|
திருமணம் ஆவதற்கு முன்பும் பின்பும் பலமுறை
மலாயாவுக்கு வந்து போன அனுபவசாலி அண்ணாமலை. மீண்டும் சஞ்சியில்
மலாயா செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
"முன்புதான் என்னைப் பெத்தவுகளும் உங்களைப் பெத்தவுகளும் இருந்தாக.
இப்ப எல்லாரும் போய்ச் சேர்ந்துட்டாக. இப்ப இங்கே எனக்கு யாரு
இருக்கா? புள்ளையைக் கூட்டிக்கிட்டு நானும் உங்ககூடவே வந்திறேன்க!"
கண்ணைக் கசக்கினாள் மனைவி ஆவத்தா.
அட்டி சொல்லாமல் அவளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் அண்ணாமலை.
பெரிய மீனைப் பிடிக்க, சிறிய மீனைத் தூண்டிலில் கோர்த்துப் போடுவது
போன்று ஆள் கட்டும் கங்காணி, ஐந்து வெள்ளி மலாயாப் பணத்தைக்
கொடுத்திருந்தார். அது ஆவத்தாளின் சுருக்குப் பைக்குள் சுருங்கிக்
கொண்டது.
'ஓலைப் பெட்டி' என்று அழைக்கப்பட்ட பனை ஓலையால் செய்த சிறிய கூடை
நிறையக் கட்டுச் சோற்றுடன் அண்ணாமலையின் குடும்பம் மலாயாப்
பயணத்தைத் தொடங்கியது.
கப்பல் பயணிகள் அக்காலத்தில் இரண்டு வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.
கங்காணி கணக்கில் செல்லும் பாட்டாளிகளுக்கு, அவர்கள் மலாயாவில்
குறிப்பிட்ட தோட்டத்தைச் சேரும் வரை அனைத்துச் செலவும் இலவசமே.
ஆனால் கொஞ்சமும் சுதந்திரம் இருக்காது.
கப்பலை விட்டு இறங்கியவுடன் 'டிப்போக்' எனப்படும் நீண்ட தகரக்
கொட்டகையில் அடைத்து விடுவார்கள். அவர்கள் செல்ல வேண்டிய
தோட்டத்தில் இருந்து வண்டி வந்து ஏற்றிச் செல்லும் வரை அவர்கள்
அந்தத் தற்காலிகச் சிறைக்குள்தான் அடைந்து கிடக்க வேண்டும்.
திருட்டுத் தனமாக தப்பியோடுபவர்கள் பிடிபட்டால், புகைக்
கூண்டுக்குள் போட்டு அடைத்தல், கசையடி போன்ற கடுமையான தண்டனைகளும்
அமுலில் இருந்தன.
வணிகம், மற்றும் சொந்தத் தொழில் செய்யச் செல்லும் பயணிகளும் உண்டு.
இவர்கள் ரொக்கம் எட்டு ரூபாய் கொடுத்து 'கப்பல் டிக்கெட்' எடுக்க
வேண்டும். எனவே இவர்களுக்கு 'ரொக்க ஆர்டர் பயணிகள்' என்ற பெயரும்
உண்டு. கப்பலை விட்டு இறங்கியதும் இவர்கள் சுதந்திரமாக எங்கும்
செல்லலாம்- தங்கலாம்.
ஆயிரத்துத் தொளாயிரத்து மூன்றாம் ஆண்டு. சனவரித் திங்கள் ஒரு நாள்.
இத்தகைய பயணிகள் நாகபட்டினம் துறைமுகத்தில் கப்பலுக்காகக்
காத்திருந்தனர்.
"ஓங்.... ஓங்....ஓங்..." என்று சங்கொலி எழுப்பி பயணிகளுக்கு
அழைப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது துறை முகத்தில் வந்து நின்ற
மயில் கப்பல்.
ஆங்கிலேயர்களால் 'MAIL' என்று அழைக்கப்பட்ட அக்கப்பல் நம்மவர்களின்
நாவில், 'மயில்' என்று திரிந்து போனதாகச் சொல்லப் படுகின்றது.
