வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 5
ஜூன் - ஆகஸ்ட் 08
முகப்பு  |  உள்ளடக்கம்

கட்டுரை

 

உயிர்களின் வழி அது அன்பெனும் புனல்

சீ.முத்துசாமி

 

       
 

ஏழு வருடங்களாக வளர்த்த செல்லப் பிராணி, ஒரு நாள் மதியம் கண் முன்னே உயிருக்குப் போராடி கடைசி மூச்சை முகத்தைப் பார்த்தபடி விட்டபோது, அது புதியதொரு அனுபவ வாசலைத் திறந்துவிடும் என எதிர்பார்த்ததில்லை.

வானம் திடீரென கறுத்து, மழைக் காற்று சிலிர்ப்புடன் உடலைத் தொட்ட ஒரு மதியம் அது. வழக்கம் போலவே அன்றும் தனது ரிசப்த உலகத்துள் தன்னை மெதுவாய் அமிழ்த்திக் கொண்டிருந்தது வீடு.

வீட்டின் பல்வேறு உறுப்புகளில் ஒன்றாக அதன் ஒரு பிரிக்க முடியா பிரதான உறுப்பினராக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் எந்தவொரு வளர்ப்புப் பிராணியும், தான் வாழும் சூழலுக்குள் இயங்கும் மனிதர்களின் உணர்வு தளத்தில் செலுத்தும் ஆதிக்கம் எத்துணை வலிமை மிக்கது என்பதும் அதின் நீட்சியாக, அம்மனிதர்கள் எதிர்கொள்ளும் முற்றிலும் அந்நியமான உளவியல் பரிணாமங்கள், அதிர்வுகள் எத்தகைய வண்ணம் கொண்டவை என்பனையும், அத்தகைய சூழலுள் தங்களை புகுத்திக் கொண்டிராத எவரும் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. சற்று கூடுதலாகச் சொல்வதென்றால், அதனை சராசரி மனித இயல்புக்குள் இறங்கி வராத, விரோத செயலாகவும் தோற்றமளிக்கலாம்.

மனித உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலையும், இறுக்கத்தையுமே சரிவர புரிந்துக் கொள்ள இயலாத நமது குறைபட்ட அறிவுக்கு இது போன்று சிற்றுயிர் ஜீவன்களுடனான உறவு என்பது அதன் சமத் தனத்திலோ அல்லது சற்றே உயர்வானதொரு தளத்திலோ இயங்குவது சாத்தியமே என்பதை புரிந்து கொள்வதும் சற்றே சிரமமான செயலே.

ஒரு வேளை, எனக்கு நேர்ந்தது போல சுய அனுபவம் சார்ந்து, அத்தனையதொரு தெளிவு பிறக்கலாம்.

நமது தமிழ் இலக்கியப் பரப்பில் அத்தகைய பதிவுகள் தமிழகம் உட்பட மிக அரிதாகவே காணப்படுகின்றன. அப்படியே காணக் கிடைத்தாலும், அவை அவ்வுலகம் சார்ந்த முழுமையுற்ற படைப்பாக அல்லாமல், ஆங்காங்கே தெளிக்கப்பட்ட துணை இணைப்புகளாகவே உள்ளன. ஆங்கில மொழியில் அந்த அனுபவம் சார்ந்த முழு நாவல்களே உள்ளன. வளர்ப்புப் பிராணிகளுடன் அவர்கள் கொள்ளும் உணர்வு பூர்வமான இறுக்கமான உறவின் வெளிப்பாடாக அவை இருக்கலாம். மகாத்மா காந்தி ஒருமுறை குறிப்பிட்டது போல, ஓரினத்தின் நாகரிக வளர்ச்சியின் படிநிலையை அது தனது ஆளுகைக்குள் வரும் பிராணிகளை அது நடத்தும் விதத்திலிருந்து அறியலாம் என்கிற கூற்று அவர்களை பொறுத்தமட்டில் நிஜம்தான்.

ஜப்பானியர்களை அவர்களுக்கு இணையாகச் சொல்லலாம். Hachiko என்கிற புகழ்பெற்ற நாய் அங்குண்டு. Dr. Eisabaro என்கிற பல்கலைக்கழக பேராசிரியரின் செல்லப் பிராணியான அது, ஒவ்வொரு நாளும் அவரைப் பின் தொடர்ந்து சென்று தோக்கியோவிலுள்ள Shibaya ரயில் நிலையத்தில் அவரை வழியனுப்பி வைத்து, மாலையில் அவர் வீடு திரும்பும் வரை அங்கேயே காத்திருந்து அழைத்துச் செல்லும்.

