|
தமிழனைவிட தமிழ் அதிகம் பெருமையுடையது என்று
இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. ஏன் இத்தகைய முரண்பாடு என்பதை
யாராவது சமூகவியல் மாணவன் முனைவர் பட்டத்திற்குத் தலைப்பாக
எடுத்துக் கொள்ளலாம். சமகாலத்தில் சீரழிந்த அரசியலால் தமிழக
வாழ்வும், தொடர்ந்து நிழலைப்போல் துரத்திவரும் போரால் ஈழத்தமிழ்
நிலையும் இப்படி நான் நினைத்ததற்கு தர இயல்கிற பல சான்றுகளின் சில
உதாரணங்கள். இத்துணை எதிர்மறையான சூழலிலும் தமிழனின் மாபெரும்
சாதனைகளாக, தமிழ் இலக்கியங்களையே துணிந்து சொல்லத் தோன்றுகிறது.
தமிழ் இலக்கியத்திற்குத் தமிழர்கள் மட்டுமே பங்களிப்பு
செய்திருக்கின்றனர் என்பதில் உண்மையில்லை. வீரமாமுனிவர் தொடங்கி
(பரமார்த்த குரு கதைகள்) தமிழ் புதுக்கவிதைகளின் ஸ்தாபகர் என
வர்ணிக்கப்படும் ந.பிச்சமூர்த்தி, கு.பா.ரா என தொடர்ந்து எண்பது
களில் தமிழுக்கு அற்புதமாக, அடர்த்தியான கவிதைகளை வழங்கிவிட்டு
மின்னலை போல வெருட்டென மறைந்து விட்ட ஆத்மாநாம் வரை தமிழன் அல்லாத
தமிழுக்கு இலக்கிய கொடை வழங்கிய இலக்கியவாதிகள் பலர் .இவர்களைப்
போன்று தமிழ்ச் சிறுகதைக்கு நுட்பமான, அசாத்திய பரிமாணத்தையும்
வழங்கிய அசோகமித்திரன் முக்கியமானவர். (இவரை நினைக்கும் போது
எழுத்தில் அசோக மித்திரன் நிழலை போன்ற திலீப்குமாரை மறக்க
இயலுமா!?)
நவீன இலக்கியம் பரிச்சயமான ஆரம்பத்திலேயே எனக்கு அசோகமித்திரனைத்
தெரியும். ஆனால் அவர் படைப்புகளைப் படிக்காமல் இருந்ததற்கு இரண்டு
காரணங்கள். ஒன்று, என்னிடம் அன்று உச்சியிலிருந்த பிராமணீய
எதிர்ப்புணர்வு. தமிழனின் எல்லாத் தாழ்வுகளுக்கும் பிராமணர்களே
காரணம் என்று முழுமையாக நம்பி, பேசிக் கொண்டிருந்தேன். (இதனாலேயே
தி.ஜானகிராமனையும் படிக்காமல் இருந்தேன்.) ஆனால் நவீன
தமிழிலக்கியத்தின் ஆரம்பம் முதற்கொண்டு மாபெரும் சாதனையாளர்கள்
பெரும்பாலோர் பிராமணர்களே என்பது மறுக்க முடியாத உண்மை. மணிக்கொடி
ஸ்தாபகர்களில் புதுமைப்பித்தனைத் தவிர மற்றவர்கள் அனைவருமே
பிராமணர்கள். இவர்கள் பிராமணியத்தை தங்கள் எழுத்து களில் உயர்த்தி
பிடித்தவர்களல்ல. மாறாக, பிராமணியத்தின் நலிவை, மனிதத்தன்மைக்கு
எதிரான குணங்களை அற்புதமாகத் தங்கள் கதைகளில் பதிவு செய்திருப்பதை
கூர்மையான வாசகன் நிச்சயம் தவற விட மாட்டான்.
இரண்டாவது காரணம், மலேசிய வாசகர்களுக்கேயுரியது. இவர் இக்கதையின்
மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை அப்பாவித்தனமாக கேட்பது.
