முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  மாணவர் போராட்டமும் ஈழத் தமிழர்களும்
- அ.மார்க்ஸ் -
 
 
 
 

சுமார் மூன்று வாரங்கள் தமிழகத்தைக் குலுக்கிய மாணவர் போராட்டம் ஓய்ந்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா அவையின் மனித உரிமை கவுன்சில் மாநாடு கூட இருந்த தருணத்தில் சானல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட பாலச்சந்திரன் கொலைப் படங்கள் மாணவர் எழுச்சியைப் பற்ற வைத்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனைப் (12) பிடித்துப் பங்கரில் வைத்திருந்து பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் காட்டும் படங்களை இங்கு ‘இந்து’ நளிதழ் வெளியிட்டது. யாருடைய மனதையும் உலுக்கும் படங்களாக அவை அமைந்தன.

2009 மேயில் நடந்த போர்க்கொடுமைகளில் ஒன்று இது. பாலச்சந்திரனை மட்டுமல்ல பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் இப்படிப் படுகொலை செய்யப்பட்டனர். வெள்ளைக் கொடி ஏந்திச் சரணடைய வந்தவர்களும் கொல்லப்பட்டனர். எனினும் அப்போது இன்றளவிற்கு எழுச்சி ஏற்படவில்லை. யாராலும் வெல்ல முடியாத அமைப்பு எனப் புலிகள் இயக்கம் குறித்துக் கட்டமைத்திருந்த பிம்பத்தின் விளைவாகவும், பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்கிற பிரச்சாரத்தைத் தொடர்ந்து புலி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்ததாலும் அன்று இந்த அளவிற்கு எழுச்சி ஏற்படவில்லை. எனினும் முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டித் தொடர்ந்து 19 பேர்கள் தீக்குளித்தனர்.

இன்று பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்ட கொடுமை ஆதாரத்துடன் வெளிப்பட்டமை, ஆண்டுகள் நான்காகியும் பிரபாகரனும் முக்கிய தலைவர்களும் உயிருடன் இருப்பதற்கான தடயங்கள் ஏதும் இன்மை, ஜெனிவாவில் கூட இருந்த மனித உரிமை கவுன்சில் மாநாடு ஆகியன இன்றைய போராட்டம் யாரும் எதிர்பாராத அளவிற்கு விரைவாகப் பரவக் காரணமாயின. முதலில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்கள் “சில வெளி அழுத்தங்களின் காரணமாகப்” போராட்டத்தைச் சில நாட்களிலேயே முடித்துக் கொண்டாலும் அடுத்தடுத்துத் தமிழகம் முழுவதும் போராட்டம் பரவியது. கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் காலவரையறை அற்ற உண்ணாவிரதப் போராட்டங்களை அறிவித்தனர். தமிழகத்தில் இன்று பல்கிப் பெருகியுள்ள காட்சி ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன. தொலைக் காட்சி விவாதங்கள், போராடுகிற மற்றும் உண்ணாவிரதமிருக்கும் மாணவர்கள் குறித்த நேரடி ஒளிபரப்புகள் ஆகியன போராட்ட உணர்வு பரவுவவதிலும், ஒருங்கு திரள்வதிலும் முக்கிய பங்காற்றின.

