|
மலையில் மிளகும் மனிதர்களும்

அன்றைய காலை புலரும் முன்னே நான் விழித்து விட்டேன். தூக்கமும் வரவில்லை.
சரியாக காலை மணி 4.30. வீட்டில் தண்ணீர் வரவில்லை. இரவே தொட்டியில்
சேகரித்து வைத்திருந்த தண்ணீர் இருந்தது. எனவே நாங்கள், பெண்கள்
வீட்டிற்குள் குளித்தோம். ஆண்கள் அந்த குளிந்த விடியற்பொழுதிலும் ஆற்றில்
குளிக்க சென்று விட்டனர். நான் குளித்து விட்டு வருவதற்குள் மேரியும் அவரது
பணிப்பெண்ணும் எழுந்து எங்கள் பயணத்துக்கான உணவு பொட்டலத்தை தயார் செய்து
விட்டனர். மலையேற செல்லும் முன்னர் பலுவான காலை உணவு மிகவும் அவசியம்.
இல்லையென்றால் மலையேற ரொம்ப கஷ்ட பட வேண்டி இருக்கும். எனவே காலையிலேயே
சமைத்து வைத்திருந்த மேகியை முழுவதுமாக சாப்பிட்டு முடித்து விட்டேன்.
உடம்பில் தெம்பு இருக்க வேண்டும் அல்லவா. எங்களது உணவு பொட்டலம் வெள்ளை
சோறும் பொரித்த கட்டை கருவாடும் தான். அது போதும் மலையேற.
தேவையான எல்லாவற்றையும் எடுத்து கொண்டு ஜேம்ஸும் கண்ணாவும் கூட நானும்
காரில் ஏறி புறப்பட்டோம். எங்களின் சந்திக்கும் இடம் ஒரு இடைநிலை பள்ளி
(உலூ லாயார் தேசிய இடைநிலை பள்ளி). அங்கே தான் எங்கள் குழுவின் 20 பேரும்
சந்திப்பதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. நாங்கள் சென்று சேர்ந்த அரை மணி
நேரத்தில் இன்னும் சிலர் வந்து சேர்ந்து கொண்டனர். அவர்களுள் ஆறாம் படிவம்
மாணவர்களும் இருந்தனர். அங்கிருந்து இன்னும் 45 நிமிடங்கள் காரில் பயணம்
செய்தாலொழிய புகிட் சாடோக் அடிவாரத்தை அடைய முடியாது. அந்த பயணம்
ஆரம்பிக்கும் வரை இன்னும் காரில் பயணம் செய்ய வேண்டும் என்பது எனக்கு
தெரியாது. இதோ இதோ அடிவாரம் வந்து விடும் வந்து விடும் என்று பார்த்து
கொண்டே இருந்தால் பாதை பாம்பு மாதிரி நீண்டு கொண்டே சென்றது. பாதையும்
அவ்வளவு சமனமாக இல்லை. அடிவாரத்துக்கு சென்று சேரும் முன்னர் கார்
பயணத்திலேயே பாதி உடல் அசந்து விட்டது. குறிப்பிட்ட சில இடங்களில் பனி
மூட்டங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அந்த காலை வேளையில் பனி மூட்டம்
இன்னும் அழகான ரம்யமான காட்சியை உருவாக்கி இருந்தது. அக்காட்சிகளை ரசித்து
கொண்டே போனதில் அடிவாரமும் வந்து விட்டது.
அந்த அடிவாரத்தில் ஓரே ஒரு பலகை வீடும் அதை சுற்றி கொஞ்சம் விசாலமான இடமும்
அதை சார்ந்து சின்ன காய்கறி தோட்டமும் இருந்தது. அந்த பலகை வீட்டை வீடு
என்பதை விட சின்ன குடிசை என்று தான் சொல்ல வேண்டும். முழுவதும் பலகை.
உட்கார கூட நாற்காலி இல்லை. ஆனால் அங்கே இணைய சேவையோடு கூடிய கணினியை
பார்த்தேன். வெளியே பார்த்தால் பாமர தோற்றம். உள்ளே நவீன தோற்றம். கொஞ்சம்
அதிர்ச்சியாக ஆச்சர்யமாக ஆகிவிட்டேன். தொலைப்பேசி கூட இல்லை. ஆனால் கணினி
தொடர்பு இருந்தது. அப்போது தான் என் மூளைக்குள் சின்னதாய் பொறி தட்டியது.
கணினியின் சேவை கம்பத்தில் எப்போதோ ஆளுமையை பரப்பி விட்டிருந்தது. நாம்
தான் இன்னுமும் கிராமங்கள் முன்னேறவில்லை என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவர்கள் தங்கள் மேம்பாட்டை பொருளாதார சொத்துகளில் காட்டாமல் பொது
அறிவுகளில் காட்டி கொண்டிருக்கிறார்கள். பட்டணத்திலிருந்து எத்தனையோ
மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்த குடும்பத்தில் இப்படி ஒரு முன்னேற்றம்
என���்கு இன்னொன்றை யோசிக்க வைத்தது. இந்த உலகம் அளவில் பெரிதாக இருந்தாலும்
இணையத்தின் வாயிலாக மிகவும் சின்னதாகவே இருக்கிறது. நுனி விரலில் நம்
உலகம்.