ஒரு நாள் வாதம்தாக்கி பல்கலைக்கழக வளாகத்திலேயே அவர் இறந்து போக, Shibaya ரயில் நிலையத்திற்கு அவர் வர இயலாமல் போனது. இது நடந்தது 1925ல் அவர் இறந்த பின்னும் Hachiko சுமார் (பத்தாண்டு காலம் 1935 வரை), அந்த இடத்திலேயே அவருக்காக காத்திருந்து உயிர் விட்டது. எந்த மனித மனத்தாலும் புரிந்துக் கொள்ளவோ, ஆழம் காணவோ இயலாத ஒரு பேரன்பின் சின்னமாசு, ஒரு வெண்கலச் சிலை Hachikoவின் நினைவாக, Shibaya ரயில் நிலையத்தில் இன்றும் உண்டு.

இதில் நாம் எங்கே இருக்கிறோம்? வெகு தூரத்தில் நிற்கிறோம் என்பதே நிதர்சனம். மனிதர்களால் கைவிடப்பட்ட அனாதை நாய்களை நாம் நடத்தும் விதமே சான்று. பிஞ்சு மனங்கள் நிறைந்து வழியும் பள்ளி வளாகத்துள் துப்பாக்கிகளோடு நுழைந்து, அவ்ரகளின் பயங்கொண்ட கண்ணெதிரிலேயே உயிர் பிச்சை கேட்டு அலறி ஓடும் நாய்களை சுட்டு வீழ்த்தி, அதுவும் போதாதென்று மரண அவஸ்தையில் ஓலமிட்டு துடிக்கும் அவற்றின் உடலில் லாவகமாக கூர்ந்த இரும்புக் கொக்கிகளை வசமாய் பாய்ச்சி, தரதரவென இழுத்துப் போகும் நாம் எங்கிருக்கிறோம் என்பதை சொல்லவும் வேண்டுமா?

மனித உறவுகளையும் அதன் சிக்கல் சிடுக்குகளையும் பூதக் கண்ணாடி கொண்டு அலசி ஆராய்ந்து பக்கங்களை நிரப்பும் நமது எழுத்துலகவாசிகள்... ஏன் அதற்கு மிக அருகாமையில் சுற்றிச் சுழலும் இந்த நுட்பமான உலகைக் கண்டு கொள்வதே இல்லை என்பது ஒரு புதிர்தான்.

இம்மண்ணுயிர்களில், அவற்றின் இருப்பும், இயக்கமும், தனித்துவமும், நுட்பமும் கொண்டது என்பதோடு அவற்றோடு உறவாடுவதும் உரையாடுவதும் ஒரு படைப்பாளியின் அனுபவ வெளியில் புதிய சேர்மானங்களைக் கொண்டு வந்து சேர்த்திடும் வலு கொண்டது எனில் ஏனிந்த விலகல்?

இரண்டு காரணங்களை முன் வைக்கலாம் எனத் தோன்றுகிறது. ஒன்று, அவர்களுக்கு அந்த உலகத்தின்பால் பரிவுடன் கூடியப் புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம். அல்லது, அதனைப் பதிவு செய்வதன் வழி தன்னை ஒரு escentric ஆக இந்தச் சமூகம் முத்திரை குத்தி விடுமோ என்கிற மனத்தடை காரணமாக இருக்கலாம்.

பிராணிகளின் மேலான நேசத்திலும், பராமரிப்பிலும் உலக மாந்தர்க்கே உதாரண புருஷனாய் விளங்கிய இர்வின் (Erwin) என்கிற மகத்தான வாழ்வியல் கலைஞரான ஆஸ்திரேலிய பல்லுயிர் நேசனுக்கு இணையானவராய் நம்மை நாம் உயர்த்திட தேவையில்லை. நிலம், நீர், ஆகாயம் என வாழ்நாள் முழுக்க அலைந்து திரிந்து, விஷ நாகங்களையும் தொட்டணைத்து முத்தமிட்டு மகிழ்ந்த அவனது காதல் முற்றிலும் ஆன்மீகம் சார்ந்தது. அவனுக்கு அது வரமாய் வாய்த்திருந்தது. அவனைப் போல் நம்மில் எவரும் ஆழ் கடலுள் மூழ்கி, தனது நேசத் தோழர்களுடன் உறவாடி அபத்தமாய் நேர்ந்த ஒரு விபத்தில் அதன் கொடுவாலால் தாக்கப்பட்டு, இதயம் பிளந்து அகால மரணமடைய தேவையில்லை. குறைந்தபட்சம் தனக்கென விதிக்கப்பட்ட சூழலிலேயே தன் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பிற உயிர்களின் மேல், சிறு காதலையேனும் வெளிப்படுத்தி வாழ்வதென்பது நமது வாழ்வுக்கு கூடுதலான அர்த்தச் செறிவை வழங்கும் என்பது திண்ணம். அதுவே இம்மண்ணில் தன்னை எல்லா வகையிலும் மேம்பட்ட ஜீவனாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அழகும் ஆகும்.

