முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
   
  ம.இ.கா. பேரவை : ஒரு வர்ணனை
- யோகி -
 
 
 
 

மலேசிய இந்தியர்களும் ம.இ.கா பேராளர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ம.இ.கா 66 ஆம் ஆண்டு பேரவை டிசம்பர் 9-ஆம் தேதி சிறப்பாக தலைநகர் உலக வர்த்தக வாணிப மையத்தில் (PWTC) நடைபெற்றது.

4,000 ம.இ.கா பேராளர்களின் மத்தியில் நடைபெற்ற இப்பேரவையின் முக்கியத் தலைவர்களும் ஊடகங்கத்தினரும் கலந்து கொண்டனர். அரங்கெங்கும் ம.இகா இளைஞர் அணி, மகளிர் அணி, புத்ரா மற்றும் புத்ரி அணி போன்ற போராளர்கள் புது தெம்புடன் ‘பாரிசான் நேஷனல்’ ஆதரவு பதாகைகளுடனும் ம.இ.கா கொடியுடனும் காட்சியளித்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில் பேரவைக்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பேராளர்கள் பலத்த கைதட்டலோடு வரவேற்றனர். தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, ம.இ.கா தேசியப் பாடல், பாரிசான் நேஷனலின் கட்சிப்பாடல் ஆகியவற்றின் ஒலிபரப்பிற்குப் பிறகு, டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் சிறப்புரையாற்றினார்.

சிறியத் தடுமாற்றங்களுடன் தொடங்கிய அவரின் உரை போகப் போக பேராளர்களை ஈர்த்து அதே தடுமாற்றத்துடனே அரங்கத்தை தன்வசம் கட்டிப்போட்டுக்கொண்டது.

முதலில் கொஞ்சும் தமிழில் உரை நிகழ்த்திய (அதாவது ஆங்கிலத்தில் தமிழை எழுதி வாசித்த) டத்தோஸ்ரீ பழனிவேல், இரண்டாம் கட்டமாக ஆங்கிலத்தில் தமிழைவிடவும் மிகவும் சரளமாகவே உரை நிகழ்த்தினார்.

டத்தோ பழனிவேலின் நன்றி கலந்த கோரிக்கை உரையை உன்னிப்பாக டத்தோஸ்ரீ நஜிப் கவனிக்க தொடங்கி இருந்தார்.

டத்தோஸ்ரீ பழனிவேலின் சில முக்கிய கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த பேராளர்கள் தங்கள் ஆதரவு கரவொலியை அவ்வப்போது எழுப்பி டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு ஊக்கம் கொடுத்த வண்ணம் இருந்தனர். “உங்கள் தலைமைத்துவத்தில் இந்திய சமுதாயம் மாற்றத்தைக் காணும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சிலர் பேசுவதில் வல்லவர்கள். செயலில் சாதிக்க முடியாதவர்கள். நீங்கள் இரண்டிலும் வல்லவர்”. என்று டத்தோஸ்ரீ பழனிவேல், டத்தோஸ்ரீ நஜீப்புக்கு புகழாரம் சூட்டியபோது வர்த்தக வாணிப அரங்கமே மகிழ்ச்சி ஆரவாரத்தால் அதிர்ந்தது.

டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இந்திய சமுதாய முன்னேற்றத்திற்காக முன் வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு;

