|
பழம்பெரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான ப.சந்திரகாந்தம் எழுதி தயாரித்து
உள்ள ‘200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்’ என்னும் ஆவணப்படத்தை நேற்று
இரண்டாம் முறையாக மிகப் பொறுமையாக பார்த்தேன். இது நம் நாட்டு
இந்தியர்களின் முழு தோற்றத்தையும் ஆவணப்படுத்தும் பெரு முயற்சி என்பதால்
தீவிர விவாதத்திற்கு உட்படுத்துவது மிக முக்கியமாகும். துரதஷ்டவசமாக இதுவரை
இந்த ஆவணப்படம் குறித்த கருத்து எதுவும் பொதுப் பார்வைக்கு
வைக்கப்படவில்லை. ஆனால் ஓர் இன வரலாற்று ஆவணம் என்று முன்னிலைப்படுத்தப்
படும் இந்த படைப்பு குறித்து எதிர்வினை ஆற்றாமல் விடுவது மிகப்பெரிய
வரலாற்று பிழைக்கு வித்திட்டு விடும்.
ப.சந்திரகாந்தம் செய்து முடித்திருப்பது மிகப்பெரிய திட்டம் என்பதை மிக
ஆனந்தமாக வரவேற்கலாம். கால விரயத்தையும் கடின உழைப்பையும் அலைச்சலையும்
பலபேரின் ஒத்துழைப்பையும் ஒருங்கே விழுங்கியிருக்கும் இந்த ஆவணப்படம்
சிறப்பான திட்டம் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அத்திட்டம் தனது
நோக்கத்தை சென்றடையாமல் தடுமாறி போயிருப்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக்
கொள்ள வேண்டியிருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் அதிகார
வர்க்கத்தோடு ஒத்துப்போவதன் வழி பல்வேறு அனுகூலங்களைப் பெற்று வாழ்ந்த
மேட்டுக் குடிகளின் ஒற்றைப் பார்வையில், காலங்காலமாக கூறப்பட்டு வரும் அதே
வரலாறு சற்றும் மாற்றுச் சிந்தனை அற்று மீண்டும் நம்முன்
படைக்கப்பட்டிருக்கிறது.
அடிப்படையில் வரலாற்று நூலோ படமோ படைக்க விரும்பும் படைப்பாளருக்கு மிக
முக்கியமாக இருக்க வேண்டியது பண்புகள், அரசியல் சார்புநிலை அற்ற மனமும்,
தீவிர ஆய்வு பார்வையும் (உண்மையைக் கூற) கொஞ்சம் துணிவுமேயாகும். வரலாற்று
நிகழ்வுகளைக் காட்டும் நிழற்படங்களும் ஆண்டு நிரலான நிகழ்வு தொகுப்பும் ஒரு
போதும் வரலாற்று மீள்பார்வைக்குப் போதுமானவை அல்ல. அதோடு ஒரு நாட்டின்
அல்லது இனத்தின் வரலாற்றை கூற விழையும் போது கூறியது கூறல்
பெருங்குறையாகாது. ஆனால் கூற வேண்டியதைக் கூறாதது பெரும் குற்றமாகும்.
ப.சந்திரகாந்தம் இந்த ஆவணப்படத்தில் கூறவேண்டியதைக் கூறாததோடு பல காலம்
கூறப்பட்டுவரும் தகவல்களிலும் உண்மை நிலை காணும் ஆய்வு சிந்தனை இல்லாமல்
பொதுபுத்திக்கு உட்பட்டதை மட்டுமே நம்பியிருக்கிறார்.
முதலாவதாக ‘200 ஆண்டு வரலாறு’ என்று தலைப்பிடப்பட்டாலும் 2000 ஆண்டு
சரிதத்திலிருந்து ஆவணம் தொடங்குகிறது. பண்டைய கெடா அரசு, ராஜராஜ சோழனின்
ஆளுமை, ராஜேந்திர சோழன் வருகை, பூஜாங் பள்ளத்தாக்கு என்று ஆரம்பமாகும்
முன்னோட்டம் பற்றி கூற ஒன்றும் இல்லை. மலேசிய இந்தியர் வரலாறு என்றதுமே
இங்கிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது ஒரு சாங்கியம் என்பதாலும் இது
புத்தம் புது தகவல் இல்லை என்பதாலும் இப்பகுதியை அப்படியே விட்டு விடலாம்.
