முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  பள்ளிக்குச் செல்லாத நான்...
- கலைவாணி -
 
 
 
 

வாசிப்பற்ற, வாசிப்பை மறந்த ஒரு சமூகத்தின் முன் என் முதல் கட்டுரையை எழுதத் துவங்கியுள்ளேன். இப்போதைய நம் இயந்திர வளர்ச்சியில் நம்மிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இணையத்தில் விளையாடுவதிலும் அதிகநேரத்தை இன்னபிற இணையத்தளங்களில் செலவழிப்பதிலும் பொழுதைக் கழிக்கின்றனர். வாசிப்பதின் மூலம் நமது பொழுது பயனுள்ள பொழுதாக மாறும். எனது வாசிப்பு பழக்கம் பள்ளியில் இருந்து ஆரம்பமானதல்ல. பள்ளிக்கூடத்திற்கே இதுவரையில் நான் சென்றதில்லை. என்னால் தனியாக எங்கும் செல்ல முடியாத காரணத்தினால் என்னால் கல்வி கற்க முடியவில்லை. (என்னால் பிறவியில் இருந்தே நடக்க முடியாது.) என்னுடன் தினமும் விளையாடும் எனது உறவினரின் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றார்கள். எனக்கு அப்போது ஏழு வயது. நானும் படிக்க வேண்டும் என்று வீட்டில் அம்மா அப்பாவிடம் அழுது அடம் பிடித்தேன். என்னைத் தூக்கி சமாதான படுத்தினார்கள் ஓரளவுக்கு தான் நானும் சமாதானம் ஆனேன்.

மறுநாள் அப்பாவும் அம்மாவும் என்னை வெளியே அழைத்துச் சென்று பள்ளிப்பை புத்தகம் எல்லாம் வாங்கித் தந்தார்கள். எனக்குள் புது உற்சாகமே வந்து விட்டது. அதிலிருந்து எப்போதும் அந்தப் பள்ளிபையுடனே தான் இருப்பேன். எதையாவது எடுத்து கிறுக்கிக்கொண்டே இருப்பேன். சின்னம்மா மகள்கள், மகன், மாமா மகன் எல்லோரும் பள்ளி முடிந்தவுடன் எங்கள் வீட்டிற்கு வழக்கம் போலவே வந்து விடுவார்கள். அவர்கள் வந்ததும் விளையாடுவது மட்டுமல்லாமல் படிக்கவும் நேரம் ஒதுக்குவோம். அப்போது எங்களுக்கு என் அக்கா புனிதா தான் சொல்லி தருவார்.

எல்லோரிடமும் சேர்ந்து படிக்க ரொம்ப ஆர்வமாகவும் சந்தோசமாகவும் இருக்கும். எல்லோரிடமும் போட்டி போட்டுக்கொண்டு படிப்பேன். பள்ளி பேருந்து வரும் வரை வாசலில் காத்திருப்பேன். படிப்பதற்காக அவர்கள் வந்துபோகும் கணங்கள் எனக்கு மிகவும் முக்கியமானவை. கொஞ்ச நாளானதும் யாருமே சரியாக வருவதில்லை. எங்களுக்குள் சின்ன பிரிவு வந்து விட்டது அந்த வயதில் அது எனக்கு பெரிய வருத்தமாகவே இருந்தது. அதன் பிறகு நானும் என் அக்காவும் தனியாக விளையாடவும் படிக்கவும் பழகி கொண்டோம்.

ஒரு முறை இங்குள்ள கோவில் மண்டபத்தில் இரண்டு ஆசிரியைப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லி தருவதைக் கேள்வியுற்றோம். என்னையும் தினமும் அப்பா தூக்கிக்கொண்டு போய் கோவிலில் விட்டு வருவார். தினமும் சந்தோசமாகப் போய்விட்டு வருவேன். ஆனால் அதுவும் கொஞ்ச நாள் தான். அங்குச் சொல்லி தருவதையும் நிறுத்தி விட்டார்கள். அதனுடன் படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரமென்று என் மனதை நானே தேற்றிக்கொண்டு அமைதியாகி விட்டேன். இருந்தாலும் எல்லோரையும் போல நானும் படிக்க வில்லை என்ற ஏக்கம் என் ஆள் மனதில் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. எனக்கு எழுத படிக்க அக்கா, அண்ணன் தான் சொல்லி தந்தார்கள். எனக்கு அப்போது தமிழில் ஆர்வம் வந்தவுடன் தமிழில் தெரிந்த எழுத்துக்களை எல்லாம் மாற்றிமாற்றி எழுதி என் மூன்று அக்காவிடமும் வாசிக்கக் கொடுப்பேன் அவர்களும் வாங்கி வாசித்த பிறகு சிரிப்பார்கள். நானும் சேர்ந்து சிரிப்பேன். என் அக்கா புனிதவும் வீட்டில் இருந்தே எழுத படிக்க கற்றுக்கொண்டவர். அவர் தான் எனக்கு நிறைய சொல்லி தந்தார்.

