வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 6
செப்டம்பர்-டிசம்பர் 2008
முகப்பு  |  உள்ளடக்கம்

கவிதை

 

ம. நவீன் கவிதைகள்

 

       
 

பழைய பானை

முன்பொரு சமயம்
தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட
பழைய பானை ஒன்று
எங்கள் கம்பத்து முச்சந்தியில் இருந்தது

எல்லாமே கிடைத்தது
அந்தப் பானையினுள்

வருபவர்கள் எல்லாம்
வேண்டியதை எடுத்து செல்வார்கள்
போதைமாத்திரைகள் மதுப்பாட்டில்கள் ஊசிகள் என

ஒரு சமயம்
பெண்ணொருத்தி ஆணுறைகளையும்
ஓர் ஆண் வெவ்வேறு அளவிலான யோனிகளையும்
எடுத்துச்சென்றதை
கம்பத்தில் பரபரப்பாகப் பேசிக்கொண்டனர்

தான் விரும்பிய
நடிகையின் முலை கேட்டு
கிடைக்காத ஓர் இளைஞன்
ஓர் இரவில் பானையை உடைத்தான்

மனிதம் புசிக்கும் ஒற்றைக்கரம்
இறந்து கிடந்ததைப்பற்றியும்
அதை எங்கள் ஜிம்மி
தூக்கி சென்றது பற்றியும்
மக்கள் பலவாறாகப்பேசிக்கொண்டனர்


அவள் 1

காமம் வெல்வது பற்றி
காதலி சொல்லிக்கொண்டிருந்தாள்

முதலில்
தனது முகம் மறக்கச் சொன்னாள்
அதில் துளைகள் அதிகம் இருப்பதாகவும்
அவற்றில் அழுக்குகள் வெளியேறக்கூடுமென்றாள்

உதடு பற்றி கேட்டேன்
சுரக்கும் எச்சில் பற்றியும்
கிருமிகள் பற்றியும் நினைவுப்படுத்தினாள்

என் பார்வையை விளங்கிக்கொண்டவளாக
மார்பை பசு மடியுடன் ஒப்பிட்டாள்
அத்தனையும் ஊளை சதையென்றாள்

என்னைத் தொடரவிடாமல்
தனது மூத்திரம் பற்றியும்
அதன் துர்வாடை ஒரு பிணத்திற்குச் சமமானது என்றாள்

எனது பார்வையில் நம்பிக்கையிழந்தவள்
பிரத்தியேக திரவம் ஒன்று தடவி
தனது தோலை சுருங்கச்செய்தாள்
ஒரு தீக்குச்சியில் தன்னை எரித்து சாம்பலாக்கினாள்

நான் பத்திரமாக விழுந்து கிடந்த
அவள் காமத்தை கையில் ஏந்திச்சென்றேன்


அவள் 2

நீதான் தொடங்கினாய் என
நான் தப்பித்துக்கொள்கிறேன்

அதன் மூலம் உன்னில்
குற்ற உணர்ச்சியை ஏற்றுகிறேன்

உனது நடத்தையில் உமிழ்கிறேன்

தொடர்ந்து புலம்பி என்னை நிரபராதியாக்கி
உன்னிடம் இரக்கம் ஏற்படுத்த முயல்கிறேன்

கரிக்கும் இரத்தம் குமட்டும் போதெல்லாம்
உன்னையும் வாந்தியெடுக்கிறேன்

எதுவும் முடியாமல் போக
கடிதம் எழுதுகிறேன்
சொற்களை நேர்படுத்துகிறேன்

மருத்துவமனையில் எனது நோய்க்கு
உன் பெயரை எதிர்பார்க்கிறேன்

இதுதான் இறுதி என
இருவதாவது முறையாக உன் எண்களை அழுத்துகிறேன்

மன்னிப்பும் கேட்கிறேன்

அப்போது நீ மன்னித்து
சில மணி நேரம் ஆகியிருக்கும்.


கொக்குமரம்

ஒரு கொக்கு
மீனுக்காகக் காத்திருந்தது
சில மாதங்களாக

தவளைகள் குதிக்கும்போது
தெறிக்கும் திவளைகள்
அதற்கு பெருத்த வயிறுடைய
ஒரு மீனை
சில ஆண்டுகளுக்கு முந்தைய வாசனையோடு
நினைவு படுத்தும்

சில ஆண்டுகளில்
கொக்கின் கால்கள்
வேர்களாக
கழுத்து பெருத்த கிளையென வளர்ந்து
மரமானது

கொக்குமரம்
இன்னும் ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறது
அதன் கிளை பற்றி அமரும்
பிற கொக்குகளை
அது கவனம் வைப்பதில்லை

இறுகிப் போய்விட்ட அதன்
கழுத்து பற்றி
அதற்கு யாருமே நினைவூட்டுவதுமில்லை.