சடங்கு பூர்வமான தொடக்கம் என்று மட்டுமே கொள்ள வேண்டும்.
அடுத்து 500 ஆண்டு கால வரலாறு காட்டப்படுகிறது. மலாக்கா வரலாற்றில்
இந்தியரின் பங்கு பற்றி மேலோட்டமாக சில தகவல்களும் மலாக்கா செட்டிகள்
குறித்த பதிவும் உள்ளது. மலாக்கா அரசியலில்/அரண்மனையில் தமிழர்களின் பங்கு,
மலாய் இலக்கியத்தில் இந்திய உள்ளீடு, சாயல் போன்ற வேறு பல செய்திகள்
விடுபட்டுள்ளன. அவையும் பெரிய இழப்பு என்று சொல்ல முடியாது. இழப்புகள்
நமக்கு பழகிப் போய்விட்டதால் இவை மனதை பெரிதும் பாதிக்க வில்லை.
ஆனால் அடுத்த கட்ட வரலாறு, அதாவது உண்மையான 200 ஆண்டு கால வரலாறு என்று
காட்டப்படும் பகுதி மிகப்பெரிய ஓட்டைகளையும் விருப்பு வெறுப்புகளுக்கேற்ற
சார்பு நிலைகளையும் வெளிப்படையாக காட்டி வரலாற்று ஆவணம் என்னும் தகுதியை
கேள்விக்கு உட்படுத்தி விட்டது.
உதாரணத்திற்கு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட
இந்தியர்கள் பெரும்பாலும் சஞ்சிக் கூலிகளாக பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்
என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும்
இதை மறவாமல் எழுதி வைத்துள்ளனர். ப. சந்திரகாந்தமும் அதையே மீண்டும் கூறி
உள்ளார். நம் இன வரலாற்றில் அனைவரும் ரப்பர்/ கரும்பு/காப்பி தோட்டத்தில்
பணி செய்ய சஞ்சியில் வந்தவர்கள் என்பது மேலோட்டமான பார்வைதான். இவர்களைத்
தவிற பல சிறு வியாபாரிகள், சொந்த தொழில் செய்வோர் முதலாம் உலகப்போருக்குப்
பிறகு தம் சொந்த முயற்சியில் மலாயாவுக்கு கப்பல் ஏறினர் என்பது முக்கிய
தகவலாகும். இவர்கள் மிகச்சிறிய குழுவினர் என்றாலும் நம் வரலாற்றின் மிக
முக்கிய அடையாளமாவர். லேவாதேவி தொழில் செய்ய வந்த செட்டியார்கள், கோயில்
சார்ந்த தொழில் செய்ய வந்த அர்ச்சகர், பொற்கொல்லர், சுயமாக முடிதிருத்தும்
கடைகளை நடத்திய நாவிதர்கள் போன்றோர் வரலாற்றில் குறிக்கப்பட வேண்டியவர்கள்.
பினாங்கு, தைப்பிங், கோலாலம்பூர் போன்ற பெருநகரங்களில் முக்கிய பொருளாதார
மையங்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. சீனர் முதற்கொண்டு பிற
இனத்தவர் அனைவரோடும் போட்டியிடும் ஆற்றல் இவர்களிடம் இருந்துள்ளது.
பினாங்கு ஸ்ட்ரீட் என்னும் பகுதியில் தமிழர்களின் வட்டிக்கடைகள், மொத்த
வியாபார கிடங்குகள், பல்வேறு கடைவியாபாரம் போன்றவற்றை சிறப்பாக நிர்வகித்த
வரலாற்றை நம் அடுத்த சந்ததியினருக்கு கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும்.
பினாங்குக்குக் கொண்டு வரப்பட்ட இந்திய கைதிகள் பற்றி கூறியிருக்கும் ப.
