|
போய்வா, நண்பா...

பா.ஆ. சிவம் நம்முடன் இப்போது இல்லைதான். ஆனால், எப்போதும் நம்முடன்
தொடர்ந்து உரையாடிக்கொண்டுதான் இருப்பார். இலக்கியவாதியின் நீட்சி, வாழ்வு
என்பது அறிவு அல்லது உணர்வு தளத்தில் தொடர்ந்துகொண்டிருப்பதுதானே. மறுக்கப்
படவோ, ஏற்கப் படவோ தொடர் வாசிப்பில் நாளும் புத்துயிர் கொள்வதுதுதானே ஓர்
எழுத்தாளனின் யதார்த்தம்.
எனக்கு சிவம் எப்போது பழக்கமானார் என்பது ஞாபகமில்லை. நிச்சயம் ஏதாவதொரு
இலக்கிய நிகழ்விலாகத்தான் இருக்கும். நவீன மலேசிய தமிழ் இலக்கியத்தின்
புதிய நம்பிக்கையாக, புதிய மொழியில், அலாதியான சொல்லாடல்களுடன் பிரவேசித்த
இளைய எழுத்தாளர்களின் முன்னோடியாக நான் சிவத்தைப் பார்க்கிறேன். நயனம்,
தென்றல் போன்ற இதழ்களிலும், தொடர்ச்சியாக காதல், அநங்கம், மௌனம் போன்ற
தீவிர இலக்கிய இதழ்களிலும் அவரது முக்கியமான படைப்புகள் வந்துள்ளன.
எனினும், சிவத்தின் முகவரி அவரது கவிதைகளே.
நாங்கள் சந்தித்துக் கொண்டது 5 அல்லது 6 முறைதான். சில கடிதங்கள். சில
தொலைபேசி உரையாடல்கள். அப்புறம், முக்கியமான நாள்களில் குறுந்தகவல்
பரிமாற்றம். கடைசியாகப் பார்த்துப் பேசியது ஒரு வல்லினம் இலக்கிய விழாவில்.
சிங்கை இளங்கொவன் நாடகம் போய்க்கொண்டிருந்தது, சோமா அரங்கில். வழக்கம் போல
வெளியில் உட்கார்ந்திருந்தேன். அப்போதுதான் சிவம் வந்தார். மிக அதிகமாக
அன்றுதான் பேசியிருப்போம். சீ.முத்துசாமியின் எழுத்துகளின் மீது அவருக்கு
பெரும் ஈர்ப்பு. அவர் எழுத்துகள் பற்றி மிகவும் உவப்பான மதிப்பீடுகள்
கொண்டிருந்தார். சீ.மு. உடன் தொடர்பில்லை, சில மனத்தடைகள் என்று கூறியபோது,
சிவம் அவரை மிகவும் தற்காத்துப் பேசியது இன்னும் நினைவில் உள்ளது. சிவம்
எனக்கு கடைசியாக அனுப்பிய குறுந்தகவல் சீ.முவின் சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு பற்றிய அழைப்புதான்.
நாங்கள் இலக்கியம் பேசியது ரொம்பவும் குறைவு. வாழ்வு சார்ந்து பல கேள்விகள்
அவருக்கு இருந்தது. திருப்தியில்லாத ஆனால் விசனமில்லாத ஒரு பார்வை.
மனிதர்களை மிகவும் நம்பினார், நேசித்தார். தனக்கு உகந்ததல்லாத கருத்துகளைக்
கூட நேர்மையாக அணுகினார். எங்கள் சந்திப்புகளில் சக எழுத்தாளர்கள் எவர்
மீதும் எதிமறையான விமர்சனங்களை வைத்ததில்லை. நவீனின் ஒரு கவிதையை (தலைப்பு
ஞாபகமில்லை) ஒரு விரிவான கோணத்தில் அணுகி, மிகவும் சிலாகித்துப் பேசினார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் என்பது எனக்கு தெரிந்தே
இருந்தது.
ஒரு முறை அவரது கவிதையொன்று நான் வாசித்த கவிதையொன்றின் சாயலில்
இருப்பதாகக் கூறியிருந்தேன். அவருக்கு திருப்தியில்லை. அப்படி நிகழ்வது
சாத்தியமே, அதனால் பிழையொன்றுமில்லை என்றும் கூறினேன். நீண்ட நாள்களுக்குப்
பின் சந்தித்துக் கொண்டபோது தனது கவிதையும், நான் தொடர்பு படுத்திக்
கூறியிருந்த கவிதையும் முற்றிலும் வேறு தளங்களைச் சார்ந்தவை என்று எனக்கு
நினைவுப்படுத்தினார். ஒரு சீரியஸான படைப்பாளியின் அடையாளம் அது.
பா.ஆ.சிவம் ஒரு படைப்பாளியாக என்னுடன் பழகியதைவிட, ஒரு சகோதரனாகத்தான்
இருந்தார். அவர் பேச நான் கேட்பதுதான் அதிகமாக இருக்கும். என் பங்க���
பெரும்பாலும் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் முன் வைப்பதுதான். உங்கள்
குரல் ஆசிரியர் திரு சீனி நைனா முகம்மது அவர்களுடன் நடந்த விவாதத்தின் போது
சிவம் தனது தரப்பின் நியாயத்தை என்னிடம் கூறியது உண்டு. அது அவர் தானாகவே
சந்தித்து வென்றெடுக்க வேண்டிய ஒன்று என்ற கூறினாலும், இலக்கிய படைப்பில்
ஏற்படும் இலக்கணத் தவறுகளை அதிமுக்கியமான ஒன்றாகக் கருதவேண்டியதில்லை என்றே
நினைக்கிறேன். பத்திரிகைகளில், பதிப்பகங்களில் இலக்கணம் கற்ற ஒரு எடிட்டர்
இருந்தால் போதும். அந்த உரையாடல்களின் போதுகூட மிகவும் மரியாதையாகத்தான்
உங்கள் குரல் எதிர்வினைகள் பற்றிப் பேசினார். வருத்தம் இருந்தது; அதைத்
தாண்டிச் செல்லவும் துணிவிருந்தது.
எப்படிதான் சமாதானப்படுத்தினாலும் சட்டென மனதில் குவியும் வெறுமை. உன்
கவிதைகளை வாசித்து நிரப்பிக்கொள்ளமுடியலாம் என்றால் அங்கும் அதுதானே ஆழமான
மௌனத்தில் உறைந்து கிடக்கிறது.
உன்னுடன் பழகிய எல்லோரையும் போலவே...
எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்
போய்வா நண்பா...
|
|