|
ஜனவரி 29ஆம்
தேதி வியாழக்கிழமை, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன்
முன்பு காலை, முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை
செய்துகொண்டார். தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும், இலங்கையில்
அவதிப்படும் தமிழ்மக்களைக் காப்பாற்ற இந்தியா உதவ வேண்டும் என்ற
கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரத்தை முத்துக்குமார்
விநியோகித்தார்.
பத்திரிகை நிருபராகவும் தொலைக்காட்சி தொடர்களில் உதவி
இயக்குனராகவும் பணியாற்றிய முத்துக்குமாருக்கு வயது 30.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான முத்துக்குமார் ஈழப்பிரச்சினைகளால்
பாதிக்கப்பட்டிருப்பதாக எந்தத் தகவல்களும் இல்லை. எனினும்
ஈழத்தமிழ் மக்களின் போராட்டங்களை அவர் அறிந்திருந்தார் என்பதை
அவரின் மரண வாக்குமூலமும் துண்டு பிரசுரமும் காட்டுகின்றன.
ஈழத்தமிழர்களின் தாங்கொணாத் துன்பத்தையும் வேதனையையும் அரசியல்
வியாபாரமாக்கி கடைவிரித்த தமிழக அரசியல்வாதிகளின் பேச்சுகளும்
செயல்களும் 'உணர்வுமிக்க' தமிழரான முத்துக்குமாரின் உணர்ச்சிகளைப்
பொங்கி எழச் செய்திருக்கின்றன. அவரது இன உணர்வைத் தூண்டியுள்ளன.
அதே நேரத்தில் அவர்களின் செயலற்ற நிலை அவரை ஆவேச நிலைக்கு
உந்தியிருக்கிறது.
துன்புறும் மக்களுக்கான தமது குரலை வெளிப்படுத்தக் கொடுமைக்கு துணை
போகிறவர்களுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்க தன்னைத் தானே தீ
வைத்து எரித்துக் கொண்டார். முன் பின் அறிந்திராத அந்த இளைஞனின்
செயல் தமிழ் உலகை உலுக்கிப் போட்டது. உண்ணாவிரதங்கள்,
பேச்சுவார்த்தைகள், பதவி விலகல்கள் போன்ற தமிழக அரசியல்வாதிகளின்
பம்மாத்து கள் எல்லாம் முத்துக்குமாரின் மரணத்தின் முன் பசபசத்துப்
போயின. ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆவேசத்துடன்
ஊர்வலம் சென்றனர். ஆனால் இந்த உணர்வும் ஆவேசமும் கூட
அரசியலாக்கப்பட்டன.
"தீக்குளிக்காதீர்கள், உயிரை வதைக்காதீர்கள்" என்று ஒரு பக்கம்
முழங்கிக்கொண்டே மறுபக்கம் தீக்குளித்த முத்துக்குமரனுக்கு
'வீரமகன்' பட்டம் தந்தார்கள். அவனது மரணத்தில் கவிதை படித்தார்கள்.
மேடை போட்டு வீரவசனம் பேசினார்கள். அவரது குடும்பத்திற்குப் பணம்
கொடுத்தார்கள். காரியம் கண்ணுக்குத் தெரியாமல் போய் வீரியப்
பேச்சுகள் விஸ்வரூபம் எடுத்தன. 'வீரம், மானம், ரோசம்'மிக்க தமிழ்
மக்களிடையே திடீர் ஹீரோவானார் முத்துக்குமார். விளைவு
தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் ஜனீவாவிலும் இரண்டு மாதக்
காலத்திற்குள் திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள்
உட்பட பன்னிரெண்டு பேர் வரை (இந்த கட்டுரை எழுதும் நேரம் வரை)
தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
தீக்குளிக்க முயன்ற மேலும் மாணவர்கள், வழக்கறிஞர்கள்
தடுக்கப்பட்டுள்ளனர். தீக்குளிப்பது தமிழக சமூகத்திற்குப்
புதியதல்ல. கட்சிக்காரர்களும் கொடுமைக்குள்ளாகும் மருமகள்களும்
தீக்குளிக்கும் சம்வபங்கள் அடிக்கடி பத்திரிகைகளில் வந்து கொண்டே
இருக்கும். ஆனால் மற்ற நாடுகளில் வாழும் தமிழ்ச் சமூகத்துக்கு இது
புதிது. குறிப்பாக அரசியல் சமூக ஒடுக்க முறைகளுக்குக் கண்டனமாகத்
தற்கொலை செய்து கொள்வது என்பது. மலேசியாவில் சொந்தப் பிரச்சனைகள்
காரணமாகத் தீயில் எரிந்து போன சம்பவங்கள் உண்டு. ஆனால் சமூக
எதிர்ப்பு காரணமாக நிகழ்ந்ததாக நாம் அறிந்து குறிப்புகள் இல்லை.
