|
'வல்லினம்' இதழைத் தொடர்ந்து படிக்கும்
வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர் பண்ணுரை வேந்தன் ஏ.தேவராசன்.
எழுதுவது குறைவென்றாலும் படிப்பது நிறைவாகவே நடந்து
கொண்டிருக்கிறது.
ஒவ்வோர் இதழையும் படித்துவிட்டு எதிர்மறையான கருத்தை அவரிடம்
சொல்லும்போது, அவற்றை வல்லினத்துக்கு எழுதுங்கள் என்பார். எழுதிச்
சர்ச்சைக்கு ஆளாவதைவிட எழுதாமலே இருந்துவிடலாம் என்று தோன்றும்.
'வல்லினம்' இதழில் தரமான படைப்புகளே இடம் பெறவில்லை என்று சொல்ல
வரவில்லை. என் எழுத்துக்கு முரணான படைப்புகளும் அதில் இடம்பெறவே
செய்கின்றன.
நாம் இந்நாட்டில் இதழ்கள் வெளியிடுவதன் நோக்கமென்ன? நிச்சயமாகப்
பணம் ஈட்டுவதற்காக அல்ல. பணத்தை இழந்து ஓர் இதழை வெளியிடுகிறோம்
என்றால் அதில் ஒரு நல்ல நோக்கமும் குறிக்கோளும் இருக்கும். தமிழை
இம்மண்ணில் நிலைநிறுத்துவது, மொழியின் தொன்மையைப் பதிவு செய்து
வருங்கால தலைமுறை பயன்பெறச் செய்வது, தமிழ் இங்கே நீண்டு நெடிது
வாழவேண்டும் என்பதுமாகும்.
ஆனால், இங்கே புதிது, நவீனம், புதுமை என்னும் நோக்கில் தமிழுக்கு
ஊறு விளைவிக்கப்படுகிறது. இது இங்குள்ளவர்கள் சிந்தனையோ, அக்கரை
தாக்கமோ தெரியவில்லை.
சீ.முத்துசாமியின் 'மண் புழுக்கள்' நாவல் இளைய தலைமுறையினரிடையே
தொற்று நோய்போலப் பரவிக் கொண்டு வருகிறது. நமது முன்னோர்களின்
தோட்டத்து வாழ்க்கை முறையையும், அவர்களின் பேச்சு வழக்கு
மொழியையும் பதிவு செய்து வைப்பது தவறான ஒன்றல்ல. அதே பேச்சு வழக்கு
நடையிலேயே அயற்கூற்றில் எழுதுவதுதான் அபத்தமானது, அருவருக்கத்
தக்கது. ஒரு வரலாற்றைப் பதிவு செய்வதற்குப் பதில் அது தவறான
வழிகாட்டலுக்கு வழிவகுத்துவிடும் என்பதோடு மொழிச் சிதைவுக்கும்
கடைக்கால் ஊன்றிவிடும்.
'மண் புழுக்கள்' நாவலே பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் போது,
அதே பாணியில் வேண்டுமென்று பலர் 'வேண்டிக்' கேட்டுக்
கொண்டார்களாம். வேடிக்கை! அப்படிக் கேட்டுக் கொண்டவர்கள் ஒன்று
மனநோயாளியாக இருக்க வேண்டும், இல்லை; தமிழெதிர்ப்பாளர்களாக-
தமிழழிப்பாளர்களாக இருக்க வேண்டும்.
'தமிழினி மெல்லச் சாகும்' என்று சொன்னார்கள். தமிழ் எந்தக்
காலத்திலும் அழியாது. அப்படியே அழிவதானாலும் அந்த 'நல்ல
கைங்கரி'யத்தைச் செய்யப் போகிறவன் தமிழனாகத்தான் இருப்பான்.
அண்மையில் இவ்வட்டார இடைநிலைப் பள்ளித் தமிழ் மாணவர்களுக்குப்
போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் சிறுகதைப் போட்டியும் ஒன்று.
