|

(மாரி செல்வராஜின் முதல் சிறுகதை தொகுப்பு இது.வம்சி பதிப்பில் வந்துள்ள
அவரது இத்தொகுப்பு பல முக்கிய படைப்பிலக்கியவாதிகளின் கவனத்தைப்
பெற்றுள்ளது. அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு சிறுகதையை வல்லினத்தில்
மறுபிரசுரம் செய்வதில் மகிழ்கிறோம். )
காலம் : தெரியாது
இடம்: தாமிரபரணி, புளியங்குளம்
எதையும் எப்போதும் யாரிடமும் சொல்லாமல், எதையும் கேட்காமல் அந்த பாழாப்போன
நதி எல்லா ரகசியத்தோடும் ஒரு செவிட்டு நதியை போல ஒரு மலட்டு நதியை போல
இன்னும் சுழித்துக்கொண்டு ஓடுவதுதான் பெரும் பாவம்...
ஆண்டு : 1999
நாள்: ஜீலை 23, இரவு
இடம் : புளியங்குளம்
நேற்று குவித்து வைக்கப்பட்ட உப்பு குவியல்கள் நடுவீட்டில் அப்படியே
இருக்கிறது. மணி பத்து தாண்டிவிட்டது முகிலன் இன்னும் வீடு வந்து
சேரவில்லை. அம்மாவுக்குதான் பயமாக இருந்தது. தினமும் அவன் இவர்களிடம்
அடிவாங்குவதை அவள் வெறுமென வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்கு
என்னவோ போலிருக்கிறது
.
“யேப்பா பழுந்தரப்பா இப்படி நீட்டி நிமுந்து கிடக்கிய போய் அந்த சீனி பய
வீட்லயாவது கேட்டுட்டு வாயேன் எங்க போயிருக்கான் என்ன ஆச்சுன்னு “
அப்பா செல்வராஜ் அப்படியே எழுந்து பின் வாசல் வழியாக அம்மன் கோவிலை
பார்த்து போனார். அவருக்கு எல்லாம் தெரியும் பையன் எங்கு போயிருக்கான்
அங்கு என்ன நடந்துச்சுன்னு, ஆனால் அவரால் என்ன செய்யமுடியும் என்னைக்காவது
அவர் பேச்ச அவன் கேட்டுருக்கானா, மூத்தபையன் நாய அடிக்கிற மாதிரி தினமும்
அடிக்கிறான் அதையே உதித்திட்டு பயமில்லாம ஊர் திரியிறான் அவன பத்தி ஊர்ல
எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க எல்லாமே அவருக்கு தெரியும்.
“பெத்த மூனு ஆம்பிளை பிள்ளைங்கள்ள இரண்டு புள்ளைங்க கொழுந்து மாதிரி
இருக்கு இவன் மட்டும் இந்த வயசிலே ஏன் இப்படி இருக்கான்” என்பது அவர்
குழப்பம்.
“இன்னும் உன் மவன் வரலல்லா அவன் வரமாட்டான், உனக்கு விஷயம் தெரியுமா
உம்மவன் திருநெல்வேலிக்குக் கட்சி மீட்டிங்குக்கு போயிருக்கானாம், முளைச்சி
மூனு இலை விடல அதுக்குள்ள அவருக்கு கட்சி மீட்டிங், ச்ச்சீ இங்க பாரு நான்
எவ்வளவு அடி அடிச்சிருக்கேன் என் அடி எந்த உதவியும் அவனுக்கு செய்யலன்னு
உம்மவன் போலிஸ்காரனுகிட்ட அடிவாங்க போயிருக்கான் போல அங்க போலிஸ்காரனுங்க
ஆத்துக்குள்ள விரட்டி விரட்டி அடிச்சானுங்களாம் எவனுக்கு என்னாச்சோ எத்தனை
உயிர் பறிபோச்சோன்னு எல்லாரும் துண்டகானும் துணியக்கானும்ன்னு ஊர்வந்து
சேர்ந்திட்டானுங்க ஆனால் உம்மவன அந்த மோடுமுத்துன இளவட்டன மட்டும் இன்னும்
கானும்” அண்ணன் சொல்லிமுடிக்க அம்மாவிற்கு மயக்கம் வருவது போலிருந்தது.
”ஐயோ ஐஞ்சாவது புள்ள ஆம்பள பிள்ள வேண்டாம்னு தலையில தலையில அடிச்சிகிட்டேனே
கேட்டானா சண்டாள பாவி, என் குடிய கெடுக்கிறதுக்குன்னு கரிசட்டி பய கடைசியா
வந்து என் வயித்துக்குள்ள கரி கிடங்கா கிடந்துருக்கானே நான் என்ன
பண்ணுவேன்” என்று அம்மா நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள். இப்படித்தான்
முகிலன் எதாவது தப்பு செய்திருந்தால் அவனை வீட்டில் உள்ளவர்கள் அடிப்பதற்கு
முன்னால் முகிலனை காப்பாற்ற அவளே தன் நெஞ்சில் ���ன்னை தானே
குத்திக்கொள்வாள். குத்தி குத்தி மயக்கமடைவாள். எல்லாரும் அவளுக்கு
பண்டுவம் பார்ப்பார்கள் அவள் முகிலனை பார்ப்பாள்.
எந்தந்த வீட்டில் முகிலன்கள் இருக்கிறார்களோ அந்தந்த வீட்டில் அவனுக்கு
அம்மாவாக பாப்பாக்கள் இருப்பார்கள்.
“இங்க பாரு ஓவரா கத்தி கூப்பாடு போடாத போன பயலுவள்ள நாலு பேர் அப்புறம்
அந்த ராஜகிளி மாமாவும் இன்னும் வரல அவரு கூடத்தான் எங்காவது இருப்பான்
வரட்டும் வந்ததுக்கு அப்புறம் நடக்கப்போற கச்சேரிய தடுத்து நிறுத்திரலாம்னு
மட்டும் கனவு கானாத என்னா”
அண்ணன் முடிவாய் சொல்லிவிட்டு படுக்க போய்விட்டான். அப்பாவும் அம்மன்
கோவிலிலே படுத்துக்கொண்டார். அக்கா மட்டும் போய் பக்கத்து வீட்டு
பயலுகளிடம் விசாரித்துவிட்டு வந்தாள்.
“யம்மோவ் அங்க பெரிய கலவரமாமமே யாருக்கு என்னாச்சுன்னு தெரியலன்னு எல்லா
பயலுவலும் சொல்றாங்க ஆனால் முகிலன் கூட்டத்துக்குள்ளலாம் மாட்டிக்கிடல
எங்களுக்கு தெரியும்னு சொல்றானுவ” என்றாள் அவள் பங்கிற்கு. அம்மா
மறுபடியும் “ஓ” என்று சினுங்க ஆரம்பிக்க.
“நீ எதுக்கு இப்ப சினுங்கிற உம்மவன் ஊரவித்தவன் அவனாவது சிக்குறதாவது பேசாம
படு” அவளும் சுருட்டி முடங்கினாள்.
விடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ன நடந்திருக்கிறது, என்ன
நடத்தியிருக்கிறார்கள் என்பதை போல ஊர் அத்தனை அமைதியாய் இருந்தது. கொட்ட
கொட்ட விழித்துக்கொண்டிருந்த அம்மாவுக்கு மட்டும் மேட்டுத்தெருவில்
முனங்கும் நாய் சத்தம் கூட தெளிவாய் கேட்டது.
“ய்ப்பா பரியா என் குலச்சாமி என் புள்ளய நீ தான்பா பத்திரமா ஊடு வந்து
சேக்கனும் அப்படி அவனை மட்டும் கொண்டு வந்து சேத்துட்டன்னா இந்த வருசம் உன்
குதிரைக்கு பட்டு எடுத்து சாத்தி அவனுக்கு ஒரு மொட்டையடிக்கிறேன் என்
தர்மசாஸ்தாவே” என்று முனங்கிகோண்டே கண்மூடி கிடந்தாள்.
எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் கேட்டது அவனுக்கு, ஆனால் அம்மா கடைசியில்
முனங்கியது தான் கேட்கவில்லை. அதற்கு காரணம் கொசுக்கடி அதிகமாக இருந்தது,
அதைவிட மாட்டு சாணத்தின் நாத்தம் இன்னும் அதிகமாக இருந்தது. இதையெல்லாம்
பொறுத்துக்கொண்டாலும் பசி உயிரை புடுங்வதாக இருந்தது. மதியம் பேரணி
தொடங்குவதற்கு முன் ராஜகிளி மாமா வாங்கி குடுத்த ஆறு இட்லிகளையும்
வயிற்றுக்குள் தான் பத்திரமாக போட்டு வைத்திருந்தான் ஆனால் இப்போது
காணவில்லை. தலைதெறித்து ஓடி வரும்போது ரோட்டில் எங்கே விழுந்ததோ. கொஞ்சம்
குப்புற படுத்தால் நல்லாயிருக்கும் போல தோன்றியது முகிலனுக்கு ஆனால் காலை
நீட்டினால் சுவர் இடிக்கிறது. நல்லவேளை வீட்டில் கோழிகளே இல்லை அதனால் தான்
முகிலனுக்கு மாட்டு தொழுவத்தில் உள்ள கோழிமடத்தில் ஒளிந்துகொள்ள இடம்
கிடைத்தது.
”எத்தனை கிலோமீட்டர் இருக்கும் திருநெல்வேலிக்கும் நம்ம ஊருக்கும் முப்பது
இருக்கும் அல்லது இருப்பந்தைந்து இருக்கும் அவ்வளவு தூரம் ஓட்டமும்
நடையுமாய் வந்திருக்கோம் என்பதை நினைச்சு பார்க்க முகிலனுக்கு வலி
முனங்கியது. உண்மையாகவே அவன் உடம்பு அவனுக்கு அப்படி வலித்தது. ஏனெனில் ஈவு
இரக்கமில்லாத அதிகாரம் வெறிப்பிடித்து சுழட்டிய தன் சாட்டையின் தடம் அவன்
முதுகில் அப்படியே அப்பியிருந்தது.
ஆண்டு : 1999
நாள்: ஜீலை 22, இரவு
இடம் : புளியங்குளம்
”கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் செய் அல்லது செத்துமடி” வேண்டாம் அந்த “செய்
அல்லது செத்துமடிய” மட்டும் எடுத்துருங்க.
”ஏன் என்ன ஆச்சு”
”இல்ல கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் மட்டும்தான் அம்பேத்கர் சொன்னது “செய்
அல்லது செத்துமடி” என்பது காந்தி தாத்தா சொன்னது”
”அதனால என்ன எல்லாம் படிக்கும்போது நமக்கு சரியாதான வருது இருக்கட்டும்”
.
”வேண்டாம்பா எடுத்துருங்கன்னா சொன்னா எடுத்துர வேண்டியதானே”
“செய் அல்லது செத்துமடி நல்லா நமக்கு பொருத்தமா இருக்கில்ல அதுதான்
சொன்னேன்”
.
“இங்க பாரு என்னன்னமோ காரணம் சொல்லி ஏததோ வித்தகாட்டி அம்பேத்கரும்
காந்தியும் வேற வேற ஆளில்லைன்னு சொல்றதுக்கு நிறைய கூட்டம் நிறைய கலர்ல
வந்துகிட்டே இருக்கு. அதுதான் அது வேண்டாம் எடுத்துருங்க”
”டேய் மாமா சொன்னா சரியாத்தான் இருக்கும் எடுத்துரு வேணும்னா நமக்கு ஏத்த
மாதிரி நம்ம போராட்டத்துக்கு ஏத்த மாதிரி நீங்க ஒரு லைனை பிடிச்சு எழுதுங்க
என்ன”
“எங்க இவ்வளவு பேசுறல்ல நீ ஒன்னும் சொல்லு பார்ப்போம்”
“அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏண்டா இன்னும் அந்த முட்டாப்பய மவன் வீட்ல சாணி
அள்ளி போட்டுட்டு வாறேன்”
“அண்ணே நான் சொல்லட்டுமா அதுக்கு மேட்சா”
“எங்க சொல்லு பார்ப்போம்”
“அடைந்தால் மாஞ்சோலை இல்லையேல் மரணசோலை”
“அட யோவ் மாமா பரவாயில்லயா பையன் நல்ல வெடிப்பா தான் இருக்கான். பின்றானே”
”ஆமா சின்னப்பையன் சினிமா டயலாக்க அடிச்சிவுடுறான் அத போய் பெருசா பேசுற,
ஒருவேளை அங்க கலவரம் கிலவரம் வந்தா இந்த போர்டு வைச்சிருக்கிறவன் செத்தான்”
“பரவாயில்ல நானே இந்த போர்ட வைச்சிக்கிறேன் என்ன ஆனாலும் பரவாயில்ல இதுக்கு
ஒரு முடிவு தெரிஞ்சாகனும்தான போறோம்”
“அடைந்தால் மாஞ்சோலை
இல்லையேல் மரணசோலை” நல்லா திக்கு சொவப்புல எழுது அப்புறம் அப்படியே மத்த
எல்லாத்தையும் எழுதுங்க. நான் போய் இரண்டு பருக்கைய அள்ளி போட்டுட்டு
வந்துடுறேன்.
வாவரசி உங்க அத்த என்ன கொழம்பு வைச்சிருக்காளோ”
ராஜகிளி மாமா அப்படியே வீட்டை பார்த்து நடைய கட்டினார்.
“அங்க பாரு மாமன் நடந்து போற தோரணைய. மனுசன் பெறங்கைய கட்டி எப்படி
நடக்குறான் பாரு ராஜ தோரணை தான். வயசு ஐம்பது ஆச்சுன்னு ஒரு பொம்பளையாள
ஊருக்குள்ள சொல்ல முடியுமா என்ன”
”இப்போ அப்படியே அவர் பின்னாடியே போய் பார்த்தா தெரியும் ”என்னமோ இப்போதான்
இளவட்டன்னு நினைப்பு வயசான காலத்துல நாளு கஞ்சிய குடிச்சமா குச்சிக்குள்ள
முடங்குனமான்னு இல்லாம தோரனையா ஏத்தாப்பு போட்டு சுத்துராறு துரை”
அப்படின்னு தங்கம்ம அத்த கிழி கிழின்னு கிழிப்பா போய் கேக்கிறியா”
“உனக்கு பொறுக்காத நீ எழுது”
“உங்களோடு நாங்கள் செய்துகொள்ளும் சமரசம் என்பது எம் தலைமுறைக்கு யாம்
அருந்த கொடுக்கும் ஒரு கோப்பை விஷம்”
“உயிர் வாழ அல்ல இப்போராட்டம் உணர்வுள்ளவனாய் வாழ”
“அடக்குமுறைக்கு அஞ்சிடமாட்டோம் அதிகாரத்தை மிஞ்ச விடமாட்டோம்”
”ஆட்சிதான் உங்கள் கையில் அதிகாரம் அது எங்கள் கையில்”
நேற்று எல்லாம் பதாகைகளும் எழுதிமுடிக்கும் போதே இதே நேரம் ஆகிவிட்டது.
“யப்பா பாண்டிய ராசாக்களா அப்படியே போய் அம்மன் கோவில்ல படுத்தேன்,
ஆலமரத்துல படுத்தேன்னு மலந்து கிடந்திராதீங்க காலையில டான்னு எட்டு
மணிக்கெல்லாம் வண்டி வந்துரும் ஞாபகத்துல வைச்சிக்கோங்க என்ன”
என்று மறுபடியும் ராஜகிளி மாமா வந்து சொல்லிவிட்டு போனார்.
”எங்க போய் படுக்கிறது வீட்டுக்கு போனா அவ்வளுதான் நாளைக்கு இராத்திரிவரை
நான் எங்க நடுவீட்ல தலைகீழாதான் தொங்கிட்டு இருப்பேன் நான் இங்கேயே
படுத்துக்கிறேன்னே”
பொதுவாசகசாலையிலே முடங்கிகொண்டான் முகிலன்.
