|
பா.அ.சிவம் எனும் இலக்கியத் தோழன்

வல்லினம் இணைய இதழுக்குக் ‘கடவுளும் நானும்’ எனும் தலைப்பில் கட்டுரை
எழுதிமுடித்து அதை நவீனுக்கு மின்னஞ்சல் செய்தபோது பின்னிரவு 2.00 மணி.
அந்தக் கட்டுரையில் ‘கடவுள் மீதான வன்முறைகள்’ எனும் தலைப்பில் முன்பு நான்
எழுதிய ஒரு கவிதையை இணைத்திருந்தேன். நவீன கவிதைகளில், கருத்தாக்கங்களைக்
கேள்விக்குட்படுத்துவது, கடவுள் போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட
நம்பிக்கைகளைக்கட்டுடைத்துப் பார்ப்பது ஒரு தன்மையாகும். அந்த வகையில்
சமகாலப் படைப்பாளிகளான ஏ.தேவராஜன், பா.அ.சிவம், ம. நவீன், கே.பாலமுருகன்
போன்றோர் எழுதியிருந்த கடவுள் பற்றிய கவிதைகளின் வரிகளை மேற்கோள்களாக என்
கவிதையில் சேர்த்திருந்தேன். அவற்றில் பா.அ.சிவம் எழுதிய ‘கடவுள் நல்ல
கற்பனை’ என்ற பின்வரும் வரியும் அடங்கும்.
கடவுள் நல்ல கற்பனை என்று
கடவுள் மீது பின்னப்பட்ட சிந்தனைகளைக்
கலைத்துக்கொண்டிருந்தான் ஒருவன்
பா.அ.சிவம் எழுதிய இந்த வரிகளை நான் மீண்டும் ஒருமுறை கடந்துபோன எட்டு மணி
நேரத்துக்குப் பின், ஜாசின் ஏ.தேவராஜன் என்னைக் கைப்பேசியில் அழைத்து
பா.அ.சிவத்தின் மரணச் செய்தியைக் கூறினார். அதிர்ந்து போனேன். நம்ப
முடியாமல் நவீனை அழைத்துக் கேட்டேன்.
வாழ்வில் எத்தனையோ மரணங்கள் என்னைக் கடந்துபோகின்றன. பல மரணச் செய்திகளில்
நான் வெறும் மௌனப் பார்வையாளன். சில மரணங்கள் என்னை உலுக்கிவிடுகின்றன.
சிவத்தின் மரணம் அத்தகைய ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊடகங்களில் உடனே
அவரைப் பற்றிய செய்தியோடு கவிதைகளும் கட்டுரைகளும் வரத்தொடங்கின. என்னால்
உடனே எதையும் எழுதமுடியவில்லை. சொற்களை இழந்து ஒன்றும் சொல்ல முடியாமல்
தவித்தேன். அவரோடு பழகிய கணங்களும் பேசிய சொற்களும் என்னை எப்பொழுது
சந்தித்தாலும் முகம் மலர “சார்” என மிகுந்த மரியாதையோடு அழைக்கும்
வாஞ்சையான குரலும் நினைவில் வந்தன.
பா.அ. சிவம் எனக்கு எப்பொழுது அறிமுகமானார்? 2000ஆம் ஆண்டு தொடக்கம்
ஏடுகளில் அவரின் கவிதைகளைக் கண்டேன். இளைய படைப்பாளிகளில் பா.அ.சிவத்தின்
கவிதைகள் நம்பிக்கை தருவனவாக இருந்தன. 2002ஆம் ஆண்டு பினாங்கில் துங்கு
பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் புதுக்கவிதைக் கருத்தரங்கில் அவரோடு நெருங்கிப் பழகும்
வாய்ப்புக் கிட்டியது. பின்னர், எங்காவது இலக்கிய நிகழ்வில் சந்தித்தால்
கொஞ்ச நேரம் இலக்கியம் குறித்தும் புதுக்கவிதை போக்குக் குறித்தும்
பேசுவோம். பரபரப்பான வேலைச் சூழலில் அவர் வாழ்க்கை அமைந்துவிட்ட பிறகு
அவருடனான சந்திப்புக் குறைந்துபோனது.
இரண்டு தருணங்களில் அவருடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.
