முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
   
  பார்க் ஜெய் சாங் (PSY): கிண்டல் மனிதன்
- ம. நவீன் -
 
 
 
 

பணக்காரனாகப் பிறந்தால் வாழ்க்கை எவ்வளவு எளிது தெரியுமா? என்பது போன்ற புலம்பல்களைப் பலர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். என்னைக் கேட்டால் அது ஒருவகையில் கொடுமைதான்.

ஒருதரம் ஓர் அறிவியல் கட்டுரையில் வாசித்தேன், 'நம் கண்களுக்கு இருளை ஊடுறுவும் சக்தி உண்டு. ஆனால், நாம் அதை பயிற்றுவிப்பதில்லை. இருளைப் பார்த்ததும் கண்களை மூடிக்கொள்கிறோம். இதனால் கண்கள் தம் ஆற்றலை அறிவதே இல்லை' என எழுதப்பட்டிருந்தது. எனக்கென்னவோ கண்கள் மட்டுமல்ல மனித வாழ்வே அவ்வாறானதுதான் எனத்தோன்றுகிறது.

சவால்கள் இல்லாத மனித வாழ்வு முழுமை அடைவதில்லை. பாதுகாப்பான வளையத்தில் வாழும் ஒரு மனிதன் தன் ஆற்றலை கடைசிவரை அறிவதே இல்லை. போராடும் போதுதான் நம் சக்தியைப் பயன்படுத்துகிறோம். ஒரு கூட்டுப்புழுவை பிரித்து வண்ணத்துப்பூச்சியைப் பறக்க வைத்தால், காற்றின் சக்தியைத் தாங்க இறக்கைக்கு சக்தியில்லாமல் மாய்ந்துவிடும். இறக்கையின் மூலம் கூட்டை உடைக்கும் புழுவால்தான் வண்ணத்துப்பூச்சியாக சிறகை விரித்து காற்றை எதிர்க்க இயல்கிறது. செல்வந்தர்களாகப் பிறந்தவர்கள் எல்லாம் இதுவே போதும் என முடங்கி கிடப்பதில்லை. அந்தப் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளிவந்து தங்கள் வாழ்வை முழுமை படுத்த போராடுபவர்கள் நிறைய பேர் உண்டு. அண்மைய உதாரணம் பார்க் ஜெய் சாங் (Park Jae-sang).

பார்க் ஜெய் சாங் பற்றி பேசும் முன் எனக்கு 'Life Of Pi' திரைப்படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. புலியுடன் பயணம் செய்யும் 'பை' தான் தொடர்ந்து உயிர்வாழ புலியின் மேல் இருந்த மிரட்சியே காரணம் என்கிறான். அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏற்பட்ட எச்சரிகை உணர்வே அவனை தொடர்ந்து இயங்கவும் துடிப்புடன் இருக்கவும் சம்மதித்தது என நம்புகிறான். வாழ்வில் இரு வகையான மனிதர்கள்தான் உள்ளனர். ஒருதரப்பினர் பாதுகாப்பு வளையத்தினுள் வாழ்பவர்கள். மற்றவர்கள் அதைவிட்டு வெளியே வந்து அல்லது அது கிடைக்காமல் சவால் மிகுந்த வாழ்வில் போராடுபவர்கள்.

இதில் முதல் தரப்பினர் நாட்டுக்கு நல்ல குடிமகனாக இருப்பார்களே தவிர சமூகத்திற்கு ஒரு பயனும் விளையப் போவதில்லை. ஏற்கனவே இருக்கும் ஒரு அமைப்பை எந்தக் கேள்வியும் இல்லாமல் செய்து நிறைவாக வாழ்வதாய் நினைத்து இறந்தும் விடுவார்கள். சவால் மிக்க வாழ்வென்றாலும் தங்களுக்குப் பிடித்த மாதிரியான ஒரு சூழலை உருவாக்கிக்கொண்டு அதன் உச்சங்களை நோக்கி பயணிப்பதையே வாழ்வின் இன்பம் நிறைந்த சவாலாக ஏற்பவர்களால்தான் புதுமைகளை உருவாக்க முடிகிறது.

முன்னது முழுமை; பின்னது நிறைவு.

பிஎஸ்ஓய் (Psy) என்று அழைக்கப்படும் பார்க் ஜெய் சாங் (Park Jae-sang), பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்தான். அவரது தந்தை தென்கொரியா டை கார்ப்பரேஷன் செமிகான் டெக்டர் நிறுவனத்தின் தலைவர்.

பார்க் ஜெய் சாங்கிற்கு பள்ளிக்கூடம் போகவே பிடிக்காது. வகுப்புத் தோழர்களைக் கோபப்படு��்துவார். ஆனாலும் வகுப்பில் நகைச்சுவையாகப் பேசி மற்ற மாணவர்களைச் சிரிக்க வைப்பார். அவருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருந்தது. இதுவே அவரை ஆசிரியர்கள் வெறுக்கக் காரணமாகவும் இருந்தது.

ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர், “ பார்க் ஜெய் சாங் நிறைய பாலியல் ஜோக்குகளைச் சொல்வார். ஒட்டு மொத்த வகுப்பையும் தமது நகைச்சுவையால் ஈர்த்து விடுவார். அப்போது அவரை நான் வெறுத்தேன். இப்போது பார்க்கும்போது, அவர் வகுப்புக்கு ஒரு பெரும் புத்துணர்ச்சியைத் தந்துள்ளது புரிகிறது,” என்றார்.

