முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
   
  உற்சாகமான 2012 - சவால் மிக்க 2013:
ஒரு பார்வை
 
 
 
 

எப்போதும் போல இல்லாமல் கடந்த ஆண்டு (2012) மிக உற்சாகமானதாக இருந்துள்ளதை மீட்டுணரும்போது அறிய முடிகின்றது. வருடம் தோறும் ஏதாவது ஒரு முக்கிய சமூக / இலக்கிய நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடந்தபடிதான் இருந்தன. அதில் வல்லினமும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிக அதிகமான இலக்கிய செயல்பாடுகளில் இயங்கி கொண்டிருந்தது எனலாம்.

பகுத்தறிவாளர் மாநாடு



வருடத்தொடக்கத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்த மாநாடு இது. மலேசிய பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்து இந்நிகழ்வினை நடத்தியது. தங்கள் குழந்தைகளுக்குச் சாதி பார்த்து திருமணம் செய்து வைப்பதில் மும்முரம் காட்டும் பல தமிழக அரசியல்வாதிகளும், தி.மு.க பிரதிநிதிகளும் மிக உற்சாகமாகவே இதில் கலந்துகொண்டு பேசினர். பெரியவர் வே.ஆனைமுத்து, அ.மார்க்ஸ் மற்றும் ஆதவன் தீட்சண்யா போன்ற சிலரது வருகையினால் அம்மாநாடு சிறப்பு பெற்றது. பலர் கருணாநிதிக்கு இங்கு வந்தும் கூஜா தூக்குவதில் குறியாக இருந்தாலும் மாநாட்டின் நோக்கம் அதனால் பாதிக்கப்படவில்லை. ஓரளவிற்கு நாடு முழுவதும் அதன் அலை விரிந்தது.

அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா மற்றும் தேவா



இதை தொடர்ந்து அ.மார்க்ஸ் மற்றும் ஆதவன் தீட்சண்யாவின் முன்னிலையில் வல்லினத்தின் 'கலை இலக்கிய விழா 4' நடந்தேறியது. தமிழில் மிக முக்கிய சிந்தனையாளரான அ.மார்க்ஸின் முதல் வருகை இது. அவரைச் சந்திப்பதும் அவருடன் உரையாடுவதும் முக்கியமான அனுபவமாக இருந்தது. சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமையான ஆதவன் தீட்சண்யாவுடனான தொடர் உரையாடல்களும் வல்லினத்தில் அவர் உரையும் மலேசிய இலக்கியச் சூழலுக்குப் புதிது. இலங்கையிலிருந்து வந்திருந்த எழுத்தாளர் தேவாவுக்கும் இது முதல் வருகைதான். இலங்கையில் அரசியல் சூழல் மற்றும் இலக்கியச் சூழலை நிகழ்வில் பரிந்துகொண்டார்.

நான்கு நூல்கள் வெளியீடு



இம்முறை வல்லினம் பதிப்பில் 4 நூல்கள் வெளிவந்தது மேலும் உற்சாகத்தைக் கூட்டியது. நான்கும் மலேசியாவின் இளம் எழுத்தாளர்களுடையது. அதில் யோகி மற்றும் சிவா பெரியண்ணனுக்கு இதுவே முதல் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.குமாரன் மறைவு



இலக்கியச்சூழலில் இழப்பாகக் கருதுவது எம்.குமாரனின் இறப்புதான். ஒரு முறை நிகழ்ந்த விரிவான உரையாடலுக்குப் பின் 'வல்லினம்' நிகழ்வில் கலந்துகொண்டார். அவரை நேர்காணல் செய்ய நானும் சிவாவும் பல மாதங்கள் முயன்று கொண்டிருந்த போது அவர் மரணச்செய்தி எட்டியது. அவர் கூறிய பல அறிய தகவல்கள் அவர் ஒப்புதல் இல்லாமல் எழுதப்படாமல் மனதிலேயே தேங்கி கிடக்கின்றன. வல்லினத்தின் மூலம், ஆளுமைகளை ஆவணப்படம் எடுக்கும் தீவிரம் இந்த மரணத்தில் கூடியிருந்தது.