நாகபட்டினத் துறை முகத்தில் எக்காலத்திலும் கப்பல் கரையில் வந்து
ஒதுங்கி நின்றதில்லையாம். கரையில் இருந்து சுமார் ஒரு கல் தொலைவில்
தான் நிற்குமாம். அப்படித்தான் அந்த 'மயில்' கப்பலும்
நின்றிருந்தது.
இக்காலம் போன்று அக்காலத்தில் விசைப்படகுகள் பயன்படுத்தப்
படவில்லை. பரதவர் என்று அழைக்கப்படும் செம்படவர்களின் தோணிகளே
பயணிகளைக் கப்பலுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கும்.
இத்தோணிகள் பயணத்துக்காக அமைக்கப்பட்டவை அல்ல. எனவே பயணிகள்
அமர்வதற்கோ, பற்றிப் பிடித்து நிற்பதற்கோ எவ்வித வசதியும் அற்றவை.
இத்தோணிகள் ஏந்தலாக இல்லாமல் நத்தைக்கூடு போன்று குவிந்து, ஆழமாக
இருக்கும். நெஞ்சு வரிச்சு எலும்புகள் போன்று உட்பக்கம் நீண்ட
மரச்சட்டங்களே ஒட்டிக் கிடக்கும். அச்சட்டங்களைப் பற்றிப் பிடித்து
ஒட்டிக்கொண்டு பிள்ளைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளோடு பயணிக்கின்ற
பயணிகளின் நிலைமை, மிகப் பரிதாபமானது.
மேலும் இவர்களை, குண்டுச் சட்டிக்குள் போட்டு உருட்டுவது போன்று
உருட்டிக் கொண்டிருக்கும் நாகப்பட்டினக் கடலின் அலைகள்.
பலருக்குத் தலை சுற்றி வாந்தி வந்து விடும் சிலர் மயக்கமே
போட்டுவிடுவார்கள். இத்தகையப் படகுப் பயணத்துக்கு நான் முந்தி நீ
முந்தி என்று முண்டி அடித்து முன்னேறிக் கொண்டிருந்தனர் பயணிகள்.
இதுவரை கடலையே கண்டிராத அண்ணாமலை மனைவி ஆவத்தாளுக்கு அடிவயிறு
என்னவோ செய்தது.
"இந்தக் கடலையும் அலையையும் பார்க்கும்போதே ரொம்பப் பயமா
இருக்குங்க. பேசாம நாம நம்ம ஊருக்கே திரும்பி போயிடுவோம் வாங்க."
பொல பொலவென்று கண்ணீரைக் கொட்டிவிட்டாள் ஆவத்தா.
"அடி அசடே! நாம கங்காணி கணக்குலே வந்திருக்கிறோம். நாம திரும்பிப்
போக முடியாது. இந்த மாதிரி எத்தனை கப்பல் ஏறி இறங்கியிருக்கிறேன்
நான். புதுசுலே அப்படித்தான் இருக்கும். அப்புறம் சரியாப்
போயிடும். நான்தான் கூட இருக்கிறேனே. அப்புறம் ஏன் பயப்படுறே
சும்மா வா புள்ளே!"
எப்படியோ குடும்பத்தோடு படகுக்குள் இறங்கிக் கொண்டார் அண்ணாமலை.
படகு நகர்ந்தது. பரதவர்களுக்கு அன்று நல்ல வருமானம். எனவே
அவர்களின் 'ஐலேசா', முழக்கம் கடல் அலைகளோடு எதிரொலித்துக்
கொண்டிருந்தது. அந்த முழக்கத்துடன் அண்ணாமலை சென்ற படகும் கப்பலைத்
தொட்டு அணைத்து நின்றது.
அடுத்த நடை, பயணிகளைக் கொண்டு வர வேண்டும் என்ற வேகத்தில் "ஏறு!
ஏறு!" என்று முடுக்கிக் கொண்டிருந்தனர் பரதவர்கள். பயணிகள் ஏறத்
தொடங்கினர்.