எதிரி(?)களையும் அழிக்கவும், சேதம் ஏற்படுத்தவும் ஒரு போர்
முறையாகத் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர்கள்,
இப்போது சமூக எதிர்ப்பு அலையைக் கிளப்ப தங்களை எரித்துக் கொள்ளத்
தொடங்கியுள்ளனர். தீயில் கருகிச் சாவதால் புரட்சியை ஏற்படுத்த
முடியுமா? எதிர்பார்க்கும் மாற்றத்தை கொண்டுவர முடியுமா? என்ற
கேள்வி இங்கு உணர்ச்சியைச் சற்று நேரம் தள்ளி வைத்துவிட்டு கேட்க
வேண்டிய தருணம் இது.
தீக்குளிக்கும் கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.
அக்கினி வழிபாட்டை மனிதன் தொடங்கிய காலத்திலேயே அதில் தன்னை
மாய்த்துக் கொள்ளவும் அவன் தொடங்கியிருக்கலாம். அறியக் கிடைக்கும்
வரலாறுகளைப் புரட்டினால் அரசியல், மதம், சமூகம் போன்ற நிலைகளில்
ஒடுக்கப்படும் மக்களின் எதிர்ப்புப் போராட்டமாக தீக்குளிப்புகள்
நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகிறது. இந்து, புத்த, கிறிஸ்தவ
மதவரலாறுகள் இதிகாசங்களில் தீக்குளிப்புச் சம்பவங்கள்
குறிப்பிடப்படுள்ளன. சமூக நிலையில் ஒழுக்க விசாரணைக்கு
உட்படுத்தப்பட்ட சீதை தீக்குளிக்கிறாள். குறுநில மன்னனான பாரிக்கு
எதிராக மூவேந்தர்களும் ஒன்று சேர்ந்து போர் தொடுத்து அவனைக்
கொன்றதை எதிர்த்து சங்கப் புலவர் கபிலர் தீக்குளித்தது தமிழர்
வரலாற்றில் காணக்கிடைக்கும் மிகத் தொன்மையான தீக்குளிப்புச்
சம்பவம். இந்தியாவின் ராஜ புத்திரர்கள் வரலாற்றில் தோற்றுப் போன
மன்னரின் அந்தப்புரப் பெண்கள் தீக்குளித்திருப்பதாக வரலாறு
குறிப்பிடுகிறது. அதேபோல் பழைய ரஷ்ய கிறிஸ்துவ வரலாற்றில் ஒரு
கிராமமே தீக்குளித்து 'தீ பாப்டிஸம்' செய்து கொண்டதையும் 16ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் ஃபிரான்ஸ் நாட்டின் ஏசு சபை
பாதரியார்கள் தங்களை எரியூட்டிக் கொண்ட நிகழ்வுகளையும் வரலாற்றில்
பார்க்க முடிகிறது.
வியட்நாம், சைக்கோ நகரின் (இன்று ஹோ சி மின்) பரபரப்பான
தெருச்சந்திப்பின் நடுவில் 1963 ஜூன் 11ஆம் தேதி 73 வயது
புத்தபிக்கு சம்மனமிட்டு அமர்ந்தார். வேறு இரு புத்தபிக்குகள் அவர்
மீது மண்ணெண்ணெய் ஊற்றினர். பெரும் திரளாக நின்ற மக்களும்
செய்தியாளர்களும் பார்த்துக் கொண்டிருக்க தம்மீது தீ
வைத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் அமர்ந்த நிலையிலேயே கருகிச்
சாம்பலானார். அந்நேரம் பௌத்த சீனாவை டீம் என்ற கிறிஸ்துவ குடும்பம்
நிர்வகித்து வந்தது. புத்த மதத்தினர் ஒடுக்கப்படுவதற்கு எதிரான
கண்டனக் குரலாக புத்தபிக்குவின் தீக்குளிப்பு கருதப்பட்டது.