18.9.2010ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் லிட்டல் இந்தியா
பிரிக்பீல்ட்ஸ், நாகாஸ் உணவகத்தில் அவரைச் சந்தித்தேன். இருவரும் கவிதைகள்
பற்றி இரண்டு மணி நேரம் பேசினோம். மௌனம் கவிதை இதழில் அவர் எழுதிவந்த
‘மௌனத்தின் உரையாடல்கள்’ என்ற கவித�� குறித்த தொடருக்காக என் கவிதைகளைக்
கேட்டிருந்தார். அந்தக் கவிதைகள் பற்றி எங்கள் உரையாடல் தொடங்கி
கவிதையுலகம் குறித்துப் பலவற்றையும் பேசினோம். பின்னர் அதுகுறித்து, அவர்
மௌனம் இதழில் இப்படி எழுதியிருந்தார்:
மௌனத்தில் வெளிவந்த கவிதைகள் பற்றியும், எனது கவிதைகள் பற்றியும்
விவாதித்தோம். கவிதைகள் மீதான அவரது பார்வை மாறியிருப்பதை நன்கு
உணர்ந்தேன். மௌனத்தில் கடந்த இதழில் வெளிவந்த எனது
‘கைவிடப்பட்டவர்கள்’ கவிதை பற்றியும் அவர் என்னோடு பேசினார்.
மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பு அது. பல சந்திப்புகள் அவ்வாறு
நிகழ்வதில்லை.
‘பல சந்திப்புகள் அவ்வாறு நிகழ்வதில்லை’ என்ற வரியில் அவரின் மன ஆதங்கத்தை
என்னால் உணர முடிகிறது. இலக்கியப் பரப்பில் ஒத்த உணர்வுடனே எல்லாரும்
இணைவார்கள் என்று கூறமுடியாது. முரண்பட்ட இலக்கியக் கொள்கையும் கருத்து
வேறுபாடுகளும் சமயங்களில் படைப்பாளிகளிடையே தடுப்புச் சுவராக
எழுந்துவிடுவதுண்டு. இலக்கியம் தொடர்பான உரையாடலுக்குச் சிவத்தின் ஆழ்மனம்
எப்பொழுதும் காத்திருந்தது என்பதை அவரோடு பேசியபோதும் மேற்காணும் வரிகளைப்
படித்தபோதும் உணர்ந்தேன்.
11.6.2011 அன்று மலாக்கா ஸ்டாம்போர்ட் கல்லூரியில் நடைபெற்ற ‘மௌனம்’
கலந்துரையாடலுக்கு ஜாசின் ஏ.தேவராஜன் அழைத்திருந்தார். அதற்காக,
பா.அ.சிவத்தின் காரில் கே.பாலமுருகன், மஹாத்மனோடு நானும் பயணமானேன்.
மலாக்கா சென்று திரும்ப நான்கு மணி நேரப் பயணம். சிவத்தோடு நீண்ட நேரம்
பேசக் கிடைத்த கடைசி வாய்ப்பு அது. நால்வர் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?
சளைக்காமல் இலக்கியம் குறித்தும் கவிதைப் போக்குக் குறித்தும் பலவற்றையும்
பேசினோம். சிவத்திடம் நிறைய கேள்விகள் இருந்தன. பலவற்றையும் மனம் விட்டுப்
பேசினோம். ‘மௌனம்’ கலந்துரையாடலைத் தேவராஜன் சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தார். கோ.புண்ணியவான், சை.பீர், தொ.க.நாராயணசாமி, டாக்டர்
ஜோன்சன் எனப் பலரும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கவிதை குறித்த கருத்துப்
பகிர்தல்கள் அங்கும் தொடர்ந்தன. நிகழ்வுக்குப் பின் கல்லூரிக்கு வெளியே
புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பலரையும் ஒன்றிணைத்த நிகழ்வாய்
பா.அ.சிவத்தோடு எங்கள் நினைவுகளைத் தாலாட்டும் விதமாய் அந்தப் படங்கள்
இன்றும் உள்ளன.
நண்பர்களின் இலக்கிய முயற்சிகளுக்கு முடிந்தவரை உதவுவதற்குப்
பா.அ.சிவத்தின் மனம் எப்பொழுதும் காத்திருந்தது. கெடா எழுத்தாளர்
சீ.முத்துசாமியின் சிறுகதைத் தொகுப்பு நூலைத் தலைநகரில் 20.12.2012இல்
வெளியிடும் முயற்சிக்குப் பா.அ.சிவம் பெரிதும் உதவினார். தம் வேலைப்
பளுவுக்கு மத்தியிலும் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்தார். நிகழ்ச்சியை
வழிநடத்த என்னை அழைத்தார். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு நிகழ்வில்
வரவேற்புரையாற்றவும் கலந்துகொள்ளவும் முடியாமல் அவர் பணியாற்றும் அமைச்சு
சார்ந்த பணிகள் அவரை வெளியே அழைத்தன. அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்து
நிகழ்ச்சி குறித்துக் கேட்டார். “நன்றியுரை ஆற்ற வருகிறேன்” என்றார்.
அதுகூட சாத்தியமில்லாமல் போயிற்று. ‘சார், நீங்களே நன்றி சொல்லி
முடித்துவிடுங்கள். தேவராஜன் நூல்வெளியீடு நிகழ்ச்சி அறிவிப்பு
செய்யுங்கள். ஜனவரி தொடக்கம்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.