படகின் மட்டத்தில் இருந்து கப்பலின் நுழைவாயில் சுமார் எட்டடி
உயரத்தில் இருந்தது. அந்த வாயிலில் இருந்து தடித்த கயிற்று
வடத்தால் ஆன நூலேணி படகுடன் இணைக்கப்பட்டிருந்தது.
பிள்ளைகளையும் மூட்டைமுடிச்சுகளையும் சுமந்தவாறே அந்த நூலேணியைப்
பற்றிப்பிடித்து, கழைக் கூத்தாடி போன்று ஆடி ஆடி அந்தக் கப்பல்
தாயின் வயிற்றுக்குள் நுழைந்துக் கொண்டிருந்தனர் பயணிகள்.
சுமைகளை முதுகில் இணைத்துக் கொண்டு ஒரு கையில் மகனைச் சுமந்தவாறு
ஏணியில் ஏறி கப்பலுக்குள் நுழைந்து விட்டார் அண்ணாமலை. சுமையை
அங்கொரு பக்கம் கிடத்தி, அதன் அருகில் மகனை அமர்த்திய அவர்,
விரைந்து நூலேணியின் மேல் முனையில் வந்து நின்றார்.
படகுக்குள் நின்று அண்ணாந்து பார்த்தாவாறே அழுது நின்றாள் ஆவத்தா.
"என்ன புள்ளே நீ! பன்னிரண்டு அடி உயர ஏத்துமரத்துலே ஆம்பளை மாதிரி
ஓடி ஓடி ஏற்றம் இறைச்சவள் நீ! இப்படியா பயப்படுறது? தைரியமா ஏறி
கொஞ்சம் மேலே வந்திடு. அப்புறம் நான் உன் கையைப் புடுச்சு
இழுத்துடுறேன். சும்மா ஏறு புள்ளே" குனிந்து நின்று இரண்டு
கைகளையும் நீட்டியவாறே மனைவிக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்
அவர்.
"பதினெட்டாம்படி கருப்பா! நீதான் காப்பாத்தணும்" வாய் முணுமுணுக்க,
நெஞ்சம் பட படக்க, கைகள் நடுங்க ஏறத் தொடங்கினார் ஆவத்தா.
நூலேணி வளைந்து நெளிந்து ஊஞ்சலாடியது. உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு எப்படியோ ஐந்து படிகளைத் தாண்டி ஆறாவது படியில் கால் வைத்து
விட்டாள் அவள்.
"...ம்...ம்..ம் வந்துட்டே! வந்துட்டே! இன்னும் ஒரு படி ஒரே ஒரு
படிதான் ஏறு... ஏறு..." பட படத்துக் கொண்டிருந்தார் அண்ணாமலை.
அந்த நேரத்தில் நாகபட்டினக் கடல் அலைக்கு என்ன கோபம் வந்ததோ
தெரியவில்லை. பேரலை ஒன்று வந்து படகை முட்டி மோதியது.
அவ்வளவுதான்! படகுடன் இணைக்கப்பட்டிருந்த நூலேணியின் கீழ் முனை
வெடுக்கென்று பிய்த்துக் கொண்டு வெளியே வந்து விழுந்தது.
கப்பலுக்கும் படகுக்கும் இடையில் அந்தரத்தில் ஊஞ்சலாடியது நூலேணி!
"ஏங்க!" அலறிய ஆவத்தா கைகள் இரண்டையும் மேல் நோக்கி உயர்த்திய
நிலையில் நிலைகுலைந்து விழப் போனாள்.
மேலே தயார் நிலையில் நின்றிருந்த அண்ணாமலை மின்னல் வேகத்தில்
உயர்த்திய அவளின் கைகளை லாவிப் பிடித்தார்.
நல்லகாலம்... ஆவத்தாளின் இடது கையின் நடு மூன்று விரல்கள் மட்டும்
பிடியில் சிக்கின. அவற்றை உடும்புப் பிடியாய்ப் பிடித்தக் கொண்ட
அவர் அலறினார்.
ஆட்கள் உதவிக்கு ஓடி வந்தனர். அதற்குள் படகு மீண்டும் கப்பலுடன்
இணைய நூலேணி சரி செய்யப்பட்டு விட்டது.