"மனித உடலில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அவரது உடல் மெதுவாக
வதங்கி சுருங்கியது. அவரது தலை கறுத்து கரியானது. காற்றில் சதை
எரியும் நாற்றம். ஆச்சர்யமாக மனித உடல்கள் விரைவாக எரிந்து
விடுகின்றன. கூடியிருந்த வியட்நாமிய மக்களின் அழுகுரல்களைக் கேட்க
முடிந்தது. அழ முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சி அடைந்திருந்தேன்.
குறிப்புகள் எடுக்கவோ, கேள்விகள் கேட்கவோ முடியவில்லை.
யோசிக்கக்கூட முடியாத நிலையில் இருந்தேன். எரியும் போது அவர்
உடலில் சிறு தசையைக் கூட அசைக்கவில்லை. அவரிடம் இருந்து சின்ன
முணகல் கூட எழவில்லை. அவரைச் சுற்றி அழுதுக்கொண்டிருந்த மக்கள்
கூட்டத்திற்கு நேர் எதிர் நிலையில் இருந்தார் அவர்".
தென்வியட்னாமில் பௌத்த மதம் ஒடுக்கப்படுவதை கண்டித்து திச் குவாங்
டக்(Thich quang Duc) என்ற புத்தபிக்கு தீக்குளித்த போது அந்த
இடத்தில் இருந்த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர்
டேவிட் அல்பெர்ஸ் டாமின் மனித உடல் கருகி பொசுங்கிய வாடையோடு
வெளிப்பட்ட வார்த்தைகள் இவை.
அரசாங்கத்திற்கு எதிரான வியட்நாமியர்களின் போராட்டத்தை திச் குவாங்
டக்கின் தீக்குளிப்பு பற்றி எரியச் செய்தது என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ந்து பல பிக்குகள் தீக்குளித்தனர். ஆயிரக்கணக்கானோர்
போராட்டத்தில் இறங்கினர். வியட்நாம் போரை எதிர்த்து
அமெரிக்கர்களும் தீக்குளித்தனர். சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை
எதிர்த்து 2001ஆம் ஆண்டு சீனாவில் உள்ள தியா னென் மென்
சதுக்கத்தில் பலர் தீ குளித்தனர்.
வளர்ந்த நாடுகளில் தீக்குளிப்பு சம்பவங்கள் அரிதாகவே நடக்கின்றன.
(தற்கொலைகளில் 0.1% முதல் 1.8% வரை). வளர்ச்சி அடையும் நாடுகளில்
அடிக்கடி நிகழ்கின்றது என கூறுகிறார் ஈரானின் கெர்மான் ஷா மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழக ஆய்வுத்துறையைச் சேர்ந்த அஹமடி ஏ என்ற
ஆய்வாளர்.
இந்நாடுகளில் நிகழும் தற்கொலைச் சம்பவங்களில் 41% வரை
தீக்குளிப்புச் சம்பவங்கள். உலகெங்கும் உள்ள தீக்காய சிகிச்சை
நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களில் 4 முதல் 41% வரை தீயில்
எரித்துக் கொண்டவர்கள் என இவரது ஆய்வு காட்டுகிறது. 2001ஆம் ஆண்டு
சராசரியாக ஒவ்வொரு நாளும் 11 ஈரானியர்கள் தற்கொலை செய்து
கொண்டுள்ளனர். அதில் நான்கு பேர் தீக்குளித்து இறந்தவர்கள்
என்கிறார் இந்த ஆய்வாளர். ஆப்கானிஸ்தானில் தீக்குளித்து உயிரைப்
போக்கிக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து
வருவதை அறிக்கைகள் காட்டுகின்றன. ஆப்கானின் பெண்கள் விவகார
அமைச்சின் அறிக்கை, 2006ஆம் ஆண்டில் 106 பெண்கள் தீக்குளித்து
இறந்திருப்பதை குறிப்பிடுகிறது.
அரியக் கிடைக்கும் அனைத்து தீக்குளிக்கும் சம்பவங்களையும் கோர்த்து
பார்த்தால் சில விஷயங்கள் புரியும்.