அதற்கு என்னைத் தேர்வாளராக நியமித்திருந்தார்கள். படிவம் நான்கு,
ஐந்து, ஆறின் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். எழுதப்பெற்ற
முப்பதுக்கும் அதிகமான சிறுகதைகளில் ஒன்று மட்டும் வித்தியாசமாக
இருந்தது. கதை முழுக்க உரையாடலிலேயே அமைந்திருந்தது.
நான்....நாள் முதலானவை 'நா' என்றே பயன்படுத்தப்பட்டிருந்தது.
எனக்கோர் ஐயம்! இந்த மாணவிமட்டும் ஏன் இந்தப் பாணியில்
எழுதியிருக்கிறார் என்பதற்கு விடை சீ.முத்துசாமியின் 'மண்
புழுக்கள்' தொடர்கதையிலிருந்து நெளிந்தது.
தாளிகையில் வரும் சர்ச்சைகளைப் படித்துவிட்டு அந்தக் கதையின் ஒரு
பகுதியை நோட்டமிட்டேன். (மன்னிக்க! நான் தொடர்கதைகளைப்
படிப்பதில்லை, அது நூலாக வந்தாலன்றி) அந்த மாணவி அங்கே தலையை
நீட்டினார். 'மண் புழுக்கள்'. அவர் மண்டைக்குள் நுழைந்திருப்பது
தெரிந்தது. ஏன், 'வல்லினம்' இதழில்கூட ஒரு சிறு கதை. 'சின்னப்
பொண்ணு சின்னப் பையன் சிரிச்சு கட்டின தாலி'. இது தன்வினையில்
எழுதப்பெற்றிருந்தாலும் முழுக்க 'மண் புழுக்களா'கவே நெளிகிறது.
'சீரிளமைத் தரங்குன்றா தமிழ்' என்ற பெருமைக் குரிய மொழியை
ஊனப்படுத்த முயல்கிறார்களா?
இன்னும் ஒருபடி மேலே போகலாம்! கோ.முனியாண்டியின் 'கடவுள் வலம்'
உரைவீச்சை (மன்னிக்க! நான் இதனைக் கவிதையாக ஏற்றுக் கொள்வதில்லை)
சயனத்திற் மீளாக மிதக்கின்றதோர் பூவொன்றின் இதற் மீதும் பீதியாற்
உறைந்தான் முதலான தொடர்கள் என்ன தமிழ்? புதிய தமிழா புது இலக்கண
கண்டுபிடிப்பா? இந்தத் தொடர்கள் இலக்கண அத்து மீறல்கள். இதற்குப்
பெயர் நவீன இலக்கியச் சிந்தனையா? இவர் புதிய இலக்கணம் உருவாக்க
நினைக்கிறாரா? 'மண் புழுக்கள்'- 'கடவுள் வலம்' போன்ற படைப்புகள்
இளந்தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டல்களாக அமைந்துவிடும்.
'வல்லினம்' இதழில் குறைகளின்றி நிறைவான படைப்புகளே இல்லையா என்று
கேட்கத் தோன்றும். ஏன் இல்லை? எடுத்துக் காட்டுக்கு இரண்டைக்
குறிப்பிடலாம்.
'கரை மீறும் அலைகள்' எனும் தலையங்கத்தைக் குறிப்பிடலாம்.
இதுமட்டுமல்ல ஒவ்வோரிதழிலும் டாக்டர் மா.சண்முக சிவா அவர்கள்
எழுதும் தலையங்கம் சிந்திக்கத் தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது.
