முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு
     
  சுவடுகள் பதியுமொரு பாதை... 25
- பூங்குழலி வீரன் -
 
 
 
 

யூமா வாசுகியின் தீராத கணக்கு

 

"நான் யாருங்கிறது ரொம்பவும் தத்துவார்த்தமான கேள்வி. அதில் பல கேள்விகள் உள்ளடங்கி இருக்கு. நான் கவிஞனா, ஓவியனா, நாவலாசிரியனா, சிறுகதை எழுத்தாளனான்னு எந்த ஸ்தானத்தையும் என்னால கோர முடியாது. எல்லாமே ஒரு மாபெரும் பேரியக்கம்தான். உதாரணத்துக்கு கவிதைங்கிறது ஒரு மாபெரும் பேரியக்கம். அதுல மிக மிக சிறிய அளவில், எனது சூழ்நிலையில் என்னைப் பாதிக்கிற விஷயங்களை கவிதைகளா வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். மாபெரும் கவிதை பேரியக்கத்துக்கு முன்னாடி நான் கவிஞன்னு சொல்லிக் கொள்வது எனக்கு அயற்சியைக் கொடுக்குது." யூமா வாசுகி

1965-ஆம் ஆண்டு பிறந்த யூமா வாசுகி கவிஞர், புனைகதைப் படைப்பாளர், மொழிப்பெயர்ப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். மாரிமுத்து என்பது இவரது இயற்பெயர் ஆகும். அப்பெயரில் அவர் ஓவியங்கள் வரைகிறார். ரத்த உறவு, மஞ்சள் வெயில் தலைப்புகளில் நாவலும் உயிர்த்திருத்தல் என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். மேலும், தோழமை இருள், இரவுகளின் நிழற்படம், அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

எதையோ நினைத்தபடி
எங்கேயோ சென்றுகொண்டிருக்கும்போது
சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து
பிச்சை என்று கேட்டாய்.
தெய்வமே அந்தக் குழந்தை
என்னமாய்ச் சிரித்தது....
அதற்கு மாறாக நீ என்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்...

ஒரு சாதாரண நிகழ்வென நாம் ஒவ்வொருவரும் கடந்துபோகும் நாளாந்தம் காணக்கிடைக்கும் காட்சி இது. எந்தவோர் உணர்வையும் வெளிக்காட்டாமல் மிக அவசரமாய் மறுதலித்து பிச்சைக் கேட்டவளின் பார்வையிலிருந்து உடனே தப்பிவிடும் தோரணைதான் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அப்படி தவிர்த்துவிட்டு வந்த அந்த நொடியில்தான் கவிஞனுக்கு இந்தக் கவிதை பிறந்திருக்க வேண்டும். நிகழ்கின்ற எல்லாமே நிகழ்வுகள்தான். அவை ஒவ்வொன்றும் பதிவாக்கப்படுகின்ற சாத்தியத்தைக் கொண்டே நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. மாறுதலுக்குக் காரணமான நிகழ்வுகள் வரலாறாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கத்திற்குக் காரணமாகிற நிகழ்வுகள் இலக்கியங்களாகவும் உருபெறுகின்றன.

இந்த வரிகள் நிகழ்தல் குறித்து எழுந்த கவிதை எனும் பேரியக்கத்தின் ஒரு துமி. அதைவிட சிறியதாகக்கூட அது இருக்கலாம். “அதற்கு மாறாக நீ என் சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்” என்ற வரிகள் ஆத்மார்த்தமாக வெளிப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். அதை கழிவிரக்கமென சட்டென கடந்துபோக என்னால் முடியவில்லை. அதைத் தாண்டிய ஒன்றாக அந்த உணர்வு இருந்திருக்க வேண்டும்.

ஓரிரவில் சாக்கடையோரம்
கொசுக்கள் குதறும் வதையில்
துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி
அய்யா என யாசித்தாய்
உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது
எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது....
அதற்குப் பதில் நீ என்னை
அடித்துப் பிடுங்கியிருக்கலாம்...