சந்திரகாந்தம் சுயதொழில் செய்ய வந்தவர்களைப் பற்றி கூறாமல் விட்டுச்
சென்றுள்ளார். ப. சிங்காரம் தனது ‘கடலுக்கு அப்பால்’ நாவலில் காட்டும்
பினாங்கு ஸ்ட்ரிட் காட்சியை வாசகர்கள் ஒரு முறை படித்துப் பார்க்க
வேண்டும். ரெ.கார்திகேசுவின் ‘விமர்சன முகம் 2’ ஐயும் வாசித்துப்
பார்க்கலாம்.
அடுத்ததாக சுதந்திர மலேசிய வரலாற்றை காட்டும் பகுதிகள் முழுக்க ஆளும்
கட்சியின் பிரச்சார பகுதி போன்ற தோற்றத்தையே தருகிறது. நம் இன வரலாற்று
தடங்கள் பலவற்றை ப. சந்திரகாந்தம் மிக லாவகமாக தாண்டிச் செல்கிறார்.
துங்குவின் பின் ஒற்றுமையாக நின்று நாம் வெற்றி பெற்றோம் என்னும் தோற்றம்
மீண்டும் மீண்டும் மிக செயற்கையாக வலியுறுத்தப் படுகிறது. ம.இ.கா,
இந்தியர்களை பிரதிநிக்கும் மிக ஆற்றல் வாய்ந்த அரசியல் கட்சி என்று
கூறப்படுகிறது.
தென் இந்திய தோட்ட தொழிலாளர் நிதி எவ்வாறு கைமாறியது என்பது அழகாக
மறைக்கப்பட்டு இன்று என்.எஸ்.டி ஆறுமுகம் பிள்ளை தொழிற்பயிற்சி கல்லூரியாக
மேம்பட்டு இருப்பதாக காட்டப்படுகிறது. தமிழர்களுக்குச் சொந்தமான சொத்தை
அரசாங்கம் மிகதந்திரமாக அபகரித்து விட்டது என்பதை சொல்ல ஒரு படைப்பாளருக்கு
நேர்மையும் துணிவும் வேண்டும். இதே வகையில் புவா பாலா கிராமம் பற்றிய
குறிப்பும் இல்லை. பல இந்திய இயக்கங்கள் தோற்றுவித்த கூட்டுறவு கழகங்கள்
பற்றி காட்டப்பட்டாலும் பல தமிழர்களின் மனதில் ஆறா வடுவாய் இருக்கும்
மைக்கா ஹோல்டிங்ஸ் குறித்து மெளனம் காக்கப்படுகிறது.
மலாயாவில் மிகத் துணிச்சலாக பிரிட்டீசாரை எதிர்த்து தூக்கு மேடை ஏறிய மலாயா
கணபதியைப் பற்றியோ, எதிர்க்கட்சியில் இருந்து பல நிலைகளில் தமிழர்களுக்காக
போராடிய மறைந்த பட்டு போன்றவர்கள் குறித்தோ எந்த தகவலும் இல்லை. ஆனால்
தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்த வேலு நாச்சியார் உட்சாக தொணியில்
புகழ்துரைக்கப்படுகிறார்.
இதைவிட அபத்தமான செயல், மே 13 இனக்கலவரம் குறித்த எந்த தகவலும் இந்த
ஆவணப்படத்தில் இல்லை. இன்றும் நமது தலைவர்கள் நம்மை ‘அச்சமூட்டி எச்சரிக்க’
இந்த மே 13-ஐ மேற்கோள் காட்டி வரும் போது இது குறித்த தகவல்களை
ப.சந்திரகாந்தம் ‘மறந்திருப்பது’ வேடிக்கையானது. மே கலவரம் பற்றிய தகவல்
இல்லாததால் அதன் தாக்கம் குறித்தோ, அரசாங்கம் கொண்டுவந்த புதிய பொருளாதார
கொள்கை குறித்தோ இந்தியர்கள் எதிர்நோக்கிய பின்னடைவுகள் குறித்தோ எதுவும்
பேசப்படவில்லை. உண்மையில், மலேசியாவில் இன வரலாற்றைப் பேசும் போது ‘மே 13’
நடுநாயகமாக இருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இனங்களின் அரசியல், “மே
13க்கு முன்னும் மே 13க்கு பின்னும்” என்ற அடிப்படையில்தான் ஆய்வு செய்யபட
வேண்டும்.