தொடக்கத்தில், மாணவர் கோரிக்கையில் சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்தன. ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைப்பதா இல்லை எந்த உருப்படியான அழுத்தத்தையும் இலங்கைக்கு அளிக்காத இந்தத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்பதா என்பதுதான் அந்தக் குழப்பம். இந்திய அரசு அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதே சாத்தியமில்லை என்கிற நிலையில் அதை ஆதரிக்க வைத்தலே பெரும்பாடாக இருந்தது. எனவே அப்படியான ஒரு குழப்பம் தி.மு.க போன்ற கட்சிகளுக்கே இருந்தன. ஆனாலும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்குட்பட்டே அதன் தீர்மானம் அமையும் என்பதை விஷயம் தெரிந்தவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருந்தனர். அமெரிக்க நகல் தீர்மானம் வெளியிடப்பட்டபின் இது எல்லோருக���கும் புரிந்தது. எனவே அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா அப்படியே ஆதரிப்பது என்பதிலிருந்து “போர்க்குற்றம் தொடர்பான சுதந்திரமான பன்னாட்டு விசாரணை” என்கிற திருத்தம் அத் தீர்மானத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதாகவும், சில நேரங்களில் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்பதாகவும் கோரிக்கை மாறியது. இறுக்கமான அரசியல் இயக்கப் பின்னணி ஏதும் இல்லாத தன்னெழுச்சியான போராட்டங்களில் இப்படியான வேறுபாடுகள் இருப்பது இயல்புதான். எனினும் விரைவில், 1) ‘இனப் படுகொலை’ என்பதாக இறுதிப் போரை வரையறுப்பது மற்றும் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை என்னும் திருத்தங்களை அமெரிக்கத் தீர்மானத்தில் கொண்டு வர இந்திய அரசு முன்கை எடுத்தல் 2) தனி ஈழம் தொடர்பான பொது வாக்கெடுப்பு கோருதல் என்பதாக மாணவர் போராட்டக் கோரிக்கைகள் இறுதி வடிவம் எடுத்தது.

இங்கு கோரிக்கை குறித்து ஒரு சொல். ஐ.நா அவை மூலம் எத்தகைய உச்ச பட்ச நடவடிக்கைகளை இலங்கை மீது மேற்கொள்ள வேண்டும் என்கிற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். யுகோஸ்லாவியாவின் ஸ்லோபோன் மிலோசெவிச் போல ராஜபக்ஷே மற்றும் அவரைச் சேர்ந்தவர்களை நேரடியான சர்வதேச விசாரணைக்குட்படுத்தப் படுவதில் சில சட்டச் சிக்கல்கள் இருக்கலாம். பன்னாட்டு நீதிமன்றத்தில் (ICC) ஒருவர் விசாரிக்கப் பட வேண்டுமானால் ஒன்று அவரது நாடு அதில் அங்கத்துவம் பெற்றிருக்க (State Party) வேண்டும். அல்லது அவர் செய்த குற்றம் அத்தகைய நாடொன்றில் நடைபெற்றிருக்க வேண்டும். இலங்கை சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு உறுப்பு நாடல்ல. எனினும் ஐ.நா பாதுகாப்பு அவையில் இதற்கொரு தீர்மானம் இயற்றி சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தலாம். ஆதற்கு சீனா, ரசியா முதலிய நாடுகள் அதற்கு உடன்படாது. எனவே மிலோசெவிக்கின் மீது எடுக்கப்பட்டது போன்ற நடவடிக்கை இதில் சாத்தியமா என்பது அய்யமே.

“இனப்படுகொலை” என்பதாக 2009 முள்ளிவாய்க்கால் வன்முறைகளை வரையறுப்பதையும் எந்த அளவிற்கு உலக நாடுகள் ஏற்கும் என்பதும் கேள்விக்குறிதான். இன்று போர்க்குற்றம் குறித்த ஒரு உள்நாட்டு விசாரணை என்பதையே எந்தச்சத்தும் இல்லாமல் முன்மொழியும் அமெரிக்கா இனப்படுகொலை என்கிற வரையறையை ஏற்குமா? சமீபத்தில் கூட அமெரிக்க இராணுவத்தினர் வன்னியிலுள்ள ஒரு கண்ணி வெடி அகற்றும் மையத்தில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளித்துள்ளனர். 2009ல் போர்க்குற்றங்கள் புரிந்தவர்களில் ஒருவராகக் குற்றம் சாட்டப்படும் சிங்கள இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சில காலம் முன் அமெரிக்க பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்றில் “பயங்கரவாதத்தை ஒழிப்பது எவ்வாறு” என உரையாற்றியுள்ளார். சென்ற மாதம் நான் இலங்கையில் இருந்தபோது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஒரு விழாவில் கலந்து கொண்டு இலங்கையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்கிற ரீதியில் பேசிய பேச்சு இதழ்களில் வந்தது. பாலச்சந்திரன் படுகொலைப் படங்கள் வெளிவந்த அதே தினத்தில்தான் இன்னொரு செய்தியும் வந்தது. சென்ற ஆண்டு கூட பிரிட்டன், இலங்கைக்கு சிறு ரக ஆயுதங்களை விற்றுள்ளதுதான் அது.

