வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 5
ஜூன் - ஆகஸ்ட் 08
முகப்பு  |  உள்ளடக்கம்

கட்டுரை

 

ஓட்டுப்போடாதவனின் வாக்குமூலங்கள்

மஹாத்மன்

 

       
 

ஓட்டுப்போடாதவனின் இந்த வாக்குமூலங்கள் யாதொன்றிலும் நியாயமில்லாமல் இருக்கலாம். நியாயமிருப்பின் என்ன செய்வதாக உத்தேசம் என்ற முதற்கேள்வியோடு ஆரம்பிக்கிறேன்.

ஜனநாயகத்தை, சுதந்திரத்தை, தேர்தலை, வாக்களிக்கும் உரிமையை, நாம் அனுபவித்து வருகிறோம். ஒரு சில நாடுகளை விட நமது நாடு எவ்வளவோ தேவலாம். சுபிட்சமும் சமாதானமும் இங்கு நிலவுகிறது. பஞ்சப் பட்டினி, தண்ணீர் பற்றாக்குறை, அடிக்கடி மின்வெட்டு, தினமும் வன்முறைக் கலவரம் என்று ஏதுமில்லை. வெள்ளம் வந்தால் வீட்டோடு மூழ்கிச் சாவும் பரிதாபம் இங்கில்லை. தற்கொலைக் குண்டு தாரிகள், கட்டடங்களின் வெடிப்பு, அணுகுண்டின் நச்சுக் காற்று என்ற கொடூரங்கள் நடைபெறவில்லை என்பதால் மனித வாழ்வு இங்கே நம்பிக்கையோடு நகர்கிறது. சரி. எல்லாம் சரி. ஆனால், இந்த சுதந்திரத்தை ஜனநாயகத்தை தேர்தலை வாக்களிக்கும் உரிமையை இன்னும் நாம் சரியாக- முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்றே தோன்றுகிறது. தப்பிதமாக அர்த்தப்படுத்திக்கொண்டு முன் செல்லாமல் நின்றுக் கொண்டே இருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு தப்பிதமாகவே கற்பித்துக் கொண்டு வருகிறோம். அந்த குற்றவணர்வேயின்றி சுயநலநோக்கோடு வயிற்றுக்காக மட்டுமே வாழ்ந்துக் கழிக்கிறோம்.

நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் பிரித்தானிய அரசால் கொடுக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த சுதந்திரம், அவர்களுடைய சுதந்திரம். அங்கு கட்டமைக்கப்பட்ட அரசியல், மகாராணி ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்பட்ட ஜனநாயகம். குடிமக்கள் தங்கள் நெஞ்சினில் கைவைத்து மகாராணியை வாழ்த்தும் துதிபாடலுக்குரியது. இதுவா ஜனநாயகம்? மக்களுக்காக, மக்கள் மூலம், மக்களினால் ஆன மக்களாட்சியா இது? மக்களாட்சிக்குள் மகாராணி ஆட்சியும், மகாராணி ஆட்சிக்குள் மக்களாட்சியும் வந்தது எப்படி? நூதனமான முறையில் நமக்கு நன்றாகவே காது குத்தப்பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் அமெரிக்கா கொஞ்சம் வித்தியாசப்பட்டிருந்தாலும் தானும் சாக்கடையில் விழுந்த மட்டை என்று நிரூபித்து வருகிறது. மன்னராட்சியோ மகாராணி ஆட்சியோ அமெரிக்காவில் இல்லை. சுதந்திரமும் ஜனநாயகத் தேர்தலும் நன்றாக செயல்பட்டு வருகிறது என சொல்ல முற்படும்போது அவ்வப்போது தலை நீட்டிப் பார்க்கிறது வெள்ளை கருப்பு இனக் கலவரம். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வந்தார்கள்; வருகிறார்கள். உலக காவல்காரன் போலவும் உலக ரட்சகன் போலவும் தன்னைக் காட்டிக் கொண்டு உதவுவதன் போர்வையில் மற்ற நாட்டின் குடுமியை பிடித்துக் கொள்வதும் பொருளாதார மண்டலத்தை ஆக்கிரமிப்பதும் இராணுவத்தை அனுப்பி அப்பாவி பொதுமக்களையும் சேர்த்து அழிப்பதும் தங்கள் நாட்டு இராணுவ வீரர்கள் அநேகரை பலிக்கடா ஆக்குவதும் மக்களாட்சியின் எந்தப் பக்கத்து நியாயம்?உதவி என்ற போர்வையிலும் காப்பாற்றுகிறோம் என்ற முகமூடி அணிந்து அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் அம்பலத்திற்கு வந்ததை நாம் அறிய வில்லையா?சுதந்திரத்தின் சனநாயகம், சகோதரத்துவம், சமத்துவம் யாவையும் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே குழி தோண்டிப் புதைக்கப்பட்டக் காட்சிகளை நாம் வாய்ப்பொத்திக்கொண்டு வெறுமனே இருக்கவில்லையா?இந்த ஜனநாயகத்துக்கு ஓட்டுப்போட நான் தயாராக இல்லை.

