|
'ஏ' க்களும் ஏக்கங்களும்

"அம்மா நான் பாசாயிட்டேன்" என்று தமிழ்ப் பட பாணியில் தேர்வின் முடிவை
எடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்து பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டிய
கட்டாயம் நம் மாணவர்களுக்கு இல்லை. காரணம் நிருபர்கள் காமிராக்களைத்
தூக்கிக்கொண்டு பள்ளிகளுக்கும் வீடுகளுக்கும் ஓடிச்சென்று வெற்றி பெற்ற
மாணவர்களையும் அவர் குடும்பத்தினரையும் பத்திரிகைகளில் படம் பிடித்துப்
போடுவதால் அந்த கோலிவூட் 'ஸ்டைல்' பயன்படாத ஒன்று.
மாணவர்களின் மதிப்பெண் சிட்டைகளை கையில் பிடிக்கச் சொல்லி பெற்றோர்கள்
அவர்களின் கண்ணத்தில் முத்தமிடும் பாவனையைச் செய்யச் சொல்லி, நிருபராக
மட்டுமல்ல நல்ல இயக்குனராகவும் இருந்து அவர்களை 'நடிக்க வைத்து' படம்
பிடித்து பத்திரிகையில் போடுவது நிருபர்களுக்கு கை வந்த கலையாகிவிட்டது.
யூ.பி.எஸ்.ஆர் முதல் பல்கலைக் கழக தேர்ச்சி முடிவுகள் வந்ததுமே
அனைத்திற்கும் இதே பஜனைதான்.
தமிழன் சாதனையை பறை சாற்றவோ அல்லது பத்திரிகையில் முகம் காட்டிய
மாணவர்களைச் சார்ந்தவர்கள் பத்திரிகையை வாங்குவார்கள் என்ற வியாபார
யுக்தியின் காரணமாகவோ தமிழ்ப் பத்திரிகைகள் இதுபோன்ற செய்திகளுக்கு அதி
முக்கியத்துவம் தரலாம். வருடா வருடம் தேர்ச்சி முடிவுகள் வரும்போதெல்லாம்
இதுவே வெளியாகிவிட்டது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு.
வண்ண வண்ணப் படங்களைக் கொண்டு பக்கங்களை நிரப்பி தேர்ச்சி எழுதிய அனைத்து
இந்திய மாணவர்களும் வாழ்கையில் வெற்றி பெற்று விட்டதான தோற்றத்தைக்
காட்டுகிறார்களே தவிர, மாணவர்களின் அடைவு நிலையை தேசிய அளவில் ஒரு அலசு
திறன் கொண்டு செய்தியைப் படைப்பதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.
கல்வி இலாக்கா அதிகாரிகள் நிருபர்களை அழைத்து சந்திப்புக் கூடத்தில்
பள்ளிகளின் அடைவு நிலைகளையும் மாணவர்களின் அடைவு நிலைகளையும் பற்றி
விளக்கங்கள் கொடுத்தப் பின்னர்,மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த
மாணவர்களுக்கு சிறப்பு செய்து அங்கீகரித்து வருகிறது.பெரும்மான்மையான பிற
மொழிப் பத்திரிகைகள் இந்த செய்திகளை மட்டுமே பதிவாக்கி பிரசுரம்
செய்கின்றன.ஆனால் நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை," சார் என் பையனுக்கு 7A
பத்திரிகையில் செய்தி போடவேண்டும் என்று நிருபர்களைக் கேட்டுக் கொள்ளும்
பெற்றோர்களும் உண்டு... பெற்றோருக்கு மகன் சிறந்த தேர்ச்சி எடுத்துவிட்டான்
என்று தெரிந்து விட்டது.கல்வி இலாக்காவுக்கும் தெரிந்து விட்டது. இனி
யாருக்குத் தெரியவைக்க நிருபர்களைத் தேடுகிறார்கள் என்று புரியவில்லை.
அடுத்த கட்ட நகர்வு எவ்வளவு சிரமமான பாதையைக் கொண்டிருக்கும் என்பதில்
கவனம் செலுத்தினால் தற்கால வெற்றியைப் பெற்றிருக்கும் மாணவனுக்கு நிரந்தர
வெற்றிக்கான வழியைக் காண முடியும்.
