|
"நீங்கள் ஓவியம் வரைய பயின்றது யாரிடம்?",
என்று என்னிடம் கேட்பவர்களிடம் சொல்வதற்குச் சரியான பதில் என்னிடம்
இன்றளவும் இல்லை. நான் சந்தித்த ஓவியர்களிடமும் இந்தக் கேள்வியை
நான் கேட்டதில்லை.
ஓவியம் எனக்குள் எப்போது புகுந்துகொண்டது என்பது சரியாக நினைவில்
இல்லை. அப்பா ஓவியராக இருந்ததால் (அப்பாவுக்கும் வரையத்தெரியும்.
அவரிடமும் ஓவியம் பயின்றது யாரிடம் என்று நான் கேட்டதில்லை.) என்
ரத்தத்திலும் அது கலந்திருக்கலாம். என் பால்ய வயது வாழ்க்கை
சூழலும், நான் ஓவியனானதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
சில ஏக்கர் பரப்பளவைக்கொண்ட பால் மரக்காட்டின் நடுவில் தனி பலகை
வீடு எங்களுடையது. வீட்டைச்சுற்றி பசுமையாக இருக்கும். வீட்டிற்கு
முன்புறம் ஒரு வாழைமரமும் பப்பாளிமரமும் பின்புறம் ஒரு கொய்யா
மரமும் இருக்கும். பெருவாரியாக என் தேனீர் நேரங்கள் அந்தக் கொய்யா
மரத்துக் கிளைகளில்தான். அருகில் மலாய்க்காரர்கள் கம்பமும்
அதையொட்டிய வயல்களும் இருந்தன. எனது ஐந்தாவது வயதில்
வீட்டைச்சுற்றியிருந்த பால்மரக்காட்டை அழித்துவிட்டு புதிய
கன்றுமரங்களை நட்டு வைத்தார்கள். அதேபோல் பக்கத்து பால்
மரக்காடுகளும் அழிக்கப்பட்டு கன்றுகள் நடப்பட்டன. வீட்டைச்சுற்றி
கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெட்டவெளி பொட்டலாக இருக்கும். தட்டான்
பூச்சிகளையும் வெட்டுக்கிளிகளையும் விரட்டிக்கொண்டு
விளையாடிக்கொண்டிருப்பேன் அந்தப் பொட்டலில்.
நான் வாழ்ந்த பகுதியில் தட்டான்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக
அலையும். அவ்வளவு கூட்டமாக நான் இன்றுவரை தட்டான் பூச்சிகளைப்
பார்த்ததில்லை. தட்டான் பூச்சிகள் கூட்டமாக மொய்ப்பது ஒரு
மாயக்குடை நகர்ந்து செல்வதாய் கண்களுக்குப்படும்.அந்த மாய குடையை
நான் அணுகும் போதெல்லாம் சட்டென அவை கலைந்து காணாமல்
போய்விடும்.நூற்றுக்கணக்கில் சேர்ந்து பறக்கும் தட்டாண்
பூச்சிகளில் ஒன்றைக்கூட கைகளில்பிடிக்க முடியாதது ஆச்சரியமாக
இருக்கும். ஒவ்வொருநாளும் மாயக்குடை தோன்றி மறையும் காட்சியை
நானும் என் தம்பிகளும் ஆச்சரியமாகப் பார்த்துக்
கொண்டிருப்போம்.மாயக்குடை நிலையில்லாமல் திரிவதும் அவை தூரத்தில்
பிரமாண்டத்தையும் அருகில் சூனியத்தைக் கொடுப்பதாகவும் இருந்தது.
வீட்டுக்குச் சற்று தூரத்தில் சிறிய ஆறு ஒன்று
ஓடிக்கொண்டிருக்கும். அதனருகில் எங்கள் வீட்டு கிணறு. அந்தக்
கிணற்றையொட்டி வயல் ஒன்று இருந்தது. ரொம்ப நாளுக்கு முன்பு உழுது
அப்படியே விட்டுவிட்டதில் காடு மண்டி கிடக்கும். வயலைச்சுற்றி
அடித்திருந்த வேலியில் கொடிகள் வேலியே வெளியே தெரியாதப்படி
அடர்ந்து படர்ந்திருக்கும். மங்கிய சாயங்கால வேளை
கொடிகளுக்குள்ளிருந்து கூட்டம் கூட்டமாக மினுக்கெட்டான் பூச்சிகள்
வெளிபடும் அழகைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
தொலைக்காட்சி பார்ப்பதைப்போல் குடும்பமே அமர்ந்து
பார்த்துக்கொண்டிருப்போம்.
திகட்ட திகட்ட இந்தப் பசுமையோடு விளையாடி சுவாசித்து வளர்ந்த
சூழலால்தான் கலையின்பால் என் கவனம் சென்றது என தோன்றுகிறது.
|
|