|
கட்டிலின்
இருபக்கத்திலும் தாத்தாவும் பாட்டியும் உம்...உம்... கொட்டிக்
கொண்டு படித்திருக்க, நடுவில் உட்கார்ந்து, பஞ்சபாண்டவர் கதையையோ
அல்லது இராமயணத்தையோ, அபிமன்னன் சுந்தரி மாலையையோ அல்லது
காத்தவராயன் சுவாமி ஜெகதலப் பிரதாபன், மதனகாமராஜன் கதைப்
புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை, எங்கள் தோட்டத்து மின்விளக்குகள்
அணைக்கப்படுவது வரை, படித்துக் காண்பிக்க வேண்டிய கட்டாயம்
எனக்கிருந்தது என் எட்டாவது வயதிலேயே; தொடங்கியிருந்தது.
என் தாத்தா பாட்டிக்கு மட்டுமே; நான் கதை படித்துச் சொல்லிக்
கொண்டிருக்கவில்லை. அப்போது எங்கள் வீட்டில் எது பேசினாலும்,
இரண்டு பக்கத்திலும் இருக்கின்ற வீட்டாருக்கு ஒட்டுக் கேட்க
வேண்டிய அவசியம் இல்லாமலேயே தெளிவாகக் கேட்டுவிடும். நான் கதைப்
படிப்பதைக் கேட்பதற்கு, இரண்டு பக்கத்து வீடுகளிலும் கூட ஆளுங்க
தயாராயிடுவாங்க.
பாட்டியும் தாத்தாவும் தேர்ந்தெடுத்து வைத்திருந்த எல்லா
புத்தகங்களைப் பற்றியும் வரிவிடாமல் தெரிந்து வைத்திருந்தது எனக்கு
அந்த வயதிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இதில் இன்னொன்று,
என்னவென்றால் அவர்கள் இருவருக்கும் ஓரெழுத்தும் படிக்கத் தெரியாது.
ஊரில், பரசுராமன் தாத்தா, இவர்கள் இருவரும் மலாயாவுக்கு கப்பல்
ஏறிவந்தப்போ கொடுத்தனுப்பிய 'டிரங்குப்' பெட்டியில் வைத்துவிட்ட
சாமான்களோடு இந்தப் புத்தகங்களும் இருந்ததால் 30-40 வருஷங்களுக்கு
அப்புறமும் பத்திரமாக வைத்திருந்து, பேரன்கள் படிக்கக் கேட்டு,
பூரித்துப் போய் கிடந்தார்கள்.
படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார்களே! யொழிய அந்தக் கதைகளை
எப்படியெப்படி இராகம் போட்டுப் பாடவேண்டும் என்று அவர்கள் இருவருமே
தெரிந்து வைத்திருந்தது எனக்கும் சொல்லிக் கொடுத்திருந்தனர். புராண
இதிகாசக் கதைகளில் பெரும்பாலானவை கவிதை நடையில்
எழுதப்பட்டிருந்தமையால், யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமே,
இல்லாமல் இயல்பாகவே இராகம் போல அது வந்துவிடும்.
32 வீடுகள் மட்டுமே', கொண்ட சின்னஞ் சிறிய தோட்டமாக அது இருந்ததால்
ஒரு தடவ அம்மை நோய் அங்கிருந்த எல்லா வீடுகளில் உள்ளவர்களுக்கும்
அப்பியது.
அந்த சமயத்துல எனக்கு கெடச்ச கிராக்கிக்கு அளவே இல்ல.
சாயங்காலமானா, ஒவ்வொரு வீட்டுக்கும் போய் உட்கார்ந்து ஒரு மணி
நேரம் மாரியம்மன் தாலாட்டு பாடிக்காண்பிக்கனும். அதுவுமில்லாம,
வீட்டுல உட்கார்ந்து 'ராஜா தேசிங்கு' கத படிக்கும் போது, நெறய
பாட்டிக்க கத கேட்க வருவாங்க.
கத படிக்கும் போது, பகல்ல போட்ட ஆட்டத்துல களச்சிப்போயி, குளிச்சி,
பாடப்பொஸ்தகத்தப் பொரட்டறப்பவே; கோட்டுவா வந்துவிடும்.
எப்ப சாப்பாட்ட எடுத்து வப்பாங்க'ன்னு சொன்னா! கவனிச்சிக்கிட்டே
இருப்பான். அது முடிஞ்ச வொடனே; கத படிக்கச் சொன்னா! எப்படி
இருக்கும்? இருந்தாலும் படிப்பேன். படிச்சிக்கிட்டே இருந்தேன்!