இதுதான் எதார்த்த நிலை. ஒரு கேள்வி எழலாம். அமெரிக்கா கொண்டுவராவிட்டால் என்ன, இந்தியா கொண்டுவரலாமே? சரிதான். ஆனால் இந்தியா கொண்டு வருவதாகவே வைத்துக் கொண்டாலும் அதை எத்தனை நாடுகள் ஏற்கும்? இப்போது கொண்டு வந்துள்ள நீர்த்த வடிவிலான தீர்மானத்தையே ஆசிய நாடுகள் பெரும்பான்மையும், வளைகுடா நாடுகளும் ஆதரிக்கவில்லை. அமெரிக்க ஆதரவு நாடுகள் மட்டுமே தீர்மானத்துக்கு ஆதரவாக ஆதரவளித்தன. தீர்மானம் கடுமையாகக் கடுமையாக இந்த ஆதரவும் குறையும்.

அதோடு இந்தியா இப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழியுமா?

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. வணிக மற்றும் போர் முக்கியத்துவம் வாய்ந்த இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் விரிவாக்கத்திற்கு எதிராக அமெரிக்காவின் போர்த்தந்திரப் பங்காளியாக (Strategic Partner) இருப்பது இந்தியா. கடுமையான வாசகங்களுடன் தீர்மானத்தை இயற்ற அமெரிக்கா ஒத்துக் கொள்ளாது என்பதைப் பார்த்தோம். ஆனால் தனது தீர்மான வாசகத்தை மென்மையாக்க இந்தியா கொடுக்கும் அழுத்தத்தை அது ஏற்கும். இந்தியாவின் ஒப்புதலின்றி அமெரிக்கா அதன் தீர்மான வாசகங்களை வடிவமைக்காது. இன்றைய இந்தியா நேரு காலத்திய இந்தியா அல்ல. வெளியுறவுக் கொள்கையில் அறம், நடுநிலை, அணி சேராமை (Non Alignment) என்பதெல்லாம் இப்போது கிடையாது. அத்வானி துணைப் பிரதமராக இருந்தபோது இதை வெளிப்படையாகவே, “இது எதார்த்த அரசியலின் (Real Politik) காலம்” என்றார். நீதியின் பக்கம் நிற்பது என்பதெல்லாம் இப்போது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.தீட்ஷித், “இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் எங்கள் அணுகல்முறை இந்தியாவின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது மற்றும் நாங்கள் எங்கள் சமூகத்தை எப்படிக் கட்டமைக்க விரும்புகிறோமோ அதற்குரிய அடையாளத்தைத் தக்கவைப்பது என்பவற்றின் அடிப்படையிலேயே அமையும்” என ஒருமுறை சொல்லவில்லையா? சுருங்கச் சொல்வதானால் இந்திய ஒற்றுமை, இந்திய நலன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஈழத் தமிழர்களின் பிரச்சினையை அது இதுவரை அணுகி வந்துள்ளது. இனியும் அணுகும்.

ஈழப்பிரச்சினையில் நேரடியாக இராணுவத் தலையீடுகளைச் செய்தபோதும், இலங்கை அரசுக்கும் இராணுவத்திற்கும் எதிராகப் போராளிக் குழுக்களை வளர்த்த போதும், இறுதிப் போரில் புலிகளை அழிப்பதில் உதவிகள் செய்த போதும் இந்தியா ஒரம்சத்தில் உறுதியாக இருந்தது. அதை வெளிப்படையாகச் சொல்லியும் வந்தது. எக்காரணம் கொண்டும் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக இந்தியா இருக்காது என்பதுதான் அது. அதாவது தனி ஈழம் என்பதை நோக்கி அது எந்த அசைவையும் அனுமதிக்காது என்பதுதான். ஏனெனில் அப்படி ஏதும் நிகழ்ந்தால் அது அடுத்து தன்னுடைய இறையாண்மையைப் பாதிக்கும் என அதற்குத் தெரியும். இலங்கையை நோக்கித் தன் இராணுவ வலிவைக் காட்டிச் சற்றே அச்சுறுத்துவது அல்லது முழுமையாக அதற்கு உதவுவது என்பதெல்லாம் இந்து மகா சமுத்திரப் பகுதியில் தனது நீண்ட கடற்கரையின் ஊடான பாதுகாப்பை உறுதி செய்வது, இலங்கையை முழுமையாகச் சீனாவின் பிடிக்குள் விட்டுவிடாமல், தனது பொருளாதார நலன்களை விட்டுக் கொடுக்காமல் தன் கட்டுக்குள் வைப்பது என்கிற அடிப்படைகளிலேயே அமைந்து வந்துள்ளது.