MICCAF



MICCAF எனும் அமைப்பு மலேசிய கலைஞர்களுக்கு உள்ளூர் தொலைகாட்சிகள் முன்னுரிமை தரவேண்டும் என போராட்டத்தில் இறங்கியது முக்கியமான தொடக்கம். அதிலும் உண்ணாவிரதம் வரை சென்றதும் அதன் மூலம் சில நன்மைகள் விளைந்ததும் சில முக்கிய மாறுதல்களுக்குக் காரணியாக அமைந்தது. ஏனைய கலை வடிவங்களுக்கும் இது போன்ற போராட்டங்களை நடத்த வேண்டியதுள்ளது. சினிமாவினால் கொழுத்த வைரமுத்து போன்றவர்களை அழைத்துவந்து எழுத்தாளர் சங்கம் நடத்தும் நிகழ்வுகளுக்கு இதுபோன்ற எதிர்ப்பு கூட்டங்களை பரவலாக்க வேண்டும். MICCAF சினிமா மட்டும் அல்லாது, மலேசியாவில் ஏனைய கலை வடிவங்களின் சூழலையும் அறிந்துகொண்டால் அதன் தாக்கம் இன்னும் அழுத்தமாக இருக்கலாம்.

எம்.ஏ. நுஃமான் வருகையும் வல்லினம் வகுப்புகளும்



ஜீலை மாதத்தில் தொடங்கப்பட்ட வல்லினம் வகுப்பு புதியதொரு பரிணாமத்தை மலேசிய இளம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அறிமுகம் செய்யும் நோக்கில் ஆரம்பமானது. மொழியியலிலிருந்தே அனைத்து அறிவுத்துறைகளும் பிரிவதால் அத்துறையில் தேர்ந்தவரான பேராசிரியர் எம்.ஏ.நுந்மான் சுமார் 50 பேருக்கு வகுப்பினை நடத்தினார். செம்பருத்தியுடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்வகுப்பு அடுத்தடுத்த அறிவுத்துறைகளையும் அறிமுகம் செய்ய மேலும் சில ஆளுமைகளை அடையாளம் கண்டுள்ளது.

அமைப்பியல் - பின் அமைப்பியல் : தமிழவன்



இரண்டாவது வல்லினம் வகுப்பு செப்டம்பரில் தொடங்கியது. இதில் பெங்களூரில் இருந்து தமிழவன் கலந்துகொண்டு வழிநடத்தினார். அதோடு அவரது சிற்றேடும் இந்நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. மலேசிய இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரமாகும் இவ்விதழ் பல முக்கியமான வாசகர்களையும் பயிற்சி ஆசிரியர்களையும் இந்நிகழ்வின் மூலம் சென்றடைந்தது.

எழுத்தாளர் சாரு நிவேதிதா வருகை



தனது சுய முயற்சியால் மலேசியா வந்திருந்த எழுத்தாளர் சாரு நிவேதிதாவுடனான உரையாடலும் முக்கியமானது. 'புத்தகச் சிறகு' எனும் அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் சாரு தனது எண்ணங்களை பல்கலைக்கழக மாணவர்களிடம் மிகத்தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். அதோடு மலேசியாவின் இளம் இயக்குனர்களான சஞ்சை, செந்தில் போன்றவர்களோடு நடைபெற்ற கலந்துரையாடல் மூலமும் அவரது சினிமா தொடர்பான பார்வையை விசாலமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. மலேசிய திரைப்பட சூழல் குறித்து ஆரோக்கியமான கருத்தை முன்வைத்தார்.

சீ.முத்துசாமியின் சிறுகதை தொகுதி



இதற்கிடையில் பா.அ.சிவத்தின் தனிப்பட்ட முயற்சியால் கோலாலம்பூரில் சீ.முத்துசாமி சிறுகதை தொகுப்பு வெளியீடு கண்டது . அதற்கு முன்பே அவரது அத்தொகுப்பு கெடாவில் வெளியீடு கண்டிருந்தது. சிறுகதையின் போக்கு வரட்சியாக உள்ள ஒரு சூழலில் சீ.முத்துசாமி போன்ற மிக முக்கிய ஆளுமையில் சிறுகதை தொகுதி வெளிவந்தது இவ்வருடத்திற்கான நல்லதொரு நிறைவினைக் கொடுத்தது.