அதோடு இல்லாமல் இப்படி மலையேற வருபவர்கள் தங்கள் கார்களை அங்கே விட்டு
செல்லும் நேரங்களில் பாதுகாப்பு சேவைக்கான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
சிலர் வீடு இருக்கும் நிலையை பார்த்து கொஞ்சம் அதிகமாகவே போட்டு கொடுப்பதை
நான் அங்கே பார்த்தேன். நாங்கள் அங்கு சென்று சேர்ந்த சிறிது நேரத்தில்
இன்னொரு காரும் எங்களோடு சேர்ந்து கொண்டது. அதில் எங்களைப்போன்ற சில
ஆசிடியர்கள் அவர்தம் குடும்பத்தினர் என பெரிய கூட்டமே இருந்தது. எத்தனை
பேர் உள்ளோம் என்பதை கணக்கெடுத்து கொண்டு எங்களின் வழிக்காட்டி நடக்க
தொடங்கினார். அவரை பின்தொடர்ந்து நாங்கள் நடக்க தொடங்கினோம். கிட்டதட்ட ஒரு
20 கிலோமீட்டர் தூரத்துக்கு தார் சாலை இருந்தது. அதற்கு பிறகு ஒத்தயடி பாதை
தான். பயணம் எப்போதும் போல சுவாரசியமாகவே சென்று கொண்டிருந்தது. வழி
நெடுக்க ஆங்காங்கே இளைப்பாற கொட்டகை கட்டி வைக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது
தண்ணீரும் சாக்லேட்டும் தான் மளையேற தேவையான உத்வேகத்தை தந்து
கொண்டிருந்தது.
இப்படியே சென்று கொண்டிருந்த்த போது வழி நடுவில் விசாலமான மலை சரிவுகளில்
வெற்றிலையை போன்ற கொடிகள் நடப்பட்டிருந்ததன. எனக்கு ஒரே ஆச்சர்யம். இங்கே
வெற்றிலையா? இருக்காதே. எனவே உறுதி படுத்தி கொள்ள ஜேம்ஸிடம் கேட்டேன்.
முதலில் என்னை பார்த்து சிரித்தவர், அது வெற்றிலையில்லை; மிளகு கொடி என்று
சொன்னார். பார்ப்பதற்கு கருப்பு வெற்றிலை போலவே காட்சியளித்தது. மிளகு
கொடியை நான் அன்று தான் பார்த்தேன். மிளகு வகையில் கருப்பு வெள்ளை என இரு
வகை உண்டு என்பது எனக்கு தெரியுமாகையால் இது என்ன மிளகு வகை என கேட்டதற்கு
கருப்பு மிளகு என பதில் வந்தது. அப்படியென்றால் வெற்றிலையில் கருப்பு
வெற்றிலைக்கு கொஞ்சம் கரும்பச்சை நிற இலையும் வெள்ளை வெற்றிலைக்கு
வெளிர்பச்சை இலையும் இருப்பது போல மிளகுக்கும் உண்டா என கேட்டேன். விசயம்
தெரிந்தவர்களுக்கு என் கேள்வி கொஞ்சம் மடத்தனமாக இருந்திருக்கலாம்.
இருந்தும் சின்ன சிரிப்போடு ஜேம்ஸ் அழகாக விளக்கினார். மிளகில் வகை
பிரிப்பது அதன் நிறத்தை வைத்து தான். வெள்ளை மிளகாக இருக்கட்டும, கருப்பு
மிளகாக இருக்கட்டும். இரண்டுமே விளைவது ஒரே கொடியில் தான். அவற்றை சுத்தம்
செய்யும் போது வெளிப்படும் நிறத்தை வைத்தே அது வெள்ளை எனவும் கருப்பு
எனவும் வகை பிரிக்கப்படுகிறது. கொடியிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் எடுத்த
மிளகு கருப்பு நிறத்தில் இருக்கும். அப்படியே விற்க படும் மிளகு கருப்பு
மிளகு எனப்படும். அதுவே கருப்பு மிளகை மூன்று மாத அளவில் ஊற வைத்து பின்னர்
நிறம் வெளுக்க காய வைக்கப்பட்ட மிளகு வெள்ளை மிளகு எனப்படும்.
இது ஒரு புறமிருக்க, இவ்வளவு உயர்ந்த மலை சரிவுகளில் மிளகு பயிரிட படுகிறது
என்றால் அதுவும் நகர்ந்து செல்லும் மேக மூட்டங்களை கையால் வருடி
பார்க்கலாம் என்ற அளவுக்கு உயர்ந்த பகுதிகளில் கண்டிப்பாக மக்கள் இருக்க
வேண்டும். அதற்கு ஏற்றாற்போல அங்காங்கே சின்ன சின்ன வீடுகள் இருந்தன. ஓட்டு
வீடுகள் தான் அவை. ஏழ்மை கோலம் பூண்டிருந்தன. நிஜமாகவே பரிதாபப்பட்டு
விட்டேன். பட்டணத்தை விட்டு எட்டி நிற்கும் இவர்களால் அவசர காலங்களில்
எப்படி வெளிவர முடியும்? மிளகை மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருக்க முடியுமா?
குடும்பம் குடும்பமாக இருக்கும் இவர்களில் பெண்கள் கருவுற்றால் பிரசவ
காலத்தில் எப்படி கீழிருந்து மேலேயும் மேலெயிருந்து கீழேயும் நடக்க
முடியும்? அதுவும் வாகனங்கள் செல்ல இயலாத சாலை. எப்படி இவர்களால் சமாளிக்க
முடிகிறது? கேள்விகள் என் மூளையை அரித்து கொண்டே இருந்தது அடுத்த காட்சியை
பார்க்கும் வரை.
|
|