வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 5
ஜூன் - ஆகஸ்ட் 08
முகப்பு  |  உள்ளடக்கம்

லும்பன் பக்கம்

 

வெளிறு இன்மை அரிது

 

       
 

எனக்கும் கவிதைக்குமான உறவைப்பற்றி பேசுவது... ஏன் நினைப்பதுகூட சங்கடமானது. மற்றவர்களின் சங்கடத்தைப் பற்றி படிப்பது சிலருக்குச் சுவாரசியமாக இருக்கும் என்பதால் மட்டுமே மெனக்கெட்டு கவிதையுடனான எனது மூன்று அனுபவங்களை எழுத விழைகிறேன்.

அனுபவம் 1: நான் கல்லூரியில் படித்த காலத்தில் (லும்பன்களுக்குக் கல்லூரி உண்டா என சந்தேகிக்கக் கூடும்... பெரும்பாலான கல்லூரிகள்தான் லும்பன்களை உற்பத்தி செய்கின்றன)ஒரு கவிதை பட்டறை. ஒரு தாத்தா வந்திருந்தார். தாத்தா ரொம்பவும் கோபக்காரராகத் தெரிந்தார். மலேசியாவில் நல்ல தமிழை அவர்தான் தன் தோள்களில் பல ஆண்டுகளாக சுமந்து செல்கிறார் என கேள்விப் பட்டுள்ளேன். மலேசியாவில் எந்த மூலையில் இலக்கணம் தவறிய கவிதைகள் எழுந்தாலோ மரபுக்கவிதையை யாராவது விமர்சித்தாலோ அவர்களை விலாசு விலாசு என்று ஓயாது விலாசி பின் சோர்ந்து போய் குறட்டை விட்டுத் தூங்கிவிடுவார். அவர் குறட்டைகூட மிகச்சரியான சந்தத்தோடு இருக்கும் என்று கேட்டவர்கள் கூறியுள்ளனர்.

தாத்தாவை எனக்கு மூன்று சம்பவங்களின் வழி நன்கு அறிமுகம்.

சம்பவம் 1 : 'கடலோரக் கவிதைகள்' என்ற புதுக்கவிதை திறனாய்வை 'கடலோரக் கழுதைகள்' என நக்கல் செய்தபோது...
சம்பவம் 2 : எம்.ஏ.இளஞ்செல்வன் அவரை 'நாக்கு வளித்த மைனா' என திட்டியபோது...
சம்பவம் 3 : புதிதாக சில கவிஞர்களுக்கு அவர் புனைபெயர் தந்தபோதுல்.

தாத்தாவுக்கு யார் மேலாவது கோபம் வந்துவிட்டால் அவர்களுக்கு முதலில் புனைப்பெயர் இடுவார்.அதுவும் ஓசை ஒழுங்குடன் ஒலிக்கும். உதாரணத்திற்கு மூன்று சொல்லலாம்.

உதாரணம் 1 : சிவத்தை 'சவம்' என்றார்.
உதாரணம் 2 : மஹாத்மாவை 'மக்காத்துமா' என்றார்.
உதாரணம் 3 : மனுஷ்ய புத்திரனை 'மன நோயாளி' என்றார்.

தாத்தா அன்று எங்களுக்கு சந்தம் போதிக்க வந்திருந்தார். அதற்காக நிறைய பயிற்சிகள் அளித்தார். இறுதியில், ஒவ்வொருவரும் ஒரு சந்தக் கவிதை எழுத வேண்டும் என பணிக்கப்பட்டது. சந்தக்கவிதை என்றதும் எனக்குத் தூக்கிவாரி போட்டது.சின்ன வயதில் ஒரு நண்பனைப் பார்த்து,

கானாங்கோழி கானாங்கோழி
களூத்துல வெள்ள-உங்க அக்கா
வயித்துல புள்ள

என்று சந்தத்தோடு பாடிய போது அவன் கோபித்துக்கொண்டு அப்பாவிடம் சொல்ல ஓடியதும், அவன் அக்கா என் வீட்டில் போட்டுக்கொடுத்ததும் நினைவிற்கு வந்தது. மிகப்பிடிவாதமாக நான் சந்தத்தில் கவிதை எழுத மாட்டேன் என விரிவுரையாளரிடம் கூறியும் அவர் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் முதன் முதலாக எழுத நேர்ந்தது சந்த கவிதையை. சரியாக ஐந்தே நிமிடம்தான், என் கவிதை தயாராகிவிட்டது.

தாத்தா ஒவ்வொரு கவிதையாக வாசிக்கத் தொடங்கினார். சில கவிதைகளை மாற்றி அமைத்தார். சில கவிதைகளில் சந்தம் இல்லை என திட்டினார். சில கவிதைகளை வெகுவாகப் பாராட்டினார். சில நிமிடங்களில் எனது கவிதை அவர் கைகளில் இருந்தது. தாத்தா என் கவிதையை வாசிக்கத் தொடங்கினார்.

அச்சாக என்னில் நீ இருக்கையிலே- உரை
வீச்சொன்று எழுத தோன்றுதடி
எச்சாக எல்லாம் தெரியுதடி - உன் மார்பு
கச்சாக மாறிட தோன்றுதடி.

தாத்தா கொதித்தெழுந்தார். இதுபோன்ற ஆபாசமான ஒரு கவிதையை தான் எதிர்பார்க்கவில்லையென முகம் சுளித்தார். மாணவர்கள் மத்தியில் சலசலப்பு. விரிவுரையாளரின் மூக்கும் கண்களும் ஒட்டிக்கொண்டன. எழுதியது யார் என தெரியாமல் ஒருவருக்கொருவரை பார்த்துக்கொண்டனர். எந்த நேரமும் பெண்களின் பின்னால் சுற்றும் நண்பன் ஒருவனை அனைவரும் சந்தேகித்தனர்.அவன் பரிதாபமாக தன் மூதாதையர்கள் மேலெல்லாம் சத்தியம் செய்து மறுத்துக்கொண்டிருந்தான்.

