வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 8
 ஜுன் - ஆகஸ்ட் 2009
முகப்பு  |  உள்ளடக்கம்

பத்தி

 

கூரைவேய்ந்த மாடியில் ஒரு கவிஞன்

 சை. பீர்முகம்மது

       
 

ஜெயகாந்தனோடு இங்கேயும் சிங்கப்பூரிலிலும் பிறகு சென்னையில் அவர் வீட்டில் பல முறை சந்தித்து நீண்ட இரவுகளை கழித்துள்ளேன்.

இந்தியா டுடேயில் அவர் மலேசிய பயணம் வந்த செய்திகளை ஐந்து வாரங்கள் எழுதினார். அதில் என்னை 'சக ஹிருதயர்' என்று குறிப்பிட்டிருந்தார். அவருக்கு நிறைய ரசிகர்கள், அபிமான வாசகர்கள், நண்பர்கள் உண்டு. ஆனால் சிலரைத்தான் 'சக ஹிருதயர்' என்று மிக நெருக்கமாக தனது இருதயத்தோடு இணைத்து வைத்திருந்தார். அவருடன் பழகிய சில மணி நேரங்களிலேயே நான் அவரின் பாரதி பக்தி கண்டு மெய்சிலிர்த்தேன்.

"எனக்கு ஞானத்தைப் போதித்தவன் பாரதி! எனது ஞானாசிரியன் பாரதி! என்று வாய்க்கு வாய் பாரதி பற்றி பேசினார்.

கே.கே.நகரிலுள்ள அவரின் மாடியில் ஒரு கூரை வேய்ந்த இடமுள்ளது. அது தான் சபை கூடுமிடம். அந்தச் சபையில் பலமுறை நான் அவரோடும் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர்களோடும் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டுள்ளேன். வாழ்க்கையில், எழுத்துலகில், இலக்கிய விரிவாக்கத்தில் எனக்கு மிகப்பெரிய ஆசானாக அச்சபை இருந்துள்ளது.

ஜெயகாந்தனின் பேச்சு இடையிடையே தத்துவமாக, கோட்பாடுகளாக வெளிவரும். வாழ்க்கையின் மிக நுணுக்கமான பகுதிகளை இதுவரை நான் பார்க்காத பகுதிகளை அங்கே திடீரென்று ஒரு வெளிச்சப்பரவலை ஏற்படுத்தும் வண்ணம் அவர் தனது கூர்ந்த பார்வையில் வெளிப்படுத்துவார். அவரின் பேச்சில் அப்போதைக்கப்போது பாரதியின் கவிதைகள் வந்து அழகுக் காட்டும். "எப்படி பாரதி இப்படி?" என்று நான் கேட்ட பொழுது பாரதியின் கவிதை வரிகளிலேயே பதில் சொன்னார்.

"என் சிந்தையிலும் சித்தத்திலும் பாரதியே உள்ளார்" என்றார். பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அவருக்குத் தலைகீழ் பாடம். ஒரு வரி இடையில் சொன்னாலும் முழுப் பாடலும் சொல்லி முடிப்பார்.

பாரதியை ஆங்காங்கே படித்திருந்த எனக்கு ஜெயகாந்தனோடு பழகிய பிறகு பாரதியை முழுவதுமாக படிக்க ஆர்வத்தையும் முழு ஈடுபாட்டையும் ஏற்படுத்தியது.

திராவிட இயக்க செல்வாக்கால் பாரதிதாசனின் 'கொலைவாளினை எடுடா, மிக கொடியோர் செயல் அறவே' என்ற உரத்த குரல் பாடல்கள் மனதில் ஆட்சி புரிந்த காலம் ஒன்றிருந்தது. இக்காலகட்டத்தில் பாரதியின் பாடல்கள் அடையாளப்படுத்தப்படவே இல்லை!

இப்பொழுது பாரதியைப் படிக்கும் பொழுது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய புதையல் என் கைகளில் இருந்தும் காணாமல் விட்டுவிட்டேனே என்று வருந்திய நாட்கள் பல.

ஜெயகாந்தனிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். "பாரதியை இந்த அளவு நேசித்த நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை?"