ஆவத்தா நினைவிழந்து போனாள். சிலரின் உதவியோடு கப்பலுக்குள் படுக்க
வேண்டிய தளத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார் அண்ணாமலை.
எஞ்சின் அறைக்குப் பக்கத்தில் அண்ணாமலைக்கு படுக்க இடம் கிடைத்தது.
தூசும் தும்புமாய் கரும்புகை படிந்த திறந்த தளம் பரந்து கிடந்தது.
கப்பலின் ஒரு வகை முடை நாற்றம் புதியவர்களை மூக்கைப் பொத்தச்
செய்தது. என்றாலும் கால்மாடு தலைமாடு தெரியாமல் பாயோ, துணியோ
கிடைத்ததைப் பரப்பி, கைகளே தலையணையாக அங்கே விழுந்து கிடந்தனர்
பயணிகள்.
பழைய சேலை ஒன்றைப் பரப்பி அதில் ஆவத்தாளை, படுக்க வைத்திருந்தார்
அண்ணாமலை. அவள் இன்னும் மயக்கத்தில் இருந்தாள். மகன் மருதுவை
மடியில் கிடத்தியபடி மனைவியின் அருகில் பேயறைந்தவர் போன்று
அமைர்ந்திருந்தார் அவர்.
இத்தகைய கப்பல் பயணத்தில் அனுபவப்பட்டவர்கள் கவலையின்றி ஆங்காங்கே
கூட்டம் கூட்டமாய் அமர்ந்து சீட்டாட்டம் போட்டனர். புதியவர்கள்
அறியாத்தனமாய் வந்து ஏதோ நரகத்துக்குள் மாட்டிக் கொண்டவர்கள்
போன்று வாடிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் வாலிப முறுக்கோடு தளம்
தளமாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
"ஓங்!...." கப்பல் அலறியது.
"கப்பல் கிளம்பிடுச்சு! கப்பல் கிளம்பிடுச்சு!" அனுபவசாலிகள்
கைதட்டி ஆரவாரித்தனர்.
எஞ்சின் அறைக்குள் இரும்பு உலக்கைகள் உந்தி முட்டி மோதுகின்ற
சத்தம் தலையைப் பிளப்பது போன்று எழுந்து கொண்டிருந்தது.
அந்த ஆரவாரத்தில் படுத்திருந்த பயணிகள் எழுந்து கொண்டனர். ஆனால்
ஆவத்தாள் மட்டும் எழுந்திருக்கவில்லை.
"கப்பல் புறப்பட்டிருச்சு. எழுந்திருச்சு பாரு புள்ளே" மனைவியின்
முகத்தை வருடி, தலைமுடியைக் கோதி விட்டார் அண்ணாமலை. ஆவத்தா
அசையவில்லை.
"பயத்துலே ரொம்ப மனசை விட்டிட்டாள் போலிருக்கு. கஞ்சித் தண்ணி
தொண்டைக்குள்ளே போனால் மயக்கம் தெளிஞ்சிடும். எப்பச் சோத்து மணி
அடிக்கப் போறானோ தெரியலியே!" அண்ணாமலைக்குக் கண்கலங்கியது.
அண்ணாமலை நினைத்தது போன்று அடுத்தகணம் சோற்று மணி அலறியது.
"மகராசன் சோறு கொடுத்துட்டான்" வேகமாக எழுந்து கொண்டார் அண்ணாமலை.
நான் முந்தி நீ முந்தி என்று உணவு வழங்கும் தளத்துக்கு விரைந்துக்
கொண்டிருந்தனர் பயணிகள். அண்ணாமலையும் இணைந்து கொண்டார்.
நீட்டப்பட்ட ஏனங்களில் சோற்றையும் மாசிக்கருவாடும்
மொச்சக்கொட்டையும் போட்ட குழம்பையும் வஞ்சகமின்றித் தாராளமாக
வழங்கிக் கொண்டிருந்தனர் பரிமாறுவோர்.
இன்னொரு பக்கம் இரண்டு பெரிய தொட்டிகளில் குடிநீர்
வைக்கப்பட்டிருந்தது. ஏனமுள்ளவர்கள் வேண்டிய அளவு எடுத்துக்
கொண்டனர்.