இன்று இலங்கையில் மலேசியாவிற்கு அடுத்தபடியாக அதிக முதலீட்டைச் செய்துள்ள நாடு இந்தியா. 1998ல் கையெழுத்திடப்பட்டு, 2000த்தில் நடைமுறைக்கு வந்த ‘இந்திய இலங்கை சுதந்திர வணிக ஒப்பந்தம்’’ (ILFTA) இந்திய வர்த்தகர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இன்று இந்தியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் சின்னஞ் சிறிய இலங்கை ஐந்தாவதாக உள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்தியா எந்த முடிவையும் எடுக்கும் என்பதை நாம் எப்போடும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

இதற்காகக் காங்கிரஸ் கட்சியை மட்டும் நாம் குற்றம் சொல்லிவிட இயலாது. இலங்கை தொடர்பாகக் கட்டுமையான வாசகங்களுடன் தீர்மானம் இயற்றுவது தொடர்பாக இரு வாரங்கள் முன்பு டெல்லியில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க, சமாஜ் வாதி, திருனாமுல், ஜனதா தளம், இந்தியக் கம்யூனிஸ்ட், பகுஜன்சமாஜ் முதலான எந்தக் கட்சியும் அதை ஆதரிக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்காக நாம் நம்பிக்கை இழக்க வேண்டுமென்றோ கோரிக்கைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டுமென்றோ நான் சொல்லவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் நாம் எதிர்பார்த்து அதற்குத் தக நமது செயல்பாடுகளை அமைக்க வேண்டும். தமிழக அரசு தனியாக ஒரு அயலுறவு அமைச்சகத்தை அமைப்பது என்றெல்லாமும் கூட மாணவர் போராட்டத்தில் சிலர் கோரிக்கைகளைக் கொண்டு வந்து நுழைத்தனர். எனினும் உடனடிச் சாத்தியம் இல்லாத அக்கோரிக்கை தானாகவே உதிர்ந்தது.

இந்த ஜெனிவா மாநாட்டில் அதிக பட்சமாக நாம் செய்திருக்கக் கூடியது மாநாட்டுக்கு ஒரு மாதம் முன்பு வெளியிடப்பட்ட மனித உரிமைக் கவுன்சிலின் உயர் தூதுவர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறியவாறு “சுதந்திரமான ஒரு பன்னாட்டு விசாரணை, தமிழ்ப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுதல், தமிழ் மக்களுக்கு உடனடியான அதிகாரப் பகிர்வு, இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றிற்கு மட்டும் அழுத்தம் அளித்திருக்க வேண்டும். ஜெனிவா மாநாட்டுக் கோரிக்கை அந்த அளவிலேயே இருக்க இயலும்.

அமெரிக்கத் தீர்மானத்தில் முதலில் இருந்த கடும் வாசகங்களும் கூட இறுதியில் நீக்கப்பட்டது கவனத்திற்குரியது. இறுதியாக அமெரிக்கா முன்வைத்த நீத்துப்போன நான்காவது நகல் தீர்மானம்தான் எந்த மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. ”பன்னாட்டு விசாரணை”, “ஐ.நா சிறப்பு நடவடிக்கை அதிகாரம் பெற்றவர்களின் தடையற்ற நுழைவு” ஆகியவை நீக்கப்பட்ட முக்கிய வாசகங்கள்.