"ஆரம்பத்தில் கவிதைதான் எழுதினேன்- பிறகு பாரதி எங்கே; நான் எங்கே? என்று எனக்கே என் கவிதைகளில் நம்பிக்கை வரவில்லை. அதோடு கவிதையை ஓரமாக வைத்துவிட்டு உரை நடைக்கு வந்து விட்டேன். ஆனால் அப்போதைக்கப்போது கவிதைகள் எழுதி நண்பர்களிடத்தில் காட்டுவேன் எனது பொழுது போக்கு கவிதை எழுதுவதுதான்" என்றார்.

இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பொழுது "பாதை தெரியுதுபார்" என்று ஒரு படத்தை எடுத்தார்கள் எம்.பி.சீனிவாசன் என்ற இசைமேதை. அவர் பிடிவாதமான கம்யூனிஸ்ட். இதனாலேயே சினிமாவில் அவரால் பெயர் போட முடியவில்லை. குத்து பாட்டும் ஆபாசக் களஞ்சியமுமாகிவிட்ட தமிழ் சினிமா உலகில் அவரைப் போன்றவர்கள் 'சைவமாக' இருப்பது சிரமம்தான்.

'பாதை தெரியுது பார்' படத்தில் ஒரு பாடலை எழுதும்படி எம்.பி.சீனிவாசன் வற்புறுத்தி ஜெயகாந்தனிடம் வாங்கி இசையமைத்து வெளிவந்த பாடல்தான் 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே' என்ற பாடல், அந்தப் பாடல் பெரிய வெற்றி பெற்றாலும் அதுவரை ஜெயகாந்தன் கவிதையே எழுதியவர் அல்ல என்றும் சொல்லிவிட முடியாது.

தன் வீட்டில் கோபித்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிய பொழுது ஒரு வெண்பாவை சிலேட்டில் எழுதி வைத்து விட்டு வந்து விட்டார். அவருக்கு வெண்பா விளையாட்டாகவே வரும்.

ஒரு காலத்தில் ஜெயகாந்தனும் கவிஞர் தமிழ் ஒளியும் ஒன்றாக வாழ்ந்தவர்கள். பலமுறை தமிழ் ஒளியின் கவிதைகளை மனப்பாடமாக என்னிடம் கூறியுள்ளார். அதில் பெருமழைப்பற்றிய ஒரு பாடல். அந்த சந்தமும் பாட்டின் சொற்களும் வேகமும் 'சட சட' வென்று மழை பெய்வது போலவே இருந்தது. தமிழ் ஒளியின் கவிதையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் ஜெயகாந்தன். கவிஞர் தமிழ் ஒளி வறுமையில் வாடி, மனப்பிறழ்வுக்காளாகி பைத்தியமாகி அலைந்து திரிந்து இறந்து விட்டக் கதையை ஜெயகாந்தன் சொன்னபொழுது எனக்கு ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. கவிஞர் தமிழ் ஒளி இறந்து போனார். தமிழ் எழுத்தாளர்களில் பல பேர் அப்படி தமிழில் எழுதுவதாலேயே தமிழர்களால் சீண்டுவாரற்று மறைந்து போகிறார்கள். எப்படியோ தமிழ் எழுத்தாளர்களை பழி வாங்கியே தீருவோமென்று இந்தச் சமூகம் சபதமெடுத்து வந்துள்ளது. இதை யாரால் மாற்ற முடியும்?

கவிஞர் தமிழ் ஒளியும் ஜெயகாந்தனும் ஒன்றாக இருந்தபொழுது அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதனுக்கு விளையாட்டாகவே 'வசை வெண்பாக்கள்' எழுதி அனுப்புவார்கள். ஒருமுறை ஜெயகாந்தனைச் சந்தித்த ரகுநாதன், தன்மேல் 'வசை வெண்பாக்களாக' மழை போல் பெய்தாலும் அதன் நயமும் கவிதைத் திறனும் கண்டு 'வேய்... உமக்கு வெண்பா அற்புதமாய் வருதுவேய்!" என்று வாயார புகழ்ந்துள்ளார்.