திரவம்

முலைக்கு நடுவில்
பெரும் நதியென பள்ளம் தேடி
நகரும்
திரவம் காயும் முன் நீ கூறினாய்
உன் காதலன் பற்றி
உன் காதல் பற்றி

அடைய முடியா ஒரு
தொலை வாசத்தில்
கைபேசி வழி
புணர்ச்சி கொண்டோம்
உன் திரவம் காய்ந்ததும் கூறினாய்
இது போல் ஒரு நதியில்தால்
உன் கரு காணாமல் போனதென்று

மீந்திருந்த நம்பிக்கையின்
பகல்வேளை
என்னிடம் யோனிகாட்டியபடி
உன் காதலனின்
தொலைபேசி இலக்கத்தில்
ஏக்கம் சொன்னாய்

அடுத்த மாதம் வரப்போகும்
உங்கள் சந்திப்பிற்கான
கிழமையொன்றில்
நான் மௌனம் காப்பேன்

தவறியும்
உன் காதலன் திரவம்
என் தொலைபேசியில்
தெரித்து
வடியாதிருக்க.


பைத்தியங்கள்

உங்களுக்குப் புரிவதில்லை
எனது பைத்திய நிலை பற்றி

என் கண்ணீர் திவலை
உங்களை பயம் கொள்ளச் செய்கிறது

உங்களின் பட்டியலிலிருந்து
என் பெயரை
ரப்பர் கொண்டு அழிக்க எத்தனிக்கிறீர்கள்

உடலில் துண்டான ஒரு சதைப்பிண்டமென
என் அர்த்தங்களை அழிக்கிறீர்கள்

எனக்கென பிரத்தியேகமாய்
உங்கள் முகங்களை தயாரிக்கிறீர்கள்

என் திட நிலையை
கலைத்துப் பார்க்கிறீர்கள்
அதன் கொடூரம் தாளாமல் கத்துகிறீர்கள்...
விரட்டுகிறீர்கள்

உங்கள் பைத்திய நிலையை
புரிந்து நான் மௌனமாகிறேன்

உங்களுக்குப் புரிவதில்லை
உங்களின் பைத்தியநிலை பற்றியும்


குழந்தையின் கால்கள்

சட்டென கீழே விழுந்த போது
தனது கால்களை
முதன் முதலாக
கண்டுபிடித்தது குழந்தை

முதலில் தனது கால் விரல்களைத்
தடவியது
நகங்களை கழற்றப் பார்த்தது
ஒன்றும் முடியாமல்
பிஞ்சுக்கரங்களால் கால்களை அடித்தது
கழுத்தை வளைத்து
விரல்களைச் சூப்பியது

பின்

என்னைப்பார்த்து
தூக்கும்படி
கைநீட்டியதும்

அதுவரையில்
கால்களுக்கு குழந்தை கொண்டிருந்த
அர்த்தம்
ஒரு கவிதையாக மாறியது


குட்டிச்சாத்தான்

சந்தேகித்த முகத்துடன்
தபால்காரன்
தந்துவிட்டுச் சென்ற
ஒரு பரிசு பொட்டலத்தில்
கறுத்தக் குட்டிச்சாத்தான்
வெளிப்பட்டது

குட்டிச்சாத்தானுக்கு சிவப்பொளி கண்கள்
நீண்ட காதுகள்
பற்கள் இன்னும் முளைக்கவில்லை

குட்டிச்சாத்தானுக்கு
இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை பசிக்கும்

அதன் அழும் ஓசை
கழுத்தறுந்த கோழியின் கதறலுக்கு நிகரானது

அடர்ந்து வளரும்
அதன் மயிர்க் கற்றைகளை நறுக்க
மண்வெட்டிக்காரனின் வாடகை அதிகம்

ஒரு குட்டிச்சாத்தானை
நான் வளர்ப்பதுபற்றி
அக்கம் பக்கத்தில் பலவாறாகப் பேசிக்கொண்டார்கள்

நான் அதனுடன் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுகிறேன்
என்பது அதில் முக்கியமானது

'குறியில்லாத குட்டிச்சாத்தானுடன்
உள்ள உறவு ஓரினப்புணர்ச்சியாகாது' என
ஒருநாள் வீட்டு சுவரில்
தொங்கவிட வேண்டும்

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768