தமிழகத்தில் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாகக் கடைசி நேரத்தில் இந்திய அரசு சார்பாக வாய்மொழியாக எழுப்பப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதிலும் கூட இந்திய அரசு வழக்கமாகச் சொல்லி வந்த “உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான சுதந்திரமான விசாரணை“ என்பதற்குத்தான் அழுத்தம் கொடுக்கப்பட்டதே தவிர பன்னாட்டு விசாரணை என்பது பற்றிப் பேச்சில்லை. ஆனால் அதையும் கூட அமெரிக்கா ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இந்தியத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாததற்குச் சொல்லப்பட்ட காரணம் கடைசி நேரத்தில் முன்மொழியப்பட்டது என்பதல்ல. மாறாக "அகன்ற கருத்தொருமிப்புக்கு" (broad consensus) அது ஒத்து வராது என்பதுதான். அதாவது கடுமையான வாசகங்கள் இருந்தால் தற்போது தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இசைந்துள்ள சில ஆப்ரிக்க நாடுகளேகூட தங்களது ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியா நேற்று கொண்டுவந்த நீர்த்துப்போன திருத்தங்களே "அகன்ற கருத்தொருமிப்புக்கு" ஒத்துவராது என்றால் பின் "இனப் படுகொலை", "சுதந்திரமான பன்னாட்டு விசாரணை" என்பதெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும்?

இப்படியான ஒரு நிலை உலக அளவிலும் இந்திய அளவிலும் உள்ளதால் இனப் படுகொலையாக வரையறுத்தல், தனி ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு ஆகியவற்றை எல்லாம் நான் விட்டுவிட வேண்டும் எனச் சொல்லவில்லை. அவற்றைத் தொலை நோக்கான கோரிக்கைகளாக வைத்து அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் ஆதரவுக் கருத்தை நாம் திரட்ட வேண்டும்.

இன்று இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் உடனடிப் பிரச்சினைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் இப்போது மேற்கொள்ளப்படும் இராணுவ மயத்தைப் பற்றி மட்டும் ஒரு சொல். இன்று அந்தச் சின்னத் தீவில் 4,50,000 பேர் கொண்ட இராணுவம் உள்ளது. 2009ல் போர் முடிந்தது. அன்று 9ஆக இருந்த இராணுவ டிவிஷன்கள் இன்று 20 ஆகவும், 44 பிரிகேடுகள் 71 ஆகவும், 149 பெடாலியன்கள் 284 ஆகவும் அதிகரித்துள்ளன. 2013ம் ஆண்டுக்கு மட்டும் 290 பில்லியன் ரூபாய் பதுகாப்பு மற்றும் நகர வளர்ச்சி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 25.9 சதம் அதிகம். போருக்குப் பிந்திய சமாதானத்தின் கூலியாக இத்தனை பெரிய சுமையை எத்தனை நாட்கள் மக்கள் மீது சுமத்த முடியும்? இந்தப் பெரும் படையைக் கலைக்கவும் இயலாது. போரால் சீரழிந்த பொருளாதாரத்தில் தென்னிலங்கைக் கிராமப்புற சிங்கள இளைஞர்களின் ஒரே வேலை வாய்ப்பு அதுதான். இவ்வளவு பெரிய இராணுவத்தை எவ்வளவு நாளைக்குச் சும்மா வைத்திருக்க இயலும்? எனவே இப்போது அவர்கள் ‘வளர்ச்சிப் பணிகளுக்கு’ப் பயன்படுத்தப் படுகின்றனர், கான்டீன்கள் நடத்துவதிலிருந்து, அதி வேக நெடுஞ்சாலைகள் அமைப்பதிலிருந்து, ஆக்ரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களில் விவசாயம் செய்வதிலிருந்து பல்வேறு பணிகளில் அவர்களை நீங்கள் இலங்கை முழுதும் காணலாம். இதையெல்லாம் விட இன்னொரு ஆபத்தான விஷயம் உயர்கல்வி மாணவர்கள் அனைவருக்கும் ‘தலைமைப் பயிற்சி’ என்கிற பெயரில் மூன்று வாரங்களுக்கு இராணுவம் கட்டாயமாகப் பயிற்சி அளிக்கிறது. அதே போல பயிற்சியளிக்கப்பட்ட ப்ரின்சிபால்களுக்கு கர்னல், பிரிகேடியர் பட்டங்கள் அளிக்கப்படுகின்றனர். ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல்கள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர். புலிகளின் மாவீரர் கல்லறைகள் தகர்க்கப்பட்டு அங்கே இராணுவ முகாம்களையும் வெற்றியைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களையும் அமைத்து தமிழர்களை நோக்கி, “நீங்கள் தோற்றவர்கள், தோற்றவர்கள்” என ஒவ்வொரு கணமும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தில் 75 சதம் இன்று வட கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கணக்குப்படி சுமார் 1,98,000 இராணுவ வீரர்கள் இங்கே தமிழ்ப் பகுதிகளில் உள்ளனர். அதாவது வட பகுதியில் 1000 பேருக்கு 198.4 இராணுவ வீரர்கள் உள்ளனர். அல்ஜீரியா, அயர்லாந்து போன்ற இடங்களில் உள்நாட்டுப் போர் உக்கிரமாக நடை பெற்றபோது கூட படை அடர்த்தி 1000க்கு 60 என்கிற அளவைத் தாண்டியதில்லை. இன்று போர் முடிந்து, அமைதி நிலை எட்டிய பிறகு இத்தகைய இராணுவ அடர்த்தியை ஏற்கவே இயலாது என்பதை உலக நாடுகளிடம் வலியுறுத்த வேண்டும். போர் முடிந்த பின் வாக்களிக்கப்பட்ட அரசியல் தீர்வை இப்போது சாத்தியமே இல்லை எனத் துணிந்து சொல்வதை முக்கிய பிரச்சினையாக்க வேண்டும். டயஸ்போரா தமிழர்களின் நிலைபாட்டிலிருந்து மட்டுமே ஈழப் பிரச்சினையை அணுகாமல் வட, கிழக்கு தமிழர்கள் எதிர் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளோடு தமிழக ஈழ ஆதரவுப் போராட்டங்களை இணைக்க வேண்டும்.