அணுகுண்டை தயாரிக்கிறார்கள். அதிநவீன கண்டுபிடிப்பு என்பதால் பெருமை கொள்ளலாம். அணுகுண்டு, விண்கற்களை நொறுக்கும் வேலையை மட்டும்தான் செய்யவேண்டும். ஆனால், அதுவும் மனித குலத்தை அழிப்பதற்காகத்தான் என்றால் மாய்மாலக்காரர்கள் இவர்கள்தானே. ஹிரோஷிமா- நாகாசாக்கியில் எத்தனை அப்பாவி மக்கள், குழந்தைகள் மாண்டார்கள். மனிதத்தன்மையை குழிதோண்டி புதைத்துவிட்ட இவர்களா நமக்கு ஜனநாயகத்தின் நாயகர்கள்!? எதிராளியை நேருக்கு நேர் சந்திக்க திராணியில்லாத இவர்களுக்கு வெற்றியை எப்படி சம்பாதித்தாலும் வெற்றிதான் என்றிருக்கும் அமெரிக்காவின் சுதந்திரம் ஒரு போலித்தனமானது. அணுமின் தயாரிப்புகளை விற்பனை செய்து பணம் பண்ணுகிறார்கள். அணுமின் நிலையத்தை தன்னைத் தவிர மற்ற எவரும் உருவாக்கக் கூடாது என கட்டளைப் பிறப்பிப்பது எவ்விதத்தில் நியாயம்? ஆக, வருங்காலங்களில் உலகநாடுகள் இக்கட்டளையை மீறும். நாட்டுக்கு நாடு அணுமின் நிலையம் உருவாக்கும். சுற்றுச்சூழலை மாசு படுத்தும். அப்பாவிப் பொதுமக்களை ஈவுயிரக்கமின்றி கொன்று குவிக்கும். சில பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அழியப்போகும் சூரியனை சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அழிக்க முயற்சிக்கும் இந்த சுதந்திரத்திற்கா ஓட்டுப் போடுவது? தன்னைக் காத்துக் கொள்வதிலும் தன் நாட்டைக் காத்துக் கொள்வதிலும் இருக்க வேண்டிய சுதந்திரத்தின் செயல்பாடுகள் அமெரிக்கா- பிரித்தானியாவில் மீறப்படுகின்றன. மீறுகிறவர்கள் வாக்காளர்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளேயன்றி வேறுயாருமல்ல. இவர்களைக் கேள்வி கேட்பதற்கும் தட்டி கேட்பதற்கும் மனித உரிமைக் கழகங்கள் தான் போராட வேண்டும். மனித உரிமைக் கழகங்கள் ஏராளமாய் இருக்கின்றன. நீதி-அரசியல்-மதம்- இனம்- பொருளாதாரம்-நுகர் ஆகிய ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மனித உரிமைக் கழகங்கள் தனித்தனியாக இயங்கி வருகின்றன. இருந்தும் யாவும் அந்த இரு வல்லரசுகளுக்கு விலைபோயின. சரி. அங்குதான் அப்படி. நமது நாட்டில் எப்படி?