'ஏ' ஒன்றுதான் ஒரு தனிமனிதனின் அல்லது குடும்பத்தின் சமூகப் பொருளாதார
வெற்றியா? இவர்களின் பெற்றோர்கள் மட்டும்தானா தங்கள் பிள்ளைகளின் படிப்பில்
முழு கவனம் செலுத்தியவர்கள், அல்லது பொறுப்புள்ள பெற்றோர்கள் என்று
அங்கீகரிக்கக் தகுதி உடையவர்கள்? 'சி' பெற்ற மாணவர்கள் கையாலாகதவர்களா?
இவர்களின் பெற்றோர்கள்
பொறுப்பற்றவர்களா? இவர்களின் முகம் பத்திரிகையில் வர தகுதியற்றதா? ஆரம்ப,
இடைநிலைத் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்றவர்கள் எத்தனைப் பேர் அரசாங்கப்
பலகலைக் கழகத்தில் காலடி வைக்கின்றனர்? இன்று பல்கலைக் கழகத்தில்
பேராசிரியர், முனிவர்கள் என்று அமர்ந்திருக்கும் கல்விமான்கள் அனைவரும்
7A-வின் உற்பத்திகளா?
மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் யாவரும் 7A
பெற்று முன்னுக்கு வந்தவர்களா? இதனால் 7A எடுக்கும் மாணவர்களின் எதிரி
என்று என்னை நினைத்து விடாதீர்கள். நான் சொல்ல வருவது சிறப்பான புள்ளிகளை
எடுக்காத மாணவர்களையும் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன்.
நம் சமுதாயத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் உளவியல் கூறுகளின்
அடிப்படையைக் கவனிக்கத் தவறிவிடுகின்றன. ஐ.கியூ எனப்படும் மதிநுட்ப ஈவு
அடிப்படையில்
மாணவர்களின் புத்திக் கூர்மை ஒவ்வொரு மாணவர்களிடையே வேறுபாடும்.
அதுமட்டும்மல் சில மாணவர்கள் சிறு பிராயத்தில் மெதுவாக கிரகிக்கக் கூடிய
தனமையைப் பெற்றிருப்பார்கள்.ஆனால் வளர வளர அவர்களின் கிரகிக்கும் தன்மை
சக்தி அடைய வாய்ப்புண்டு என்று கல்வி உளவியல் வல்லுனர்கள் செப்பியுள்ளனர்.
இதன் அடிப்படையில் ஏ எடுத்த மாணவர்கள் எல்லாரும் வெற்றிப் பெறுவார்கள்
என்பது திண்ணம் இல்லை. சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தோல்வியுருவார்கள்
என்று சொல்வதற்கும் இங்கு இடமில்லை. இங்கே இரு சாராரும் வெற்றி பெறும்
வாய்புகள் பிரகாசம். இருந்தாலும் நமது சமுதாயப் பார்வை ஒரு பக்கமாகவே
பார்ப்பதாலும், அவர்களை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவதினாலும்
பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனம் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்களின் மனமும்
பாதிக்கப்பட்டு இவர்கள் என்னமோ ஒதுக்கப்பட்டவர்களாக நடத்தப்படுகிறார்கள்.
பள்ளிகளும் இன்று வேலைக்குத் தயார் செய்யும் மனிதர்களை உற்பத்தி செய்யும்
தொழிற்சாலைகளாக மாறிவிட்டன.
இன்று நாட்டின் தொழில்நுட்ப நிபுணத்துவ குறைபாட்டிற்கு அன்னியரை நம்பி
நிற்கிறோம். முதல் தர அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கும் மலேசியாவின்
குறைபாடே மூன்றாம் தர சிந்தனைத் தன்மைதான். பல்கலைகழகங்கள்,தொழில் நுட்பக்
கல்லூரிகள் பலவிருந்தும் சிறந்த மனித வளத்தைப் பெருக்க தடுமாறிக்
கொண்டிருக்கும் நாம், தொட்டதெற்கெல்லாம் பணத்தை முன் வைத்து, வாய்ப்பையும்
தகுதியையும் பின் வைத்துப் பார்பதாலேயே வேலை வாய்ப்பு பிரச்சினைகள்
மேலோங்கி நிற்கின்றன.
