|
கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’

‘இதோ இந்தப் படத்துக்கு பதில் படம் காட்டு..’ என ஒருவரை ஒருவர் தாங்கள்
வைத்திருக்கும் புத்தகத்தைப் புரட்டி கொண்டிருக்கின்றனர். பதில் படம் காட்ட
முடியாத பட்சத்தில் தோற்று போனதாக அவர்களுக்குள் ஒரு விளையாட்டு.
செல்லையாவும் ராமசாமியும் விளையாட்டில் மும்முரமாய்
ஈடுப்பட்டிருக்கின்றனர். புத்தகப் பக்கங்கள் தீர்ந்து போய் காட்ட இனி
படங்கள் ஏதுமின்றி தோற்று போகின்றான் செல்லையா. பள்ளி முடிந்து வீடு
திரும்பும்போதும் அவர்களின் விளையாட்டு தொடர்கின்றது. விளையாட்டு சற்று
திசை திரும்பி ‘எங்கள் வீட்டில் அது இருக்கே, உங்கள் வீட்டில் இருக்கா?’ என
தங்களிடம் இருப்பவற்றையும் இல்லாதவற்றையும் கேள்வி கேட்டு தொடர
செல்லையாவுக்குத் துணையாக அவனது சகோதரி மங்கம்மாவும் சகோதரன் தம்பையாவும்
உடன் துணை புரிகின்றனர்.
விடிந்தால் தீபாவளி. ஏழைக்குடும்பத்தில் பிறந்த செல்லையாவும் பணக்காரக்
குடும்பத்தில் வந்த ராமசாமியும் அவரவர் இருப்புக்கேற்ற தீபாவளி
குதூகலத்தில் மூழ்கியிருக்கின்றனர். பின்னிரவில் தன் வீட்டுக்கு வந்து
சேரும் தாய் தந்தையற்ற சிறுவனை அரவணைத்துக் கொள்கின்றாள் செல்லையாவின் தாய்
தாயம்மா.
தலைத்தீபாவளிக்கு ராமசாமியின் அக்கா வந்திருக்கின்றாள். அவள் திருமணம்
செய்திருக்கும் ஜமீன்தார் மாப்பிள்ளையை ஊரார் ராஜா என அழைக்கின்றனர்.
ராமசாமி எதார்த்தமாக போட்டியைப் பற்றி எண்ணாமல் தன் வீட்டுக்கு ராஜா
வந்திருப்பதாக சொல்கின்றான். மங்கம்மா போட்டியின் தாக்கத்துடன் தன்
வீட்டுக்கும் ராஜா வந்திருப்பதாய் பெருமையாய் சொல்வதாய் எழுத்தாளர்
கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ கதை முடிகின்றது.
வாழ்க்கையின் குறை நிறைகளை எவ்வாறு தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு
எளிதாய் கடந்து செல்ல முடியும் என்பதை கதையில் வந்து போகும் விளையாட்டின்
வழியே உணர முடிகின்றது.
"எனக்கு சில்க் சட்டை இருக்கே, உனக்கு இருக்கா?"
"ஐயோ! சில்க் சட்டை எதுக்காம்? ஹூம், லேசாச் சருகு மாதிரி இருக்கும்.
சீக்கிரம் கிழிஞ்சி போகும். இதுதான் கனமாயிருக்கு. ரொம்ப நாளைக்குக்
கிழியாமே இருக்கும். நல்லாப்பாரு!"
"எங்கள் வீட்டிலே ஆறு பசு இருக்கு; உங்க வீட்டிலே இருக்கா?"
"அது சரி, எங்க வீட்டிலே ஒன்பது கோழி இருக்கு, உங்க வீட்டிலே இருக்கா?"
இல்லாத ஒன்றை பற்றி வருந்தாமல் தனக்கு இருப்பதைப் பற்றி திருப்தியடையும்
மனங்கள் எளிதாய் அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. பெரும்பாலும் குழந்தைகள்
அத்தகைய மனங்களைக் கொண்டிருப்பதைக் காணும்போது ஆச்சர்யமாக உள்ளது. பிறரின்
வார்த்தைகளினால் பாதிக்கப்பட்டு மனம் மாற்றமடையாத திடமும் வியக்க
வைக்கின்றது.
பிறருடன் நம்மை நாமே ஒப்பிட்டு பார்த்து அதனால் ஏற்படும் திருப்தியின்மை
வாழ்க்கையின் மீதான சுவாராஸ்யத்தைக் குறைத்துவிடுகின்றது. இதனால் முக்கிய
வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் நழுவவிடப்படுகின்றன. திருப்தியின்மை உருவாக
முக்கிய காரணிகளாய் அவரவர் மனங்களே என்பதை பலர் ஏற்றுகொள்ள இயல���மல்
போகலாம். இயற்கை வளங்களும் நேர விகிதங்களும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே
அளவில் இருக்கும் பட்சத்தில் அதற்காகவாவது மனம் திருப்தியடைய பழகிக்
கொள்ளலாம்.
செல்லையா, மங்கம்மா, தம்பையா தங்கள் ஏழைக்குடும்பத்தில் நிறைந்து இருக்கும்
மிக உயர்ந்த அன்பைச் சொல்ல தவறவிட்டு விட்டாலும் கதையை வாசிப்போர் அதைத்
தவற விடமாட்டார்கள். தாய் தந்தையற்ற ராஜாவை தன் பிள்ளைகளில் ஒன்றாக
ஏற்றுக்கொள்ளும் தாயம்மாவின் தாய்மையும் முதலில் தயங்கினாலும் வெகு
சீக்கிரத்தில் தங்களுள் ஒருவனாக ராஜாவை ஏற்றுக்கொள்ளும் குழந்தைகளும்
குறைவற்ற அன்பை மனதில் அமைய பெற்றிருக்கின்றனர். அதுவே வாழ்க்கையில்
விலைமதிப்பற்ற செல்வம். அது அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. தங்களிடம்
அன்பை வைத்திருப்போர் பிற செல்வங்களைக் குவித்திருப்பவர்களைக் காட்டிலும்
மிக உயர்ந்தவர்கள். வாழ்க்கையின் அரிய செல்வமென அதை கருதலாம்.
மத்தாப்பு விளையாட ஆசைப்படுகின்றாள் தங்கம்மா. தங்களின் ஏழ்மையை உணர்த்த
ராஜாவைச் சுட்டிக்காட்டி அவளைச் சமாதானப்படுத்துகின்றாள் தாயம்மா.
நிறைவடையாத வாழ்க்கை இடைவெளிகளை நிரப்ப அத்தகைய எடுத்துக்காட்டுக்கள்
தேவையாகின்றன. எப்போதுமே இல்லாதவற்றை தேடி தேடியே சோர்வடையும்
மனங்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் நிறைவுகள் தெரிவதில்லை.
குழந்தைகள் உலகம் எப்பொழுதுமே கள்ளம் கபடமின்றி வாழ்க்கையைக்
கடந்துவிடக்கூடிய உத்திகள் நிறைந்ததாய் உள்ளது.
|
|