* தமிழ்ப்பள்ளிகளின் வசதி, தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் பல்கலைக்கழக வாய்ப்புகள் ஆகியவற்றில் ஒவ்வொரு மாணவனுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
* அண்மையில் அறிவிக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு ஏற்ப நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்கு ஈடான வசதிவாய்ப்பு, பாடத் திட்டம், போதனா முறை என்பன தமிழ்ப்பள்ளிகளிலும் விரைவாக ஏற்படுத்தப்படுவதை உறுதி செய்ய வருடத்திற்கு 350 மில்லியன் வெள்ளி ஒதுக்கவேண்டும்.
* 2013-ஆம் ஆண்டு முடிவதற்குள் நாட்டிலுள்ள 85 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகள், பாலர் பள்ளிகள் கொண்ட பள்ளிகளாக இருக்க வேண்டும்.
* இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் அடைவு நிலை உயர, தங்கும் வசதி கொண்ட பள்ளியை உருவாக்க வேண்டும்.
* பின்தங்கிய மாணவர்கள் அடைவுநிலையை மேம்படுத்த 6 மில்லியன் ரிங்கிட் 25 பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எஞ்சியப்பள்ளிகளுக்கும் விரிவ��ப்படுத்த 10 மில்லியன் வெள்ளி ஒதுக்கவேண்டும்.
* எஸ்.பி.எம் தேர்வில் மூன்றுபாடங்களில் தேர்ச்சிபெற்ற 500 இந்திய மாணவர்களுக்கு நாட்டிலுள்ள போலிடெக்னிக் கல்லூரிகளில் வாய்ப்பை ஏற்படுத்தி பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டம்வரை படிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும்.
* 3,000 வெள்ளிக்கும் கீழ் வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து மலேசியர்களுக்கும் பிரிம் (BR1M) திட்டத்தைப் போன்று இலவச காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்தவேண்டியதுடன் இக்காப்புறுதி இறப்பு மற்றும் மருத்துவ இழப்பீட்டை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
* ஒரு குடும்பம், ஒரு தொழில் முனைவர் என்ற திட்டத்தின் மூலம் இந்தியக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 40 மில்லியன் ஒதுக்க வேண்டும்.
* இந்தியர்கள் கலை, புத்தாக்கம், கணிதம், ஆங்கிலம், விளையாட்டு ஆகியவற்றில் கொடிகட்டிப் பறந்த தருணத்தை மீண்டும் கொண்டுவருவதற்காக 10 மில்லியன் வெள்ளி ஒதுக்கவேண்டும்.
* சிறுதொழில் வணிகர்கள் மாதத்திற்கு 8 ஆயிரம் வெள்ளி வணிகம் செய்கிறார்கள். இவர்களின் மாத வருமானத்தை 20,000 வெள்ளிக்கு உயர்த்த கடனுதவியாக 1 லட்சம் வெள்ளி வழங்க வேண்டும்.
* இளையதலைமுறை அடுத்த வணிக தலைவர்களாக உருவாக்க அரசாங்கம் 10 மில்லியன் வெள்ளியை சமூக வியூக அறவாரியத்திற்கு (YSS) ஒதுக்க வேண்டும்.
* பூமிபுத்ரா சமூகம் பொருளாதார இலக்கையடைய அரசாங்கம் ஏற்படுத்திய திட்டத்தைப்போல் இந்திய சமூதாய நலனுக்காக அரசாங்கம் அவ்வாறான திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
* இந்தியர்களுக்கான அரசாங்க வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு நியாயமான பதவி உயர்வு வாய்ப்புகளையும் வழங்கவேண்டும்.

“எங்களின் இத்தனை கோரிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்களானால், இந்திய சமுதாயத்தின் வாக்குகளை தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு கொண்டு வருவோம்” என்று உறுதிமொழி கூறுவோம் என்று கூறிய டத்தோஸ்ரீ பழனிவேல் விட்டா போதுமடா சாமி என்று தன் உரையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அடுத்து ம.இ.காவின் வரலாறு, காணொளியாக பேரவையில் ஒளிபரப்பப்பட்டது. ம.இ.கா-வை தோற்றுவித்த முதல் தலைவர் ஜோன் தீவியிலிருந்து ஒவ்வொரு தலைவராக அவர்கள் மக்களுக்கு ஆற்றியத் தொண்டு அக்காணொளியில் விவரிக்கப்பட்டது.

ம.இ.கா-வின் ஐந்தாவது தலைவரான வீ.தி சம்பந்தனின் பெயர் திரையில் வரும்போது அரங்கம் கொஞ்சம் தீவிரமடைந்தது. ம.இ.கா-வின் ஆறாவது தலைவர் மாணிக்கவாசகத்தை அடுத்து ஏழாவது தலைவர் டத்தோஸ்ரீ சா. சாமிவேலுவின் படம் திரையில் காண்பிக்கப்பட்டபோது, அதுவரையில் பொறுமையாக இருந்த அரங்கம் கரவோசையிலும் விசில் சத்தத்திலும் அதிர்ந்தது.

பேராளர்களின் கரவொலிக்கு மதிப்பளிக்கும் வண்ணம் டத்தோஸ்ரீ சாமிவேலு எழுந்து நின்று கரம் கூப்பி ஏற்றுக் கொண்டார். மக்கள் மத்தியில் டத்தோஸ்ரீ யின் செல்வாக்கு இன்னும் உயிர்த்திருப்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியது.

