|
வாழ்வு பற்றிய மர்ம முடிச்சை
அவிழ்த்தது
அந்தக் கவிதை வரிகள்
என்றனர் அந்த இரண்டு சிறுமிகள்
அவர்கள் சொல்லித்தான்
எனக்கும் தெரிய வந்தது
அந்தக் கவித்துவமான வரிகளுக்குச்
சொந்தக்காரன்
நான் என்பது
ஆனால்
வெகு விரைவிலேயே
வாழ்வில் இரகசியத்தைச் சொன்ன
அந்த வரிகளை
ஏன் மொத்தக் கவிதையையுமே
மறந்து போனார்களாம்
அவர்கள்
பிரியமான அச்சிறுமிகளை
நான் நேசிக்கின்றேன்
அவர்கள்
என்னை நேசித்ததற்காகவும்
என் எழுத்து
எனக்குத் தராத திறப்பை, தரிசனத்தை
அவர்களுக்குத் தந்திருப்பதற்காகவும்,
அவற்றை மறந்ததற்காகவும்,
மறந்ததனால்
இன்னும் ஆயிரம் தடவைகள் மட்டுமல்ல
வாழ்வின் இறுதிவரை தொடரவிருக்கும்
அவர்களது இந்த தேடலுக்காகவும்,
இனிவரும் ஏதோவொரு வரிகளில்,
வாழ்வின் ஏதோவொரு நிகழ்வில்,
அந்த ரகசியத்தை
அவர்கள் கண்டடையலாம் என்பதற்காகவும்,
எல்லாவற்றிற்கும் மேலாக
அப்படி ஒரு ரகசியம் இருப்பதாக
அவர்கள் கொண்டிருக்கும்
அந்த நம்பிக்கைக்காகவும்
பிரியமான அச்சிறுமிகளை
நான் நேசிக்கிறேன்.
|
|