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வாசிப்பின் முக்கிய
காரணங்களில் ஒன்று சுவாரஸ்யத்தன்மை. அதற்கடுத்ததுதான் விஷயம். ஒரு
பிரதியைப் படித்ததும், நேரடியாகச் சொல்லப்பட்ட கருத்துக்கள்
ஒருபுறம். பிரதியினூடே மௌனமாக்கப்பட்ட கருத்துக்கள் மறுபுறம்.
பெரும்பாலும் சாதாரண வாசகர்கள் நேரடியான கருத்து களோடு தங்கள்
வாசிப்பை முடித்துக் கொள்கிறார்கள். கூர்மையான வாசகனே பிரதியின்
ஆன்மாவில் தொடர்ந்து பயணித்து உண்மையை கண்டு கொள்ள முயல்கிறான்.
நவீன எழுத்துக்கள் இப்படித்தான் இருக்கின்றன. அதனால்தான் சாதாரண
வாசகன் புரியவில்லை என்று இன்னும் புலம்பி கொண்டிருக்கிறான்.
அசோகமித்திரனின் எழுத்து களை ஆரம்பத்தில் படித்தபோது, சாதாரண
வாசகனாகத்தான் இருந்தேன்.
1931-ல் ஆந்திராவிலுள்ள சிக்காந்தரபாத்தில் பிறந்தவர்
அசோகமித்திரன். பள்ளியில் தமிழைப் பாடமாக படித்திருக்கிறார்.
சிறுவயதில் புதுமைப்பித்தனின் 'சித்தி' கதையை எதேச்சையாகப் படித்த
போது அதை எழுதியவர் புதுமைப்பித்தன்தான் என்பது கூட அவருக்கு
தெரியாது. ஆனால், அக்கதைதான் எழுத்துலகில் தானும் ஈடுபட முடியும்
என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் நிரம்ப புலமை
பெற்றவர். பி.எஸ்.சி வரை படித்த அவர், ஜெமினி ஸ்டூடியோவில் தொடர்பு
அதிகாரியாகச் சிறிது காலம் பணியாற்றியதோடு சரி. தன் வாழ்நாள்
பாதியை முழுநேர தமிழ் எழுத்தாளனாக வாழ்ந்திருக்கிறார். இதனால்
அவரும் அவர் குடும்பத்தாரும் பட்டிருக்க வேண்டிய அல்லலை நினைத்துப்
பார்க்க பயமாகத்தான் இருக்கிறது. இப்படித்தான் இருக்கும்,
இதற்கெல்லாம் நொந்து கொள்ளக் கூடாது என இயல்பாக அவரால் எடுத்துக்
கொள்ள இயல்வது இலக்கியமும் வாழ்வும் அவருக்களித்த கொடை. உலக சினிமா
பற்றி ஆழமான புரிதல் கொண்ட எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். சினிமா
சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகளைப் படித்தவர்கள் இதனை எளிதாக
உணர்வர். 1996-'அப்பாவின் சிநேகிதர்' என்ற அவருடைய நூலுக்குச்
'சாகித்திய அகாடமி' பரிசு கிடைத்தது.அவருடைய நூல்களாக 'தண்ணீர்'
'18-வது அட்சயக்கோடு', 'கரைந்த நிழல்கள்' போன்றவை பெரும்பாலான
இந்திய மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, ஆங்கிலத்திலும் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்திலிருந்தே அவரை தவிர்த்து வந்ததை முன்பு கூறினேன்.
'சுபமங்களா' தொகுப்பை படித்துக் கொண்டிருந்த போது கோமல்
சுவாமிநாதனே, "யாரோ அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவலை பெரிதாகச்
சிலாகித்திருந்தனர். சரி என்னதான் இருக்கிறது என படித்து
பார்த்தபோது இத்தனை நாள் இந்தக் கதையைத் தவறவிட்டதற்காக மிகவும்
வருந்தினேன். வீட்டை விட்டு வெளியேறி தனியே, ஆனால் ஏமாற்றப்பட்டு
வாழும் ஜமுனா, மற்று அவள் சகோதரி சாயாவை ஒட்டி கதை இருந்தது.