காணொளியில் இறுதியாக தற்போது ம.இ.கா தலைவர் பதவியில் இருக்கும் டத்தோஸ்ரீ பழனிவேலை திரையில் காண்பிக்கையில் பேராளர்கள் மகிழ்ச்சி கரகோஷம் எழுப்பினர். அதனை அடுத்து சிறப்புரையாற்றியப் பிரதமர் நஜிப் இப்பேரவைக்கு தம்மை அழைத்தமைக்காக ம.இ.காவின் தேசியத் தலைவருக்கு நன்றி கூறிக்கொண்டார்.

கடந்த வாரத்தில் இதே இடத்தில் அம்னோ நடத்தியப் பேரவையிலும், அதன் பிறகு பி.பி.பி நடத்திய மாநாட்டிலும், இப்போது நடந்து கொண்டிருக்கும் ம.இ.கா பேரவையிலும் மக்களின் ஆதரவு உற்சாகம் அளிக்கக்கூடியதாக உள்ளது என்று பிரதமர் கூறிமுடிப்பதற்குள் அரங்கம் பலத்த கைதட்டலை எழுப்பியது. (அட போங்கப்பா, நீங்கள் எல்லாத்துக்கும் கை தட்டி பிரதமரையே குழம்ப வைச்சுருவீங்க. அவர் இந்திய சமுதாயம் நல்லதா கெட்டாதானு தெரியாம முழிக்கிறார்)

தொடர்ந்து பேசிய பிரதமர் 2008-ஆம் ஆண்டு இழந்த வாக்கு வைப்புத் தொகையை இவ்வருடம் நிரந்தர வாக்கு வைப்புத் தொகையாக மாற்ற உறுதி செய்ய வேண்டும் என்று ம.இ.கா பேராளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியர்களின் நல்வாழ்வுக்கு ‘பாரிசான் நேஷனல்’ என்றும் துணை நிற்கும் என்று பிரதமர் கூறும் போது அனைவரும் எழுந்து நின்று ‘I LOVE PM’ என்றப் பதாகையைக் காட்டி தங்களின் வற்றாத ஆதரவைத் தெரிவித்தனர்.

(ஆனால், சும்மா சொல்லக்கூடாது. பேச்சின் ஊடே இரட்டை அர்த்தத்தில் கலந்து பேசுவதில் நம் பிரதமரை மிஞ்ச ஆள் இல்லை போங்க) டத்தோஸ்ரீ நஜிப் தன் உரையை முடித்தப் பிறகு, அவருக்கும் டத்தோஸ்ரீ ச. சாமிவேலுவிற்கும் மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. தொடர்ந்து டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் கைவண்ணத்தில் உருவான ‘வில்லை’யை அவரே பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு அணிவித்தார். இந்த வில்லையில் சிறு சிறு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு எரியவிடப்பட்டிருந்தன.

பிரதமரின் சட்டையில் அவ்‘வில்லை’யை அணிவித்த தருணம் அனைத்துப் பேராளர்களும் தங்கள் சட்டையில் அணிந்திருந்த ‘வில்லை’யை முடுக்கிவிட்டனர். இதோடு ம.இ.கா பேரவையின் முதல் பகுதி ஒரு நிறைவை அடைந்தது.

இப்பேரவையில் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது பிரதமர் சட்டையில் அணிவித்த அவ்‘வில்லை’ இறுதிவரை எரியவே இல்லை. மேலும், இப்பேரவையில் கலந்து கொண்ட பலர் அலுப்பின் காரணமோ என்னவோ அங்கேயே உறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் கைபேசியில் முகம் புதைத்திருந்தனர்.

அதை விடவும் ஒரு முக்கியமான கேள்வி என்னிடம் இருக்கிறது. அதாவது டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஏறக்குறைய 13 கோரிக்கைகளை மாநாடில் முன் வைத்தார். ஆனால் பிரதமர் எத்தனை கோரிக்கைகளை நிறைவேற்றப்போகிறார்? நான் ஏன் இதை கேட்கிறேன் என்றால், கோரிக்கைகளை பற்றி பிரதமர் சபையில் எதையும் தெளிவாக பேசவில்லையே. ஒரு வேளை தேர்தல் முடிந்த பின்பு தெளிவாக ஏதாவது பேசுவாரோ! காரணம் என்னவென்றால் எதிர் கட்சியை தாக்கி பேசுவதில் இருந்த வேகமும் அக்கரையும் கோரிக்கைகளில் காட்டவில்லையே.

எனக்கு எதுக்கப்பா அரசியல். நான் வெறும் நிருபர். இதுக்கு மேல் மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768