என்ன ஆனாலும் சரி நாளைக்கு திருநெல்வேலியில நடக்கிற மாஞ்சோலை மக்களுக்கான
பேரணியில் கலந்துகொண்டே ஆகவேண்டும், தலைவரை பார்த்தே ஆகவேண்டும். என்ன
கலருடா மனுசன் படிக்க படிக்க கலர் கூடும்போலிருக்கு எவ்வளவு பெரிய
படிப்பாளி படிப்ப விட்டுட்டு தொழில விட்டுட்டு எங்களுக்காக வந்திருக்கார்.
ஆனால் வீட்டை நினைச்சாதான் அவனுக்கு பக்கென்று இருந்தது.
“ஆமா இந்த மாஞ்சோலை எங்க இருக்கு அது எப்படி இருக்கும் நாளைக்கு போகும்போது
எல்லாத்தையும் ராஜகிளி மாமாகிட்ட கேட்கனும். மாமாவுக்குதான் எல்லாம்
தெரியும். மாஞ்சோலை பேரே எவ்வளவு அழகா இருக்கு”.
ஒருவேளை நாளைக்கு வண்டியில ஏறும்போது அண்ணன் வந்து பிடிச்சிட்டு போயிட்டா
அவ்வளுவுதான் குடும்ப அடக்குமுறைக்கு நாம் உள்ளாக்கப்பட்டு
சிறைவைக்கப்படுவோம் அதுமட்டும்மா ஒருநாள் முழுவதும் தலைகீழா
தொங்கவிடபடுவோம். அதுக்காக நாளைக்கு போவாம இருக்கிறாதா என்ன? இன்னைக்கு
வீட்டுக்கு போவாம இருந்ததுக்கு நாளைக்கு தண்டனை கட்டாயம் உண்டு நாளைக்கும்
போவாம இருந்தா அடுத்த நாள் தண்டனையும் கண்டிப்பா உண்டு. அப்புறம் என்ன
ரெண்டையும் சேர்த்து கேட்டு வாங்கிருவோம். அதனால காலையில எட்டு மணிக்கு நாம
இங்க இருக்கவேண்டாம் கிளம்பி நேரா புளியமரத்திற்கு போய் நின்றனும் வண்டி
வரும்போது ஏறிக்க வேண்டியதான்.
எப்போதும் நடக்ககூடிய மிக சரியான நல்ல திட்டங்களை தீட்டியவர்களுக்கு நல்ல
தூக்கம் வரும் போல முகிலனுக்கும் நல்லா வந்தது தூக்கம். அப்படியே
கண்ணயர்ந்தான் “ஒருபோதும் குடும்ப அடக்குமறைக்கு அஞ்சமாட்டேன். இனிமேல்
அடுத்தமுறை பெயிலாக மாட்டேன்”
முகிலன் இன்னும் பத்தாவது பாஸ் ஆகவில்லை என்பதுதான் அவன் மீது
ஏவிவிடப்படும் அவனின் குடும்ப அடக்குமுறைக்கான முதல் காரணம். முதல்முதலில்
அம்மன் கோவிலின் சுவரில் முதன்முதலாக அம்பேத்கர், இம்மானுவேல் என்று கரி
துண்டால் எழுதும் போது போன படிப்புதான் இன்னும் திரும்ப வரவில்லை. அதன்
பின் டவுசரை பிடித்துகொண்டு கொடியங்குளம் கலவரத்துக்காக மூக்கு
உறிஞ்சிகொண்டு வீடுவீடாய் போய் அரிசி வசூலிக்கும் போது அது போயே போச்சு.
அதன் பின் ஏற்பட்ட கலவரங்களில் ஊரை பாதுகாப்பதற்காக விடிய விடிய ஊரை சுற்றி
விழித்திருந்த இளைஞர்களுக்கு பீடி வாங்கி கொடுப்பது டீ போட்டு கொடுப்பது என
படுவேகமாக வளர்ந்தது ராஜகிளி மாமாவோட அவனது சினேகம், ராஜகிளி மாமா எதை
நம்புறாரோ அதை அவன் நம்புகிறான், ராஜகிளி மாமா எதை விரும்புகிறாரோ அதை
அவனும் விரும்புகிறான்.
ஆண்டு : 1999
நாள்: ஜீலை 23, காலை
இடம் : புளியங்குளம்
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டும் ஏற்கனவே கைது
செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட தொழிலார்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற
கோரிக்கைகளை வற்புறுத்தி திருநெல்வேலியில் இன்று மாபெரும் பேரணி
நடத்தப்படுகிறது.
முகிலன் ஊருக்கு வெளியே மெயின்ரோட்டில் நிற்கும் புளியமரத்தின் கீழே
நின்றுகொண்டிருந்தான். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அந்த புளியமரத்தில்
ஏறி புளியங்காய்களை உதுத்துக்கொண்டிருந்த போது புளியம்கம்பால் அண்ணனிடம்
வாங்கிய அடியை வலதுகை அந்த நேரத்தில் நினைவுபடுத்தியது ஆனால் அதற்குள்
நல்லவேளை வண்டி வந்துவிட்டது.
“டேய் முகிலா நீ வரவேண்டாண்டா உங்க அண்ணனும் உங்க அம்மாவும் வந்து தேடிட்டு
நீ வந்தா அவன கூட்டிட்டு போவாதீங்கன்னு சொல்லிட்டு போயிருக்காங்க” என்றதும்
முகிலன் ராஜகிளிமாமவை பார்த்தான். அவருக்கு எல்லாம் தெரியும் நல்லது
கெட்டது எல்லாம் தெரியும் என்பது அவன் நம்பிக்கை. ராஜகிளி மாமா அவனை
பார்த்தார். முகிலனின் கண்களில் நீர் தேங்கியிருந்தது வண்டி அவனை ஏற்றாமல்
நகர்ந்தால் அது அவனது கண்ணீர் அணையை உடைக்கும் அப்புறம் நமது வண்டி
கண்ணாடியையே அது பின்னால் இருந்து கல்லெடுத்து உடைக்கும் என்பது அத்தனை
உண்மை என்று அவருக்கு தெரியும். அவருக்கு தான் எல்லாம் தெரியுமே.
“நீ ஏறுடா முகிலா நான் பாத்துக்கிறேன் ஆனால் ஒன்னு என் கூடவே இருக்கனும்
நான் சொல்றதை கேட்கனும் சரியா”
வண்டி புறப்பட்டது சீறிக்கொண்டு ஜன்னல் காத்துப்பட்டு சிலிர்த்து
அடங்கினான் முகிலன். “இதோ வருகிறேன் தலைவா நொண்டி பெருமாளின் கடைசிபேரன்
நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் லட்சம் கைகளோடு இதோ என் இரு கைகளையும்
சேர்த்து உயர்த்த”
ஆண்டு : 1999
நாள்: ஜீலை 23, மதியம்
இடம் : திருநெல்வேலி
முகிலன் இப்போதுதான் முதல்முறையாக திருநெல்வேலிக்கு வந்திருக்கிறான்.
கடைசியாக ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தான் அப்போது அதுதான்
திருநெல்வேலி என்று நம்பிக்கொண்டிருந்தான். அண்ணனிடம் கூட கேட்டிருந்தான் .
“எங்கன்ன நெல்லையப்பர் கோவில் கோபுரத்தை காணல” என்று. ஆனால் இப்போதும்
அவனுக்கு நெல்லையப்பர் கோவில் கோபுரம் தெரியவில்லை கொஞ்சம் குழப்பமாகத்தான்
இருந்தது. கொடியை இறுக்க பிடித்துக்கொண்டான். ராஜகிளி மாமாகிட்ட கேட்டா
அவர் சொல்ல போறாரு.
“என்ன மாமா இதுதான் திருநெல்வேலியா நெல்லையப்பர் கோவில் கோபுரத்தை காங்கல”
“டேய் இது ஜங்சன் அது டவுன்ல இருக்கு”
”அப்படின்னா எல்லாம் முடிஞ்சி போகும்போது என்னைய கூட்டிட்டு போய் கோபுரத்த
காட்டு மாமா. அப்புறம் ஏன் மாமா நிறைய கடைங்க பூட்டிக்கிடக்கு”
“அதுவா நாம கூட்டமா போறாமோ அதனால போற போக்குல அவனுங்கள கொள்ளையடிச்சுருவோமா
அதுக்குத்தான்” என்று ராஜகிளி மாமா அவன் கையில் கொடுத்த பதாகையை எடுத்து
உயர்த்திபிடித்தான் அதில்...