ஒரே நிகழ்வு பல்வேறு தருணங்களின் மீண்டும் மீண்டும் நம்மை வந்தடையும் சோகம் இக���கவிதையில் பதிவாக்கப்பட்டுள்ளது. இதில் தன் குழந்தையைக் கொசு வதையில் சாக்கடையோரம் வைத்திருந்து பிச்சைக் கேட்கும் அந்த தாய் பாவமா அல்லது இவை எல்லாவற்றையும் புரியாமலேயே ஏற்றுக் கொண்டிருக்கும் அந்த குழந்தை பாவமா அல்லது இயலாமையினாலோ வெறுப்பினாலோ அல்லது இன்னபிற உணர்வினாலோ அவர்களைக் கடந்துப் போகவேண்டிய சூழ்நிலையிலிருக்கும் நாம் பாவமா என்று மட்டும்தான் இந்த நிலையில் யோசிக்கத் தோன்றுகிறது. “தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என பாரதி சொல்லிச் சென்றுவிட்டான். எத்தனை முறைதான் நாமும் இந்த உலகத்தை அழிப்பது என்றுதான் தெரியவில்லை.

இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்
அனாதைக் குழந்தையை அடக்கம் செய்யவென்று
இரந்து நிற்கிறாய் இன்று
புவி சுமக்க முடியாத பாரமாக இது
எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது.....

புவி சுமக்க முடியாத பாரம் இப்போது நம் மனமெங்கும் ஏறி நிற்கின்றது. கவிதையின் தொடக்க வரிகளில் “உன் குழந்தை” என்றிருந்தது இப்போது அனாதைக் குழந்தையான நிதர்சனம் மிரள வைக்கின்றது. ஒரே தன்மையிலான நிகழ்வு, அதன் தொடர்நிகழ்வுகளின் வழி மனித மனத்தின் இயல்புகளை மிக நுணுக்கமாக சித்தரிப்பதனால் இக்கவிதை தனித்தன்மை பெறுவதாக நான் கருதுகிறேன். நீயும் நானும் கடந்து போகும் ஒரே நிகழ்வுதான். ஆனால், இக்கவிதையைப் படைத்த கவிஞனை அது ஒரு கூர்மையாக வகையில் பாதித்திருக்க வேண்டும். ஒரு நிகழ்வென தொடங்கி பின் மெல்ல நம் மனச்சாட்சியை உலுக்கி இறுதியில் நின்ற இடத்திலேயே வாழ்வு குறித்த கேள்வியை நம் கன்னத்தில் அறைந்து கேட்கும் தருணத்தில் யூமாவாசுகி தனித்து தெரிகிறார்.

அய்யோ அய்யோ என்று
பதறி அழிந்தபடியே
ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து
உன்னைக் கடந்து போகின்றேன்
தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க
ஏன் உனக்குத் தெரியவில்லை.

“நான் இருந்துக் கொண்டிருக்கிறேன் - அதற்கு அப்பால் ஒண்ணுமில்ல.” என்கிற யூமா வாசுகியில் இருப்பு குறித்தான பதிவில் இப்போது நாமும் சேர்ந்துக் கொள்வது எனக்கு சரியெனப் படுகிறது.

அந்த முழுக்கவிதை இதுதான்.

தீராத கணக்கு

எதையோ நினைத்தபடி
எங்கேயோ சென்றுக்கொண்டிருக்கும்போது
சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து
பிச்சை என்று கேட்டாய்.
தெய்வமே அந்தக் குழந்தை
என்னமாய்ச் சிரித்தது....
அதற்கு மாறாக நீ என்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்
ஓரிரவில் சாக்கடையோரம்
கொசுக்கள் குதறும் வதையில்
துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி
அய்யா என யாசித்தாய்
உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது
எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது....
அதற்குப் பதில் நீ என்னை
அடித்துப் பிடுங்கியிருக்கலாம்...
பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்
உன் குழந்தை என் கால்களைத் தொட்டு
கை மலர்த்தும்படிச் செய்தாயே,
அரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது
எவ்வளவு பாடுபட்டது...
அதைவிடவும் நீ என்னை
முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்...
இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்
அனாதைக் குழந்தையை அடக்கம் செய்யவென்று
இரந்து நிற்கிறாய் இன்று
புவி சுமக்க முடியாத பாரமாக இது
எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது.....
அய்யோ அய்யோ என்று
பதறி அழிந்தபடியே
ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து
உன்னைக் கடந்து போகின்றேன்
தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க
ஏன் உனக்குத் தெரியவில்லை.

   
     

உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | Back to Top
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768