பா.அ.சிவம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அவரில்லாமலே உமா பதிப்பகம் டத்தோ
ஆ.சோதிநாதன் தலைமையில் சிறப்பாக நடந்து முடிந்தது. ஏற்புரை ஆற்றிய
சீ.முத்துசாமி, “ஒரு மகன்போல் சிவம் எனக்கு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்துள்ளார். ஆனால், இங்கு வரமுடியாத சூழல் அவருக்கு” என்று மனம்
நெகிழ்ந்து கூறினார்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினேன். மீண்டும் பா.அ.சிவத்தின்
குறுஞ்செய்தி: ‘சார், உங்களுக்கு எனது நன்றி மலர்கள்’. ‘நிகழ்வுக்காக
உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி சிவம்’ என்று பதில் அனுப்பினேன்.
‘தேவராஜன் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் சார்’ என்று
அவரிடமிருந்து இன்னொரு குறுஞ்செய்தி வந்தது. ‘அதற்காக நிச்சயம் மீண்டும்
இணைவோம்’ என்று அனுப்பினேன். அந்தச் சொற்கள் இன்று பொருளற்றுப்போய்விட்டன.
நிச்சயமில்லாத வாழ்க்கையில் எப்படி நான் நிச்சயம் எனக் கூறினேன்? ஆயினும்,
நீக்க முடியாமல் என் கைப்பேசியின் இன்பாக்ஸில் அவை இன்னும் இருக்கின்றன.
அவற்றைக் காண நேரும்போதெல்லாம் கடந்துபோன கணங்களைக் அவை கனமாக்குகின்றன.
பா.அ.சிவத்திற்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததா? அதுகுறித்து அவரே ‘மௌனம்’
இதழில் இப்படி எழுதினார்:
‘கடவுள் நல்ல கற்பனை என்று
கடவுள் மீது பின்னப்பட்ட சிந்தனைகளைக்
கலைத்துக் கொண்டிருந்தான் ஒருவன்...
எனும் வரிகள் பா.அ.சிவம் எனும் எனக்காக எழுதப்பட்டவை என்று நான் திண்ணமாக
நம்புகிறேன். ‘கடவுள் நல்ல கற்பனை’ எனும் எனது கவிதையை மௌனத்தில்
வாசித்திருப்பீர்கள். வெளிப்படையாகவே சொல்கிறேன். எனக்கு இறைநம்பிக்கை
உண்டு. ஆனால் என்னைத்தான் நான் பெரிதும் நம்புகிறேன் முழுமையாக. நான்
நம்பிக்கையுடன் நடைபோடுவதற்கு எனக்கு இறைநம்பிக்கை அவசியமாகிறது. அதே வேளை,
கடவுள் வியாபாரமாக்கப்படும்போது, அல்லது கடவுள் மீதான அரசியல் நடவடிக்கைகள்
அரங்கேறும்போது அவற்றைப் படைப்பில் கொண்டு வருவதற்கும் நான்
கடமைப்பட்டுள்ளேன்.சில கவிஞர்கள் உடைத்துப்போடும் கடவுள் நம்பிக்கையை
மீண்டும் கட்டுவதற்கான முயற்சியைத்தான் ந.பச்சைபாலன் இக்கவிதையில்
மேற்கொண்டிருக்கிறார். மாறாகத் தனிப்பட்ட தாக்குதல் இல்லை என்று என்னால்
விளங்கிக் கொள்ள முடிகிறது’.
கடந்த சில ஆண்டுகளாக, பா.அ.சிவம் ஏடுகளுக்கு எழுதுவது குறைந்துபோனது.
ஆயினும், அவருக்குள் கவிதை மீதான காதல் தீர்ந்துபோகாமல் ‘மௌனம்’ கவிதை இதழ்
அவரை எழுதத் தூண்டி ஒரு படைப்பாளியாய் இயங்கச் செய்தது. மௌனத்தின் தொடக்கம்
முதல் தொடர்ந்து கவிதைகளை அதனில் படைத்து வந்தார். அதுமட்டுமன்றி, கவிதை
குறித்த விமர்சனங்களும் கருத்துப் பரிமாற்றமும் தேவை என்பதை வலியுறுத்தித்
தன் பங்களிப்பைத் தொடர்ந்து மௌனத்தில் வழங்கி வந்தார். இறுதியாக, அவர்
மௌனத்தில் எழுதிய கட்டுரையில் விமர்சனம் பற்றித்தான் தன் சிந்தனையைப் பதிவு
செய்திருந்தார்:
‘மீண்டும் மீண்டும் பொத்தாம் பொதுவான விமர்சனங்களை முன்வைப்பதன்
வழி, நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.