“சம உரிமைக்காய் உயிர்விட அஞ்சோம்” என்று எழுதியிருந்தது தற்செயலானதே.
கூட்டம் இன்னும் முழுமையாக கூடிவிடவில்லை. எல்லா திசைகளிலிருந்தும் கொஞ்சம்
கொஞ்சமாக வந்துகொண்டே இருந்தார்கள். ராஜகிளி மாமா முகிலனை கூட்டிட்டு போய்
ஒரு ரோட்டு கடையில் ஆறு இட்லிகளை வாங்கிகொடுத்தார். அவருக்குதான் எல்லாம்
தெரியுமே காலையில் இருந்து முகிலன் இன்னும் சாப்பிடல என்பதும் அவருக்கும்
தெரியாம இருக்குமா என்ன...
“மாமா இந்த மாஞ்சோலை எங்க மாமா இருக்கு நீ போயிருக்கியா”
“நான் போனதில்ல ஆனா என் பொஞ்சாதி போயிருக்கா அவளோட அம்ம கூட பொறந்த கிழவி
ஒன்னு அங்க தான் இருந்துச்சாம். நம்ம மணிமுத்தாறு டேம் இருக்குல்ல அதுக்கு
மேல இருக்குன்னு நினைக்கிறேன் அப்படியே ஊட்டி மாதிரி இருக்கும்னு சொல்லி
உங்க அத்தை ரொம்ப பீத்திக்குவா நான் மாஞ்சோலைக்காரின்னு”
“நீ ஊட்டிக்கு போயிருக்கியா மாமா”
“என்னது ஊட்டிக்கு போயிருக்கியாவா அங்க தானடா மாமா பத்து வருஷம் குப்ப
கொட்டுனேன்”
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லா திசைகளிலிருந்தும் கொஞ்சம்
கொஞ்சமாக கூட்டணி கட்சிக்காரர்கள் தலைவர்கள் வரத்தொடங்கினார்கள். ஆனால்
அவர்களைவிட வண்டி வண்டியாய் போலிஷ்காரர்கள் தான் வந்துகொண்டிருந்தார்கள்.
அது மட்டுமல்லாமல் முதல் முதலாக மிலிட்டரியை அங்குதான் முகிலன் பார்த்தான்.
சினிமாவில் பார்த்தது போலவே விறைப்பாக நின்றுகொண்டிருந்தார்கள்.
“எதுக்கு மாமா மிலிட்டரியெல்லாம் வந்திருக்கு”
“நம்ம தலைவர் வந்தாலே மிலிட்டரி வந்தாகனும்லா சும்மா கத்திட்டு போற கூட்டமா
நாம. இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்னுதான எல்லா சனமும் புள்ளை
குட்டிகளையெல்லாம் அந்த மலையில இருந்து இறக்கிட்டு வந்து இங்க இந்த
நடுரோட்ல உட்காந்திருக்குதுங்க”
எவ்வளவு பெண்கள் எவ்வளவு குழந்தைகள், எவ்வளவு கோஷம். ஐயோ நரம்பு புடைத்து
உடம்பில் உஷ்ணம் ஏறுவது போலிருந்தது முகிலனுக்கு. அந்த குழந்தைகள்
நடுரோட்டில் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் கூட்டம்
கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். ரயில்வே ஸ்டேசன் காமராஜர் சிலைக்கு பின்னாடி
நின்றிருந்தது பர்தா அணிந்திருந்த இஸ்லாமிய பெண்கள் கூட்டம். எல்லாருடைய
கைகளிலும் கொடி. “உங்க சொத்தையா கேட்டோம் நாங்க செத்து போறதுக்குள்ள எங்க
கூலிய தாங்கன்னு தானே கேட்கிறோம்” சிலர் அப்போதுதான் தங்கள் கைகளில் இருந்த
பெரிய அட்டைகளில் எழுதிகொண்டிருந்தார்கள். எல்லாரிடமுமே போராட்டம், வெயில்,
கோஷம், இதை தாண்டி ஏதோ புது உற்சாகமும் சந்தோசமும் தெரிவதாக முகிலனக்கு
தோன்றியது.
”மாமா இப்போ நாம ஊர்வலமா எங்க போப்போறோம்”
“தலைவரு கூட்டணி கட்சிக்காரங்க எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் மொத்தமா போய்
நம்ம கோரிக்கையெல்லாம் எழுதி கலெக்டர்கிட்ட மனு கொடுக்கப்போறோம்”
“ஏன் மாமா ஒரு மனு கொடுக்கிறதுக்கா இவ்வளவு பேர் போறோம்”
“ஆமா அம்பது பேர் போனா பிடிச்சு உள்ள போட்டானுவ நூறு பேர் போனாலும்
பிடிச்சு உள்ள போட்டானுவ அதுதான் இப்போ பத்தயிரம்பேருக்கு மேல போறோம்.
இப்போ அவனுங்க என்ன பன்றானுங்கன்னு பார்க்கலாம்”
சொல்ல சொல்ல ராஜகிளி மாமாவுக்கு ஏதோ என்னவோ போலிருந்தது. ஏற்கனவே வாயில்
மென்றுகொண்டிருந்த இட்லிய துப்பிவிட்டு கையை கழுவினார். தோளில் இருந்து
நழுவி விழுந்த துண்டை தூக்கி மறுபடியும் தோளில் போடும் போது எல்லா
திசைகளில் இருந்தும் குவிந்துகொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை ஒருமுறை
பார்த்தார். அவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த அவர் முகம் இப்போது கொஞ்சம்
மலர்வது போல தெரிந்தது முகிலனுக்கு.
”இவனுங்க உள்ள போடுற ஜட்டி என்ன விலை விக்குது இன்னைக்கு, இவனுங்க பாட்டில்
பாட்டிலா அடிக்கிற சரக்கு என்ன விலை விக்குது இன்னைக்கு, நா பசங்க காலகாலமா
உழைச்சு தவிச்சு போன மக்களுக்கு ஒரு நூறு ரூபாய கூட்டி கொடுத்துட்டா இவனுவ
சொத்தா அழிஞ்சு போகும் பன்னிப் பயலுவ வாய பொத்திகிட்டு இப்படி வருஷ கணக்கா
இழுத்து அடிக்கிறானுவள”
“வெறும் நூறு ரூபாயா மாமா”
“ஆமாடா ஒரு நாளைக்கு எத்தனை கிலோ தேயிலை புடுங்கினாலும் வெறும் அம்பத்தி
மூன்று ரூபா தான் கொடுப்பானுவளாம். அது குத்திக் கிழிக்கிற கால் புண்ணுக்கு
மருந்துக்கு கானுமா இல்லை அப்படியே மத்தியான நேரத்துல கொத்தா புடிச்சி
திருவுற வயித்து பசிக்கு தான் கானுமா. மலையில தலை குப்புற நின்னுகிட்டு
தேயில புடுங்கி பார்த்தா தெரியும்.
எல்லா ஜமீன்கிட்டயிருந்தும் நிலத்த புடுங்கின அரசாங்கம் நம்மள அடிமையா
வைச்சிருக்கனும்ங்கிறதுக்காகவே அந்த வடநாட்டுக்காரனுவங்ககிட்ட இன்னும்
அவ்வளவு பெரிய இடத்தை குத்தகைக்கு கொடுத்துருக்கோம் என்ற பேர்ல இப்படி
சீரழிக்கிறானுவ தேவிடியா பயலுவ. இவனுங்களே அத எடுத்து நடத்துனா தான் என்ன….