ஒரு கையில் சோற்று ஏனமும் இன்னொரு கையில் குழம்புக் குவளையும்
ஏந்திக் கொண்டு படுக்கைக்கு ஓடிய அண்ணாமலை, இன்னொரு குவளையை
எடுத்துக் கொண்டு ஓடோடித் தண்ணீரையும் சேகரித்துக் கொண்டிருந்தார்.
முதலில் மகனுக்குப் பரிமாறிய அவர், அடுத்து ஆவத்தாளைக் கவனித்தார்.
கொஞ்சமும் சலனமின்றி சுருண்டு கிடந்தாள் அவள். உசுப்பி உசுப்பி
எப்படியோ அவளை விழித்துப் பார்க்க வைத்து விட்டார் அவர்.
"சோறு வாங்கிட்டு வந்திருக்கேன். சாப்பிடுறியா?" காதோடு காது
வைத்துப் பேசினார் அண்ணாமலை. "வேணாம். கரைச்சி நீராகாரமாகி
கொடுங்க." கிணற்றுக்குள் இருந்து பேசுவது போன்று மெல்லக் குழறினாள்
அவள்.
"கஞ்சி கரைக்க ஏனமும் இல்லை. உப்பும் இல்லை. என்ன பண்றது?"
கலங்கிப் போன அண்ணாமலை மீண்டும் சமையல் பகுதிக்கு ஓடினார்.
கொட்டான் மாதிரி ஒரு பழைய டின்னும் உப்பும் கிடைச்சுச்சு. விரைந்து
சோற்றைக் கரைத்து நீராகராமாக்கிக் கொண்டார். எழுந்து உட்காரத்
தெம்பு இல்லை ஆவத்தாளுக்கு.
அவளைத் தூக்கி நிமிர்த்தி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு எப்படியோ அந்த
நீராகாரத்தைக் குடிக்க வைத்து விட்டார் அவர்.
பொழுது மறைந்து இரவு ஏறிக் கொண்டிருந்தது. கப்பலும் ஓடிக்
கொண்டிருந்தது. கதை பேசுவோர், தூங்குவோர், துன்பப்படுவோர் என்ற
முறையில் பயணிகள் அங்கே நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தனர்.
அண்ணாமலை தூங்கவே இல்லை. அவ்வப்போது மனைவிக்கு நீராகாரம்
கொடுப்பதிலேயே அவரின் நேரம் போய்க் கொண்டிருந்தது.
விடிந்திருக்க வேண்டும். எங்கும் பேச்சுக்குரல்கள் எழுந்தன. ஆட்கள்
அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தனர். அண்ணாமலை மிகவும் சோர்ந்து
போனார். ஆவத்தா இன்னும் அப்படியேதான் கிடந்தாள்.
கிராமத்துப் பெண்கள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து
முழுகி வாசல் பெருக்கி கோலம் போடுவது வழக்கம். உடலோடு ஊறிப்போன
அந்தப் பழக்கம் ஆவத்தாளை உந்தியிருக்க வேண்டும். ஒன்றும் நடவாது
போன்று சட்டென்று எழுந்து உட்கார்ந்து விட்டாள் அவள்.
முற்றிலும் புதிய சூழலில் அமர்ந்திருப்பதை உணர்ந்த அவள் பேந்தப்
பேந்த விழித்தாள்.
"என்ன புள்ளே! உடம்பு நல்லா இருக்கா?" கஞ்சி தாறேன் குடிக்கிறியா?"
சோர்வு எல்லாம் பறந்து போக புதிய தெம்போடு பேசினார் அண்ணாமலை.
"இங்கே, 'வெளியே தெருவுக்கு' போகணும்ன்னா எக்கிட்டுங்க போறது?"
தெளிவாய் வந்தது பேச்சு.
"மேத்தளத்துக்குப் போகணும். உன்னாலே முடியுமா புள்ளே!" அண்ணாமலை
இழுத்தார்.