அந்நேரத்தில், அவர்கள் தங்கியிருந்த பகுதியில் ஏற்பட்ட தண்ணீர்
பிரச்சினை, அப்பகுதி மக்களின் வாழ்நிலையை எப்படியெல்லாம்
பாதிக்கிறது, என விரிகிறது நாவல். ஆனால் நாவலின் வளர்ச்சியில்
மனிதன் மெதுவாக இழந்துவரும் மனஈரத்தை மெதுவாய் உணர்த்துகிற போது
மனம் ஸ்தம்பித்து விட்டது. தண்ணீர் பற்றாகுறை வெளியில் மட்டுமல்ல
மனித மனங்களிலும் என அறைந்து சொல்லிய அற்புதமான நாவல் 'தண்ணீர்'.
அசோகமித்திரன் பெரும்பாலும் மத்தியதர மனிதர்களின் வாழ்வு
ஊடாட்டங்களை கதைகளாக்கியவர். வாசிப்பதற்கு எளிமையான நடை அவருடையது.
ஆனால், விஷயங்களை மறைமுகமாய் சொல்லிவிடுவது அவரது பாணி.
தொடர்வாசிப்பில் இவர் உலகத்தில் எளிதாக நுழைந்து விடலாம். அவருடைய
கதைகள் பெரும்பாலும், அடுத்த மனிதனின் மீதான அக்கறையும்,
அதிகாரங்கள் மீதான விமர்சனமும், புதிரான வாழ்வின் வசீகரத்தையும்
வேண்டி நிற்பதாக இருக்கிறது.
அவருடைய பெரும்பாலான சிறுகதைகள் மிகவும் நேர்த்தியாக, கலையம்சம்
மிகுந்த உணர்வோடு எழுதப்பட்டவை. அவருக்கு மிகவும் புகழை சேர்த்த
படைப்பாக 'புலிக்கலைஞன்', 'வாழ்விலே ஒரு முறை', 'திருப்பம்',
'அப்பாவின் சிநேகிதர்' என்று இன்னும் ஒரு 30 கதைகளைச் சொல்லலாம்.
அவருடைய கதைகளில் நிறைய கதைகள் எனக்கு மிகவும் உவப்பாக
இருந்துள்ளன. அவற்றில், 'திருப்பம்' என்ற சிறுகதை வெகுநாட்களுக்கு
மனதை விட்டு அகலாமல் இருந்தது. மல்லய்யா இடது கன்னத்தை தடவிய படி
உட்கார்ந்திருக்கிறான். 'இன்னிக்கி டிரைவிங் கத்துக்க போகலியா?'
அவன் அண்ணி கேட்கிறாள். அவனுக்குப் புரிந்துவிட்டது. இன்னும் அரை
மணி நேரத்திற்கு மேல் வீட்டில் இருக்க முடியாது. அப்போது பார்த்து
அவன் அண்ணன் வீட்டினுள் நுழைகிறான் 'இன்னும் போகலியா' என்று அவனும்
கேட்கிறான். இதற்கு மேல் வீட்டினுள் இருக்க இயலாது.ஆந்திராவில்
மாடு மேய்த்து கொண்டிருந்தவனை சென்னைக்கு அழைத்து ஆயிரம் ரூபாய்
கட்டி,அண்ணன்தான் செலவளிக்கிறான்.அண்ணன் பேச்சை மீற முடியுமா?அவன்
அண்ணி காய்ச்சிய கஞ்சி கசந்தது.அவனுக்குப் பசிக்கவேயில்லை.அவனுக்கு
டிரைவிங் கற்று கொள்ள ஆசையே இல்லை. அந்த மாஸ்டரை நினைத்தாலே
அவனுக்கு குலை நடுங்குகிறது.