என்னமோ இவனுங்க அம்மா தாலிக்கொடியவா தான்னு கேட்ட மாதிரி ஊடு புவுந்து
அடிச்சி நூத்தி இருபேத்தேழு பேரை இழுத்துகிட்டு போறானுங்களே அதை
பார்த்துகிட்டு சும்மா இருக்கிறதுக்கு பள்ள பய என்ன நாதியத்தவானா இல்ல
திராணியில்லாதவனா அதுதான் கலெக்டர் வீட்டை போய் பூட்டுனானுவ… சரி அவனுங்க
அவ்வளவு பேரும் கலெக்டரை அடிக்க வந்தானுங்கன்னு புடிச்சு உள்ள வைச்சானுவளே
மறுநாளே நூறு பொம்பளைங்க புள்ள குட்டியோட வந்தாங்களே அவங்கள எதுக்கு
பிடிச்சு உள்ள வைச்சிருக்கானுவ ”
”மாமா இட்லிக்கு காசு கேக்குறாங்க”
“எவ்வளவு”
“இருபத்தைந்து ரூபாயாம்” சரியாக சில்லறையை எண்ணி கொடுத்தார் ராஜகிளிமாமா.
அதற்குள் அவர்களை தேடி எல்லாரும் வந்துவிட்டார்கள்.
”என்ன மாமா நீ சாப்பிட போறோம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வர்றலாம்ல நாங்க
அங்க மேம்பாலத்து கீழ கிடந்து தேடிகிட்டு இருக்கோம்”
“இல்லல்ல இந்த பய பல்லுக்கூட விளக்கல பாவம் எப்படி பசிக்கும் அதுதான்
அப்படியே கடைய தேடி வந்தோம், இன்னும் கொஞ்ச நேரம் ஆனா இந்த கடைகளும்
இருக்காது. அது சரி வண்டிய எங்க நிப்பாட்டினிய”
“வண்டிய இங்க எங்கேயும் நிப்பாட்ட விடல, பேரின்பவிலாஸ் தியேட்டர தாண்டிதான்
நிப்பாட்டிருக்கோம்”
“யோவ் மாமா பரவாயில்லையா கூட்டம் செமையா இருக்கு. இன்னும் ஏறும் போல
இருக்கே…இதுக்குள்ளே கோட்டைக்கு நியூஸ் போயிருக்கும்ல”
“போவாமல அவங்களும் நமக்கு சமமா காக்கி சட்டைய கொண்டு வந்து இப்படி
இறக்கிருக்கானுவ அதெல்லாம் எப்பவோ போயிருக்கும்”
“அப்படின்னா இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சுடும்னு சொல்லு”
”தெரிஞ்சாகனும்... அப்புறம் ஒரு விஷயம் எல்லாரும் தெளிவா கேட்டுக்குங்க
ஒருவேளை எதாவது தள்ளுமுள்ளு வந்தா ஆளுக்கு ஒரு ஓரமா நின்னுட்டு எப்படியாவது
வண்டிக்கிட்ட வந்திருங்கப்பா என்ன, எதாவது வினைய இழுத்து வைச்சிராதீங்க”
போலிஸ் அறிவிப்பு தெளிவாய் கேட்டது.
“வாகன ஓட்டிகளுக்கு ஒரு அறிவிப்பு. இன்னும் சிறிது நேரத்தில் ரயில்வே
ஸ்டேசனிலிருந்து கிளம்பும் ஊர்வலம் அப்படியே தேவர் சிலை, ஆற்றுபாலம் வழியாக
கலெக்டர் ஆபிஸ் போக இருப்பதால். மதுரை மெயின் ரோடு, அப்புறம்
திருச்செந்தூர் மார்க்காம செல்ல வேண்டியவர்கள் தச்சநல்லூர் சாலையில் ராம்
தியேட்டர் வழியாக வண்ணார்பேட்டைக்கு செல்லுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"
“டேய் முகிலா தலைவர் வந்துட்டாருன்னு நினைக்கிறேன் என் பின்னாடியே வரனும்
கூட்டத்துக்கு உள்ள போயிராத ஜாக்கிரதைடா பார்த்து வா”
ராஜகிளி மாமா தன் விரல் பிடித்துகொண்டு நின்றிருந்த முகிலனிடம் அவ்வளவு
சத்தம்போட்டு சொன்னார். கூட்டம் அதிகாமகிகொண்டே போனது. எவ்வளவு முயன்றும்
முகிலனுக்கு தலைவர் தெரியவில்லை.
“மாமா தலைவர் வந்துட்டாரா எனக்கு தெரியல மாமா எல்லாரும் மறைக்கிறாங்க”
“அங்க பாருடா மனுசன் எம்.ஜி.ஆர் மாதிரி எம்புட்டு சிவப்பு எம்புட்டு
தோரனைன்னு டேய் கந்தா இவனை கொஞ்சம் தூக்கி காமிடா”
கந்தண்ணன் முகிலனை கொஞ்சம் தூக்கி காண்பித்தான். தலைவர் ஏதோ பேசினார்
முகிலனுக்கு சுத்தமாக கேட்கவில்லை முகிலனுக்கு கேட்டதெல்லாம்.
“அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்”
“கெஞ்சமாட்டோம் கெஞ்சமாட்டோம் உங்கள் கால் பிடித்து கெஞ்சமாட்டோம்”
கோஷங்கள், கோஷங்கள். கோஷங்கள், கோஷங்கள் மட்டுமே கேட்டது.
இதோ பேரணி தொடங்கிவிட்டது
ஒரு தோலுரிந்த கூட்டம் நகர தொடங்கிவிட்டது. தலைவர்கள் ஒரு வாகனத்தில்
முன்னாடி போனார்கள். முகிலனுக்கு அதில் பெயர் தெரியாத தலைவர்கள் நிறையபேர்
இருந்தார்கள். அந்த நகரம் தனக்கு இன்னும் சிறிது நேரத்தில் என்ன
நடக்கப்போகிறது என்பது முன்னாடியே தெரியும் என்பது போல அத்தனை கடைகளையும்
கண்களையும் மூடிகொண்டு திருட்டுத்தனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
அந்த பெரிய நகரத்தின் பெரிய கட்டிடங்களையும் விளம்பர பதாகைகளையும் முகிலன்
வியந்தபடி பார்த்துக்கொண்டே நடந்து வந்தான். எவ்வளவு பெண்கள், எவ்வளவு
குழந்தைகள், எவ்வளவு மக்கள், எவ்வளவு உணர்ச்சி. எவ்வளவு ஆவேசம். பேரணி
இப்போது மிகசரியாக கொக்கிரகுளம் ஆத்துபாலத்தில் ஊர்ந்துகொண்டிருந்தது.
இப்போதுதான் ஒரு பாலத்திலிருந்து அதுவும் பஸ்கள் லாரிகள் செல்லும் ஒரு
பெரிய பாலத்திலிருந்து அந்த நதியை அவன் அப்படி பார்க்கிறான்.
அந்த நதி அவனக்கு அவ்வளவு பரிச்சயமானது அவ்வளவு பால்யமானது. பரணி
தாமிரபரணி. அவன் நிறைய விழாக்களில் வில்லு பாட்டுகளில் கேட்டுருக்கிறான்.
ஒரு அம்மா முகம் நிறைய பவுடரை முகத்தில் அப்பிக்கொண்டு வில்லின் மீது
கட்டையால் அடித்தப்படி பாடுவாள்.
“தாமிரபரணி தண்ணியிலே தங்கம் இருக்குது என்பார்கள் தங்கம் இருக்குதோ
இல்லையோ ஆனால் தமிழ் இருப்பது நிச்சயமே”
அந்த நதி இவ்வளவு பெரிய நகரத்தை தாண்டி தான் அவனிடம் வருகிறது என்று
நினைக்கவே அவனுக்கு அவ்வளவு வியப்பாய் பிரமிப்பாய் இருந்தது. நதியை
பார்த்துக்கொண்டே வந்தான் நதிக்கு நடுவே அதவாது நடுநதியில் இருக்கும்
கோவில் கோபுரம் அப்புறம் நதியின் மீதாக ஒரு ரயில் பூச்சியை போல ஊர்ந்து
செல்லும் அந்த திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் எல்லாவற்றையும் பார்த்த அவன்
மாமாவிடம் கேட்டான்”
“மாமா இங்க இந்த ஆத்துல மட்டும் தண்ணி இவ்வளவு கம்மியா முட்டளவுதான் வருது
ஆனா நம்ம ஆத்துக்கு வரும்போது மட்டும் எப்படி அவ்வளவு அதிகமாக வருது”
“டேய் அது வேற ஒன்னுமில்லடா பக்கத்துல உள்ள எல்லா சாகடையும் சேர்ந்து நம்ம
ஊருகுக்கு வரும்போது தண்ணி அதிகமாகிடுது அந்த சாக்கைடையில் தான் நாம
குளிக்கிறோம் புரியுதா”
மாமா சிரித்தபடி சத்தம் போட்டு சொன்னார்.