அதிகாரத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகுபவர்கள் தங்களது எதிர்ப்பைக்
கடுமையாகத் தெரிவிக்கும் வகையில் தீயில் எரிந்து துடிக்கத் துடிக்க
உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும்
சமூக-பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்பவர்கள் என்கின்றனர்
ஆய்வாளர்கள். ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் எதிர்ப்பு அதிகாரப்
பீடத்திற்கு (அது கொடுமைப்படுத்தும் கணவனாகவோ சமூகமாகவோ
அரசாங்கமாகவோ இருக்கலாம்) பெரும் சவாலாகிறது. மேலும்
தீக்குளிப்புச் சம்பவங்கள் சமூகத்தின் உணர்ச்சிகளைக் கிளறி
கிளர்ச்சியை ஏற்படுத்துவதால் பயத்தையும் உண்டாக்குகிறது. அதே
நேரத்தில் தன்னை அழித்துக் கொள்ளும் இத்தகைய முயற்சிகளில்
தலைவர்களோ அதிகார பலம் மிக்கவர்களோ ஈடுபடுவதில்லை என்பதால் இவை
எதிர்பார்த்த புரட்சியை அல்லது தீர்வை தருவதில்லை என்று கூறலாம்.
இலங்கை தமிழ் மக்களின் போராட்டத்தில் போரில் மடிந்தவர்கள்
பல்லாயிரக்கணக்கானோர். எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும்
ஒரு மில்லியனைத் தாண்டி விடும். தாக்குதலில் ஈடுபட்டு அல்லது
தாக்குதலின் போது உயிரிழந்தவர்களைத் தவிர்த்து தற்கொலை செய்து
கொண்டவர்களின் கணக்குத் தனியாக உண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின்
லெப்டினன் கேனல் திலீபன் (பார்த்திபன் ராசையா) 1987 செப்டம்பர்
15ஆம் தேதி இலங்கையில் இருந்த இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து
அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அவரது
கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதநிலையில் 12 நாட்கள் கழித்து
உண்ணாவிரத மேடையில் உயிரிழந்தார். அவரது இழப்பைத் தொடர்ந்து
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினுருக்கும் போர்
ஏற்பட்டது. தனி ஒருவரின் மரணத்தை போர் ஆயுதமாகப் பயன்படுத்தும்
உத்தியையும் விடுதலைப் புலிகள் கைகொள்ளத் தொடங்கினார்கள். 1987ஆம்
ஆண்டு ஜூலை 5ம் தேதி விடுதலைப் புலிகளின் முதல் கரும்புள்ளி
தாக்குதலை மில்லர் என்பவர் நடத்தினார்.
மில்லர் வெடிப்பொருட்கள் நிரம்பிய வாகனத்துடன் இராணுவம்
தங்கியிருந்த நெல்லியடி பள்ளிக்கூட முகாம் மீது மோதியதில்
100க்கும் மேற்பட்ட இராணுவர்கள் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணம்
நெல்லியடி என்ற இடத்தில் இருந்த இராணுவ முகாம் மீது கேப்டன்
மில்லர் தாக்குதல் நடத்திய நாளை கரும்புலிகள் தினமாக
விடுதலைப்புலிகள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். கடந்த 2008ஆம்
ஆண்டு வரை தற்கொலை தாக்குதல்களில் 365 கரும்புலிகள்
கொல்லப்பட்டுள்ளனர். கரும்புலிகள் 300க்கும் மேற்பட்ட தாக்குதலை
நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வெளியே
வாழும் தமிழர்கள் பலர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பிரான்சிலும் பிரிட்டனிலும் இளையர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
இருக்கத் தொடங்கியுள்ளனர். இதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்
அவர்கள் போராட்டத்தினால் ஏதாவது தீர்வு கிடைத்தா என்பது இந்நேரம்
தெரிந்திருக்கலாம். இந்த உயிர் பலிகளால் அச்சமூகத்தின் பிரச்சனை
தீர்க்கப்பட்டு விடுமா?