'வேலையோ வாழ்விடமோ நாளை என்ற நம்பிக்கையோ இழந்து நிற்கும்
ஓரினத்தில் என்றும் முதலில் நழுவிச் செல்வது சமூக மதிப்பீடுகளும்
ஒழுக்க வரையறைகளுமாகத்தான் இருக்க முடியும். குண்டர் கும்பல்
கலாச்சாரம், வன்முறை, குடி என குற்றச் செயல்களின் விளை நிலமாக
இந்திய இளைஞர்களின் வாழ்நிலை மாறி வந்ததை அரசோ, இந்த இனம் சார்ந்த
அரசியல் கட்சியோ, பொது இயக்கங்களோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவே
இல்லை. இந்தியக் கோட்டாவை அரசு மீற தாராளமாக அனுமதித்த ஒரே இடம்
சிறைக்கூடந்தான்.'
இந்தச் சமுதாயத்தின் அவலத்தை இந்த ஒருபத்தி துல்லியமாக
விளக்குகிறது. குண்டர் கும்பல், வன்முறைக் கலாச்சாரம், குடி
இவையெல்லாம் சமூகத்தில் நிலவ என்ன காரணம் என்று யோசித்தார்களா?
படிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இடம் கிடைப்பதில்லை; தன்
முயற்சியால் படித்துத் தேர்வு பெற்றால் வேலை கிடைப்பதில்லை.
அனுப்பும் விண்ணப்பங்கள் கிணற்றில் போட்ட கல்லாகிவிடும்.
இல்லையென்றால் சுவரில் எறிந்த பந்தாகத் திரும்பி வந்துவிடும்.
விரக்தியில் தள்ளப்படும் இளைஞர்கள் மேற்கண்டவற்றை கையில் எடுத்துக்
கொள்ளாமல் வேறு என்ன செய்வார்கள்?
இந்நாட்டில் வேலைக்கா பஞ்சம்? நமது இளைஞர்கள் வேலைகளை 'தேர்வு'
செய்வதால்தான் வேலை கிடைக்காத நிலை உருவாகிறது என்று மேடையேறி
முழக்கமிடலாம். தெரு பெருக்குவது, கால்வாய் சுத்தம் செய்வது,
கழிப்பறை கழுவுவது போன்ற வேலைகளைத்தான் நமது இளைஞர் சமுதாயம் செய்ய
வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?
'வைட் கோலர்' வேலைகளுக்கு நமது இளைஞர்கள் தகுதியானவர்கள் இல்லையா?
அந்த 'வெள்ளை கழுத்துப் பட்டை' வேலைகள் ஓரினத்துக்குப் 'பட்டா'
எழுதிக் கொடுக்கப்பட்டு விட்டதா என்று கேட்கும் துணிச்சலும்
தைரியமும், சமூக அக்கறையும் இல்லாத தலைவர்கள் இருந்தும்
இல்லாததற்குச் சமம்.
இரண்டாவதாக, சை.பீர் முகம்மது அவர்களின் 'உயிர் நிழல்கள்'
கட்டுரையைச் சொல்லலாம். தெருக்கூத்து இல்லாமல் நாடகம்
வந்துவிடவில்லை; நாடகம் இன்றித் திரைப்படம் தோன்றவில்லை. ஆனால்,
நமது எல்லாக் கலைகளையும் விழுங்கி விட்டது தொழில் நுட்பம் நிறைந்த
திரைப்படம். இந்த நாடகக் கலையை உயிர்ப்பிக்க என்னென்ன போராட்டங்கள்
தமிழகத்தில் நடக்கின்றன என்பதுடன் பல புதிய செய்திகளையும்
உள்ளடக்கி இருக்கிறது.
ஒருவரைப் புகழலாம், பாராட்டலாம். அதனையே தொடர்ந்து செய்து
கொண்டிருந்தால் தலையில் கனமேறி தன் கடமையிலிருந்து விலகிச் செல்ல
வழியமைத்துவிடும்.
எனவேதான், நிறையைக் குறைவாகச் சொல்லி, குறையை விரிவாக்கியுள்ளேன்.
குறைகள் திருத்தப் பட்டால் அவை பயனளிக்கும்.
|
|