|
போதாமைகள்
2013, ஜனவரி முதல் நாளே
பள்ளிக்குப் போகணும். நல்ல தொடக்கம்தான்! இப்பவெல்லாம் பள்ளிக்குப்
போவதென்பது அவ்வளவு சுவாரஸ்யமுள்ளதாக இல்லாமல் ஆகிவிட்டிருப்பது எனக்கு
மட்டுமேயுள்ள பிரச்சனை இல்லையென்றே நம்புகிறேன். மிகவும் முக்கியமாக நான்
உணர்வது, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே அருகி வரும்
நெருக்கமான, மனதுக்கு இதமான உரையாடல்கள். இப்போ எல்லாரும் ரொம்ப பிஸி!
(அதையொட்டி `தலகணக்கு` என்கிற தலைப்பில் ஒரு கதை (?)
எழுதிக்கொண்டிருக்கிறேன். எப்ப எழுதி முடிப்பேன் என்று மட்டும்
கேட்டுவிடாதீர்கள். யாருக்குத் தெரியும்..!!)
இரண்டாம் முறையாகத் தமிழகப் பயணம் சென்று வந்தேன். இம்முறை
குடும்பத்தினருடன், 10 வருடம் கழித்து. இலக்கிய வாடை கொஞ்சமும் இல்லாமல்,
குமுதம், ஆனந்த விகடன் மட்டுமே துணைக்கிருந்த 21 நாட்கள். புத்தகக்கடைப்
பக்கம் போவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொடர் பயணங்கள்.
நாமக்கல்லில் 2 நாட்கள், சென்னையில் கடைசி இரு நாட்கள் மட்டுமே கொஞ்சம்
ஓய்வாக இருந்த நாட்கள்.
சென்னை / தமிழ்நாடு / கேரளா / கர்னாடகா / திருப்பதி சுற்றுலா எப்படி
இருந்தது?
மகன் : ஓகேப்பா...
மகள் : நாமக்கல் மட்டும் போலாம். மீல்ஸ் எல்லாம் சூப்பரா இருந்துச்சிபா...
மனைவி : திருப்பவும் போகணும்... இன்னும் பல முக்கிய கோவில்களைப்
பார்க்காமல் வந்துவிட்டோமே... திருப்தியாவே இல்லை... பிள்ளங்கள இங்கேயே
விட்டுட்டு போவோம்...
நான் : போன தடவை வந்தபோது பொது கழிப்பிடம் இல்லை. இருந்த ஒன்றிரண்டும் மிக
மோசமான நிலையில் இருந்தன. திறந்த வெளியில் எல்லாமே நடந்தது. இந்த தடவை
பெரும்பாலான இடங்களில் பொது / கட்டண கழிப்பிடங்கள் இருந்தன. மோசமாக இல்லை;
பயன்படுத்தலாம். ஆனாலும்... இப்பவும் திறந்த வெளியில்தான் எல்லாமுமே...
கட்டாயம் திரும்பவும் போவோம். மனதுக்கு மிக நெருக்கமாக உள்ள பூமியல்லவா.
***
வல்லினம், செம்பருத்தி, புத்தகச் சிறகுகள் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய
வகுப்பு / நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன். ஞாயிறு விடுமுறையாகையால் கிட்டிய
வாய்ப்பு. 19-20 ஜனவரியில் நடைபெற்றது.
இரண்டு நாள் நிகழ்வுகளையும் சலைக்காமல் வழிநடத்தினார் ஆதவன் தீட்சண்யா.
படைப்பாக்கம், படைப்பூக்கம் பற்றிதான் பெரும்பாலும். பொதுவாகவே எந்த
இலக்கிய நிகழ்ச்சியாயினும் அதற்கேற்ற தயார் நிலையில் செல்வதே என் வழக்கம்.
பேச்சாளர்கள் சொல்வதை சரியான (குறைந்த பட்சம் ஏறக்குறைய சரியான) பொருளில்
விளங்கிக் கொள்ளவோ, எதிர்வினையாற்றவோ இத்தகைய முஸ்தாயிபுகள் அவசியம். ஆனால்
இம்முறை சும்மாவே போனேன். புதியவர்களுக்கு முக்கியமான வகுப்புதான்.
வல்லினத்தின் இம்முயற்சி பாராட்டத்தக்கது. அதே சமயம், இவ்வகுப்புகள்
எத்தகைய விளைவுகளை ஏற்படுத்திய��ள்ளன, எத்தகைய புதிய முயற்சிகளுக்கு
வடிவமைத்தன / வழிகாட்டியாக அமைந்தன என்பது பற்றியும் ஆய்ந்தறிவது அவசியம்.
அதற்கென ஒரு போஸ்ட் மோர்டம் நடத்துவது பொருத்தமாக இருக்கும்.
முதல் நாள் நிகழ்ச்சியின் இரவு அரங்கில் கலந்து கொள்ளவில்லை. அங்கு
பேசப்பட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. தலித் இலக்கியம் - ஏன், எதற்கு
போன்ற விவரங்கள், முக்கியமான தலித் எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றி
இப்போதெல்லாம் தெரிந்துகொள்வது சிரமமான காரியமல்ல. ஆனால், அப்படைப்புகளின்
உள்ளீடாக இருக்கும் அரசியல், ஒரு நேரடிப் பேச்சில் மேலும் தெளிவாக
வெளிப்படும் என்றுதான் நினைக்கிறேன். ஆதவன் தீட்சண்யா மிகத் தெளிவாகவே தன்
கருத்துகளை முன் வைத்தார். சில கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை; அது
சகஜம்தான். குறிப்பாக, சு.ரா மற்றும் ஜெயமோகன் இலக்கிய செயல்பாடுகள்
குறித்த அவர் நோக்கு... எல்லோரும், எல்லாவற்றையும் ஒன்றுபோல்தான்
புரிந்துகொள்ளவேண்டும் என்பது சரியாக இருக்காது. அவரவர் சமூக, இலக்கிய
பின்னனியும், பல சமயங்களில் குழு மனப்பான்மையும் கட்டமைக்கும் கருத்தாக்கம்
அது. என் இலக்கிய பார்வையை சரிபார்த்துக்கொள்ள கிடைக்கும் ஒரு வாய்ப்பாகவே
இத்தகு நிகழ்ச்சிகளை உள்வாங்குகிறேன்.
மற்றபடி, அறைத்தோழரான பச்சைபாலனுடன் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்;
ஆதவன் தீட்சண்யாவிடம் தனியாகக் கொஞ்சம் கேட்கவேண்டியிருந்தது; நவீனுடன்
உட்கார்ந்து பேசி வருடங்களாகிவிட்டது. டாக்டர் சண்முக சிவாவிடம் ஒரு 'ஹலொ
டாக்டர்'-ரைத் தாண்டி ஏதாவது பேசியிருக்கலாம்...
போதாமை தொடர்ந்து வருகிறது.
|
|