அதனை இப்போது விளங்கிகொள்ளாமல் காலம் தாழ்த்திப்
புரிந்துகொண்டோமேயானால் பேரிழப்பு நிச்சயம். இன்னும் எத்தனை
காலத்திற்குத்தான் இவ்வகை விமர்சனங்களை நாம் தொடர்ந்து
எழுதிக்கொண்டும் அதன்வழி இலக்கியம் செய்துகொண்டு
இருக்கப்போகிறோம்?'
புதுக்கவிதை எழுதிய பெரிய வட்டத்திலிருந்து விலகி, இன்னொரு சிறிய
வட்டத்தில் நவீன கவிதையின் தன்மைகளை உள்வாங்கிகொண்டு எழுதிய படைப்பாளிகளில்
ஒருவராக பா.அ.சிவம் இயங்கினார். எழுதியெழுதிச் சலித்துப்போன சொல்லாடல்களை
அவர் தவிர்த்தார். அதனால் அவரின் கவிதைகள் தனித்தன்மையோடு திகழ்ந்தன.
வாசிப்பும் புதியன தேடும் மனமும் நவீன கவிதைமொழியில் அவரைத் தொடர்ந்து
இயங்கவைத்தன. தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கும் முய���்சியில்
பா.அ.சிவம் ஈடுபட்டிருந்தார். அது நிறைவேறாமல் போனது. இனி, நண்பர்களின்
முயற்சியில்தான் அவை நூலாகவேண்டும் அநீதி கண்டால் எதிர்வினையாற்றும்
மனநிலையும் அவருக்கு இருந்தது. தடுப்புக் காவலில் இறந்துபோன தன் நண்பனின்
தம்பி தர்மராஜன் பற்றி ஒருமுறை இப்படி எழுதினார்:
சந்தேகத்திற்கு இடமின்றி
கொலை செய்தவன்
ஜாமினில் விடுதலை..
சந்தேகத்தின் பேரில்
கைதானவன்
லாக்கப்பில் படுகொலை..
கடைசியாக பா.அ.சிவத்தைப் பார்க்கப் போயிருந்தேன். அமைதி தவழும் முகத்தைப்
பார்த்தபோது, ‘சாவே உனக்கொருநாள் சாவுவந்து தீராதோ, தெய்வமே உனையொருநாள்
தேம்பியழ வையோமோ’ என்ற கண்ணதாசன் வரிகளே நினைவுக்கு வந்தன. நயனம்
ஆதி.இராஜகுமாரன் சொன்னது சரிதான். காலனுக்கு இரக்கமும் இல்லை; அறிவும்
இல்லை. சிவத்தின் இறப்பிற்குச் சென்றுவிட்டு திரும்பிய இராம.சரஸ்வதி என்னை
அழைத்தார். “சார், மனசே சரியில்லை சார். நீங்க எழுதிய ‘கைப்பேசியில் சில
எண்கள்’ என்ற கவிதைதான் ஞாபத்துக்கு வந்தது” என்றார்.
பா.அ.சிவம் எழுதிய கவிதைகளில் ‘நீங்கள் கேட்டவை’ எனும் கவிதை, தான்
விடைபெறுவதைச் சொல்லாமல் சொல்லிய கவிதையாக எனக்குத் தோன்றுகிறது.
நீங்கள் கேட்டவை
நீங்கள் சொல்வது
உண்மைதான்..
சந்தித்துப்
பேசிப்
பழகி
அளவளாவி
வெகுநாட்கள்
ஆகின்றன..
காணாமல் போனதாக
அல்லது
ஒரு சாலை விபத்தில்
இறந்ததாக
அல்லது
தற்கொலை செய்துகொண்டு
மாண்டதாகச்
செய்தி வரும்வரை..
சந்தித்து என்னவாகப் போகிறது?
பேசி எதை வளர்க்கப் போகிறோம்?
பழகி எவ்வளவு தூரம் செல்வோம்?
அளவளாவி யாரை எல்லாம் வைவோம்?
இப்போது புரிகிறது
மழை வந்தால்
நனைய வேண்டும்..
அழத் தோன்றினால்
சிரிக்க வேண்டும்..
இன்னும் ஓராண்டில் மலேசியப் புதுக்கவிதையுலகம் அரை நூற்றாண்டின் நிறைவைக்
காணவுள்ளது. இந்தத் தருணத்தில் எங்களோடு களத்தில் நின்று போராடிய பா.அ.
சிவம் எனும் சக இலக்கியத் தோழனை இழந்துவிட்ட பெருந்துயர் இதயத்தை
அழுத்துகிறது. உடல் மறைந்தாலும் அவரின் கவிதைகளை யார், எங்கே வாசிக்க
நேர்ந்தாலும் அங்கே பா.அ.சிவம் எனும் கவிதையை நேசித்த படைப்பாளி
விழித்தெழுவான் என்ற நம்பிக்கை மிச்சமிருக்கிறது.
|
|