|
‘கவலைப்படாதவர்களைப் பற்றி கவலைப்படும் கலகக்காரர்கள்’

“இதுவே உங்க அம்மா, அக்கா, தங்கச்சியா, இருந்தா இப்படி சிரிப்பிங்களா....
எனக்கு வெட்கமாக இருக்கிறது உங்களுக்கு இல்லையா?”
இந்த வார்த்தையைக் கேட்டதும் கோவத்தைவிடவும் சிரிப்புத்தான் வந்தது.
இதற்கு காரணமான காட்சியும், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவமும்தான்.
காட்சி 1
பேரங்காடி. துணிக்கடையில் ஆடைமாற்று அறை அது. அங்கே கேமரா
பொருத்தப்பட்டிருக்கிறது. ஆணும் பெண்ணும் அங்கே ஆடைமாற்ற நுழைந்தவண்ணம்
இருக்கிறார்கள். அப்போதுதான் அந்த சம்பவம் நடக்கிறது. ஆடை மாற்றுவதை கேமரா
பதிவு செய்கிறது. தன்னுடைய மேலாடையையோ, கால்சட்டையையோ அவிழ்க்கும் நேரம்
பார்த்து, பெரிய எலி ஒன்று அந்த அறைக்கதவின் உள் நுழைகிறது. அலறி
அடித்துக்கொண்டு வெளியே ஓடுகிறார்கள். கழட்டிய கால்சட்டையுடனும் கழட்டிய
சட்டையுடனும். அதில் சிலர் முகமும் கவனத்தை ஈர்கின்றார்கள்.
ஒரு ஆண், கழட்டிய கால்சட்டையுடன் ஒரு காலில் மட்டும் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு
குதித்து குதித்து ஓடுகிறான்.
இன்னொருவன் கீழே எலியைப் பார்த்ததும் பாய்ந்து ஆடைமாற்று அறையின் மேல்
கம்பியை பிடித்து கதறுகிறார்.
பாதி கழட்டிய சட்டையுடன் கதவை திறந்து வெளியே ஓடி முன் இருந்த துணி கம்பியை
மோதி விழுகிறான் மற்றொருவன்.
ஒரு பெண், மேலாடை இன்றி அறையில் இருந்து வெளியில் ஓடிவருகிறார். அருகில்
இருந்த நாற்காலி மீது பாய்கிறாள். நடுங்கியபடி இருக்கிறாள்.
இன்னொரு குண்டு பெண்மணி பதட்டத்தில் இழுக்கவேண்டிய கதவை அலறிக்கொண்டே
தள்ளுகிறார். கொஞ்சம்தான் கதவு உடைந்திருக்கும். இவை எல்லாமே ஆடைமாற்று
அறையில் பெரிய எலி புகுந்ததால்.
ஆடைமாற்று அறையில் இருக்கும் கேமரா போலவே நாலாபுறமும் கேமரா இருக்கிறது.
ஆள் அறையில் புகுந்ததும், சில வினாடிகள். அவர்கள் ஆடையை கழட்டும் நொடியில்
வெளியில் இருக்கும் கேமராவில் அந்த எலி பதிவாகிறது.
சரியான நேரத்தில் வெளியில் கையடக்க இயந்திரம் மூலமாக எலியை இயக்கி, அறையின்
உள் நுழைய வைக்கிறார்கள். அவை எல்லாமே பிரபலமான நகைச்சுவைக் காட்சி வீடியோ.
இதனைத்தான் பார்த்து சிரித்து, முகநூலில் பகிர்ந்தேன். சில உடன்
சிரித்திருந்தார்கள். ஒரு பெண் மட்டும் தன்னை தனித்து காட்டவேண்டி
மேற்சொன்ன படி “இதுவே உங்க அம்மா அக்கா தங்கச்சியா இருந்தா இப்படி
சிரிப்பிங்களா.... எனக்கு வெட்கமாக இருக்கிறது உங்களுக்கு இல்லையா?” என்று
கேட்டிருந்தார்.