"பயப்படாதிய. இப்ப எனக்கு ஒண்ணுமில்லை. பையனை எழுப்புங்க. போய்ட்டு
வந்துடலாம் வாங்க" திடமாக எழுந்து நின்ற ஆவத்தா சேலையை வரிந்து
கட்டினாள். மகிழ்ச்சியோடு மேல் தளத்திற்குச் சென்று திரும்பினர்.
சோற்று நேரம் வந்தது. அண்ணாமலை அவர்களுக்குரிய உணவை பெற்று
வந்தார். ஆவத்தா பரிமாறத் தொடங்கினாள்.
"ஏங்க இது என்ன அரிசிங்க? 'எமன் பருக்கை'ன்னு சொல்வாக. அந்த மாதிரி
இம்புட்டுப் பெருசா இப்படி நாத்தாமா இருக்கு. இதை எப்படிங்க
தின்னுத் தொலையுறது?" முகத்தைச் சுளித்தாள் ஆவத்தா.
"பாம்பு தின்னுற ஊருக்குப் போனால் நடுக்கண்டம் நமக்குன்னு சொல்வாக.
நங்கு பார்க்கிறது எல்லாம் மலாயாவுலே போய் பார்த்துக்குவோம்.
இப்பச் சோற்றைப் போடு புள்ளே!" அண்ணாமலை சிரித்தார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்தது பயணிகளின் மயில் கப்பல் பயணம். கப்பல்
ஏறிய ஒன்பதாம் நாள் கோலாத் துறைமுகத்தில் வந்து நங்கூரம் இட்டு
நின்றது மயில் கப்பல்.
நாகப்பட்டினம் போன்று இங்கும் கப்பல் கரையில் ஒதுங்கவில்லை.
தொலைவில்தான் நின்றது. படகுகள் மூலம் பயணிகள் கரை இறக்கப்பட்டனர்.
சஞ்சி முறையில் வந்தவர்கள் எல்லோரும் 'டிப்போக்' எனப்படும் நீண்ட
தகரக் கொட்டாயில் அடைக்கப்பட்டனர். அதை நினைவு கூர்வது போன்று
இன்றும் கோலக் கிள்ளானில் அந்தச் சாலைக்கு 'ஜாலான் டிப்போக்' என்று
தான் பெயர் வழங்குகின்றது.
கப்பலுக்குள் உணவு வழங்கியது போன்றே இங்கும் உணவு வழங்கப்பட்டது.
'டிப்போக்' என்ற அந்தக் குட்டிச்சிறைச் சாலைக்கு முன்புறம் ஒரே
வாசல்தான் உண்டு. அங்கே தலைப்பாகை கட்டிய பஞ்சாபிக்காரன் கையில்
தடியுடன் இருபத்து நாலு மணி நேரமும் காவலில் இருப்பான்.
அடைக்கப்பட்ட பாட்டாளிகள், தோட்டத்தில் இருந்து எப்ப வண்டி வரும்
என்று காத்துக் கிடந்தனர். அண்ணாமலையும் அப்படித்தான்
காத்திருந்தார். ஆனால் ஒரு வேறுபாடு. "இந்தச் சிறைக்குள் இருந்து
எப்படித் தப்பிச் செல்வது. அந்த நேரம் எப்ப வரும்?" என்று
காத்திருந்தார் அவர்.
அந்த நேரத்தில் கொட்டகைக்குள் என்னவோ ஆரவாரம் எழுந்தது. 'காக்கிச்
சீருடை' அணிந்த ஒருவர் சனங்களின் வாயைத் திறக்கச் சொல்லி ஒரு
போத்தலில் இருந்து எதையோ ஊற்றிவிட்டு, 'குடிங்க குடிங்க' என்று
சத்தம் போட்டுக் கொண்டே வந்தார்.
"அந்த ஆளு சனங்க வாயிலே என்னத்தைங்க ஊத்துராரு" ஆவத்தா கேட்டாள்.
"மலாயாத் தோட்டங்களுலே மலேரியா காய்ச்சல் ரொம்ப. அதுக்குத்தான்
மருந்து கொடுக்குறாங்க. இந்த மருந்தைக் கொய்னாத் தண்ணின்னு
சொல்வாங்க. நெட்டிக் கசப்பு!" முகத்தைச் சுளித்தார் அண்ணாமலை.