சாலையில் நடக்கிறான். முச்சந்தி வருகிறது. இடது புறம் சென்றால்
டிரைவிங் கிளாஸ். வலது புறம் மாம்பலம். நேரே சென்றால் ஒரு கோயிலும்
குளமும் இருக்கிறது. அங்கே எருமை மாடுகளை குளிப்பாட்டி
கொண்டிருப்பார்கள். இறந்தவர்களுக்குக் காரியம் செய்து
கொண்டிருப்பார்கள். இறந்தவர் மீதுள்ள மரியாதையைத் தவிர வேறெந்த
காரணத்திற்கும் அக்குளத்தில் கால் வைக்க எருமை மாடு மட்டும்தான்
சம்மதிக்கும். அங்கு சென்று உட்கார தோன்றுகிறது. மல்லய்யா இடது
புறம் திரும்பி நடக்கிறான்.
வழியில் அவனோடு டிரைவிங் பழகும் நாகராஜனை சந்திக்கிறான்.
நாகராஜனின் இடது கன்னமும் வீங்கி இருக்கிறது. இருவருமாக மாஸ்டரின்
வீட்டை நோக்கி நடக்கின்றனர். வீட்டை அடைந்ததும் காரை கழுவி,
தண்ணீர் விட்டு சுத்தம் செய்கிறான் மல்லய்யா. தாமதமாக வந்ததற்கு
மாஸ்டர் கோபித்துக் கொள்கிறான். இன்று டிரைவிங் தார் சாலையில்
என்று சொல்லியிருந்தான் மாஸ்டர்.
தார் சாலையை அடைந்ததும், மல்லய்யாவை முதலில் ஓட்ட பணிக்கிறார்
மாஸ்டர். மல்லய்யாவிற்கு ரத்தமெல்லாம் உறைந்து போனது போல
இருக்கிறது. முதல் கியரை போட்டு கிளாட்சை வேகமாக விட்டதும் வண்டி
நின்றுவிடுகிறது. மூன்றாவது முறையும் வண்டி நின்றுவிடும்போது,
மாஸ்டரின் கைகள் அவன் தலையைப் பதம்பார்க்கத் தொடங்கியிருந்தன.
கைகள் ஸ்டேரிங்கை பிடித்திருப்பதால், மல்லய்யாவால் தடுக்க
முடியவில்லை. 'வெளியே போடா' மாஸ்டர் சொல்ல, நாகராஜன் முன் வந்து
அமர்கிறான்.
பின்னால் அமர்ந்ததும் மல்லய்யாவிற்குக் கண்கள் சுழன்று கொண்டு
வந்தது. நாகராஜன் கொஞ்சம் பரவாயில்லை. முதல் கியரை தாண்டி,
இரண்டாவது கொஞ்சம் உதைத்தாலும் மூன்றாவது, நான்காவது என்று சுலபமாக
ஓட்ட ஆரம்பித்து விட்டான். ஆனால் அவனுக்கும் சனியன் பேருந்து
வடிவில் வந்தது. பேருந்திற்கு நேராக வண்டியை கொண்டு சென்றான்.
மாஸ்டர், ஸ்டேரிங்கை திருப்பி ஓரத்திற்குக் கொண்டு சென்றான்.
வண்டி நின்றதும் நாகராஜனுக்கும் சராமாரியாக அடி விழத் தொடங்கியது.
இருந்தும் பாதி அடிகளை கையினால் தடுத்துவிட்டான் நாகராஜன். மாஸ்டர்
இருவரையும் கண்டமேனிக்குத் திட்ட தொடங்கியிருந்தான்.
மாஸ்டர் வண்டியை ஓட்டி சென்று ஒரு கடைக்கு முன் நிறுத்தினான்.
நாகராஜனும், மாஸ்டரும் தேநீர் பருக உள்ளே சென்றனர். மல்லய்யா
காரையே பார்த்து கொண்டிருந்தான். மைதானமானாலும் பரவாயில்லை.