மாமா விளையாட்டுக்காக அப்படி சொல்கிறார் சாக்கடையில் எப்படி தங்கம்
இருக்கும் தமிழ் இருக்கும் சும்மா பொய் சொல்கிறார். ஆனால் எப்படி தான்
இதில் முங்கி குளிப்பார்களோ பாவம் என்ற சந்தேகத்தோடு வந்தவன் மாமாவின் கை
பிடியை கொஞ்சம் உதறி ஏற்கனவே கீழ விழுந்துவிட்ட தன் கொடியை எடுப்பதற்காக
குனிந்தான். மாவை தொலைத்தான், கந்தன்னனை தொலைத்தான், கூட வந்த எல்லாரையும்
தொலைத்தான் முகிலன்.
மாமா மாமா மாமா எங்க இருக்கிறீங்க? மாமா……………………….. யாருக்கு கேட்கும்
எதுவும் கேட்காது கேட்டெதெல்லாம்.
“உயர்த்து உயர்த்து எங்கள் உழைப்பின் மதிப்பை உயர்த்து விலக்கு விலக்கு 600
அப்பாவி தொழிலாளர்களின் கை விலங்குகளை விலக்கு”
அரசாங்கம் அனுப்பிய முதல் ஏவல் துறையை போல வெயில் அவ்வளவு மூர்க்கமாக
இயங்கொண்டிருந்தது.
தன் கைகுழந்தையோடு கோஷமிட்டபடி சென்ற ஒரு பெண் தன் குழந்தையை முகிலனிடம்
கொடுத்து தன் ஆடைகளை சரிசெய்துவிட்டு வெயிலுக்காக தன் குழந்தையின் தலையில்
அந்த கொடியை ஒரு தலைப்பாகை போல கட்டினாள். குழந்தைக்கு எல்லாம்
தெரிந்துவிட்டது போல அப்போதே அவ்வளவு அழ தொடங்கிவிட்டது. அழுத குழந்தையை
வாங்கிகொண்டு அவள் அவ்வளவு வேகமாய் முன்னேறினாள் ஒருவேளை அவளின் கணவன்
மூத்த பிள்ளையோடு முன்னாடியே போயிருக்ககூடும் போல.
ஒரு பெரியவர் அப்படியே ராஜகிளி மாமா முகசாயல் ஆனால் அவருக்கு கர்லிங் இல்லை
“யாரிடமாவது குடிக்க தண்ணீர் இருக்கா கொஞ்சம் தண்ணீர் இருக்கா” என
கத்திக்கொண்டே வர நல்லா கருத்த முகிலனைவிட கருப்பான பெண்ணொருத்தி தான்
கொண்டுவந்திருந்த பாட்டில் தண்ணீரை அவருக்கு கொடுக்க வாங்கி குடித்த அவர்
“அடிமைகள் இல்லை நாங்கள் அடிமைகள் இல்லை” என கொஞ்சம் சாய்ந்த நடையோடு
நகர்ந்து போனார். அந்த கருத்த பெண்ணின் முகசாயல் தன் அக்கா உச்சினியை
ஒத்திருப்பதாக முகிலனுக்கு பட்டது ஆனால் உச்சினி முகிலனின் அம்மா
கலர்.ஆனால் இவளோ முகிலனின் அப்பா கலரில் இருக்கிறாள். அப்பா முகிலன் கலர்
முகிலன் அப்பா கலர். கூட்டம் இப்போது கலெக்டர் ஆபிஸை நோக்கி வளைந்து
திரும்பியது.
“எல்லாரும் அப்படியே நில்லுங்க எல்லாரும் கொஞ்சம் அமைதியா நில்லுங்க”
திடீரென்று கூட்டம் நகராமல் அல்லது நகர்ந்து அப்படி இப்படி என
முட்டிக்கொண்டு முனங்கிகொண்டு நின்றது. தூரத்தில் தலைவர்கள் காவல்துறையால்
மறிக்கப்பட்டார்கள். தலைவர்கள் அவர்களோடு பேசினார்கள் அவர்கள் தலைவர்களோடு
பேசினார்கள். எல்லாரும் எல்லாருடனும் பேசினார்கள்.. வெயில் எல்லாரையும்
எதாவது பேச வைத்தது.
“என்னப்பா என்னதான் சொல்றானுங்க”
“இல்ல யாரும் போககூடாதும் யாராவது நாளு பேர் மட்டும் தான் போகனும்னு
சொல்றாங்களாம்”
“ஆமா அவனுங்க முகத்த எங்களுக்கு பாத்துகிட்டே இருக்கனும்னு ஆசை பாரு எங்க
தலைவர் மட்டும் போனா போதும் எங்களுக்கு”
“தலைவரை மட்டும் தான் போக சொல்றாங்க ஆனா கார்ல போக கூடாதும் அவர்
நடந்துதான் போகனுமாம்”
“அதுதான பார்த்தேன் இவ்வளவு பெரிய கூட்டத்த கூட்டிக்கிட்டு தோரனையா அவர்
கார்ல வந்தா இவனுங்க கண்ணு பொறுக்குமா”
கூட்டம் என்னன்னமோ பேசியது, கத்தியது, குழம்பியது, தவித்தது,
வெறுப்ப்டைந்தது, தலைவர் பேசினார்.
“இதுக்கு மேல நாம போக கூடாதாம் எல்லாரும் அப்படியே அங்கங்க உட்காருங்க”
“ஐயோ கீழ தரை சுடுது எப்படி உட்கார முடியும்”
“அப்படியே உங்க செருப்ப கழட்டி போட்டுட்டு அதுக்கு மேல உட்காருங்க, அமைதியா
உட்காருங்க. யாரும் எந்த சத்தமும் போடக்கூடாது உட்காருங்க”
அவ்வளவு பெரிய கூட்டம். அத்தனை சிறிய இடம். அத்தனை மதிக்கும் தலைவர் அவர்
சொல்லும் கட்டளை. வேறு வழி இல்லை சுருட்டி மடக்கி உட்கார எத்தனித்தது.
சிரமம் தான் உடல் உட்கார்ந்துவிடும் எப்படி அவ்வளவு எளிதில் உட்காரும்
அப்படிப்பட்ட எழுச்சி.
எல்லாம் சரியாக நடப்பதாக எல்லாருக்கும் பட்டது. ஆனால் யரோ ஒருவன்
எங்கிருந்தோ எல்லாவற்றையும் அவன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க வேண்டும்.
மிக உன்னிப்பாக அவன் நடப்பதை நடந்து கொண்டிருப்பதை கவனித்திருக்க வேண்டும்.
அவன் காக்கி சட்டை அணிந்திருந்தானா அல்லது மிலிட்டரி உடை அணிந்திருந்தானா,
ஒருவேளை வேஷ்டி சட்டை அணிந்திருந்தானா தெரியவில்லை ஆனால் அவன் வீசிய கல்
அந்த ஒரு கல் மிகசரியாய் விழ வேண்டிய இடத்தில் விழுந்தது.
அவ்வளவுதான்
ஆமாம் அவ்வளவுதான் அதற்கு பிறகு? என்ன நடந்தது.