அதிலும் குறிப்பாக, 'அன்பு' குறித்து அதிகமும் பேசும் எழுத்துலக வாசிகள் தங்களின் சுய வாழ்வு வெளியில், அத்தகையதொரு 'அன்பின்' பரிணாம வளர்ச்சிக்கு தங்களை ஒப்புக்கொடுத்து, அதற்கான சூழாலை வலிந்து உருவாக்கம் செய்து கொள்வதோடில்லாமல், அதனை ஒரு பிரக்ஞைபூர்வமான மன இயக்கமாக அனுஷ்டிக்கவும் கடமைப்பட்டுள்ளார்கள்.

அதன் வழி, அவர்களின் படைப்புலகம் சார்ந்த நுண்ணுணர்வுகள் கூடுதலான கூர்மையும், நுட்பமும், ஆழமும், அகலமும், கைவரப் பெற்று புதியதொரு தளத்தில் அவர்களின் படைப்புலகம் பயணிக்கலாம். சிறு பிராயத்தில் நமக்கெல்லாம் வாய்த்திருக்கும் ஒரு பெரும் பேறு குழந்தைமை. அதன் பெருவாரியான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் பிராணிகளுடனான நமது உறவும் நேசமும் ஆடு, மாடு, நாய், பூனை, முயல், கோழி, வாத்து, இரை பொறுக்க வரும் சிட்டுக்கள், மைனாக்கள் என ஒரு பெரும் படையே திரண்டு நின்று உலவும் சோலை அது.

தோட்டப்புற வாழ்வில் இவை எல்லாமே அதன் ஒரு பிரதான அங்கமாக, ஒரு குடும்பம் போல அந்தச் சூழலுள் பொருத்தமுடன் பிணைந்து இயங்கிய ஒரு கடந்த காலம் நமக்குண்டு.

ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் ஒரு கோழிக் கூண்டும் முடிந்தால் ஒரு சிறு ஆட்டுக் கொட்டகையும் குடி கொண்டிருக்கும். வீட்டு அஞ்சடியில் கோழிப் பிய்யும், ஆட்டுப் புழுக்கையும் எந்நேரத்திலும் இருக்கும். கவிழ்ந்த வக்குலுக்குள்ளிருந்து ஆட்டுக் குட்டியின் குரல் கேட்கும். இன்னொரு வக்குலுக்குள்ளிருந்து அப்போதுதான் கூண்டிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொரித்து இரண்டு நாட்களே ஆன குஞ்சுகளோடு தாய்க்கோழி பேசும் குரல் வரும். இரைக்கப்பட்ட அரிசியை பொறுக்கும் சிட்டுக்களும் மைனாக்களும் அவ்வப்போது வந்து போகும். பொழுது சாய, வாசலில் வந்து நின்று கஞ்சித் தண்ணிக்கு காத்திருக்கும் மாடு கன்றுகள். இலை தழைகளுக்கு காத்திருக்கும் ஆடுகள். அவற்றைப் பார்த்து உறுமிக் கொண்டிருக்கும் குட்டி போட்ட நாய், வழக்கமான பிராஞ்சாவுக்கடியிலிருந்து.

அத்தகைய சூழலிருந்து நாமெல்லோருமே விடுபட்டு ஓர் உயிர்ப்பெற்ற வெறுமை வெளியுள் கால் பதித்து நடமாடிக் கொண்டிருக்கும் அவலச் சூழலிருந்து நம்மை ஓரளவேனும் மீட்டெடுத்து, மீண்டும் அந்த உலகத்துடனான உறவை புதுப்பிக்கவும் நீட்டிக்கவும் தேவையான முனைப்பை நாம் பெறுவது அவசியம்.

நமது மனதுக்கும் சூழலுக்கும் பொருந்தும், ஏதேனும் ஒரு வளர்ப்புப் பிராணியின் வழி- அது ஒரு நாயோ, பூனையோ, முயலோ, அணிலோ, பாம்போ- எதுவாக இருப்பினும், அதனுடனான தனது ஆன்ம தொடர்பை உறுதி செய்து கொள்வதன் வழி, ஒரு புதிய தளத்தில் படைப்பாளனின் பயணம் தொடங்கி விடும் சாத்தியம் உண்டு.