இலங்கையில் 20.1 மில்லியன் மக்கள் தொகையில் 74 விழுக்காட்டினராகப்
பெரும்பான்மை சிங்களமக்களுக்கும் சிறுபான்மையினரான தமிழ்
மக்களுக்கும் (18%) இடையே ஏறக்குறைய கடந்த 50 ஆண்டுகாலமாக
நடைபெற்று வரும் இனப்போராட்டம் தற்போது உச்சக் கட்டங்களையே
எட்டியுள்ளது. இலங்கை நாட்டின் வடக்கையும் கிழக்கையும் இணைத்த
தனித்தமிழ் ஈழநாடுதான் பிரச்சனைகளுக்கு தீர்வு என தமிழீழ விடுதலைப்
புலிகள் இறுதிப் போராட்டத்தில் இறங்கியுள்ளன. 'ஒரே நாடு, ஒரே
மக்கள்' என்ற உறுதியினின்று சிறிதும் மாறவிரும்பாத சிங்கள
அரசாங்கம் போராட்டங்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்கும் நோக்கில் தீவிர
யுத்தத்தில் இறங்கியுள்ளது. இதில் எந்த வழியிலும் தப்பிக்க
முடியாமல், உயிருக்கு அல்லாடிக் கொண்டிருப்பவர்கள் சிறுபான்மை
தமிழ்மக்கள். அதாவது பெண்கள், குழந்தை கள், வயதானவர்கள்,
நோயாளிகள், ஏழைகள், சிறிய அளவில் தொண்டூழியர்கள். கடும் சண்டை
நடைபெறும் வன்னிப் பகுதியில் எத்தனை மக்கள் மாட்டிக்
கொண்டிருக்கிறார்கள் என்று சரியாகத் தகவல் இல்லை. இலங்கை அரசின்
கணக்கின்படி 70,000. புலிகளின் கணக்குப்படி 3 லட்சம். ஐக்கிய
நாடுகள் சபை 2 லட்சம் என தெரிவிக்கிறது. எப்படியிருந்தாலும்
பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு, மருந்து, இருப்பிடம் போன்ற
அத்தியாவசியப் பொருட்கள் கூட இன்றி தவிப்பதை அறியமுடிகின்றது.
எந்தப் பக்கம் போனாலும் உயிர் போகும் என்ற நிலையில் இருக்கின்றனர்
இந்த மக்கள். புலிகள் இருக்கும் இடத்தில் இருந்தாலும் சரி, வெளியே
வந்தாலும் சரி, இராணுவ தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியாத
நிலையில் இந்த மக்கள் உள்ளனர். 'போரற்றப் பகுதி' என அறிவிக்கப்பட்ட
இடத்தில் கூட இலங்கை இராணுவம் முப்படை தாக்குதலை நடத்தி மக்களைக்
கொன்று குவித்து வருகிறது. இங்கு அன்றாடம் குண்டு வீச்சுகளும்
தாக்குதல்களும் நடைபெறுவதையும் குழந்தை கள், கர்ப்பிணிகள் உட்பட
அன்றாடம் பலர் உயிர் இழப்பதையும் காயம் அடைவதையும் தமிழ் நெட்டும்
இன்னும் இதர இணைய தளங்களும் விவரிக்கின்றன.
கடந்த 30 ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்கள் மேற்கொண்டு வந்த இன
அழிப்பை மகிந்த அரசாங்கம் படுதீவிரப்படுத்தியுள்ளதைக் கண்கூடாகக்
காண முடிகிறது. யார் குற்றமோ, எவர் குற்றமோ எந்தக் குற்றமும்
செய்யாத அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு
சும்மா இருக்க முடியாது, கூடாது. கண்ணுக்கு எட்டாத தூரத்தில் அங்கு
நடக்கும் இந்தத் துயரம் நாளை நமக்கும் ஏற்படலாம். ஏதாவது ஒரு
வகையில் அவர்கள் துயரைத் துடைக்க முயற்சி எடுக்க வேண்டும். அதற்காக
உணர்ச்சிவசப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வதில் சந்தர்ப்பவாதி
அரசியல்வாதிகளையும் செய்தியாளர்களையும் தவிர வேறு எவருக்கும்
லாபமில்லை. தீர்க்க சிந்தனையுடன் ஆக்ககரமான முயற்சிகளை எவரும்
மேற்கொள்ளலாம். அதற்கு அதிகாரமோ பலமோ வயதோ முக்கியமல்ல.
அறிவுத்தீயை ஆன்மத்தீயை கொழுந்து விட்டெறியச் செய்ய சிறு செயல்
போதும். நியாயத்துக்கும் தர்மத்துக்கும் வெற்றி கிடைக்கும்.
|
|