புத்தகச் சிறகுகள்

எழுத்தாளர் தயாஜியின் முயற்சியில் உதயமாகியிருக்கும் 'புத்தகச் சிறகுகள்' நிறுவனம் இலக்கியச் சூழலுக்கு முக்கியமான உதயம். 'இங்கெல்லாம் புத்தகம் கிடைக்கிறதில்லைங்க' என வாசிக்காமல் இருக்க சாக்கு சொல்லிக்கொண்டிருக்கும் மலேசிய வாசகர்களும், 'தமிழகத்துல மலேசிய புத்தகம் கிடைப்பதே இல்ல' என புறக்கணிப்புக்குக் காரணம் சொல்லும் தமிழக எழுத்தாளர்களும் குறைவான கட்டணம் மூலம் தேவையான நூல்களை 'புத்தகச் சிறகின் ' மூலம் பெறலாம்.

இனி 2013...

ஆதவன் தீட்சண்யா வருகை

2013 - வல்லினத்திற்கு இலக்கிய நிகழ்வுடன்தான் தொடங்குகிறது. 19/20 ஜனவரி மாதம் நடைபெரும் தலித் இலக்கிய வகுப்பை நடத்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வருகிறார். 20ஆம் திகதி பொது மக்களுக்காக ஆதவன் தீட்சண்யாவின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும். ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை தொகுப்பும் இந்நிகழ்வில் 'புத்தகச் சிறகு' நிறுவனம் அறிமுகம் செய்யும்.

ஃபிரேசர் மலையில் வகுப்பு

'Bird Man' என அழைக்கப்படும் துறையுடன் ஒரு கலந்துரையாடலும் ஃபிரேசர் மலையில் நடத்த வல்லினம் ஏற்பாடு செய்து வருகிறது. 30 பேருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஜனவரியில் செய்யப்படும்.

ஷோபா சக்தி

நவீன தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய ஆளுமையான ஷோபா சக்தியுடன் கலந்துரையாடலை இவ்வருடம் வல்லினம் நடத்தும். நவீன - பின் நவீன இலக்கியம் தொடர்பான அறிமுகமாக ஷோபா சக்தியினுடனான கலந்துரையாடல் அமையும்.

கலை இலக்கிய விழா 5

இவ்வருட கலை இலக்கிய விழாவில் சில நூல்கள் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ள வேளையில் அதில் பிரதான நூலாக அ.ரெங்கசாமியின் வாழ்க்கை வரலாறு நூல் அமையும். அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதே போல ஈழ இலக்கியத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வருடத்திற்கான பிரதான இரண்டு திட்டங்கள்

திட்டம் 1

மூத்த எழுத்தாளர்களை ஆவணப்படம் செய்யும் பணியை 'வல்லினம்' தொடங்கியுள்ளது. இலக்கியம், சமூகம் போன்றவற்றின் அடிப்படையிலான கலந்துரையாடலாக அது அமையும். அதோடு வரலாற்றை மீள் பார்வை செய்வது மீள் பதிவு செய்வதும் அதன் முக்கிய நோக்கமாக இருக்கும். இதற்காக 10 ஆளுமைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அவர்கள் வாழும் சூழலில் பதிவு செய்வதோடு அவர்கள் ஆளுமை குறித்த பிற கலைஞர்கள் பார்வைகளையும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டம் 2

மலேசியப் புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணி தொடங்கியுள்ளது. கவிஞர் ந.பச்சைபாலன் தலைமையில் தொடங்கியுள்ள இப்பணி இவ்வாண்டுக்குள் நிறைவு பெரும். மலேசியாவில் புதுக்கவிதை தோன்றிய காலம் முதல் 2012 வரையிலான கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இதில் இணைக்கப்படும்.

இறுதியாக...

சூழலைப் பொறுத்து இன்னும் சில திட்டங்கள் உருவாகலாம். எல்லாவற்றுக்கும் பணத்தேவையே பிரதானமானது. எங்கள் செயல்பாடுகளில் இணைந்து உதவ விரும்பும் நண்பர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி.

ம. நவீன்
0163194522
vallinammagazine@gmail.com

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்���ளை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768