மற்றும் ஒரு மிகப்பெரிய கொடுமை தமிழ்ப்பள்ளிகள் குறித்த அங்கமாகும்.
இன்றைக்கும், இடிந்து விழும் நிலையில் பல தமிழ்ப்பள்ளிகள் ஒட்டுக்
குடித்தனம் நடத்திக் கொண்டு இருக்கும் அவலம் நம் கண்முன்னே நிதர்சனமாக
தெரிந்தாலும், ப. சந்திரகாந்தம் கண்களுக்கு அவை அழகிய அடுக்கு மாடி
கட்டிடங்களாகவே தெரிவது மிகப்பெரிய வியப்பு. சுண்ணாம்புக் குகைக்குள்
தள்ளப்பட்ட அப்பர் சுவாமிகள் இறை பக்தியால் சுண்ணாம்புக் குகையின் வெம்மையை
சகித்துக் கொண்டு ‘மாசில் வீணையும் மாலை மதியமும்.... “ என்று பாடினாறே
அப்படிப் பட்ட உச்ச முக்திநிலை ப.சந்திரகாந்தத்துக்கு வந்து விட்டதோ என
வியக்கிறேன். மலேசிய தமிழ்ப்பள்ளிகள் என்று காட்டப்படும் அழகிய கட்டிடங்கள்
வருந்தத்தக்க வரலாற்று ஏய்ப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும், 2011 வரை இந்திய அரசியல்வாதிகள் ‘ஆப் து டேட்’ ஆக
காட்டப்படுகிறார்கள். ஆனால் 2007-ல் நம் இனத்தின் அடி மனத்தின் குரலாக
ஒலித்த ஹிண்ராஃப் போராட்டம் குறித்த செய்திகள் முற்றாக
ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை
ஏற்படுத்திய மே 13, ஹிண்ராஃப் போன்ற போராட்டங்களை ஒதுக்கி விட்டு வரலாற்று
ஆவணப்படம் எடுத்திருக்கும் ப.சந்திரகாந்தத்தை ‘மனதார’ பாராட்டலாம்.
இவற்றோடு, இசை, விளையாட்டு, போன்ற துறைகளைச் சார்ந்தோரின் தகவல்கள் முப்பது
ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் உள்ளன. மலேசிய கலைத்துறை வளர்ச்சியின் இன்றைய
நிலை மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இலக்கியத்துறை குறித்த
பேச்சே இல்லை. மலேசியாவில் தமிழ் இலக்கியம் இல்லை என்பது அவர் முடிவு
போலும். (நீண்ட கால எழுத்தளரான அவருக்குத் தெரியாததா?).
மலேசியாவில் இந்தியர்களை அரசாங்கம் தங்கத் தட்டில் வைத்து காப்பாற்றும்
அழகை கடைசியாக பிரிக்ஃபில் லிட்டல் இந்தியாவின் வனப்பை காட்டி நிறைவு
செய்திருக்கிறார். வரலாற்றை வெள்ளாவி போட்டு துவைத்து அழகாய் காட்ட
ப.சந்திரகாந்தம் எடுத்திருக்கும் முயற்சியே இந்த ஆவணப்படம். இந்நாட்டில்
இந்தியர்கள் எந்தக் குறையும் இன்றி வாழ்ந்தனர், வாழ்கின்றனர். வாழ்வார்கள்
என்ற தனது ‘மாயாஜால’ நம்பிக்கையையே இதன்வழி ப.சந்திரகாந்தம் வெளிப்படுத்தி
இருக்கிறார்.
முடிவாக, மலேசிய அரசாங்க தகவல் அமைச்சு அவ்வப்போது தாயாரிக்கும் அரசியல்
பிரச்சார விளம்பரப்படங்களுக்கும் ப.சந்திரகாந்தம் தயாரித்திருக்கும் இந்த
ஆவணப்படத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் உண்மையின் சாயலில்
வேறொன்றை கூறுபவை.
|
|