|
கணினியின் வேகத்தை அதிகரிக்க

எனக்கு மிகவும் நெருக்கமான தோழர்கள் இருவர். அவர்களில் மிக முக்கியமானவர்
ஹரேஷ் என்பவர். கணினித்துறையில் வளர்ந்து வரும் ஓர் இளம் தலைமுறை.
கணினியில் ஏதாவது பிரச்னை என்றால் எனக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து
ஆலோசனைகள் கேட்பார்.
கணினியில் எதையாவது புதுமையாகச் செய்துவிட்டால் அல்லது கண்டுபிடித்து
விட்டால், உடனே அழைப்பு மேல் அழைப்பு வரும். அவருடைய கண்டுபிடிப்பைப்
பாராட்டும் வரையில் அன்புத் தொல்லைகள் தாங்க முடியாதவை. அழைப்புகள்
அடுக்கடுகாய்த் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அந்த இளம் கணினி ஆர்வலருக்கு வயது பத்து. நான்காம் ஆண்டு படிக்கிறார்.
உறவினர் பட்டியலின் உச்சத்தில் இருக்கிறார். சரி. அந்தத் தோழர் யார். அவர்
வேறு யாரும் அல்ல. என் மகள் வழி பேரன்தான். என்ன யோசிக்கிறீர்கள்.
பேரனைப் பற்றி பெருமைப் படுவதில் எல்லா தாத்தாமார்களுக்கும் தனிச் சுகம்.
அதில் நான் மட்டும் விதிவிலக்கு அல்ல. அந்தக் கட்டத்திற்கு நீங்களும்
ஒருநாள் வந்துதான் ஆக வேண்டும். ஆக, அதுவரை கொஞ்சம் அமைதியாக இருங்களேன்.
ஒரு முக்கியமான விசயத்திற்கு வருகிறேன். இணையத்தில் உலா வரும் போது இடக்கு
முடக்காய் அழையாத விருந்தாளிகளைப் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று
அவனுடைய கணினியில் இணைய வடிக்கட்டு போட்டு இருக்கிறேன். அதாவது Filter.
ஆக, இணையத்தில் Filter அல்லது Parental Control பதிக்கும் போது சில
சமயங்களில் கணினியின் வேகம் குறைந்துவிடும். உலகத்தில் இருக்கிற எல்லா
ஆமைகளையும் கூட்டி வந்து நாட்டாமை செய்துவிடும். அதைக் கட்டுப்படுத்த ஒரு
வழி இருக்கிறது.
கணினியின் வேகம் குறைவதற்கு மூலகாரணமே அதன் Registry தான். இதனைக்
கணினியின் பதிவகம் என்று சொல்வார்கள்.
நீங்கள் ஏதாவது ஒரு நிரலியைக் கணினியில் நிறுவல் செய்கிறீர்கள் என்று
வைத்துக் கொள்வோம். எடுத்துக்காட்டாக என்.எச்.எம். எனும் தமிழ் தட்டச்சு
நிரலி. அதைக் கணினிக்குள் பதிப்பு செய்யும் போது பதிவகத்தில் பல ரகசிய
குறியீடுகளைப் பதிவு செய்துவிடும்.
அந்த நிரலி எங்கே தயாரிக்கப்பட்டது; யார் தயாரித்தது; அதை வாங்கியதற்கான
உரிமம் இருக்கிறதா இல்லை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் உரிமம்
காலாவதியாகிறதா போன்ற ரகசியங்களைப் பதித்து வைத்துக் கொள்ளும்.
ஒரு கட்டத்தில் அந்த நிரலியே வேண்டாம் என்று Uninstall எனும் நிறுவல்
நீக்கம் செய்யும் போதுதான் பிரச்னையே வரும். நிரலியை நிறுவல் நீக்கம்
செய்துவிடலாம். ஆனால், அதன் பதிவக ரகசியங்களை நீக்க முடியாது. அந்த
ரகசியங்கள் அப்படியே பத்திரமாகக் கணினிக்குள் இருக்கும்.
காசு கொடுத்து வாங்காமல் திருட்டுத்தனமாய் ஒரு நிரலியைப் பதிப்பு செய்தோம்
என்று வைத்துக் கொள்ளுங்கள். கணினியில் இருந்து அந்த நிரலியை நீக்கிய
பின்னர், பல மாதங்கள் கழித்து அதே நிரலியை மறுபடியும் நிறுவல் செய்தால்
‘திருட்டுத் தனமாய் எதையும் செய்ய வேண்டாம்’ என்று எச்சரிக்கை செய்யும்.
எப்படி என்று யோசிக்க வேண்டாம். கணினியின் பதிவகத்தில் அந்த நிரலியில்
ரகசியங்கள் இருக்கும்.
ஆக, ஒவ்வொரு முறையும் நிரலிகளை நிறுவல் நீக்கம் செய்யும் போது கணினியின்
பதிவகத்தில் வேண்டாத குப்பைகள் சேர்கின்றன. பொதுவாக, இந்தக் குப்பைகள்தான்
கணினியின் வேகத்தைக் குறைக்கும் பக்கா கில்லாடிகள்.