ஏற்கனவே அரசாங்க கட்டிடங்களுக்குள் சமூகவிரோதிகள் குவித்துவைத்திருந்த
கற்கள் சரமாரியாக வீசப்பட்டன. அவ்வளவு நேரம் பொறுமையை இழந்து பெரும்
பசியோடு காத்திருந்த காவல்துறை தன் லத்திகளை நாண்கு திசைகளிலும் சுழட்டி
வீசியது. என்ன நடக்கிறது என்று ஊகிப்பதற்குள் அங்கு எல்லாம் நடந்தது அல்லது
நடத்தப்பட்டது. எந்த பக்கம் போவது எந்த பக்கம் அடிக்கிறார்கள் ஏன்
அடிக்கிறார்கள் என்று தெரியாமல் கதறிய பெண்களின் சப்தமும் அவர்களின்
கையிலிருந்தபடி அலறி துடித்த குழந்தைகளின் அழுகையும் எல்லாருடைய
கழுத்தையும் பிடித்து நெரிப்பதாக இருந்தது. வெறி பிடித்த நாய் துரத்துகிறது
குதித்தால் நதி காப்பாற்றும் என நதியை நம்பி அந்த பெரிய பாலத்திலிருந்து
ஆற்றுக்குள் குதித்தார்கள். அந்த சருக்கு பாதையில் இறங்குவதாக நினைத்து
பாய்ந்தார்கள். குழந்தையை கையில் வைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை எப்படி
ஒருவரால் அடிக்க முடியும் ஆனால் அடித்தது போலிஸ் லத்தி. தண்ணீருக்குள்
இறங்கினால் போலிஸின் பூட்ஸால் எப்படி இறங்க முடியும் என்று நினைத்து
நீருக்குள் இறங்கியவர்கள் வாயிலெல்லாம் மண்.
வீட்டின் படுக்கறைக்குள் நினைத்த நேரத்தில் நுழைய முடியும் அதிகாரத்தால்
நடு ஆற்றுக்குள் இறங்க முடியாத என்ன? மூச்சு வாங்க தலையை நீருக்கு மேலே
தூக்கியவர்களின் தலையில் அத்தனை ஆவேசமாய் இறக்கியது அதிகாரம் தன்
கோரத்தழும்பை.
முகிலனின் கண்களில் யாரோ கருப்பு துணி கட்டிவிட்டு போனது போலிருந்த
அவனுக்கு. எல்லாமே மறைந்திருந்தது, எல்லாமே மாறியிருந்தது அவனுக்கு.
திசை மாறியிருந்தது, நகரம் மாறியிருந்தது, நதி மாறியிருந்தது, மக்கள்
மாறியிருந்தார்கள் எங்கே ஓடுவது என்ன செய்வது என்று தெரியாமல் அலறியபடி
வந்த ஒரு முதியவரின் மீது மோதி கீழே விழுந்தான். அப்போது யாரோ பட்டாசு
வெடித்தார்கள் இல்லை போலிசார் சுட்டார்கள் அந்த பெரியவரை நோக்கி, அந்த
கறுத்த பெண்ணை நோக்கி அப்புறம் பாட்டியை நோக்கி இப்போது அவனை நோக்கி ஆமாம்
முகிலனை நோக்கி சுட்டார்கள்.
”போலிசார் வைத்திருக்கும் அவ்வளவு பெரிய துப்பாக்கிகளில் எல்லாம் குண்டு
இருக்காது சும்மா பயமுறுத்ததான் அவர்கள் அதை வைத்திருப்பார்கள்”
என்று அவன் பெரியப்பா பையன் முத்துக்குமார் சொன்னது எவ்வளவு பெரிய பொய்.
என்று முகிலனுக்கு இப்போது புரிந்தது. ”புழுகினி முத்துக்குமார் வீட்டுக்கு
போய் அவன் வாயகிழிக்கனும்” ஆனால் இப்போது சுடுகிறார்கள் சுட்டுக்கொண்டே
இருக்கிறார்கள். எழுந்து ஓடினான் மேற்கு பார்த்து அப்புறம் கிழக்கு
பார்த்து அப்புறம் வடக்கு பார்த்து ஓடிகொண்டே இருந்தான். ஒரு சந்திற்குள்
புகுந்து ஓடினான் அங்கு ஏற்கனவே ஒரு பெண் உட்கார்ந்து கதறி
அழுதுகொண்டிருந்தாள். அவனுக்கு நன்றாகவே தெரியும் அவள் மண்டையிலிருந்து
இரத்தம் வடிந்துகொண்டிருக்கிறதென்று. முகிலனுக்கு கைமுட்டிலிருந்து இரத்தம்
கசிந்துகொண்டிருந்தது. ஆனால் நிற்காமல் ஓடினான், திரும்பி பார்க்காமல்
ஓடினான் அவர்களும் அவன் திரும்பி இன்னோர் தடவை பார்த்துவிடக்கூடாது
என்பதற்காகத்தானே அடிக்கிறார்கள், சுடுகிறார்கள்.
வண்ணார்பேட்டைக்கு அவன் வந்து சேந்தது என்பது அத்தனை அதிசயம்தான். வழிதவறிய
கன்றுகுட்டி தலையை முனைந்து கொண்டு ஓடி கடைசியாக அதுக்கே தெரியாமல் அது
வீட்டை அடைவது போலதான் அவன் வண்ணார்பேட்டைக்கு வந்து சேர்ந்தது. பஸ்
ஓடவில்லை எதுவும் ஓடவில்லை யாரும் இல்லை. அவர்கள் மட்டும்தான்
போலிஸ்காரர்கள் மட்டும் தான் போகிறார்கள் வருகிறார்கள். இப்போது அவனுக்கு
திசை தெரியும், அந்த நதி கிழக்கு பார்த்துதான் பாய்கிறது, அந்த சாலை
கிழக்கு பார்த்துதான் போகிறது, அப்படியென்றால் அவன் ஊர் கிழக்கே தான்
இருக்கிறது. இன்னும் வேகமாக ஓடினான்.
“ராஜகிளி மாமா எங்கே போனார் என்ன ஆனார், என்னை தேடுவாரா. அங்கே என்ன
நடந்தது ஏன் அவர்கள் அடித்தார்கள் சுட்டார்கள்” ”ஒரு நூறு ரூபாய கூட்டிக்
கொடுங்களேன்னு கேட்டா இவ்வளவு கோபம் வருமா போலிஸீக்கு அதுக்காகவா
சுட்டார்கள். எதுவும் புரியவில்லை அவனுக்கு, அந்த பெரிய நடக்கவே முடியாத
பெண்ணின் தலைமுடியை இழுத்துக்கொண்டு அந்த போலிஸ்காரன் எங்கே போனான். அந்த
குழந்தை ஐயோ அழுதுகொண்டே இருந்ததே அந்த குழந்தை இப்போது யார் கையில்
வைத்திருப்பார்கள். எங்கும் போகமல் ஓடாமல் கொடியை உயர்த்தி பிடித்தபடி
அசையாமல் நின்ற அந்த பெரியவரை ஏன் நாண்கு போலிஸ்காரர்கள் சூழ்ந்துகொண்டு
அப்படி அடித்தார்கள், தலைவர் எங்கே போனார் அவருக்கு என்ன ஆனது, அவரை
அடித்திருப்பார்களோ அவரை அடித்ததால்தான் இப்படி ஒரு கலவரமா அய்யோ என்ன தான்
நடந்தது அங்கே, எதுவுமே தெரியாமல் ஒரு நீண்ட சாலையில் ஒற்றையாய் ஒரு
சொறிபிடித்த நாயை போல ஓடிகொண்டிப்பது அவனுக்கு அழுகையாய் வந்தது.
”ராஜகிளி மாமா சொன்னாரே இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்னு இதுதான் அந்த
முடிவா. அம்பது பேர் போய் கேட்டா விரட்டுறாங்க நூறுபேர் போய் கேட்டா
அடிக்கிறாங்க பத்தாயிரம்பேருக்கு மேல போனா ஒன்னும் செய்ய முடியாதுன்னு
சொன்னாரே மாமா ஆனால் சுடுறாங்களே விரட்டி விரட்டி சுடுறாங்களே”
வி.எம் சத்திரம், ஆச்சிமடம், கிருஷ்ணாபுரம் நடப்பது உட்காருவது அப்புறம்
ஓடுவது கொஞ்சநேரம் ரோட்டோரத்தில் உள்ள செடிகளுக்குள் படுப்பது அப்புறம்
பயந்தெழுந்து ஓடுவது இப்படி முகிலன் செய்துங்கநல்லூர் வரும்போது இருட்ட
தொடங்கிவிட்டது.