இங்கே ஒன்றைச்சொல்ல வேண்டும். தங்கள் கடிதங்களில் வெண்பாக்களால் விசாரித்துக் கொள்வதும் பதில் எழுதுவதும் அக்கால எழுத்தாளர்களுக்கு வழக்கமாக இருந்துள்ளது. அக்கவிதைகள் பத்திரிகைகளில் வராமல் போனது ஒரு வகையில் அவ்வெண்பாக்களில் சில அந்தரங்க விஷயங்கள் அடங்கியிருந்திருக்கலாம். அப்படியும் புதுமைப்பித்தன் ரகுநாதனுக்கு வெண்பாக்களில் எழுதிய சில பிற்காலத்தில் புதுமைப்பித்தன் கவிதைகள் என்ற தொகுப்பில் வந்துள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி அல்வாவுக்கு பேர்போன இடம். ரகுநாதனின் ஊர் திருநெல்வேலி. அவரைக்காண அங்கே வருவதாக ஒரு கடிதம் போடுகிறார் புதுமைப்பித்தன். அதில் உள்ள ஒரு வெண்பாவின் வரி "அல்வா எனச்சொல்லி அங்கோடி விட்டாலும் செல்வா, நீ தப்ப முடியாதே" எனக்குத் தெரிந்து இப்படி நண்பர்களுக்கு கடிதங்களில் கவிதைகளாகவும் வெண்பாக்களாகவும் எழுதித் தள்ளியவரும் அதனை ஆரம்பித்து வைத்தவரும் புதுமைப்பித்தன் தான்.

ஜெயகாந்தன் ஒரு காலத்தில் நாடோடிபோல் தமிழகம் முழுதும் சுற்றி வந்தார். அவரோடு அப்பொழுது வந்து இணைந்து கொண்டவர் குப்பன் என்று ஜே.கே. அழைக்கும் பி.ச.குப்புசாமி. தமிழும் கவிதையும் அறிந்தவர். ஜே.கே.யின் 'தன்னிலை' மறந்த நேரங்களில் சொல்லும் கவிதைகளை மறவாமல் எழுதி வைத்துக் கொண்டார் குப்புசாமி.

ஜெயகாந்தனோடு நான் இருந்த நேரங்களில் சில சமயங்களில் படீரென்று சில தெறிப்புகள் வந்து அருவி போல் கொட்டும்- வாய் பிளந்து அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளேன். நூறு நூல்களைப் படித்துத் தெரிந்துக் கொள்ளும் விஷயங்களை அவரோடு ஒரு மணி நேரத்தில் நான் அறிந்து கொண்டது அதிகமென்றே நினைக்கிறேன். வாழ்க்கை முழுதும் ஜே.கே யுடன் இருந்திருக்கக் கூடாதா? என்று பைத்தியக்காரத்தனமாக நினைத்த நேரங்களும் உண்டு.

பி.ச.குப்புசாமி ஜே.கேயிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இப்பொழுது ஜே.கேயின் நாடோடி பயணங்களில் குப்புசாமி எழுதி வைத்த கவிதைகள் மற்றும் பொழுது போக்காக அவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஜெயகாந்தன் கவிதைகள் என்று நூலாகக் கொண்டு வந்துள்ளார். இதை நூலாக்குவதில் ஜெயகாந்தனுக்கு முதலில் விருப்பமில்லை என்றாலும் வற்புறுத்தலின் பேரில் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜெயகாந்தனின் வாழ்க்கை ஒருகால கட்டத்தில் சித்தர் நிலைக்குப் போனது. காடு மேடுகளில் ஞானம் தேடி நிர்வாணமாக அலைந்துள்ளார். ஓங் கூர் சுவாமிகள் என்பவரிடம் பல காலம் இருந்துள்ளார். அவரின் விழுதுகள் குறுநாவலில் இந்த ஓங்கூர் சுவாமிகள் வருவதைப் படித்திருக்கலாம். நான் தமிழகம் சென்றிருந்த பொழுது ஜெயகாந்தன் என்னையும் ஒரு பேச்சாளராகப் போட்டு திருவண்ணாமலையில் செயல்படும் 'முற்றம்' இலக்கிய அமைப்பின் கூட்டத்திற்கு எழுத்தாளர் சா.கந்தசாமியோடு அழைத்துச் சென்றார். அப்பொழுது சென்னையிலிந்து திருவண்ணாமலைக்குப் போகும் பாதையில் தான் அந்த ஓங்கூர் சுவாமிகள் தங்கியிருந்த சிறிய ஊர் இருந்தது. என்னை சுவாமிகள் தங்கியிருந்த அந்த ஆலமரம், மற்றும் ஊரைச் சுற்றிக் காட்டினார். 'விழுதுகள்' குறுநாவலை மீண்டும் வாசித்த அனுபவத்தைப் பெற்றேன்.