இது ஒரு பொது புத்தி சார்ந்த சிந்தனையாகவே நினைக்கத் தோன்றுகிறது. எந்த
சமயத்திலும் தன்னை தனித்துக் காட்டவே இவர்கள் விரும்புவார்கள். கேள்வி
ஒன்றைக் கேட்பதும் மூலமும் தொடர்ந்து கேள்விமேல் கேள்வி கேட்பதின் மூலமும்
இவர்கள் தங்களை தனித்துக் காட்டுக்கொள்கிறார்கள். பதில் இவர்களுக்கு
தேவையில்லை, அதற்கான அவசியமும் அவர்களுக்கு இருப்பதில்லை.
அந்த பெண்ணால் சிரிப்பு மட்டும் வரவில்லை அதனுடன் இன்னொரு சம்பவமும்
வந்திருந்தது என்று சொன்ன சம்பவம் அடுத்து;
சம்பவம் 1
அப்போது தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண��டிருந்தேன். மின்பொருட்களை சில
இயந்திரங்களுடன் பொருத்தி அது செயல்படுகிறதா என சோதிப்பது எங்கள் வேலை.
அந்த வேலையினை கவனித்து எந்த பிழையும் ஏற்படாத வாரு பார்த்துக் கொள்வது என்
வேலை. வேலைக்கு நான் புதியவன். வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பரபரப்பாக
பேசப்பட்ட சம்பவம் அது. அங்கு ‘காத்து சேட்டை’ தொந்தரவு உண்டாம். வேலை
முடிந்து புறப்படும் போது, வைத்திருந்த பொருட்கள் எல்லாம் மறுநாள் இடம்
மாறியிருக்கும். அதனை அப்போது பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால்
அங்கிருக்கும் கழிவறைக்கு மட்டும் பெண்கள் யாரும் தனியாக செல்வதில்லை.
அங்கு அதிக ‘சேட்டை’ இருக்கிறதாம். தனியே போவது மேலும் பயமூட்டுமாம்.
அன்று, அவசரமாக இயந்திரங்களை சரிபார்க்கும் வேலை எங்களுக்கு. அந்த வாரம்
அடிக்கடி கழிவறைக்கு செல்லவோ மற்ற இடங்களுக்குச் சென்று பேசவோ
அனுமதிக்கப்படவில்லை.
அப்போதுதான்,
தனித்தனியே கழிவறைக்குச் சென்றவர்கள். விருவிருவென ஓடி வந்தார்கள்.
வரிசையாக ஐந்து அறைகள் கொண்ட இடம் அது. அவர்கள் கழிவறைக்கு சென்ற சமயம்.
யாருமில்லாத நேரம், திடீரென குழாய் திறந்திருக்கிறது. யாரோ கழிவறை கதவை
படபடவென தட்டுவதாய் இருந்திருக்கிறது. இரண்டு நாள்களாக நடந்த இந்த
சம்பவத்தால், ஓடிவந்த பெண்கள் தெளிவாக கழிவறை போன நோக்கத்தை
நிறைவேற்றியிருக்கிறார்கள். காத்து சேட்டை, என பெயரிட்டிருக்கும் ஒன்றால்
பயம் ஏற்பட்டாலும் ‘முறையாக’ எல்லாவற்றையும் முடித்தே ஓடி
வந்திருக்கிறார்கள்.
இது நம்மவர்கள் மனநிலை.
முன்பு காணொழியில் காட்டியது ஆங்கிலேயர்களின் மனநிலை.
இரண்டுக்கும் எத்தனை வித்தியாசம். ஒருசாரார் பயத்தைவிட மானம் கௌரவம்தான்
முக்கியமென இருந்திருக்கிறார்கள். அடுத்தவர்கள், சட்டையின்றி இருந்தாலும்
உள்ளாடையோடு இருந்தாலும் சரி தங்களை எலியிடம் இருந்து காப்பாற்றிக்கொண்டால்
போதும், மானம் கௌரவம் எல்லாம் தேவையே இல்லை என்று இருக்கிறார்கள்.
ஆனால் நாம் நமது வழிவழியான, மரபான சிந்தனையோடும் தொன்றுதொட்டு வந்த
பழக்கத்தோடும்தான் மற்றதையெல்லாம் பார்க்கிறோம். முன்பு தன்னை தனியே
காட்டிய அந்த பெண்ணை போல.
கவலைப்படாதவர்களை பற்றி இங்கு நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கவலைப்படுகின்றவர்கள் பற்றி பேசுவதெற்கெல்லாம் நேரம் நமக்கு கிடைப்பதில்லை.
|
|