தந்தையின் நிறுவனத்தின் ஏற்று நடத்தும் திட்டத்துடன், வர்த்தகம் படிக்க அமெரிக்காவுக்கு அனுப்பினர் அவரது பெற்றோர். ஆனால் அமெரிக்கா போனதும் அவருக்குப் படிப்பில் நாட்டமில்லாமல் போனது.

பல்கலைக்கழகத்துக்கு கட்ட பெற்றோர் கொடுத்தனுப்பிய பணத்தில் கணினி, எலெக்ட்ரிக் கீ-போர்ட் என இசைக் கருவிகளும் பொழுதுபோக்குச் சாதனங்களும் வாங்கினார். பல்கலைக்கழகத்தில் கோடைக்கால ஆங்கில வகுப்புக்குச் சென்றார். ஒரே ஒரு பருவத்தை மட்டும் மேம்போக்காகப் படித்ததுடன் பல்கலைக்கழகத்தில் இருந்து நின்று விட்டார்.

பின்னர் பாஸ்டன் நகரிலுள்ள பெர்கலி இசைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் படிப்பைப் பாதியில் விட்டு பட்டம் வாங்காமலேயே கொரியா திரும்பி தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

15 வயதில், தொலைக்காட்சியில் பார்த்த ஒரு பாப் இசை நிகழ்ச்சி அவருக்கு இசையில் இருந்த ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. 2001ல் வெளிவந்த இவரது முதல் ஆல்பம் முறையற்ற செய்திகளைக் கொண்டிருப்பதாகச் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

கலவையான உடை, வித்தியாசமான நடன அசைவுகள், நேரடியான பாடல் வரிகள் போன்றவற்றால் இவருக்கு “The Bizarre Singer” என்ற பட்டப் பெயரைப் பெற்றுத் தந்தது. இவரின் இரண்டாவது ஆல்பமும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது, பதின்ம வயதினருக்கு தகாத பாதிப்பை ஏற்படுத்தும் என பொது நல அமைப்புகள் குரல் எழுப்பியதில், அந்த ஆல்பம் 19 வயதுக்குக் குறைந்தவர்களுக்குத் தடை செய்யப்பட்டது.

நிறைய தடைகள், சவால்கள். மூன்றாவது ஆல்பத்துக்கு பிறகு அவரால் சொந்தமாக தமது இசைத் தொகுப்புகைள வெளியிட வசதியில்லாமல் போக, YG Entertainment, என்ற இசை நிறுவனத்தில் சேர்ந்தார்.

இவரின் ஆறாவது இசைத் தொகுப்பின் முதல் பகுதிதான் கங்னம் ஸ்டைல் பாடல்.

தென்கொரியாவின் தலைநகரமான சோலில் உள்ள கங்னம் வட்டாரத்தையொட்டி இப்பாடலுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. அந்த வட்டார மக்களின் அதிதீவிரமான பயனீட்டுத்தன்மையைக் கிண்டல் செய்யும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

பிரபலமான கங்னம் ஸ்டைல் பாடல் கடந்த ஆண்டு (2012) ஜூலை மாதம் யூடியூப்பில் ஒளியேற்றப்பட்டது. ஒரே மாதத்தில் மிகப் பிரபலமடைந்த பாடல், இதுவரை 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து, உலகில் மிக அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட மிகப்பிரபலமான பாடல் என்ற அந்தஸ்தைப் பெற்றது. இது Psy-யின் ஒரிஜினல் வீடியோவைப் பார்த்தவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையிலான கணக்கு. ஆனால் இப்பாடல் தொடர்பான வீடியோக்களையும் இப்பாடலின் மொழி பெயர்ப்பு வீடியோக்களையும் கணக்கிட்டால் அந்த எண்ணிக்கை 2.2 பில்லியனைத் தாண்டி விடும் என யூடியூப் தெரிவித்துள்ளது.

பிலிப்பீன்ஸ் சிறைக் கைதிகளில் இருந்து, வெஸ்ட் பாயிண்ட் வீரர்கள் வரை உலக மக்கள் அனைவரையும் ஈர்த்த கங்னம் ஸ்டைல் பாடல் “இதுவரை எதிலுமே பார்த்திராத அளவுக்கு இப்பாடல் பிரபலமடைந்துள்ளது” என யூடியூப் வர்ணித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளரான பான் கீ மூன் Psy-வைச் சந்தித்த போது, “மிகப் பிரபலமான கொரிய நாட்டுக்காரர்” என்ற எனக்குள்ள பட்டத்தை இப்போது நான் துறக்க வேண்டும் என்று நகைச்சுவையாகக் கூறினார். உலக அளவில் பிரபலமடைந்துள்ள Psy-யுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக பான் கீ முன் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவிலும் உலக அளவிலும் பல விருதுகள், தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலரின் பாரட்டுகளும் நட்பும் இன்று இவருக்குக் குவிகிறது.

எந்தக் கிண்டல் அவரை சகிக்க முடியாதவராக மாற்றியதோ அதுவே அவரை உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது. வகுப்பின் கிண்டல் செய்யும் மாணவர்களை அடித்து மிரட்டி வைக்கும் ஆசிரியர்கள் ஒருதரம் இதுபற்றி யோசிக்கலாம். யாருக்கு எதில் திறன் இருக்கிறதோ அவர்கள் அதில் மிளிர நிறைய வாய்ப்பு இருக்கிறது. நாம் அதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டியவர்களாகிறோம். வழி ஏற்படும்போது எதுவுமே உச்சத்தை அடைகிறது... கிண்டலாக இருந்தாலும்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768