பிரிட்டானியாவின் சுதந்திரமென்பதால் இங்கு மன்னராட்சியின் கீழ் செயல்படும் மக்களாட்சி. மன்னர்களும் மாமன்னரும் ஜனநாயகத் தேர்தலில் சம்பந்தப்படுவதில்லை. வெற்றிக்கண்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு, ஆட்சியமைக்க மலாய்- இஸ்லாமிய பாரம்பரிய சடங்குகள் மாமன்னருக்கு முன்பாக நடந்தேறுகிறது. ஆட்சியில் அமர்ந்தபின் ஆளுங்கட்சி சிபாரிசு செய்கின்ற நபர்களுக்கு மாநில ரீதியாக மன்னர்களால்/ மாமன்னரால் பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பட்டங்கள் கொடுப்பது சகஜமாகி சடங்காகி ஊழலாகிவிட்டிருக்கின்றது. யாருக்கு கொடுக்க வேண்டும் என்றொரு விவஸ்தையில்லாமல் போய்விட்டது. ஒருவருக்கு கொடுக்க முடியாது என்று மன்னர்களாலும் கூட கூற இயலாத நிலை இங்கே. மன்னர்களுக்கு (குறுநில மன்னர்கள்- ஒவ்வொரு மாநில ரீதியாக ஒரு மன்னர்) அரசாங்கத்தினால் வழங்கி வந்த வரிச்சலுகைகளையும் மற்ற சலுகைகளையும் மட்டுப்படுத்திய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரும் இதற்கு ஒரு காரணம். இந்த காரணத்திற்காகவும் நாட்டை மேம்படுத்திய காரணத்திற்காகவும் (மட்டும்) இவரை பாராட்டலாம். ஆனால், உலக வரைபடத்தில் சிறு முற்றுப் புள்ளியைப் போலிருக்கும் இந்நாட்டிற்கு மாநில ரீதியாக மன்னர்களும் மாமன்னரும் தேவையா என்று யோசித்தாலும் அதனையும் விட ஜனநாயக சுதந்திரத்தில் பங்கு கொள்வதற்கு மாமன்னர்களும் உரிமை ஏது என்ற கேள்வியே இன்னும் என் மனதில் தொக்கிக் கொண்டே இருக்கின்றது.

சரி. இருந்துவிட்டுப் போகட்டும். அவர்களால் நமக்கு எந்தத் தீமையும் நிகழவில்லை. அரசாட்சி நடத்தும் இந்த அரசியல்வாதிகளைத் தான் நான் குறை சொல்ல வேண்டும். தேர்தலில் ஓட்டும் போடும் வாக்காளர், எந்த கட்சிக்கு யாருக்கு ஓட்டுப் போட்டார் என்ற விஷயத்தை இரகசியமாய் வைத்திருக்கப்பட வேண்டும். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு வாக்காளர் 'பாரிசான் நேஷனல்' என்ற கட்சிக்கு ஓட்டுப்போட்ட விசுவாசத்தைக் கண்டு பிரதம துறையிலிருந்து நன்றிக் கூறி கடிதம் வருகிறது. அந்த ஒரு கடிதத்தின் வருகையானது ஜனநாயகத் தேர்தல் விதிகளை மீறிய உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

தேர்தலுக்கு முன் சட்டமன்றமும் நாடாளுமன்றமும் கலைக்கப்படுகின்றது.இடைக்கால அரசாங்கம் நியமிக்கப்படுகிறது.யாரால்? ஆண்டுக்கொண்டிருந்த ஆளுங்கட்சியினரால்.தேர்தல் சமயங்களில் அரசு ஊழியர்களே ஆளுங்கட்சியின் பெரும் புள்ளிகளுக்கு எல்லா வகையிலும் (அரசு கேந்திரமானாலும் கஜானாவானாலும்) உதவியாக இருக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?இதுவரையிலுமான தேர்தல் வெற்றிகளுக்கு முன்பும் பின்புமாக ஆளுங்கட்சியினரால் முக்கியமாக கவனிக்கப்படுபவர்கள் அரசு ஊழியர்கள் மட்டும்தானே!