தார்சாலையை நினைத்தாலே பயம் முட்டிக் கொண்டு வந்தது. அவன் கியரையே
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்றும் முதல் கியரையே சரியாக
தாண்டாததை நினைத்ததும் துக்கம் முட்டிக் கொண்டு வந்தது.
மாஸ்டரும் நாகராஜனும் திரும்பி வந்தனர். மாஸ்டர் மீண்டும்
மல்லய்யாவை ஓட்ட சொன்னான். ஆச்சரியமாக மல்லய்யா முதல்
கியாரிலிருந்து வெற்றிகரமாக இரண்டாவது கியருக்கு சென்று விட்டான்.
அப்படியே மூன்றும், நான்கும். திடீரென்று மாடுகள் சாலையைக்
குறுக்கிடுகின்றன. காரை நிறுத்தி விடுகிறான் மல்லய்யா. மீண்டும்
சாவியை முடுக்குகிறான். இரண்டாவது கியரில் 'கிரீச்' சத்தம்
கேட்கிறது. மாஸ்டர் நிதானமாக 'அடுத்த முறை நடந்தால் கொன்று'
விடுவேன் என்கிறான். எங்கிருந்துதான் மல்லய்யாவிற்கு தைரியம்
வந்ததோ தெரியாது. "கொன்னுருங்க சார், அப்பா இல்ல, அம்மா இல்ல,
கொன்னுருங்க, யாரும் கேட்க மாட்டாங்க." துக்கம் அடைத்துக்
கொள்கிறது மல்லய்யாவிற்கு.
மாஸ்டர் திடீரென தன் குரலை குறைத்துக் கொள்கிறான். "நான் ஏன்டா
கன்னா உன்ன கொல்ல போறேன். டிரைவிங் கத்துகிட்ட என்றால் வேலை
கிடைக்கும். கல்யாணம் பண்ணலாம், சந்தோசமா இருக்கலாம்". சமாதானம்
கூறுகிறான்.
அதற்கு பின் மல்லய்யா காரை சரியாக ஓட்ட தொடங்கி விடுகிறான்.
குறுகலான சந்தையையும், நெரிசலான சாலையையும் அருமையாகச்
சமாளிக்கிறான். மல்லய்யா இறங்கும் இடம் வந்ததும் இறங்கி
கொள்கிறான். "நாளைக்கு டிரைவிங் கிளாஸ் வருவதானே" மாஸ்டர்
கேட்டதற்கு தலையாட்டி ஆமோதிக்கிறான். மல்லய்யாவிற்கு இப்போதுதான்
உயிர் வந்தது போலிருக்கிறது தனக்கு ஒரு நல்ல டிரைவர் வேலை நிச்சயம்
என நினைத்துக் கொள்கிறான். யார் சமைத்து போட்டாலும் வெறித்தனமாய்
உண்ணும் ஆசை அவனை அப்போது ஆட்கொள்கிறது.
பொதுவாக அன்பு கடமையின் பொருட்டு காட்டப்படும் போது அதிகாரமாக
மாறுவதை துல்லியமாக இக்கதை விளக்குவதாக எனக்கு தோன்றுகிறது. பணம்
கொடுப்பதால் அண்ணன் பேச்சை கேட்க வேண்டி இருப்பதும், டிரைவிங்
கற்று கொடுப்பதால் மாஸ்டர் வன்முறைக்கு ஆளாயிருப்பதும் நிச்சயம்
அன்பின் பாற்பட்டதல்ல. வெட்டி அரசியல் பேச்சு, மெகா சீரியல், தமிழ்
சினிமா போன்ற அதிமுக்கியமான விஷயங்களுக்கு பிறகு உங்களுக்கு நேரம்
இருந்தால் இக்கதையை படித்து பாருங்கள். உங்களுக்கும் ஏதாவது
தோன்றலாம்.
|
|