சென்ற மாதம் நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். புகழ்பெற்ற பொதுவுடைமை இயக்கத் தலைவர் நா. சண்முகதாசனின் (சண்) 20ம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவுக்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். கடைசி நேரத்தில் அங்கு வந்த நான்கு இம்மிக்ரேஷன் அதிகாரிகள் நான் பேசக்கூடாது எனத் தடை விதித்தனர். மேடையில் கூட உட்காரக் கூடாது என ஆணையிட்டனர். என் பேச்சைக் கேட்பதற்கு நிறப்பிரிகை காலம் தொட்டு எனது வாசகரும், பழைய ஈரோஸ் அமைப்புப் போராளியும் தற்போதைய கேபினட் அமைச்சருமான பஷீர் ஷேகு தாவூதும் வந்திருந்தார். அவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ராஜபக்ஷேவை எதிர்த்துப் போட்டியிட்டவரும் பழைய இராணுவ தளபதியுமான ஒருவர் சிறையிலடைக்கப்படுகிறார். ராஜபக்ஷேயின் குடும்ப சர்வாதிகாரத்திற்கு முழுதும் ஒத்துழைக்காத தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப் படுகிறார். இன்றும் ஆட்கடத்தல்��ள், சித்ரவதைகள் தொடர்கின்றன.

இதுதான் இன்றைய இலங்கை.

நாம் மனந்தளரத் தேவையில்லை. ஒரு போராட்டம் நடந்து முடிந்துள்ளது. ஒரு பெரும் எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டுத் தணிந்துள்ளது. அது குறித்த ஒரு கணக்கெடுப்பும் அனுபவத் தொகுப்பும் தேவை என்கிற வகையிலேயே இவற்றைச் சொல்ல வேண்டியதாக உள்ளது. எதிர் காலத்தில் நமது போராட்டம் எந்தத் திசையில் செல்வது என்பதற்கு இத்தகைய அனுபவத் தொகுப்பு நமக்குத் தேவை.

இதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரே பாதையில் சென்று கொண்டிருந்தால் நமது போராட்டத்தின் பலன்கள் யாருக்குப் போய்ச் சேருமோ அவர்களுக்குப் போய்ச் சேராது. மாறாக ஜெயலலிதாக்களே போராட்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டிருப்பர்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768