நான் எனக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச சங்கப்பாடல்களை நினைவுப்படுத்தி அதன் வரிகளில் ஒளிந்திருக்கும் அந்தரங்கம் பற்றி தாத்தாவிடம் வினவினேன்.அவை கலைபூர்வமாக உள்ளதாகவும் நான் எழுதியது 'பச்சை' எனவும் பதில் வந்தது. அதற்குமேல் எதுவும் கேட்டால் என் பெயருக்கு ஏற்ற ஓசை ஒழுங்கில் புனைபெயரை அவர் தேடக்கூடும் என பயந்து அமர்ந்தபோது பெரும்பாலான மாணவிகள் என்னை முறைத்தபடி இருந்தனர். "அப்ப...நீ தான் எழுதினியா ?" என்றனர். "ஆம்...ஆனா உன்னை நினைத்து இல்லை"என்றேன். கேட்ட மாணவி துப்பட்டாவை சரிசெய்தபடி திரும்பிக்கொண்டாள். அன்றோடு எனக்கும் சந்தக் கவிதைக்குமான உறவு முடிந்து போனது.

அனுபவம் 2: சரி... தாத்தா இருந்தால்தான் நம்மைப் போன்றவர்களுக்கு ஆபத்து என முடிவெடுத்து தீவிரமாகப் புதுக்கவிதை எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதன் ஈடுபாட்டில் புதுக்கவிதை கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டேன். கருத்தரங்கு கோலசிலாங்கூரில் உள்ள ஒரு கோயில் மண்டபத்தில் நடந்தது. கோயிலில் சோறெல்லாம் போட்டார்கள். நல்ல ருசி.

மதியம் கருத்தரங்கு ஆரம்பமானது. எல்லோரும் நிறைய பேசினார்கள். எல்லோரையும் பாராட்டினார்கள். அவரவர் செய்த சாதனைகளை அவரவர்கள் புகழ்ந்து கொண்டனர். தங்களுக்குப் பிடித்த கவிஞர் பற்றியெல்லாம் அதிகம் கூறினர். அவர்களில் முக்கியமாக மு.மேத்தா, வைரமுத்து போன்றோரின் பெயர்களே திரும்பத் திரும்ப வந்தது.

இடையில் பாடலாசிரியர் வைரமுத்துவின் கவிதைகள் பற்றிய விவாதம் எழுந்தது. அனைவரும் தத்தம் கருத்து களைக் கூறிக்கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலும் வைரமுத்து மகத்தான கவி என்றே கூறப்பட்டது. எல்லா விவாதங்களுக்குப்பின் அவ்வரங்கின் தலைவர் "வைரமுத்துவின் வரிகளுக்கு நிகராக வேறு கவிதைகள் இல்லை...பாரதிக்கு அடுத்து வைரமுத்துதான்" என்றார். அடுத்த நொடியே பெரும் கரவோசை மண்டபத்தை சூழ்ந்தது. பாரதி அவ்விடத்தில் திடீரென தோன்றி "நெஞ்சு பொறுக்குதில்லையே..." என பாடத்தொடங்கியதை யாரும் கவனிக்கவில்லை.

ஒருவரின் கவிதை பிறரை கவர்வதோ அக்கவிஞரின் வரிகளையும் அல்லது அவரில் சொல்லாடல்களையும் பிறர் பின்பற்றி பயணிப்பதோ இலக்கியச்சூழலில் மிகச்சாதாரண நிகழ்வு. இன்னும் சொல்லப்போனால் ஒரு கவிஞனை தனது உணர்வெழிச்சிக்கு உகந்தவனாக தீர்மானிப்பது ஒரு வாசகனின் உரிமையும்கூட. அக்கவிஞனின் கவிதைகள் இலக்கிய சூழலுக்கு எத்தகைய பலம் அல்லது பலகீனத்தை சேர்க்கிறது என்பதெல்லாம் அதற்குப்பின்பான இலக்கிய விமர்சகர்களின் விமர்சனங்களினாலும் விவாதங்களினாலும் எல்லாவற்றிற்கும் மேல் காலத்தினாலும் களை பிடுங்கப்பட்டே வருகிறது. ஆனால் இந்நாட்டில் இலக்கியத்தை முன்னெடுத்துச்செல்வதாகக் கூறுபவர்கள் எந்த ஒரு இலக்கிய பரிட்சயமும் இன்றி இது போன்ற 'தீர்ப்புகளை' பொது மேடைகளில் வழங்குவது புதிதாய் எழுதத் தொடங்கியிருக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு பயங்கரமானது.

கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப பேனாவை வளைப்பவர்களையும் ... கலைஞருக்கு 'காக்கா' கவிதை எழுதுபவர்களையும்...மேடைக்கவிஞர்களையும்... மேடைக்கு வர பேரம் பேசுபவர்களையும்... ஒரு தமிழ் போராளி போல பாவனை செய்பவர்களையும் பாரதிக்கு நிகராக ஒப்பிட்டதில் அன்று அனைவருக்கும் பெருத்த மகிழ்ச்சி. இந்நாட்டில் நல்ல இலக்கிய சூழல் எழ வாய்ப்பே இல்லை என 999 முறையாக முடிவெடுத்துக்கொண்டேன்.

(மூன்றாவது அனுபவத்தை நான்காவது பத்தியிலேயே கூறிவிட்டதால் இதோடு முடித்துக் கொள்கிறேன்.)

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768