அதற்குள் அந்த ஆள் அவர்களின் அருகில் வந்து கத்தினான். அவர்கள்
வாயையும் நிரப்பிவிட்டு அவன் நகர்ந்தான்.
அங்கே வேடிக்கை பார்த்து நின்ற மகன் மருதுவுக்கு நமக்குக்
கொடுக்கலையே என்ற ஏக்கம் வந்துடுச்சு.
"அப்பா... அப்பா! எனக்கும் ஊத்தச் சொல்லுங்கப்பா" கெஞ்சினான்
சிறுவன்.
"அது மருந்துடா. ரொம்பக் கசக்கும். உன்னாலே குடிக்க முடியாது"
அப்பா மறுத்தார்.
பையன் விடவில்லை.
"நீங்க மட்டும் குடிச்சீங்க. எனக்கு மட்டும் இல்லியா. எனக்கும்
வேணும்" அடம்பிடித்து அழ ஆரம்பித்து விட்டான் அவன்.
"சொன்னால் புரியாது. பட்டாத்தான் புரியும். அந்த ஆளைக் கூப்பிட்டு,
கொஞ்சம் ஊத்தச் சொல்லுங்க." ஆவத்தா மெல்லச் சிரித்தாள்.
"ஐயா! இங்கே வாங்க. இந்தப் பையன் வாயுலேயும் கொஞ்சம் ஊத்திட்டுப்
போங்க" அண்ணாமலை அழைத்தார் அந்த ஆள் சிரித்தவாறே வந்தார்.
பையனுக்கு மிக்க மகிழ்ச்சி. அழுத கண்களைத் துடைத்துக் கொண்டே வாயை
அகலத் திறந்தான். வாயை நிரப்பிவிட்டு அவர் நகர்ந்தார்.
அடுத்த கணம் சிறுவனின் முகம் முப்பத்திரண்டு கோணலாக மாறியது.
வாயில் இருந்ததைப் புளிச்சென்று ஆயா மேலேயே துப்பிவிட்ட அவன்,
தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
பார்த்திருந்தவர்கள் பரிகாசம் செய்தனர்.
அந்த நேரத்தில் அண்ணாமலையின் சிந்தனையில் சட்டென்று என்னவோ
தோன்றியது. அந்த மருந்து ஊற்றுகின்றவரைப் பின்தொடர்ந்து
சிறிதுநேரம் சன்னக்குரலில் என்னவோ பேசிவிட்டு வந்தார்.
அந்தி நேரம். மருந்து ஊற்றுகின்ற அந்த ஆள் அண்ணாமலையை வந்து
பார்த்தான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துலே அந்தக் காவக்கார பாயி காப்பி குடிக்கப்
போவான். திரும்பிவர எப்படியும் பத்து நிமிடம் ஆகும். அந்த
நேரத்துலே நான் தான் அங்கே காவக்காரன். அந்த நேரத்துலே நீங்க
கிளம்பிடனும். ஆனா நீங்க மூட்டை முடிச்சுகளைத் தூக்காமல் கட்டுன
துணியோடு தான் போகணும். நான் சைகை காட்டியதும் நீங்க கிளம்பிடணும்.
அதோ பாயி கிளம்பிட்டான். பேசுனபடி எனக்குக் கொடுக்க வேண்டியத
கொடுத்திடுங்க."
இரகசியம் பேசிய அந்த ஆள் கையை நீட்டினான்.
கிராமத்தில் சஞ்சி கட்டிய கங்காணி கொடுத்த ஐந்து வெள்ளி ஆவத்தாளின்
சுருக்குப் பைக்குள் இருந்து அந்த ஆளின் கைக்குள் புகுந்து
கொண்டது. அண்ணாமலை குடும்பத்துக்கும் அங்கிருந்து விடுதலை
கிடைத்தது.