காவல் துறையோ இராணுவமோ இடைக்கால அரசாங்கத்தை ஏற்பது தகாது.ஏதோவொரு 'இசம்' அவர்களைத் தடுக்கும்.அனுபவம் இல்லாத மனித உரிமை ஆணையமும் ஏற்று நடத்த இயலாது.தேர்தலின் போது அரசு கேந்திரத்தை தொடாத அனைத்து ஊடகங்களின் மேலும் அதிகாரம் செலுத்தாத இடக்கால அரசாங்கத்தை வழிநடத்தும் தகுதிக்குரியவர்கள் யார்? தேர்தல் ஆணையக்குழு 'மை'யிடும் விஷயத்தில் தண்டவாளத்தில் ஏறி வண்டவாளம் போனதைத்தான் நாம் பார்த்தோமே.ஒருவரையும் நம்பும்படியில்லை என்பதினால் என் ஓட்டு ஒருவருக்கும் கிடையாது.

தேர்தல் பிரச்சாரக் கருவிகளாக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளுக்கு ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதித்திருக்கிறது. ஆளுங்கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுக்கு ஊடகங்கள் சிறிதேனும் இடங்கொடுத்து உதவினால் அதுவொரு தேசவிரோதமாகவே வியாக்கியானப்படுத்தி சித்தரிக்கும் போக்கை கடைப்பிடித்து வருகிறது இதுநாள் வரையிலும்.

பொது இடத்தில் எதிர்க்கட்சிகள் மக்களோடு பேச வேண்டுமானால் அல்லது பிரச்சாரத்திற்கென்று உபயோகிக்க வேண்டுமானால் காவல் நிலைய அனுமதிச் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். ஆளுங்கட்சியின் உத்தரவின்பேரில் காவல் நிலையம் அனுமதியை வழங்காமல் இருக்கும்போது இந்த ஜனநாயகத்தை எப்படிப் பாராட்டுவது?

'மூவினம் வாழும் மலேசியா' என்ற வெளிநாட்டு பிரச்சாரப் பேச்சில் தம்பட்டமடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் இங்கே இந்தியர்களை மூன்றாம் தர குடிமகனாக நடத்திவரும் உண்மையை வெளியுலகத்திற்கு கொண்டு வந்தது 'இந்து செயற்குழு' என்ற இயக்கம். இவர்களைக் கையாண்ட விதத்தை பார்க்கும்பொழுது சுதந்திரம் என்றால் என்ன, ஜனநாயகம் என்றால் என்ன, ஓட்டுரிமை என்றால் என்னவென்று ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு பாடம் நடத்தவேண்டும் போலிருக்கிறது.

கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் யாவும் மதத்திற்குரிய புனித ஸ்தலங்கள். இங்கு அரசியல் பேசுவது அவர்கள் வணங்கும் கடவுளை இரண்டாம் இடத்தில் வைத்து உதாசீணப்படுத்துகிறார்கள் என்று அர்த்தப்படும்.அரசியலோடு மதத்தைச் சேர்த்தால் மதக்கலவரம் இனக்கலவரம் வரும் என்று உலக யுத்தங்கள் பெருங்குரலெடுத்து கத்திச்சொன்னதை கேட்காத இந்த செவிட்டு ஜனநாயகத்திற்கு ஓட்டுப்போட எனக்கு இஷ்டமில்லை.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் தேவைதான். அச்சட்டம் யார் மீது பாயவேண்டுமென்றால் நாட்டின் பொதுச் சொத்தை குண்டு வைத்து தகர்ப்பவர்களிடம் பாய வேண்டும். குடிமக்களின் அனுமதியின்றி கோயிலை உடைக்கும் நபர்கள் மீது பாய வேண்டும். துப்பாக்கிகளை விநியோகிக்கும் பண முதலைகள் மீது பாய வேண்டும். பொதுக் கூட்டத்தை நடத்தி வன்முறை கலவரத்தைத் தூண்டி நடப்பிப்பவர்கள் மீது பாய வேண்டும். எதேச்சதிகாரத்தின் மீதும் சர்வதிகாரம் மீதும் சமதர்மக் கொள்கையை மறுப்பவர்கள் மீதும் பாய வேண்டும். நடந்தது என்ன? அமைதிமறியலில் ஈடுபட்ட அகிம்சை வழியில் சென்றுக் கூடிய, அப்பாவி குடிமக்கள் மீதும், கோரிக்கைகளை முன் வைக்க முயன்றவர்கள் மீதும் பாய்ந்திருக்கின்றது. வெட்கக் கேடு. இப்படிப் பட்ட பக்குவப்படாத அரசியல் ஜனநாயகத்திற்கு எப்படி ஓட்டுப் போடுவது?

