதன் பணியை அதற்குரிய முட்டாள்தனமான புனிதத்துடன் சேயலாற்றிக்
கொண்டிருந்தன. அந்தத் தூக்கு மரத்தில் அவன் நின்று கொண்டிருந்த போதும்,
அந்த லீவர் இயங்கி பத்தில் ஒரு வினாடியில் அவன் குரல்வளை எலும்பு முறியும்
கணம் வரையிலும் அவன் நகங்கள் வளர்ந்து கொண்டேயிருக்கும். அவன் கண்கள்
அந்தச் சுவரை, கற்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கும். அவன் மூளை இன்னும்
சிந்தித்துக் கொண்டிருக்கும். என்ன நிகழப்போகிறது என்பதை சிந்தித்துக்
கொண்டிருக்கும். சேறு காலில் படாமல் விலகி நடக்க வேண்டும் என்பதுவரை
பகுத்தறிவு பூர்வமாக அந்த மூளை சிந்திக்கும்.
அவன், நான், மற்றவர்கள் எல்லோரும் ஒரே குழுவாக ஒரே சூழலை, ஒரே உலகைப்
பகிர்ந்தபடி, பார்த்துக் கொண்டு, கேட்டுகொண்டு சென்று கொண்டிருக்கிறோம்.
ஆனால் இரண்டு நிமிடங்களில், ஒரு கணத்தில் எங்களில் ஒருவன் இல்லாமல்
ஆகப்போகிறான். ஒரு சிந்திக்கும் மூளை இல்லாமல் போகப் போகிறது ; ஒருவனது
உலகமே இல்லாமல் போகப்போகிறது…”
ஆம், எல்லா மரணதண்டனைகளும் வெறுமனே குற்றவாளிகளை அல்ல, சிந்திக்கும்
மூளைகளை, தவறுகளுக்காக வருந்தி குற்றங்களைக் கைவிடத்தெரிந்த மனித
உயிர்களைக் கொல்கிறது. குற்றங்களை ஒழிப்பதற்கு பதில் குற்றவாளிகளை
ஒழித்துக்கட்டுகிறது.
|
|