செய்துங்கநல்லூரிலும் கடைகள் அடைக்கப்படிருந்தது இன்னும் பயமூட்டுவதாக
இருந்தது. ரோட்டை மறித்துக்கொண்டு நின்றார்கள் போலிஸ்காரர்கள். முஸ்லீம்
தெரு வழியாக புகுந்து சந்தையடியூர் ஏறும் போது ஒரு கருப்புகலர் நாய் இல்லை
வேற கலர் நாயாகவும் அது இருக்கலாம் அவனுக்கு அந்த நேரத்தில் அது
கருப்பாகத்தான் தெரிந்தது. நாயா அது பேய் மாதிரி விரட்டியது. நடந்த எல்லாமே
தெரிந்துதான் விரட்டுகிறதா இல்லை எதுவும் தெரியாமல் விரட்டுகிறதா சனியன்.
முகிலன் மெயின் ரோடு வந்து சேரும்வரை விரட்டியது.
கருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் கொஞ்சநேரம் படுத்துவிட்டு இலக்கை
நெருங்கியவனுக்கு வரும் ஒரு வேகம் போல மூச்சை பிடித்துக்கொண்டு ஓட்டமும்
நடையுமாய் தன் ஊரு பேருந்து நிறுத்ததிற்கே வந்து சேர்ந்தான் முகிலன்.
அப்பாடி பிழைத்தான், நொண்டிபெருமாளின் வாரிசு போலிஸின்
துப்பாக்கியிலிருந்து தப்பி வந்திருக்கிறது. பயந்துபோயா ஓடிவந்தான்
நொண்டிபெருமாள் பேரன் அப்படி சொல்வார்களா. சொல்வார்கள் சொல்லட்டும்
சொல்லிட்டு போய் கதவையும் ஜன்னலையும் தான் பூட்டுவார்கள் அவர்களை……ஆனால்
அதற்குள் தொண்டை வறண்டு போயிருந்தது.
ஒரு குடம் தண்ணீர் தேவை, மூச்சுவிடாமல் குடிக்க அப்படியே தப்பித்த உயிரை
பிழைக்க வைக்க, வலது பக்கம் ஊருக்குள் செல்லும் பாதை இடது பக்கம் ஆற்றுக்கு
அதே ஆற்றுக்கு செல்லும் பாதை, அவன் ஆற்றை நோக்கி வேகமாக நடந்தான். ஆறு
அமைதியாக இருந்தது. முகிலனுக்கு தெரியும் இந்த ஆறு நடிக்கிறது அதுக்கு
எல்லாம் தெரியும் இது அவனிடம் வேஷம் கட்டுகிறது என்ன நடந்து என்று எல்லாம்
தெரியும் இவன் கூடவே தப்பி பிழைத்து அதுவும் ஓடிவந்திருக்கிறது. நல்லவேளை.
தப்பித்தது தாமிரபரணியில் இருக்கும் தங்கம் தாமிரபரணியின் தமிழ். இரு
கைகளால் அள்ளி அள்ளி குடித்தான் குடித்துக்கொண்டே இருந்தான் உடம்பில்
எத்தனை பள்ளம் இருக்கிறதோ அத்தனை பள்ளத்திலும் நிரப்பிவிட்டு பொடி நடையாய்
ஊருக்குள் வந்தான்.
ஆண்டு : 1999
நாள்: ஜீலை 24, காலை
இடம் : புளியங்குளம்
சேவல் கூவியெல்லாம் மட்டும் பொழுதுவிடிவதில்லை. சனம் தூங்கினால் தானே சேவல்
கூவ வேண்டும் அவர்களை எழுப்ப வேண்டும்.
”யம்மோவ் இங்க கிடக்கான் பாரு உன் கடைசி தருமராசா என்ன தோரணையா கோழி
மடத்துக்குள்ள தூங்குறான் பாரு” காலையில் சாணி எடுக்க வந்த அக்கா அலற
அவ்வளவுதான் குடும்ப அடுக்குமுறையால் முகிலன் கைது செய்யப்பட்டு
வீட்டுக்குள் அழைத்துசெல்லும் போது சரியாக ராஜகிளி மாமாவும் அவன்
வீட்டுக்கு ஓடி வந்தார். ராஜகிளி மாமாவை பார்த்த முகிலன் தன்
குடும்பவிலங்கை உடைத்தெறிந்துவிட்டு ஓடிப்போய் அவரை கட்டிபிடித்து கதற அவர்
உடைந்து நொறுங்கி கீழே விழ இரண்டும் சரியான நேரத்தில் நடந்தது. வேடிக்கை
பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும் வேடிக்கை பார்க்கத்தான் தெரியும்
அவர்களும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். அம்மா பார்த்தாள் அப்பா
பார்த்தார் அக்கா பார்த்தாள் ஆனால் காலை���ில் எங்கோ போய்விட்டு வந்த அண்ணன்
தான் சொன்னான்.
“மாமா இது உங்களுக்கே நல்லா இருக்கா நேத்து நடந்த கலவரத்துல பதினேழு பேர்
ஆத்துல முங்கி செத்து போயிட்டாங்களாம் இவனுக்கும் எதாவது ஆயிருந்தா நாங்க
என்ன பண்ணுவோம் மாமா”
“என்னது பதினேழு பேர் செத்து போயிடாங்களா ஐயோ”
முகிலனும் ராஜகிளி மாமாவும் பிசாசு பிடித்துக்கொண்டவர்களை போல
கத்திக்கதறினார்கள் ஏனெனில் முகிலனுக்கு தெரியும் ராஜகிளிமாமாவுக்கும்
தெரியும், நேற்று இரவு அவர்கள் தாகத்தோடு அள்ளி அள்ளி குடித்தது வெறும்
தாமிரபரணியின் தண்ணீர் மட்டுமல்ல...
ஆண்டு : 2008
நாள்: அக்டோபர் 2
இடம் : உத்தபுரம்
அவன் காக்கி சட்டை அணிந்திருந்தானா அல்லது மிலிட்டரி உடை அணிந்திருந்தானா,
ஒருவேளை வேஷ்டி சட்டை அணிந்திருந்தானா தெரியவில்லை ஆனால் அவன் வீசிய கல்
அந்த ஒரு கல் மிகசரியாய் விழ வேண்டிய இடத்தில் விழுந்தது.
ஆண்டு : 2011
நாள்: செப்டம்பர்
இடம் : பரமக்குடி
அவன் காக்கி சட்டை அணிந்திருந்தானா அல்லது மிலிட்டரி உடை அணிந்திருந்தானா,
ஒருவேளை வேஷ்டி சட்டை அணிந்திருந்தானா தெரியவில்லை ஆனால் அவன் வீசிய கல்
அந்த ஒரு கல் மிகசரியாய் விழ வேண்டிய இடத்தில் விழுந்தது.
ஆண்டு : 2012
நாள்: நவம்பர் 7
இடம் : தர்மபுரி
அவன் காக்கி சட்டை அணிந்திருந்தானா அல்லது மிலிட்டரி உடை அணிந்திருந்தானா,
ஒருவேளை வேஷ்டி சட்டை அணிந்திருந்தானா தெரியவில்லை ஆனால் அவன் வீசிய கல்
அந்த ஒரு கல் மிகசரியாய் விழ வேண்டிய இடத்தில் விழுந்தது.
ஆண்டு : 1953 லிருந்து இன்று வரை
இடம் : கண்டதேவி.
அவன் காக்கி சட்டை அணிந்திருந்தானா அல்லது மிலிட்டரி உடை அணிந்திருந்தானா,
ஒருவேளை வேஷ்டி சட்டை அணிந்திருந்தானா தெரியவில்லை ஆனால் அவன் வீசிய கல்
அந்த ஒரு கல் மிகசரியாய் விழ வேண்டிய இடத்தில் விழுந்தது.
|
|