'கையிலிருந்த இந்தியப் பணமெல்லாம் அங்கேயே முடிஞ்சு போச்சு. அஞ்சு
வெள்ளி கையிலே இருக்குன்னு நெஞ்சுலே தைரியம் இருந்துச்சு. அந்தப்
பேராசைப் பிடிச்ச பய அம்புட்டையும் புடுங்கிக்கிட்டான். இப்ப
கையிலே அஞ்சுகாசு கூட இல்லாமல் எப்படித்தான் சேரவேண்டிய
இடத்துக்குப் போய்ச் சேரப்போகிறோம்' என்ற கவலை நெருடிக்
கொண்டிருந்தாலும் 'ஆண்டவன் வழிகாட்டுவான்' என்ற நம்பிக்கையில்
மனைவி மகனோடு ஜாலான் டிப்போக்கில் வேகமாக நடந்து கொண்டிருந்தார்
அண்ணாமலை.
அந்தச் சாலை ஓர் ஆற்றின் கரையில் போய் முட்டாக நின்றது. அங்கே ஒரு
படகு துறை. ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்றால் அங்கே ஒரு
காட்டுப் பாதை. அப்பாதையில் சுமார் இரண்டு மைல் நடந்தால் அங்கே ஒரு
கிளைச்சாலை குறுக்கிடும்.
லங்காட் சாலையில் இருந்து கோலாவுக்கு வருகின்ற கிளைச் சாலை இது.
இதன் மருங்கில்தான், 'அஞ்சாங்கட்டை' எனப்படும் 'கோல்டன் ஓம்'
தோட்டம், பண்டமாரான் தோட்டம் ஆகியவை இருந்தன. இத்தோட்டங்களில்
வாழ்ந்திருந்தவர்கள் எல்லோருமே அண்ணாமலைக்கு நன்கு தெரிந்தவர்கள்.
அங்கு போய்ச் சேர்ந்தால் போதும். அண்ணாமலைக்கு தைரியம் வந்து
விடும். அந்த நம்பிக்கையோடு அந்த ஆற்றைப் பார்த்து நின்றார் அவர்.
ஆற்றைக் கடப்பதற்கு தலைக்கு ஒரு காசு கட்டணம் கொடுக்க வேண்டும்.
"நம்மிடம் இப்ப ஒற்றைக் காசு கூட இல்லியே" என்று தாம் போட்டிருந்த
கனத்த காக்கி நிறக்கோட்டைத் துழாவிக் கொண்டிருந்தார் அண்ணாமலை.
படகோட்டி ஓடிவந்தான்.
"இதுவரைக்கும் துணை வந்த கடவுள் இப்பவும் துணைக்கு வரத்தான்
செய்வார்" என்ற நம்பிக்கையில் துணிந்து குடும்பத்தோடு படகில் ஏறிக்
கொண்டார்.
படகு அக்கரையை அடைந்தது. படகோட்டி காசுக்குக் கை நீட்டினான். தமது
கையறு நிலையை எடுத்துச் சொன்னார் அண்ணாமலை. அந்த 'மூணு காசையும்'
நாளைக்குக் கொண்டு வந்து கொடுத்து விடுவதாகக் கெஞ்சினார். படகோட்டி
மசியவில்லை.
மூன்று காசுக்குப் பதில் அவர் அணிந்திருந்த அந்தக் கோட்டைத்
தரும்படி கத்தினான் படகோட்டி. அவர் கொஞ்சமும் தயங்கவில்லை.
கோட்டைக் கொடுத்துவிட்டு இறங்கிக் கொண்டனர் அவர்கள்.
தோள் துண்டை எடுத்துத் தலையில் இறுகக் கட்டினார் அண்ணாமலை. மகனைத்
தூக்கித் தோளில் வைத்துக் கொண்ட அவர் மனைவியோடு அந்தக் காட்டு
வழியில் நெஞ்சம் நிமிர்ந்து வேகமாக நடந்தார். நடை தொடர்ந்தது.
"இன்னும் ரொம்பத்தூரம் நடக்கணுங்களா?" ஆயாசத்தோடு கேட்டாள் ஆவத்தா.
"இல்லை புள்ளே. இதோ வந்துட்டோம்". நின்று நிமிர்ந்து பார்த்தார்
அண்ணாமலை. அங்கே பண்டமாரான் தோட்டத்து ஆலயக் கோபுரம் தெரிந்தது!
|
|