ஒவ்வொரு புத்தகத்தையும் நான் படிச்சி முடிக்கும் போதெல்லாம்,
பாட்டி எனக்கு கண் திருஷ்டி பட்டிருக்கும் 'னு' சொல்லி,
ஆரத்தியெடுத்து சூடம்'லாம், சுத்திப் போடுவாங்க. அப்புறம்
நெத்தியில திருநீரெல்லாம் இட்டு, பயிரெல்லாம் அவிச்சி
வந்தவங்களுக்கும் எனக்கும் கொடுப்பாங்க.
அடுத்த பொஸ்தகம் ஆரம்பிக்க ஒரு வாரம் ரெண்டு வாரம் ஆயிடும்.
இடையில, சினிமாவுக்கெல்லாம் போய்ட்டு வந்திருப்பம்.
நெலாவுல, 'டொக்கு' 'பாரி', சடுகுடு வௌயாட்டு நடக்கும், அதயெல்லாம்
பார்க்கிதோட சரி. பங்கெடுக்குற ஆர்வமெல்லாம் கெடயாது. பகல்ல'ன்னா,
பந்து விளயாடறதுல ரொம்ப விருப்பம்.
ஒரு தரம், அப்பாவோட சாமானுங்கள வெச்சிருக்கிர அலமாரிய கொடஞ்சி
பாக்கிர சந்தர்ப்பம் கெடச்சிது. அங்க மூனு பொஸ்தகம் இருந்திச்சி.
ஒன்னு பேரு இரத்த தானம். இன்னொன்னு, ஜெமினி கணேசன் படம் போட்ட
'பெண்' படத்தோட கத வசனப் புத்தகம். அடுத்தது மோகன் விலாஸ் மர்மம்
துப்பறியும் நாவல்.
அப்பா, அலமாரியிலிர்ந்து மூணு புத்தகத்தையும் கௌப்பியாச்சு. இது
அப்பாவுக்கு தெரிஞ்சா உரிச்சி உப்பு தடவிடுவாரு. பாட்டிக்குத்
தெரிஞ்சா, தவடயிலயே இடிப்பாங்க. ராமாயணமும், மகாபாரதமும் படிக்கிற
பையனுக்கு 'கச்சடா' பொஸ்தகமெல்லாம் படிக்கலாமான்னு திட்டுவாங்க.
இப்ப என்னா பண்றது'ன்னு தெரியாம, அவங்களுக்கெல்லாம் தெரியாம இந்த
மூணு பொஸ்தகத்தையும் படிச்சுபுடனு'ம்னு ஆசை அதிகரிச்சிகிட்டே
இருந்துச்சி. பள்ளிக்கொடத்துல படிச்ச பையனுங்க பெரிய சார்கிட்ட
புடிச்சி குடுத்துடுவானுங்க.
இதுக்கு இப்ப எனன்தான் வழின்னு மண்டய உடச்சிக் கிட்டு
இருந்தப்பதான் ஒரு யோசன வந்து, தோட்டத்துல ஆடு ஓட்டிக்கிட்டு
போறவங்கள சினேகம் புடிச்சு ஒரு நாளக்கி ரெண்டு மூணு மணி நேரம்
ஒதுக்கி தனிமயில ஒக்காந்து மூனு பொஸ்தகங்களையும் படிக்க
ஆரம்பிச்சேன். இரத்த தானத்துல வர்ர பேருங்க எல்லாம் ரொம்ப
வித்தியாசமா இருந்துச்சி.
அன்பழகன், அன்பழகி, அறிவழகன், அறிவழகி, மதியழகன், மதியழகி' ன்னு
பேருங்க எல்லாம் ஒரே மாதிரியா இருந்திச்சி.
அதுல, அன்பழகன்ற பேரு எனக்கு ரொம்பவே புடிச்சி போயி, எனக்கு தம்பி
ஒருத்தன் பொறந்தப்போ, இந்தப் பேரையே அவனுக்கு வக்குணம்'னு சொல்லி
வற்புறுத்துனல, அப்படியே; அவனுக்கு வச்சிட்டாரு.