ஆளுங்கட்சிதான் இப்படியென்றால் எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டுப் போடலாமே என்று நீங்கள் கேட்கலாம்.எதிர்க்கட்சிகளில் 'பாஸ்' கட்சியை விட்டுவிடுவோ.அதன் கொள்கைகள் நமக்கு சரிபட்டு வராது. முழுக்க முழுக்க மதத்தை முன் வைத்து செயல்படும் கட்சியது. மேலுமிரண்டு பெரிய எதிர்கட்சிகள் உண்டு.

இந்நாட்டில் நாடாளுமன்றத்திலும் மற்ற பொதுமேடைகளிலும் தைரியமாக கேள்வி கேட்பவர்கள் வழக்கறிஞர்கள் / வழக்குரைஞர்கள். இவர்களில் டி.ஆர்.சீனிவாசன் என்பவர் தன் சமூகத்திற்காகக் குரல் கொடுத்து வெற்றிக்கண்டு கட்சித் திறந்தவர். இவரின் வழியில் பல வழக்கறிஞர்களும் முன்வந்து குரல் எழுப்பி ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தவர்கள். இவர்களில் ஒரு சிலர் கொடுத்தத் தலைவலித் தீராமல் இன்னும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார் நமது முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். பி.பி.பி கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற 'கேவியஸ்' என்பவர் சமூகத்து பிரச்சனைகளை நன்றாக கேள்விகேட்டு வந்தவர். இவரை ஆளுங்கட்சியினர் சமாளிக்க முடியாமல் பிரதமர் மூலமாக தங்களது பக்கம் இழுத்துக் கொண்டனர். பிரதம இலாகாவில் பதவியமர்வு.

பெரும்பாலும் சீனர்களே அதிகமுள்ள கட்சி 'ஜனநாயக மக்கள் கட்சி'. இந்து செயற்குழு என்ற HINDRAF இயக்கத்தினரை தமது பக்கமாய் இழுத்துக் கொண்டு பிரச்சாரம் பண்ணி வெற்றிக்கண்டவர்கள். அதற்கு முன்பு... அவர்களுக்கு பல வேலைகளிருந்தன. இதே போல் தான் நீதிக் கட்சியும். சரி. இந்த இரண்டு கட்சிகளோடு பாஸ் கட்சியும் இணைவதற்கு பெரும்பங்காற்றியவர் முன்னால் துணைப்பிரதமர், நீதிக்கட்சியின் ஆலோசகரான அன்வார் இப்ராஹிம். இவர் பேச்சில் வல்லவர் என்று எல்லோராலும் (வெளிநாட்டிலும்) ஒப்புக்கொள்ளப்பட்டவர். இவர் ஒரு அடிக்கப்பட்ட பாம்பு. அடிக்கப்பட்ட பாம்பு பழிதீர்க்காமல் விடாது. தேடித் தேடிச் சென்று விஷம் கக்கும். இந்து செயற்குழுவின் கோரிக்கைகளைப் பற்றி விரிவாகப் பேசாதவர். எப்படி நம்புவது?