படித்தவனுக்கு வேலை கிடைக்க கஷ்டமென்றால் வேலையை உருவாக்க வேண்டும். இதற்கு
ஏ தகுதி தேவையில்லை. மன வலிமையே மூலதனம்.
இந்த மனவலிமையைத் தான் நம்முடைய கல்வி நம் பிள்ளைகளுக்குத் தர தவறி
விட்டது. மனவலிமை உடையவன் தோல்வியையும் அனைத்துக் கொண்டு பயணத்தைத்
தொடருவான். இது இல்லாதவன் குண்டர் கும்பல், போதை கடத்தல், மனிதக் கடத்தல்
என்று தம்முடைய பாதையை மாற்றி கொண்டு தீவிரமாகச் செயல்படுவான்.
மாணவப் பருவத்தில் சி எடுத்ததால் பத்திரிகையில் முகத்தை போடத் தவறிய தமிழ்
பத்திரிகைகள் குற்றச் செயலில் மாட்டிக் கொண்ட நம் இந்தியர்களின் படத்தை
முதல் பக்கத்தில் நீயா நானா என்று முண்டியடித்துக் கொண்டு பிரசுரம்
செய்வார்கள். சாவு வீட்டில் ஒப்பாரி வைக்கும் முகங்களுக்கு முதலிடம்
கொடுத்துப் பழகிய இவர்களை நாம் மாற்றவா முடியும்? அவர்களாகவே சிந்தனை
மாற்றத்தை கொண்டு வந்தாலொழிய.ஆனால் இன்று நிலைமை இதற்குச் சாதகமாக இல்லை.
பிள்ளைகளின் உள்ளத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்
பாடத்திட்டத்திற்கும், பணத்தின் வலிமைக்குமே கவனக்குவிப்பு அதிகமாக உள்ளது.
கல்வியில் சாதாரண நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும்,அவர்களின்
பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து குறிப்பிட்ட மாணவனின்
குறைகளைக் களையலாம்.
அனைவரையும் படைத்த இறைவன் அனைவருக்குள்ளும் சக்தியை வைத்துத்தான்
படைத்துள்ளான்.அந்த சக்தி ஆக்ககரமான சக்திக்குப் பயன்படப் போகிறதா அல்லது
வெட்டுக் கத்திக்குப் பயன்படப் போகிறதா என்பது நம் கையில்தான் உள்ளது.
இங்கே படித்தவன் படிக்காதவன் என்று கூறுவதை முதலில் நிறுத்தவேண்டும். தன்னை
உணர்ந்தவன் உணராதவன் என்பதைத்தான் இவர்களுக்கு நாம் உணர்த்தவேண்டும். இதை
ஒவ்வொருவனும் உணர்ந்தால் வாழ்க்கை கலையில் சிறந்து விளங்க முடியும்.
இவர்கள் போகும் போக்கில் பத்திரிகைகளும் சென்று கொண்டிருப்பதுதான்
வருத்தமளிக்கிறது. தேசிய அளவில் எத்தனை மாணவர்கள் சோதனை எழுதினார்கள்?
எத்தனை மாணவர்கள் அணைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சிப்
பெறாத மாணவர்களின் நிலை என்ன? என்று பல கோணங்களில் புள்ளி விவரங்களோடு
செய்திகளைச் சேகரித்தால் வாசகர்களுக்கும், பொதுவாக சமுதாயத்துக்கும்
தகவலையும் உண்மையை நிலையையும் எடுத்து இயம்பும். இதனால் தமிழ்ப்
பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது குறைந்து விடும் என்று கூறுவதற்கும்
இல்லை. தமிழ்ப் பள்ளிகள் கல்வி போதனா தரத்தில் பிற பள்ளிகளைக் காட்டிலும்
உயர்ந்து நிற்குமானால் பிற இனத்தவரும் நம் பள்ளிகளுக்கும் பயில வருவார்கள்
என்பதை நம்புங்கள்.
|
|