ஒரு பூவை, ஒரு மரத்தை, வானத்து ஒத்தை மேகத்தை, மழைச் சாரலின் சிலுசிலுப்பை, கிழக்கு வானில் மெல்ல தலை உயர்த்தும் காலைச் சூரியனை, அடி வானத்தில் முகிழ்க்கும் நிலவை எல்லாம் உள்வாங்கி, ஏதேனுமொரு புள்ளியில் ஆன்ம ஸ்பரிசத்தை உணர்வதற்கு நிகர்த்ததோர் அனுபவ வீச்சு, ஏதேனும் ஒரு பிராணியோடு, ஒரு மனிதன் குறிப்பாக படைப்பாளன் கொள்ளும் உறவில் உண்டு.

அன்றைய மதிய உணவு வேளையில், ஒரு தவறான புரிந்துணர்வில் இரண்டு நாய்களுக்கும் ஏற்பட்ட மோதலின் முடிவில், டோனியின் பின்னங்கால்கள் இரண்டும் பக்கவாட்டில் சரிந்து நிற்க முடியாமல் தடுமாறியபோது, ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதான சமிக்ஞை தென்பட மனம் பயத்தில் உறைந்தது.

அடுத்த சில விநாடிகளில், கண்களில் மிரட்சி ததும்ப, நாக்கு நிலை கொள்ளாமல் புரள, அவன் தரையில் சாய்ந்தான். மரணம் அவன் கண்களுள் குடி வந்திருந்ததை, பக்கம் உட்கார்ந்து தலையை வருடியபோது, உணர முடிந்தது. ஜீவமரண போராட்டத்தின் முதல் அறிகுறியாக முதலில் மலம் வெளியேறியது. அடுத்து மூத்திரம் போனது. பின், கண்களின் துடிப்பு நின்றுபோனது. அசைவற்று, நிலைகுத்தி, என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

உற்ற தோழனுக்கு உதவ முடியாத கையறு நிலையில், மரணத்தின் வாசலில் நின்று, தோற்று கண் கலங்க உட்கார்ந்திருக்க மட்டுமே முடிந்தது.

கொட்டும் மழையில், வீட்டுத் தோட்டத்திலேயே மூங்கில் புதருக்கடியில் குழிதோண்டி, அவனை அணைத்துப் போய், அதில் கிடத்திய கணத்தில், அழுகை வெடித்துச் சிதறியது.

இன்றும், இரவு நேரத்து இடி மின்னல் முழுக்கத்துடன் கூரையில் இரைச்சலிட்டு இறங்கும் மழைக்குத் திடுக்கிட்டு கண் விழித்து உட்கார்ந்து, மௌனமாகிப் போகிறேன்.

அவனுக்கு, இடியும் மின்னலும் மழையும் ஓலமிடும் காற்றும் பயத்தில் உடலை நடுங்க வைத்து, பதுங்க மூலை முடுக்கைத் தேடி ஓட வைக்கும் ஒருவகை பயம் (Phobia) கடைசிவரை இருந்தது.

அத்தகைய தருணங்களில், அவனுக்கு அடைக்கலமாகவும் ஆதரவாகவும் இருந்தது, எனது படுக்கையும், உடலை மெதுவாய் வருடியபடி தைரியம் சொன்ன சில வார்த்தைகளுமே.

ஏதேனும் ஒரு புள்ளியில், நம் உள்வெளி பிரதேசத்தில் வெடிப்புற்றுக் கிளம்பி பிரவாகமாய் ஆர்ப்பரித்து, நம்மை முழுமையும் ஆட்கொண்டுவிடும்,ஒரு பிரத்தியேக அனுபவ சாரத்தை, அது தந்துவிடுவது சாத்தியமே என்பதை அதன் மரணம் உணர்த்தியது.

பரஸ்பர சுயநலம் சார்ந்தே இயங்கும் மனித வாழ்வின் உறவுகளிலும் முறிவுகளிலும் வலிகளிலும் வெம்பி வெதும்பி நிலைகுலைந்து நிற்கும் எந்தவொரு மனித மனதுக்கும் மாற்று மருந்தாக- இதமும் ஈரமும் நுரைத்து பொங்கி வழியும் பரஸ்பர தூய அன்புப் பரிமாறலின் உறைவிடமாக, ரத்தமும் சதையும் கண்ணீரும் சிரிப்பும் கலந்துரு கொண்ட வேற்றுலக அனுபவக் கீற்றாக- எதனாலுமே, என்றுமே, இட்டு நிரப்ப இயலா இழப்பாக.

ஒரு மதிய வேளையில், காலத்தின் ஷண நேர மின் வெட்டில், என்னைக் கடந்து, காற்றில் கரைந்து காணாமல் போன, அந்த 'உறவு' மட்டுமே, 'உறவாக' நெஞ்சில் நிலைத்திருக்கிறது.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768