'ஜெயகாந்தன் கவிதைகள்' தொகுப்பில் முதல் கவிதையே ஓங்கூர் சுவாமிகள் பற்றியே உள்ளது.

வீங்கி விகசிக்கும்
வேதப் புகை நடுவே வீற்றிருக்கும்
ஓங்கூர் சாமியின்- சிங்க
உருவம் தெரிகிறது.

ஜெயகாந்தன் சில சமயங்களில் யாரோடோ மனதிற்குள் பேசிக் கொள்வதைக் கண்டுள்ளேன். கேட்டு விடுவோமா; வேண்டாமா? என்று நினைத்து ஒரு நாள் 'உங்களுக்கு ள் இன்னொரு மனிதன் இருக்கிறான்' என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டேன். அவர் மிகக் கோபக்காரர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நான் அதைவிட கோபக்காரன் என்பதை அவரே என்னிடம் ஒரு முறை சுட்டிக்காட்டினார்.

நான் கேட்டதை சிரித்தபடி ஏற்றுக்கொண்டு "ஆமாம் என்னிடம் விடாமல் ஒருவன் கூடவே இருக்கிறான், அவன் பெயர் குள்ளச்சாமி!" என்றார்.

"பாரதியார் ஒரு குள்ளச்சாமியைப் பற்றிச் சொல்கிறாரே அவரா?" என்று கேட்டேன்.

"இருக்கலாம்!" என்று மட்டுமே பதில் வந்தது.

ஜெ.கேயின் இக்கவிதைத் தொகுப்பில் அந்த குள்ளச்சாமி பற்றிய ஒரு கவிதை உள்ளது. இதில் பல 'சாமிகள்' பற்றி ஜெ.கே. சொல்கிறார். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறார்.

'கைகேயி கெட்டவள் அல்லள்
கூனி கூடக் கெட்டவள் அல்லள்
காடுவரை போனவனைப்
பாதிவழி போய் மறித்துப்
பாதுகையை பறித்து வந்தான்
பரதனே பாவி!'

என்று ராமாயணத்துக்கும் வனவாசத்துக்கும் மாற்றுப் பார்வையை முன் வைக்கிறார்.

ஒரு ஞானத்தேடலின் பொழுது கீழ்க் கண்ட கவிதை பிறந்திருக்க வேண்டும்.

நானென்றும் நீ யென்றும்
அது வென்றும் இது வென்றும்

தானென்றும் தனி யென்றும்
பேதங்கள் அற்றநிலை!

தேனென்றும் நஞ்சென்றும்
தீ யென்றும் சருகென்றும்
தீ தென்றும் நன்றென்றும்
தெரியாத தேவநிலை!

இப்படியான வேறு வேறு வகைக் கவிதைகளுக்குள் ஒரு சரடு போல் அவர் மனதில் இருக்கும் ஒரு வகை 'சித்தர்' நிலை தெரிகிறது.

சில கவிதையாகவே இல்லை. அவரே அதை தனது முன்னுரையில் கூறியுள்ளார்.

இந்த கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்வதல்ல என் நோக்கம். சிறுகதைகளில் சிகரங்களை அடைந்தவர் எப்படி கவிதையிலும் சஞ்சாரம் செய்துள்ளார் என்பதைக் காட்டுவது மட்டுமே என் பார்வை!

ஏதோ நானுளறி
எப்படியோ வாழுகிறேன்
வாதாடி ஏனென்னை
வம்புக்கிழுக்கின்றீர்?