இவரோ இந்நாட்டுப் பிரதமரோ இந்து செயற்குழுவின் கோரிக்கைகளை விரிவாக பேசத் தயங்குவதற்கு காரணங்கள் உண்டு. மேலும் அவ்வியக்கத்தினர்களின் தவறுகளும் உண்டு. அவ்வியக்கத்தினர் கன்னிப் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதது. இங்கு ஒவ்வொரு நாளும் ஓர் இந்தியர் அரசாங்கத்தினால் கொல்லப்படுகிறார் என்பது அவர்களின் முறையீடு. ஓர் இந்தியனாகிய நானே ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் இந்திய சமூகத்து பிரச்சனைகளை முன்வைக்கும்போது, அவர்களின் சார்பாக நிற்கும்போது, ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிநிதிகளாக காண்பிக்கும்போது, இயக்கத்தின் பெயரே இதற்கு தடையாக இருப்பதை எப்படி உணராமல் போனார்கள்? 'இந்திய செயற்குழு இயக்கம்' என்றுதானே இருக்க வேண்டும். ஏன் மதத்தை தேர்ந்தெடுத்தார்கள்? அப்போதுதான் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுச்சிக் கொள்வார்கள் என்று நினைத்து விட்டார்களோ! சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை எத்தனையோ இந்திய பிரதிநிதிகள் இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் மலாய்க்காரர்களின் சிறப்பு சலுகை, சமதர்மக் கொள்கையைப் பற்றி வாய்திறக்காமல் இருந்துவிட்டு இப்போது அதனைப் பற்றிப் பேசுவது என்ன நியாயம்? இந்நாட்டில் இஸ்லாம் முதன்மையான மதமென்றும் மலாய்க்காரர்களே அதிகாரப்பூர்வ பூமிப்புத்தராக்கள் என்றும் எப்போதோ அரசியல் சட்டமே இயற்றியிருக்க இப்போது அதனை ஏற்றுக்கொள்ளாதது நியாயமில்லையே. அப்போதுதான் நமது பிரதிநிதித் தலைவர்கள் பயந்தாங்கொள்ளியாக இருந்துவிட்டார்கள். இப்போதும் நாம் அப்படியிருக்க முடியுமா என்று கேட்கிறார்களோ. சரி! உண்மையான போராட்டவாதிகள்தான். காலங்கடந்த இந்த போராட்டம் வெற்றி பெறுமென்று நான் நினைக்கவில்லை.

கோரிக்கைகளில் அடுத்து நடைபெற இயலாத ஒன்று உண்டு. இங்கு (வாழ்கின்ற) ஒவ்வொரு இந்தியனுக்கும் நஷ்ட ஈடாக ஒரு மில்லியன் தர வேண்டும். முதன் முதலில் ஒரு மில்லியல் என்பது அதிகப்பட்சமோ என்று கூட நான் நினைத்தேன். ஆனால், பிரித்தானியாவில் இவ்வழக்கின் கட்டணச் செலவே சில மில்லியன் பவுன்ஸ் ஆகலாம் என்று உறுதி செய்யப்பட்டப்பிறகு ஓர் இந்தியனுக்கு ஒரு மில்லியன் புரிந்துக்கொள்ளக்கூடியதே. இந்தத் தொகைக்காக இவ்வியக்கத்தில் சேர்ந்தோர் அநேகர். இன்னொரு சமூகமான சீன சமூகமும் சும்மா வாய் பொத்தி நிற்குமா, என்ன?

இவ்வழக்கினை செல்லுபடியாகாதபடிக்கு பிரித்தானியா மஹாராணி அரசும் மலேசியாவின் மன்னர் குழுமமும் அதன் கீழ் செயல்படும் அம்னோவும் தக்க காரணகாரியங்களை முன்வைக்கும். இப்படி நடவாதபடிக்கு இவ்விரு அரசும் இவ்வழக்கை பார்வைக்கு கொண்டுவராதபடிக்கு தட்டிக் கழிக்கும். முகமூடி போட்டுக்கொண்ட ஜனநாயகத்தில் நீதியும் நியாயமும் கோருவது சாத்தியமில்லை. என் ஓட்டினை நஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. வீண் விரயம்.