ஆரம்பத்தில் எனது வாசிப்பு பழக்கம் வார மாத இதழ்களில் கதை வாசிப்பதிலும் கோவிலில் தேவாரம் பாடுவதில் மட்டுமே தான் இருந்தது. பிறகு சில வருடங்கள் வாசிப்பு பழக்கத்தில் இடைவெளி வந்தது. எங்களுக்கு ஒரு ஆசிரியர் அண்ணன் கிடைத்தார் அவர் மூலமாக பள்ளிகளில் என்னென்ன நடக்கிறதென்று அவ்வப்போது எங்களால் தெரிந்துக்கொள்ள முடிந்தது. பள்ளிக்கு செல்லாமலே கற்பனையில் எங்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றதினால் படிக்க முடியவில்லை என்ற ஏக்கமும் கொஞ்சம் குறைந்தே போனது.

அதன் பிறகு, ம.நவீன் அண்ணனின் பழக்கம் கிடைத்தது. அவர் மூலமாக இணையத்தில் படிக்க ஆரம்பித்தோம். இணையத்தில் வழி நிறைய விசயங்களையும் கற்றுக்கொண்டோம். அவரின் மூலமாக அண்ணன் கே.பாலமுருகன் அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. நிறைய புத்தகங்களை வாசிக்கக் கொடுத்தார், எங்கள் சிந்தனையும் மாறி போனது. எங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஆர்வமூட்டினார். எங்களின் பொழுது பயனுள்ளதாக இருந்தது. எங்களுக்கு வாசிப்பதில் அதிக ஆர்வம் வந்தவுடன். எங்களால் முடிந்தளவு புத்தகங்களை வாங்கி வாசித்தோம்.

அண்ணன் கே.பாலமுருகன் எழுதிய சிறுவர் சிறுகதையான ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’ நூல் வெளியீட்டில் சமூகத்திற்கு முன் நாங்கள் முதன்முதலாக அங்கீகரிக்கபட்டோம்; அடையாளப்படுத்தப்பட்டோம். மிகவும் மகிழ்ச்சியான நாள் அது. நாங்கள் வாழ்நாளில் கலந்துகொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சியும் அதுதான். அன்று நாங்களும் தேவதைகளாகியிருந்தோம். எல்லோரும் எங்களைக் காட்டி உதவி செய்வதாக நினைத்து வெறும் பரிதாபங்களை மட்டுமே அள்ளி வீசுவார்கள். ஆனால் அண்ணன் கே.பாலமுருகன் எங்களின் வாசிப்பார்வத்தை மேடையில் கௌரவித்துப் பேசினார். பள்ளிக்குச் செல்லாமலேயே தமிழ் கற்றுக்கொண்டு இன்று நல்ல இலக்கிய வாசகர்களாக இருக்கிறோம் என எங்களைப் பாராட்டினார். எங்களால் நாற்காலியில் உட்கார முடியாது, ஆகையால் தரையில் படுக்க மட்டுமே முடியும். அது நிகழ்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என்று அவர் கொஞ்சமும் நினைக்கவில்லை. எங்களின் இயலாமைகளை அவர் கவனத்தில்கொள்ளவே இல்லை. அசௌகரிகமாக இருந்தாலும் பரவாயில்லை இன்று நீங்கள் வெளிப்படுவதற்கான நேரம் எனச் சொல்லி அழைத்துப் போனார்.

நல்ல புத்தகங்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கருத்துக்களை உள்வாங்கி கொண்டு சிறந்த சிந்தனையாக்கிக்கொள்ள வேண்டும். வாசிப்பதற்கு உடல் அமைப்பும் உடல் பலவீனமும் ஒரு பொருட்டே கிடையாது. சோம்பேறிகள்தான் வாசிக்க முடியாததற்குக் காரணங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768