என்று ஒரு கவிதை இத்தொகுப்பில் உள்ளது. இவரிடம் எனக்கு வம்புமில்லை வாதுமில்லை! ஆனால் இவரின் இன்னொரு கவிதை என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. நமது நாட்டிலும் சரி தமிழக, இலங்கையிலும் சரி வரிவரியாக அரசியல் தலைவர்களுக்கு துதிபாடும் கவிதைகள் அவர்களின் பிறந்த நாட்களின் பொழுது பாடப்படுவதைக் கேட்டுள்ளேன். கடந்த சங்க காலத்திலிருந்து அரசர்களைப் பாடிப் பாடி இன்னும் ஓயாத பரம்பரை அது! காசுக்காகப் பாடுவதும் காலில் விழுந்து பாடுவதும் நமது கவிதை பாரம்பரியத்தின் தனிப்பெரும் வரலாறு!

'முத்தனை முனியனை
மூடனைக் காடனை
முகஸ்துதி செய்திடவோ?
இத்தனை இடர்களின்
மத்தியில் இன்னும்
என்ன கவிதையடா?'

என்று கேள்வியோடு முடியும் ஜெ.கேயின் கவிதை எனக்குள் இருந்த நெருப்புக்கு 'பெட்ரோல்' ஊற்றியது!

ஒரு புத்தன் இன்னொரு புத்தனை உருவாக்கிவிட முடியாது. புத்த பிக்குகள் உடையில் சன்யாசிகள் இருக்கலாம். ஆனால் புத்தன் இருக்க முடியாது. புத்தர்கள் உருவாக்கப்படுவதில்லை. உருவாகிறார்கள்! அது போலத்தான் கவிஞனும், தனது சிந்தனையிலும் சித்தத்திலும் பாரதியை ஞானாசிரியனாக ஏற்றுக் கொண்டவர் ஜெயகாந்தன். கைசுண்டும் நேரத்தில் பாரதியின் கவிதைகளை அவரால் சொல்லமுடியும். ரசித்து ரிசித்துப் பேச முடியும். ஆனால் இத்தொகுப்பில் பாரதியின் வீச்சை ஒருவரிகூட எனக்குக் காட்டவில்லை. ஜெயகாந்தன் பாரதி ஆகமுடியாது என்பது போலவே ஜெயகாந்தனாக பாரதி ஆக முடியாது என்பதே எனது முடிவாக இருந்தது.

பாரதியும் சிறுகதைகளில் முயன்றுள்ளார். தாகூரைப் படித்ததால் சிறுகதையை எழுதிப் பார்த்துள்ளார். சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர் அவ்வளவுதான். அதுபோல ஜெயகாந்தனும் கவிதையில் முயன்றுள்ளார். அவரே இவைகளைக் கவிதையென்று ஒப்புக் கொள்ள தனது முன்னுரையில் மறுத்துள்ளார்.

விரிவும்- ஆழமும் நிறைந்த அவரின் சிறுகதை, நாவல், குறுநாவல் படைப்புகளுக்கிடையில் கவிதையில் என்ன செய்துள்ளார் என்பதை அறிந்து கொள்வது ஒன்றும் தண்டனைக்குரிய விஷயமல்ல!

முடிந்தால் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

பல பெரிய எழுத்தாளர்கள் கவிதை எழுதியுள்ளார்கள். அதுபோல பல கவிஞர்கள் சிறுகதை, நாவல் எழுதியுள்ளார்கள். இதிலுள்ளவர்கள் அதிலும் அதிலுள்ளவர் இதிலும் வெற்றிகளைப் பெற்றார்களா? என்பது ஒரு ஆய்வுக்குரிய விஷயம். கம்பனின் ராமாயணம் அவனுடைய கதையல்ல! கவிதை மட்டுமே அவனுடையது! கண்ணதாசன் சில நாவல்கள் எழுதியுள்ளார். ஆனால் வெற்றி பெற்றாரா? இப்படியாக பாரதி, பாரதிதாசனென்று பலரை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படியே சிறுகதை, நாவல் என்று வெற்றிப் படிகள் தொட்ட ஜெயகாந்தன் கவிதையில் வெற்றிப் பெற்றாரா என்று இந்த தொகுப்பையும் ஆய்வு செய்து பார்க்கலாம்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768