இந்நாட்டில் ஓர் எழுச்சியை உருவாக்கியதில் வழக்கறிஞர்கள் /வழக்குரைஞர்கள் பெரும் பங்கு வகிக்கின்றார்கள். அதுவும் இந்திய சமூகத்தினரே பணியாற்றி சேவை செய்கின்றனர். சமீபத்தில் நீதிப்பரிபாலனை துறையில் தலைமை நீதிபதி நியமிப்பின் விஷயத்தில் குழறுபடி நடந்ததை பத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டின. முகமூடி ஜனநாயகத்திலிருந்து மீறி வெளிவந்த விஷயமிது. வழக்கறிஞர் மன்றத்தின் தலைவி அம்பிகா சீனிவாசன் முன்வந்து செய்த சில நடவடிக்கைகள் ஓட்டுப்போடலாமோ என்று மனதை இலேசாக அசைத்து வைத்தது.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்களின் தீயச்செயல்களால், நாச மோசங்களால், போலி கரன்சி நோட்டடிப்புகளால் ,மில்லியன் கணக்கில் போதைப்பொருள் கடத்தல்களால் இரண்டே நிமிடக் கொள்ளைச் சம்பவங்களால் எர்ச்சலுற்று அந்நிய நாட்டுத் தொழிலாளர்களே இனி வேண்டாம் என முடிவெடுத்த அரசாங்கம் மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள் வரை தங்கிய இந்தோனேசியர்களுக்கு'நிரந்தரக்குடிவாசி'என்ற நீல நிற 'மை கார்ட்' அடையாள அட்டையின் வழி குடியுரிமையை வழங்குகிறது.இந்நாட்டு மலாய் சமூகத்தினரோடு சட்டப்பூர்வமாக நடந்தேறும் திருமணங்களின் வழி பிறக்கும் குழந்தைகள் இயல்பாகவே 'பூமிபுத்ரா'என்ற அந்தஸ்த்தைப் பெறுகின்றனர்.இந்திய முஸ்லீம் ஒருவனுக்கு அச்சலுகைக் கிடையாது ஏனெனில் அவன் இந்தியன்,தமிழ் பேசுபவன்.இனி இந்தோனேசியர்கள் மாத்திரம் தருவிக்கப்படுவார்கள் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பானது நான் ஓட்டுப்போடப் போவதில்லை எனும் முடிவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இம்மண்ணில் பிறந்தவர்கள் யாவருமே இம்மண்ணின் மைந்தர்கள்தான்.அரசின் மொழியில் 'பூமி புத்ராக்கள்'தான்.ஆனால் மலாய்காரர்கள் மட்டுமே பூமி புத்ராக்கள் என்று அடம்பிடித்து சொல்லிவரும் இந்த ஜனநாயகத்திற்கு ஓட்டுப்போடுவது எனக்கு நானே செய்யும் துரோகச்செயல் ஆகும்.

ஆளுங்கட்சியினர் அவரையும் அரசியலுக்கு வந்து போட்டிப் போடும்படி சவால்விட்டதில் சோர்ந்துப் போயிருக்கவேண்டும். நீதி கேட்டு நடைபயணம், 'பெர்சே' பேரணிக்கு தங்கள் சகாக்களை அனுப்பி கண்காணித்து வந்தது, இந்து செயற்குழுவின் அமைதிப் பேரணிக்கும் அப்படியே செய்தது, மனித உரிமை கழகத்தின் நடைப்பயணம் போன்ற அம்சங்களில் மட்டும்தான் வர் செயல்பட்டு வந்திருக்கிறார். அது அவர் தொடர்புடைய துறை என்பதால் இருக்கலாம். ஜனநாயகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். அவர்கள் காட்டும் கட்சியினருக்கு ஓட்டுப்போடக் கூட மனம் வரமாட்டேன் என்கிறது. என்ன செய்ய?

ஜனநாயக சுதந்தரத்தின் கீழ் இயற்றப்பட்ட சட்டங்களில் மரணதண்டனையான தூக்கில்போட்டு சாகடிப்பதும் பிரம்படி கொடுப்பதும் கேள்விக்குள்ளான ஒன்று. தற்செயலான நோக்கமில்லா கொலையும் தன்னைத் தற்காத்துக் கொள்ள புரியும் கொலையும் புரிந்துக் கொள்ளக்கூடியதே.திட்டமிட்டுக் கொல்வதும் வெறித்தனத்தில் சாகடிப்பதும் மனிதத்தன்மை இல்லாதது என்கிறார்கள். சரி. அக்கொடூரக்காரனை தூக்கில்போட்டு கொல்வதின் மூலம் மற்றவனுக்கு அப்பாவத்தை செய்யாதபடிக்கு பயம் வரும் என்றும் சொல்கிறார்கள். அதுவும் சரி. அக்குற்றவாளி தூக்குத் தண்டனை பெறுவதற்கு முன்பாகவே பத்து பதினைந்து வருடங்கள் சிறை அனுபவத்தில் தன்னை நொந்துக்கொண்டிருக்கக் கூடும். மனம் வருந்தி, திருந்திய குணங்களை கொண்டிருக்கக் கூடும். ஆகவே, சித்தரவதையின் வழி தூக்கில் போடாமல் அமைதியான முறையில் அப்பாவத்தின் விளைவை எதிர்கொள்ள விஷ ஊசி மரணதண்டனையை வழங்கலாம் என்கிறது ஒரு சார்புடைய மனித உரிமைக் கழகம்.