இவற்றை நீங்கள் முறைப்படி துப்புரவு செய்ய வேண்டும். விண்டோஸ்
இயங்குதளத்தில் இருக்கும் Control Panel -> All Control Panel Items ->
Programs and Features மூலமாக நிறுவல் நீக்கம் செய்யலாம். இருந்தாலும்
நிரலிகளின் அசடுகள் கண்டிப்பாக உள்ளே இருக்கும்.
அதற்கு ஒரு நிறுவல் நீக்க நிரலி இருக்கிறது. அதன் பெயர் Revo Uninstaller.
இலவசம். http://download.cnet.com/Revo-Uninstaller/3000-2096_4-10687648.html
எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பயன்படுத்திப்
பாருங்கள். பிரச்னை என்றால் எனக்கு அழையுங்கள். இன்னும் ஒரு விசயம்.
என்னுடைய கைத்தொலைபேசி எண்களை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மாற்றி
இருக்கிறேன். (012 – 9767462). பயங்கரவாதக் கும்பல்களில் இருந்து
தப்பிக்கத்தான். வேறு எதற்காக இருக்க முடியும்.
சரி. கணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்.
1. கணினி முழுமையாக Boot ஆவதற்கு முன்பாக, அதாவது கணினி முழுமையாகத்
தொடங்குவதற்கு முன்பாக எந்த ஒரு நிரலியையும் திறக்க முயற்சி செய்யாதீர்கள்.
2. டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்களை நேரடியாக wallpaper எனும்
முன்திரைப் படமாக ஆக்க வேண்டாம். ஏனெனில் அந்தப் படங்களை முன்திரைப் படமாக
இடும் போது அவை அதிகப்படியான நினைவகத் திறனை எடுத்துக் கொள்கின்றன.
3. ஒவ்வொரு நிரலியை மூடிய பிறகும், கணினியின் முன்திரையில் Refresh எனும்
புத்துணர்வூட்டு செய்யுங்கள். (சுழலியில் வலது சொடுக்கு செய்தால் Refresh
தெரியும். அல்லது விசைப்பலகையில் F5 எனும் பொத்தானைத் தட்டவும்)
4. கணினியின் முகப்பில் நிறைய Shortcutகளை உருவாக்கி அல்லது நிறைய
சின்னங்களை வைத்து அழகு பார்க்க வேண்டாம். அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகள்
அல்லது தரவுகளையும் அங்கே வைக்க வேண்டாம். ஒவ்வொரு shortcut எனும்
விசைப்பலகைக்கான குறுக்குவிசை 500 பைட்ஸ் நினைவகத் திறனை எடுத்துக்
கொள்கிறது. சிலருடைய கணினியின் முகப்புத் திரையில் உலகத்தில் உள்ள எல்லா
குப்பைக் கூளங்களும் கொட்டிக் கிடக்கும். மற்றவர்கள் பார்த்து மெச்ச
வேண்டும் என்பதற்காக சிலர் அப்படி குப்பைகளைச் சேர்ப்பதும் உண்டு.
என்னையும் சேர்த்துதான்.
5. முடிந்த வரையில் Recycle Bin எனும் மீள்சுழல் தொட்டியைக் காலியாக்கி
விடுங்கள்.
6. மாதம் ஒருமுறையாவது உங்கள் வன்தட்டை Defragment எனும் நொறுங்கல் இணைப்பு
செய்யவும். இது உங்கள் கோப்புகளைச் சீரமைத்து கணினியை வேகமாக இயங்க வழி
வகுக்கும்.
7. தயவுசெய்து AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய
நிரலிகளை, உங்கள் கணினியின் இயங்குதளம் இருக்கும் C Driveஇல் நிறுவல் செய்ய
வேண்டாம். இயங்குதளம் நிறுவப் படாத partitionஇல், அதாவது கணினி வகிர்வில்
பதிந்து கொள்ளுங்கள். அப்படி செய்தால் கணினி வேகமாக இயங்கும்.
8. எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் அந்த நிரலி கணினி தொடங்கும் போது
அதாவது Windows Startup இல் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். Task bar
Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.
9. உங்கள் கணினியில் தூசு துகள்கள் படர்ந்து சகாரா பாலைவன மேடாக மாறாமல்
பார்த்துக் கொள்ளுங்கள். பாவம் கணினி, அது ஒரு வாயில்லா ஜீவன்.
10. நீங்கள் கணினியில் வேலை செய்யும் பொழுது processor எனும் மையச்செயலி
இருக்கிறதே, அது படு வேகத்தில் சூடாகிக் கொண்டிருக்கும். அதனை எப்படி
தணிப்பது என்பதை அடுத்த முறை பார்ப்போம். அதுவரை இனிமையான வாழ்த்துகள்.
|
|