முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  கதவைத் தட்டும் கதைகள்... 26
- ராஜம் ரஞ்சனி -
 
 
 
 

ஒ. ஹென்றியின் ‘The gift of the Magi’

விடிந்தால் கிறிஸ்துமஸ். அவளிடமிருப்பதோ 1.87 டாலர் மட்டுமே. மளிகை கடையிலும் சந்தையிலும் பேரம் பேசி சிறுக சிறுக சேமித்து வைத்த பணம். அதைக் கொண்டுதான் அவளது கணவன் ஜிம்முக்குப் பரிசு வாங்க வேண்டும். மேலும் பணத்திற்காக யோசித்தபோது அவளது கூந்தல் அவள்முன் வருகின்றது. அதை விற்று பணமாக்குகின்றாள். அந்தப் பணத்தில் ஜிம்முக்குக் கைக்கடிகாரத்திற்கான பிளாட்டின சையின் ஒன்றை வாங்குகின்றாள். அவனது கைக்கடிகாரத்தின் வார் பழையதாகி போயிருந்தது. இதை மாற்றிக் கொண்டால் அவனுக்கு எத்தகைய பெருமை ஏற்படும் என்பதை எண்ணி பூரித்து போகின்றாள். தான் இழந்து விட்ட கூந்தலின் நினைவு வந்தாலும் ஜிம்மைச் சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணுகின்றாள். தன் கூந்தலைவிட ஜிம்முக்காக தான் வாங்கி வந்துள்ள கிறிஸ்துமஸ் பரிசு இன்னும் அவனைப் பன்மடங்கு ஆனந்தமாக்கும் என கருதுகின்றாள். வீட்டினுள் நுழைந்த ஜிம், டெல்லாவைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றான். அவனைச் சமாதானப்படுத்துகின்றாள் டெல்லா. அவன் அவளுக்காக வாங்கி வந்த பரிசைக் காட்டுகின்றான். அழகிய சீப்பும் கூந்தலுக்கான ஆபரணங்களையும் கண்டு மகிழ்கின்றாள் டெல்லா. தன் கூந்தல் விரைவாக வளர்ந்துவிடுமென்றும் அவனுக்காக அவள் வாங்கி வந்த பரிசைக் காட்டுகின்றாள். அவளுக்குப் பரிசு வாங்குவதற்காக தான் தன் கைக்கடிகாரத்தை விற்று விட்டதாக கூறுகின்றான். ஒ.ஹென்றியின் ‘The gift of the Magi’ கதை இது.

பரிசுகள் தரும் பழக்கம் காலங்காலமாய் பலவித காரணங்களைத் துணைக் கொண்டும் பல சமயங்களில் காரணங்களே ஏதுமின்றியும் இருந்து வருகின்றது. இதில் வற்புறுத்தல்களும் சில வேளைகளில் இடம்பிடித்துக் கொள்கின்றன. பரிசுகளின் விலைகளே அன்பை நிர்ணயம் செய்வதாய் போலியான அடையாளத்தையும் பெற்று விட்ட நிலையும் பெருகிவிட்டது. அத்தகையதொரு சூழலை உடைத்தெறிகின்றது இக்கதை. பரிசுகளைப் பெறுவதில் மட்டுமல்ல பரிசுகளைத் தருவதிலும் எத்தகைய மகிழ்ச்சியை அடைய முடியும் என்பதை கதையின் நடை நகர்த்திக் கொண்டே சொல்கின்றது. பரிசைப் பெறும் கணப்பொழுதின் மகிழ்ச்சியைவிட பரிசைத் தர எடுக்கும் முயற்சிகள் தரும் மகிழ்ச்சி இன்னும் அளவற்றதென்று எனக்கூட எண்ண தோன்றுகின்றது.

தூய அன்பின் வெளிப்பாடாக தியாகம் இருக்கின்றது. ஒருவர் மற்றொருவர் மீது வைத்திருக்கும் அன்பு பெருகும்போது அவரது மகிழ்ச்சிக்காக எதையும் தியாகம் செய்ய மனம் மறுப்பதில்லை. அழகை அள்ளித்தரும் டெல்லாவின் நீண்ட கூந்தல், தலைமுறை கடந்து ஜிம்மிடம் அடைக்கலமாய் இருந்த கைக்கடிகாரம் என இரண்டுமே அவரவருக்கு மிகவும் முக்கியமானவை. ஆ��ாலும் அதையும் துறக்க எண்ணும் மனம் அவர்களின் அன்பின் ஆழத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.

தியாகம் எனப்படுவது தமக்காகவும் பிறருக்காகவும் என வேறுப்படுத்திப் பார்க்க முடியும். முன்னதில் பெரும்பாலும் பலன்கள் தியாகத்தின் வேரையே வந்தடைந்துவிடும். முன்னதைவிட பின்னது சற்று சிரமமானது. கதையில் வரும் டெல்லா அவளது கூந்தல் வெட்டப்பட்டப்பின் ஜிம் தன்னை வெறுத்துவிடுவானோ என அஞ்சுகின்றாள். ஆனாலும் கூந்தல் அவளுக்குத் தரும் அழகைவிட தான் வாங்கி வந்த கைக்கடிகாரத்திற்கான பிளாட்டின சையின் அவன் கைகளில் தவழப்போகும் அழகு அவளின் அச்சத்தை நீக்குகின்றது. மனதில் எழும் அச்சங்களைக் கிள்ளி எறியும் வலிமை இத்தகைய அன்பிற்கு உண்டு.

வீட்டிற்குத் திரும்பும் ஜிம், தன் மனைவியின் நீண்ட கூந்தல் வெட்டப்பட்டதை அறிந்ததும் அதிர்கின்றான். ஆனால் அவனிடமிருந்து வசை வார்த்தைகள் வரவில்லை. இத்தகையதொரு சூழலை இன்றைய வாழ்க்கைநிலையில் வைத்துப் பார்த்தால் நொடி பொழுதில் தொடர்ந்த வசை வார்த்தைகள் காதில் விழும். மனைவியானவள் தன் அனுமதியின்றி சிறு விஷயங்களைக் கூட எதையும் செய்வதைக் கணவன் விரும்புவதில்லை. அங்கே அன்பிற்கு இடமிருப்பின் வசை வார்த்தைகளுக்கு இடமேது என்ற கேள்வி எழவே செய்கின்றது.

டெல்லா தன் கணவன் ஜிம்மின் மகிழ்ச்சியையும், ஜிம் தன் மனைவி டெல்லாவின் மகிழ்ச்சியையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி மகிழ்ச்சியைத் தருவது என்றே அவர்கள் இருவரின் எண்ணங்களும் ஒன்று சேர்கின்றன. எண்ணங்களின் சங்கமங்களும் உன்னத அன்பின் வெளிப்பாடுதானே? டெல்லா ஜிம்மைக் கணவனாக பெற்றதும் ஜிம் டெல்லாவை மனைவியாக பெற்றதும் அவர்களின் தூய அன்பின் சங்கமமாய் தெரிகின்றது.

நம் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சியைவிட மகத்தான இன்பத்தை அளிக்க வல்லது. அதை உணரும் தருணங்கள் மிக குறைவு. கதையில் அத்தகையதொரு தருணம் அமைந்துவிட்டது.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768