பெண் படத்தோட, கத வசனப் பாட்டுப் பொஸ்தகம் படிக்கிறதுக்கு ரொம்ப
நல்லாதான் இருந்தது. ரேடியோவுல கேட்ட 'நமதாண்டவன் ஆகாசமதில்
தூங்குகின்றாரே! ன்னு ஒரு பாட்டு அதுலதான் இருக்குதுன்'ன்னு
தெரிஞ்சி, அத மனப்பாடம் செஞ்சி, பள்ளிக் கொடத்துல பாடி, 'டோமினிக்
டேவசி "சார்" ஆரோக்கிய சாமி சார், சரோஜினி தேவி டீச்சர், சுந்தரேச
"சார் கிக் பாராட்டெல்லாம் வாங்கிட்டேன். மோகன விலாஸ் மர்மம், கத
தான் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது.
கணவனும் மனைவியும் கைக்குழந்தையோட போய் சினிமா பாத்துட்டு
வருவாங்க. வீட்டுக்கு வந்து சேர்ந்தவொடனே, மனைவிய காடிய விட்டு
இறங்கி வீட்டுக்கு போகச் சொல்லிட்டு, காடிய கொண்டு போய் 'ஷெட்டுல'
நிப்பாட்டிட்டு வந்துர்றே'ன்னு சொல்லிட்டுப் போன கணவருக்காக, மனைவி
அவுங்க பேரு, மரகதம் காத்திருக்காங்க.
ரொம்ப நேரமாயும், அவங்க கணவரு வராம இருக்க, பிள்ளய தொட்டில்ல
போட்டு தூங்கப் பண்ணிட்டு கணவர தேடிக்கிட்டு கார் 'ஷெட்டு' பக்கம்
போறாங்க. அங்க, அவங்க கணவர் கொலை செய்யப்பட்டு கெடக்குறத
பாத்துப்புட்டு கதர்றாங்க. கூவுராங்க...
அப்புறம் போலீசெல்லாம் வருது. கொலை செய்யப்பட்டவரோட மனைவியிடம்
துருவித் துருவி கேள்வியெல்லாம் கேட்கிறாரு, போலீஸ் இன்ஸ்பெக்டர்
துரைசிங்கம், ரெண்டு கழிச்சி, போலிஸ் அதிகாரிங்க கொலை
செய்யப்பட்டவரோட வீட்டுக்குவந்து, அவரோட மனைவி மரகதத்த கைது செஞ்சி
போலீஸ் வேன்'ல ஏத்திகிட்டு போறாங்க.
இதோட அந்த மோகனவிலாஸ் துப்பறியும் கத புத்தகத்துல, பக்கங்கள காணல.
கடசிப் பக்கத்த யாரோ கிழிச்ச எடுத்திட்டு இருக்காங்க. போலீஸ் ஏன்
மரகதத்த கைது பண்ணனும், சினிமாவுக்கு போயிட்டு வந்த கணவர் ஏன்?
யாரோ கொல பண்ணனும், மரகதம் தொட்டியில போட்டு தூங்கப் பண்ணிட்டு
வந்த அந்த குழந்த யோட நெல என்ன?
எதுவுமே! தெரியாம போயிடிச்சே! அந்த கதயோட கடைசிப் பக்கத்துல
இருக்கிற முடிவப் பத்தி தெரிஞ்சிக்க விடாம செய்த பாவிங்க யாரோ!
அவுங்க பேர்ல எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சி.
அப்பா நிச்சயமா அந்த வேலைய செஞ்சிருக்க மாட்டாரு. வேற யாருக்கோ!
படிக்க கொடுத்து அவுங்க அந்த வேலய செஞ்சிருக்கனும். இருந்தாலும்
எனக்கு அந்த மரகதத்த நெனச்சி ரொம்ப பாவமா இருந்துச்சி. இந்த அம்பது
வருஷமாவும் மரகதத்த பத்தின கவல மனசு ஓரத்துல இருந்துகிட்டுதான்
இருக்குது. இதப் படிக்கிற நேயர்கள்'ள யாராயிருந்தாலும் பரவாயில்ல.
மோகனவிலாஸ் மர்மம் படிச்சவுங்க, அந்தக் கதயோட முடிவ எனக்கு ஒரு
கடிதம் எழுதி தெரிவியுங்க. இல்லன்னா, அந்தப் புத்தகம்
இருக்கிரவங்க, இல்லன்னா மரகதத்தோட முடிவு என்னன்னு தெரிஞ்சிக்க
நான் தவிக்கிர தவிப்ப புரிஞ்சிகிட்டு புத்தகத்த அனுப்பி வச்சா,
நான் ஒங்களுக்கு ஒரு தொகைய வங்கியல சேத்திடுவேன்.
இதுல தொடங்குனதுதான் என்னோட நாவல் படிக்கிற பழக்கம். அதுக்கு
இன்னும் முடிவு வரல.
|
|