என் கேள்வி என்னவென்றால், உலக ஜனநாயக நாடுகள், குண்டுதாரி தீவிரவாதிகளுக்கு, அப்பாவி மக்களை குண்டு போட்டு அழித்தவர்களுக்கு இப்படிப்பட்ட மரணதண்டனையை ஏன் வழங்காமல் இருக்கிறார்கள்? இருபது முப்பது ஆண்டுகள் சிறைவாசம் என்கிற மட்டிலும் தங்கள் நீதிப் பரிபாலனையை கட்டுப்படுத்துகிறார்களே, ஏன்? இதற்கு மட்டும்தான் ஜனநாயகம்- சுதந்திரம்- தேர்தல்- ஓட்டுரிமையை சரியாக பின்பற்றுகிறார்கள் போலும்.

சிறுபிள்ளைகளை, பால்ய வன்முறைக்கும் காமப் பசிக்கும் ஆளாக்கும் காமுகர்களுக்கு பத்து வருடமும் பத்து பிரம்படிகளும் போதுமானதாக இல்லையென்றே நினைக்கிறேன். மனித உரிமைக் கழகம் இதனை கடுமையாகவே கருதுகிறது. அரசியல் சட்டங்கள் கடுமையாக கருதுவதில்லை. ஜனநாயக சுதந்திரத்தைக் காப்பாற்றவும் நிலைநிறுத்தவும் அரசியல் கட்சிகள் காட்டும் மெத்தனப் போக்கினால் ஆத்திரம்தான் வருகிறது. அவர்களின் பிள்ளைகளுக்கு நடந்தால்தான் வெகுண்டு எழுவார்களோ!

ஜனநாயகத்தின் சுதந்திரத்தை ஒரு கட்டுக்குள் வகுத்திருப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற ஒன்று. சுதந்திரத்திற்கு எல்லை இல்லையெனில் ஓர் ஆபாச நடிகையோ, கொள்ளைக்காரனோ, கொலைக்காரியோ, மதவெறியனோ, இனவெறியனோ, சுயநலக்காரனோ ஆட்சியைப்பிடிக்கும் போது ஜனநாயகம் சீர்குலைந்து போகிறது. மேலும், துடைப்பத்தைக் காட்டி சிரிக்க வைப்பதும், கிரீஸ் கத்தியைக்காட்டி பயமுறுத்துவது இந்த ஜனநாயக மேடையில்தான் தெனாலிராமன் நாடகங்களாய் நடந்தேறி வருகின்றன.ஆனால், கட்டுக்குள்ளாக்க வேண்டிய அவர்களை விட்டு விட்டு ஜனநாயகத்தின் முதுகெலும்பாகிய எழுத்து ஊடகத்தை இறுக்கி நசுக்குவது சர்வதிகாரமின்றி வேறென்ன? ஓட்டுக் கேட்கும் தகுதி இழந்தவர்களுக்கு ஓட்டுப்போடும் சாத்தியமில்லை.

இப்படிப்பட்ட ஜனநாயக சுதந்திரத்தின் வழி தேர்தலில் வெற்றிக்காண எந்தக் கட்சியுமே எல்லோரையும் திருப்திபடுத்த இயலாது என்பதும் ஒரு கட்சி, எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது என்பதும் சத்தியமான வார்த்தையாக இருக்கும் போது இந்த ஜென்மத்தில் நான் ஓட்டுப்போட மாட்டேன் என்றே முடிவெடுக்கிறேன்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768